தெரிவுசெய்யப்படும் விதைகளைவிட உதாசீனம் செய்யப்படும் குறையுள்ள
விதைகளே மண்ணில் விழுந்து புதைந்து செடியாய் முளைத்து எழும். அவைகளே அதிர்ஷ்டக்கார
விதைகள் என்பதே இப்படத்தின் ஊடிழை.
உள்ளூரில் சினிமா கற்றுக்கொண்ட இளைஞர்கள் ஒருவகையான
வீரிய இன (hybrid) திரைக்கதைகளை உலவவிட்டுக் கலக்கிக் கொண்டிருக்கையில் லண்டன்
திரைப்படக் கல்லூரியில் படித்த அஞ்சலி மேனன் கேரளத்தின் ஆன்மாவை தொட்டுவிடும்
அருமையான அலட்டலில்லாத ஒரு திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார். இயக்குநர்
குறிப்பிடுவதுபோல் இப்படம் ‘வேர்களைத் நோக்கித் திரும்புகிற ஒரு பயணம்தான்’
ஒரு புகைப்படத்தால் தூண்டப்பட்டு இந்தத் திரைக்கதையை எழுதியதாகக்
கூறும் அஞ்சலி..இரண்டாம் தலைமுறையாக
வெளிநாட்டில் வாழும் ஒரு இந்தியர்/ மளையாளி.
ஒரு மரணச் சடங்கில் எடுக்கப்பட்ட
புகைப்படத்தில் வழக்கமான அவலச்சுவை வழிந்தோடும் ஒரு சூழலில் மகிழ்ச்சியான
முகபாவங்களோடு நின்றிருந்த சிறுவர்குழாமின் முரண்பட்ட இருப்பே இந்த்த் திரைக்கதைக்கான உந்துதலாக அமைந்தாம். ஒரு பெரிய குடும்பத்தின் இறப்புச் சடங்கிற்காக ஒன்று கூடும் உறவினரிடையே
இழப்பின் துயரத்தைச் சுமந்து நிற்கும் பெரியவர்களிடையே,
எதிர்பாராமல் ஒன்று சேரும் சிறுவர்கள் புதிதாகக் கிடைத்த நட்பின் மகிழ்ச்சியில்
திளைக்கும் எதிரும் புதிருமான உணர்வுகளின் ஊடே விரியும் எளிமையான கதை.
அந்நிய மண்ணில் வாழ நேர்ந்துவிடும் ஒருவனுக்கு வேறுபட்ட பல
இடங்கள் இருந்தாலும் எதையுமே சொந்தம் கொண்டாட முடியாத இயலாமை மேலோங்கும்போது தன் பூர்வீக மண்ணின் வேர்களைத்
தேடி ஓட வேண்டியவனாகிறான். என்னுடைய நாயகனான விக்கியும்
அதைத்தான் செய்கிறான் என்கிறார்.
இந்தத் திரைக்கதையை எழுதும் போதுதான் மளையாளத்தைப் பேசவும்
எழுதவும் கற்றுக் கொண்ட அஜ்சலி, ஆங்கிலத்தில் சிந்தித்து மளையாளத்தில் எழுதுவது பெரும் அவஸ்த்தையாக
இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
ஒரு பெரிய குடும்பத்தின் தலைவர் இறந்துவிடுகிறார். மத்திய கிழக்கிலிருந்து புருஷன் மற்றும் கதை
நாயகனான ‘சிறுவன்‘ விக்கியுடன் வரும் மகள் ஒருத்தி.
லண்டனிலிருந்து நிறைமாத கர்ப்பிணியாய் இன்னொரு மகள். டெல்லியில் அரசு உயரதிகாரியான புருஷன் மற்றும் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்குத் தயாராவது கெட்டுவிட்டதாக
குறைபட்டுக்கொண்டிருக்கும் மகளோடு வந்திருக்கும் இன்னொரு மகள், உள்ளூரில் கஷ்ட ஜீவனம் செய்து கொண்டிருக்கும் கைக் குழந்தைக்குத் தாயான
இன்னொரு மகள், தன் இருபதுகளில் நகஸலைட்டாக வீட்டைவிட்டு
ஓடிப்போய் காவிவேட்டியோடு திரும்பி வந்து யாரிடமும் ஒட்ட முடியாமல் நிற்கும்
மூத்தமகன். உள்ளூரில் தந்தையோடு இருந்து எல்லாச்சுமைகளையும்
தான் சுமந்து தீர்த்ததான எரிச்சலில் கடனுக்கு வந்திருக்கும் உடன்பிறப்புக்களை
சபித்தவாறு இருக்கும் இன்னொரு மகன். அவரவர் வாழ்வின்
அவசரங்களுக்கிடையே உழன்று கொண்டிருக்கும் அவர்களை அங்கே இருத்தி வைத்திருப்பது 16ஆம் நாள் சடங்கு முடிந்தவுடன் வாசிக்கப்படவிருக்கும் தந்தையின் உயில். உயிலில் யாருக்கு என்ன? என்பது பற்றிய ஆர்வமே
மேலோங்கியிருக்கும் அந்த 16 நாட்களும்,
துபாயிலிருந்து வந்திருக்கும் விக்கி எனும் சிறுவனின் நினைவலைகளாக
விவரிக்கப்படுகிறது.
பொறாமையும் பாவனைகளும் நிரம்பிய பெரியவர்களின் உலகத்திலிந்து
விலகி சிறுவனான விக்கி அவன் மாமாவின் குழந்தைகளுடன் கொள்ளும் புதிய நட்பும்
அவர்களைவிட சற்றுப் பெரியவளான ரோஜா என்ற வேலைக்காரத் தமிழ் சிறுமியுடனான ஸ்நேகமும்
அவனின் தற்காலிக உலகங்களாகின்றன. கறுப்பி என்றும் தமிழச்சி என்றும் அழுக்கானவள் என்றும் விளிக்கப்படும்
ரோஜாவை அவளின் துயரங்களிலிருந்து விடுவித்துவிட முடியுமென்று நம்பும் விக்கி அவளை
ஊருக்கு அனுப்பிவிட முயன்று, கன்றிப்போன காயங்களுடனும்
கண்ணீருடனும் ரோஜா திரும்பவும் அங்கேயே கொண்டுவந்து
விடப்படுவதை பார்த்தபடியே துபாய்க்குக் கிளம்ப வேண்டியதாகிறது.
ஒரே சொத்தான
அந்த பிரம்மாண்டமான வீட்டை பாட்டியின்
ஜீவபரியந்தம் அவரின் பெயருக்கு எழுதிவிடும் தாத்தாவின் உயில் எல்லோரையும்
அவசரமாக ஊருக்கு அனுப்பிவிடுகிறது. தாத்தாவின் மறைவுக்கப்புறம் 20 வருடங்கள்
உயிர்வாழ்ந்த பாட்டியைப் பராமரித்துவந்த ரோஜாவை பாட்டியுடன் புகைப்படமெடுக்கும்
இருபதுகளில் இருக்கும் இளைஞனான
விக்கியின் குரலிலேயே மொத்தக் கதையும் விவரிக்கப் படுகிறது.
படத்தில் தாத்தாவாக வரும் திலகன் பிணமாகவும் பின்
புகைப்படமாகவும் இரண்டொரு ஷாட்களில் மட்டுமே
தென்படுபவராகவும் மட்டுமே வருகிறார். வளர்ந்த
ரோஜாவாக வரும் பத்மப்ரியா கடைசி ஷாட்டில் பாட்டியின் தோளை கட்டிக்கொண்டு புகைப்படத்திற்கு
போஸ் கொடுப்பவராக மட்டுமே வருகிறார். பெரிய வேடிக்கை, நாயகனான பிரிதிவிராஜின் குரலிலேயே மொத்தக் கதையும் சொல்லப்பட்டாலும்
கடைசிக் காட்சியிலே சில நிமிடங்களே வந்து போகிறார் அவர்.இது
மளையாளத்தில் மட்டுமே சாத்தியம் என்று நினைக்கிறேன்.
கதை கூறுவதற்காக எந்தப் புதிய உத்திகளையும் பரிசோதிக்காமல் நேர்கோட்டில் இயல்பாய்
விவரிக்கப்படும் இப்படத்தின் இயக்குநர் எதிர்காலத்தில் மிகவும் காத்திறமான
படைப்புகளை இந்திய சினிமாவிற்குக் கொடுப்பார் என்று நம்ப இடமிருக்கிறது. தொழில்நுட்ப விசயங்களிலும் ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு
இசை போன்றவற்றிலும் தென்படும் முதிர்ச்சி இந்திய இயக்குநர்களிடையே அரிதான ஒன்று.
குறிப்பாக நவீன சத்தங்களின், கருவிகளின்
ஒத்தாசையில்லாமல் இந்தியக் கருவிகளைக் கொண்டே அற்புதமான பின்னனி இசையை
வடிவமைத்திருக்கிறார்.
அஞ்சலி மேனன் |
இவர்தான் ‘உஸ்தாத்
ஓட்டல்’ படத்தின் திரைக்கதையாசிரியர். இரண்டு
படங்களிலும் தமிழர்களைப் பெருமைப்படுத்தியிருப்பது தற்செயல்தானா என்று தெரியவில்லை.
உஸ்தாத் ஓட்டலில் நாயகனை அவன் தாத்தா ‘வாழ்வின்
அர்த்தத்தை நீ அறிந்துகொள்ள வேண்டுமானால் மதுரைக்குப் போய் என் நண்பரிடம்
இந்தப்பணத்தைக் கொடுத்துவிட்டுவா’ என்று அனுப்பி வைப்பார்.
மதுரையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்து அந்தப் பாத்திரம்
உருவாக்கப்பட்டிருக்கும். (அஜ்சலி மேன்னுக்குத் தெரிந்தது மதுரைக்கார
அரிவாள் இயக்குநர்களுக்குப் பொருட்டாகத் தெரியாத்தில்
ஆச்சரியம் ஒன்றுமில்லைதான்) இந்தப் படத்திலும் பழி சுமத்தப்படும்
வேலைக்காரத் தமிழ்ச் சிறுமி ரோஜாதான் பாட்டியின் தள்ளாத வயதில் கூட இருப்பவள்.
சிறுமி அருமையாக நடித்திருந்தாள்.
கேரள அரசின் விருதுகள் உட்பட பல சர்வதேச விருதுகளை வென்ற ‘மஞ்ஞாடிக்குரு’ வேர்களை அரிக்கத் தொடங்கியிருக்கும் நவீன வாழ்க்கையின் ஒரு
துளி.