ஹாலிவுட் சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹாலிவுட் சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 டிசம்பர், 2014

The Fault in Our Stars: மீண்டும் ஒரு காதல்கதை



இப்படி ஒரு காதல்கதையைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. நாற்பதிலிருந்து அறுபதுகளைக்  கடந்த நம் தமிழ்சினிமா நாயகர்களின் கும்மாங்குத்து காதல்களை பார்த்து சலித்துப் போன கண்களுக்கு பதின் வயதிலிருக்கும் ஹேசலும் அகஸ்டஸு ம் கண்களையும் மனதையும் நிறைக்கிறார்கள்.

16 வயதான ஹேசல் கிரேஸ் தைராய்டு கேன்சரால் பாதிக்கப்பட்டு நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவள். நுரையீரல் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் சிலிண்டரை உருட்டிக்கொண்டே நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பவள். தற்செயலாக அவள் சந்திக்கும் 17வயதான அகஸ்டஸும் கேன்சரால் பாதிக்கப்பட்டு ஒரு காலை இழந்தவன். இருவருக்கும் ஏற்படும் நட்பு சிலமாதங்கள் நீடித்து  காதலாக மலர்கிறது. ஒளிந்திருந்த கேன்சர் அகஸ்டஸ் உடல் முழுவதும் பரவுகிறது. 13 வயதிலிருந்து சிகிச்சையிலேயே காலத்தைக் கடத்திவந்த ஹேசலுக்கு அகஸ்டஸின் காதல் வெறுமையான அவள் வாழ்வில் கசிந்த ஒரு வெளிச்சக்கீற்றாக ஊடுருவுகிறது. ஆனால் அவளுக்கு முன்னதாகவே அகஸ்டஸ் உலகிலிருந்து விடைபெறுகிறான். ஹேசலுக்கு மீதமிருக்கும் சொற்பமான வாழ்நாளில் ஒரு மின்மினியாய் தோன்றி மறைகிறான் அகஸ்டஸ்.

 
 இளமையிலேயே உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட பதின்வயதினர் - அவர்களைப் பராமரிக்கும் பெற்றோர் – மருத்துவர்கள் – சிகிச்சைகள் என்று புதிய ஒரு உலகத்தைத் திறந்து வைக்கிறார் இயக்குநர்.

 இளமை ததும்பும் ஹேசலும் அகஸ்டஸும் மிகப்பொருத்தமான தேர்வுகளாக இருக்கிறார்கள். அதிலும் ஹேசலாக நடித்திருப்பவரின் வலியும் வெறுமையும் கலந்த முக பாவங்கள் அற்புதம்.


 2012இல் வெளிவந்த ஜான் கிரீன் எனும் நாவலாசிரியரின் நாவலைத் திரைக்கதை வடிவம்தான் இந்த உயிரோட்டமான சினிமா. நாவலாசிரியருக்கு நெருங்கிய ஒருவரின் வாழ்க்கையிலிருந்து உந்தப்பட்ட நாவலான இது ஹாலிவுட்டின் நேர்த்தியான தயாரிப்பாக வெளிவந்திருக்கிறது. படம் முடியும்போது நம் கண்களும் மனதும் ஈரமாவது நிச்சயம்.

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

The Secret life of Walter Mitty: மிட்டி என்ற பகல் கனவுக்காரன்



1939 இல் இதே தலைப்பில்  ஜேம்ஸ் துர்பர் (James Thurber) எழுதிய சிறுகதையைத் தழுவிய படம்தான் இது. 1947இல் இக்கதை திரைப்படமாக மாற்றப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக இப்போது 2013இல்.  
1883 இல் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட லைப் (Life) இதழ் பின்னாளில் புகைப்பட இதழியல் (Photo Journalism) வகையில் குறிப்பிடத்தக்க இதழாக விளங்கியது. 2009இல் மூடப்பட்டு இணைய இதழாக மாற்றம் பெற்றது. அச்சில் வரப்போகிற அதன் கடைசி இதழுக்கான வேலைகள் நடைபெறும்போது படத்தின் கதை தொடங்குகிறது. அந்த அலுவலகத்தின் புகைப்படப்பிரிவில் பொறுப்பாளராக இருக்கும் வால்டர் மிட்டி ஒரு பகல் கனவுப் பேர்வழி. அவ்வப்போது கனவுலகில் நாயகனாக சாகசங்களில் ஈடுபடும் சாமான்யன். அவர் பொறுப்பில் கடைசி இதழுக்கான புகைப்பட நெகட்டிவ் தொகுப்பில் 25 எண்ணுள்ளது  மட்டும் காணாமல் போயிருக்கிறது.  அதை அனுப்பிய புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் ஸான் ஓ கானல் ஒரு வித்யாசமான நபர். தொலைபேசி வைத்துக் கொள்ளாத தன் இருப்பை யாருக்கும் தெரிவிக்காத நபர். மற்ற நெகட்டிவ்களிலிருந்து அவரின் இருப்பைத் தெரிந்து கொள்ள முயலும் வால்ட்டர் மிட்டி, வேலை போய்விடும் சூழலில் ஸானைத் தேடி ஐஸ்லான்டுக்கும் கீரீன் லான்டுக்கும் ஆப்கானிஸ்தானை ஒட்டிய இமய மலைக்கும் பயணமாகிறார். வழியில் அவரின் பகல்கனவுகள் அவரோடு சேர்ந்து கொள்ள நமக்கு ஒரு சுவாரஸ்யமான சினிமா கிடைக்கிறது.


ஒரு சாதாரண கதையை சுவாரஸ்யமான எளிமையான திருப்பங்களோடு திரைக்கதையாக்கியுள்ள விதம் சிறப்பானது.
ஐஸ்லாந்து கிரீன்லாந்து சுற்றி இமயமலையில் கேமராவிற்குப் பின்னால் ஒரு பனிச்சிறுத்தைக்காகக் காத்திருக்கும் புகைப்படக்கலைஞர் ஓ கானலைச் சந்திக்கிறார் மிட்டி. வா... வந்து பார்... என்று வியூ பைன்டரைக் காட்டுகிறார். மிட்டி பார்க்கிறான். கானல் தேடிக்காத்திருந்த பனிச்சிறுத்தை. புகைப்படமாக்கு என்கிறான் மிட்டி. சில நேரங்களில் நான் அப்படித்தான். காமராவின் சத்தம் சிறுத்தைக்குத் தொந்தரவாக மாறக்கூடுமல்லவா... என்று கூறிவிட்டு கீழே உதைபந்தாட்டம் விளையாடும் இளைஞர்களோடு சேர்ந்து கொள்கிறான். மிட்டியும் அவர்களோடு இணைந்து கொள்கிறான்.


லைப் பத்திரிக்கையின் கார்ப்பரேட் இயந்திரத்தனமான வாழ்க்கைமுறை... வேலை .. இலக்கு... இல்லையேல் துரத்தியடித்தல்... என்ற வாழ்க்கைமுறைக்கு முற்றிலும் மாறான புகைப்படக்கலைஞனின் இலக்கற்ற திட்டமில்லாத பயணங்களால் ஆன வாழ்க்கைமுறை. இரண்டுக்குமிடையில் மிட்டி, மூச்சுத்திணறும் வாழ்க்கைக்குள் தன்னைத்தானே பகல்கனவுகளுக்குள் ஆழ்த்திக் கொள்வதன் மூலமாக வாழ்வை அர்த்தப் படுத்திக் கொள்ளும் யத்தனம் என்பதாக இப்படத்தை வாசிக்க இயலும்.

அற்புதமான காட்சிப்பின்புலங்களும், பென் ஸ்டில்லர் (Ben Stiller)   போன்ற அருமையான நடிகர்களும், (ஸான் பென் (Sean Penn), புகைப்படக் கலைஞராக சில நிமிடங்களே தோன்றுகிறார்) இப்படத்தை ஒரு அருமையான காட்சி அனுபவமாக்குகின்றன. (மதுரை நகரில் புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் ஐனாக்ஸ் திரையரங்கில் கச்சிதமான ஒலிஅமைப்புடன்  2014இல் நான் பார்த்த முதல் திரைப்படம். புத்தாண்டு நன்றாக ஆரம்பிப்பதான பிரமையை ஏற்படுத்துகிறது)


திங்கள், 4 நவம்பர், 2013

கிராவிட்டி (GRAVITY) : இரண்டு பாத்திரங்கள் – நான்கு குரல்கள்… ஒரு விண்வெளிக் காவியம்


 

அறிவியல் புனைகதை மற்றும் விண்வெளியில் நடக்கும் கதைகளென்றாலே எனக்கு கொஞ்சம் ஒவ்வாமை உண்டு. அந்தத் தயக்கத்தோடே தியேட்டருக்குப் போனேன். பெங்களூர் பிவிஆர் ஐ மாக்ஸில் 600ரூபாய் கட்டணம் கொடுத்த போது ஒவ்வாமை இன்னும் அதிகமானது. படம் முடிந்தபோது 'நான் மட்டும் பழைய காலத்து ஊதாரி மன்னர்களுள் ஒருவனாக இருந்தால், சுஜாதா சொன்ன மாதிரி என் ராஜ்ஜியத்தில் பாதியை இயக்குநருக்கு கொடுக்கத் தயங்கமாட்டேன் என்று தோன்றியது.

இரண்டு பாத்திரங்களையும் நான்கு குரல்களையும் கொண்டு வெண்திரையில் எழுதப்பட்ட விண்வெளிக்காவியம் கிராவிட்டி.

 இது அறிவியல் புனைகதை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கற்பனையை கன்னாபின்னாவென்று ஓடவிட்டு நம்மைப்போல் எளிமையான ஜீவராசிகளின் கற்பனை வறட்சியை பறைசாற்றும் முயற்சிகள் இல்லை. பயணம் செல்லும் விண்வெளிக் கப்பலில் பழுது ஏற்படுகிறது. கப்பலில் செல்லும் நால்வரில் ஒருவர் ரயான் ஸ்டோன் (சான்ட்ரா புல்லக்) மருத்துவ பொறியாளர். அவருக்கு இது முதல் விண்வெளிப் பயணம். இன்னொருவர் மாட் க்வாஸ்கி (ஜார்ஜ் க்ளூனி) விண்ணியலாளர். விண்கலத்தின் கமாண்டர். இந்தப்பயணத்துடன் ஓய்வு பெறும் உற்சாகத்தில் இருப்பவர். ரஷ்ய விண்கலம் ஒன்று (ஹாலிவுட்டுக்கு இன்னும் வில்லன் ரஷ்யாதான்) பழுதான சாட்லைட் ஒன்றுடன் மோதியதன் தொடர் விளைவாக விண்வெளியின் விண்கலக் கழிவுகள் மோதக் கூடும் என்ற தகவலைத் தொடர்ந்து தொடர்புகள் அறுந்துபோக, விண்கலக் கழிவுகளால் கப்பல் பெருத்த சேதமடைகிறது. கப்பலிலிருந்த  மற்றும் இருவர் இறந்து விடுகிறார்கள். இப்போது ரயானும் க்வாஸ்கியும் பேரண்டப் பெருவெளியில் தனித்து விடப்படுகிறார்கள். ஒருவர் மட்டுமே தப்பமுடியும் என்ற சூழலில் க்வாஸ்கி ரயானிடம் விண்வெளியில் விடைபெற்று பேரண்டத்தில் கலந்துவிடுகிறார். ரயான் பூமிக்குத்திரும்பினாரா? என்பதுதான் மீதமுள்ள படம்.


3டி தொழில்நுட்பத்தின் மகத்துவத்தை இந்தப் படத்தில் உணரமுடிந்தது.  ஈர்ப்பு விசையற்ற வெளியில் மிதந்தலையும் உடல்கள், பொருட்களோடு நாமும் மிதந்தலையத் தொடங்குகிறோம். விண்வெளியிலிருந்து பூமியைப் பார்ப்பதும், செய்தித் தாள்களில் ஒரு பத்தியில் படித்த விண்கலங்களின் பிரம்மாண்டத்தையும் பேரண்டத்தில் மனிதன் செய்துகொண்டிருக்கும் பரிசோதனைகளின் வீச்சையும் முப்பரிமாணத்தில் திரையில் பார்ப்பது பரவசமான அனுபவம். அவதார் ‘கேமரூன்’ சொன்னமாதிரி ‘விண்வெளியில் கதை நிகழும் படங்களில் இது ஒரு மைல்கல்’ என்ற வார்த்தை மிகையானதல்ல.

படத்தின் இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம் ‘ஒலி வடிவமைப்பு’ (sound design). க்வாஸ்கி விண்வெளியில் உலாவிக்கொண்டே பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்களோடு பேசும் உரையாடலும் (பெரும்பாலும் புரியாவிட்டாலும்) வானொலியில் பாடல்கள் கேட்பதும் அற்புதம். விண்வெளியின் வேறுபட்ட சூழலில் பெரும் பகுதி அமைதியும் மிக அமைதியுமாகக் கழிகிறது. இசை மிகச் சொற்பம். (விண்வெளியில் ஓசை கேட்காது என்பதால் பாத்திரங்களின் முகக் கவசத்திற்குள் இசை ஒலிப்பதாகக் கருதவேண்டும்)




படத்தின் இறுதியில் இரண்டு/ மூன்று நிமிடங்கள் மட்டுமே முழு உடலைக்காண்பிக்கும் சான்ராபுல்லக் படத்தின் பெரும்பகுதி கவசத்திற்குள் முகத்தையும் சிறிய அளவில் விண்கலத்திற்குள் சாதாரண உடையில் மிதக்கிறார். இதற்காக ஆறுமாதம் நடிப்புப் பயிற்சி எடுத்தாராம்.

50களின் தொடக்கத்திலிருக்கும் அல்போன்சோ குவாரான் (Alfonso Cuarón) எனும் மெக்ஸிக்க இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஹாரிபோட்டர் உட்பட சில படங்களையே இயக்கியிருப்பவர்.  ஜோனஸ் குவாரான் (Jonás) என்பவரோடு இணைந்து இந்தத் திரைக்கதையை எழுதியுளார். இருவரும் தந்தையும் புதல்வரும் என்பது கூடுதல் விசித்திரம்.

Alfonso Cuarón

இந்தப்  படத்தை 3டியில் மட்டுமே பாருங்கள். ஐ மாக்ஸ் 3டியில் பார்ப்பவர்கள் பாக்யவான்கள். 2013ஆம் ஆண்டின் தலைசிறந்த படம்.   

திங்கள், 7 அக்டோபர், 2013

தி செசன்ஸ் (THE SESSIONS) : மாற்றுத்திறனாளியின் பாலியல் - உரையாடலுக்கான ஒரு தொடக்கம்




மிக இளம்வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக்கீழ் அசைவற்றவராக, நுரையீரல் செயல்பாடும் சிக்கலான நிலையில் இரும்புக் கூண்டுக்குள் பெரும்பாண்மை வாழ்க்கையைக் கழித்துவந்த மார்க் ஓ பெரின் (Mark O'Brien) ஒரு கவிஜர், பத்திரிக்கையாளர். அவர் 1990இல் சன் இதழில் "On Seeing a Sex Surrogate" எனும் தலைப்பில் தன் சொந்த அனுபவத்தை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதினார்.

‘நான் என்னுடைய வாழ்க்கையில் பெண்கள் ஆண்கள் என்று பலரையும் மோகித்திருக்கிறேன். யாராலாவது நேசிக்கப்படவேண்டும். யாராவது மோகித்து என்னைத் தூண்டி பாலியல் இன்பத்துக்குள் இழுத்துச் செல்லவேண்டும் என்று கற்பனை செய்துகொள்வேன, ஆனால் அப்படி எதுவும் நடக்கவே இல்லை’ எனும் பெரின் பாலியல் சுதந்திரம் வழிந்தோடும் அமெரிக்காவில் தன்னுடைய 38ஆவது வயது வரையில்  பாலியல் அனுபவம் கிட்டாதவராக இருந்தார். தன்னுடைய ஆண்மை, தகுதி பற்றிய மனக்குழப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்க, மறுக்கப்பட்ட பாலியல் வேட்கையுடன் கடவுளை சபித்தவராக விரக்தியின் விளிம்புக்குச் சென்ற போது, பாலியல் தேவைகளுக்காக வாடகைக்கு ஒரு பெண்ணை அமர்த்திக்கொள்வது பற்றிய ஆலோசனைகளைப் பெறுகிறார். 

  
மாற்றுத் திறனாளிகளின் பாலியல் பிரச்சனைகளைக் கையாளும் மையம்(Center on Sexuality and Disability) ஒன்றைத்தொடர்பு கொள்ளும் பெரின் அங்கு சில தொடர்புகளைப் பெறுகிறார். Sex Surrogate (வாடகைப் பாலியல் துணை / பணியாளர் என்று மொழிபெயர்க்கலாமா?) ஒருவரை அணுகலாம் என்று முடிவுசெய்த போது, ‘வாடகைத் தாய்’(Surrogate mother)  எனும் பதம் போல இது தெளிவாக இல்லை என்பதை பெரின் உணர்கிறார். தொழில்முறை பாலியல் தொழிலாளிகளுக்கும் இவர்களுக்குமான  வேறுபாடு பற்றிய குழப்பங்கள் படிப்படியாக நீங்குகின்றன. Sex Surrogate என்பவர் சமூகப்பணியில்(social work) முதுகலைப் பட்டம்பெற்று பதிவு செய்துகொண்ட தாதியாவார். அவர்கள் மாற்றுத் திறனாளிகளின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்கிறவர்கள் அல்ல. மாறாக அவர்களின் சுயமரியாதைக்குப் பங்கம் விளையாமல் அவர்களின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கி அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்துப்வர்கள். அவர்கள் பாலியலின் உடல் மற்றும் உளச் செயற்பாடுகளை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் என்பதால் அவர்களால் சிக்கலான சூழல்களையும் எதிர்கொள்வது ஏதுவாகிறது. அவர்களை மாற்றுத் திறனாளிகள் நேரடியாக அமர்த்திக் கொள்வதும் இயலாது என்பதோடு ஆறிலிருந்து எட்டு அமர்வுகள் மட்டுமே சிகிச்சைக்கான எண்ணிக்கையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையாளரோடு காதல் வயப்பட்டுவிடக்கூடாதென்ற விதிமுறையும் உண்டு. ஒரு மணி நேர அமர்வுக்கு 70டாலர்கள் குறைந்தபட்சக் கட்டணம்.

எல்லாவற்றையும் படித்தும் கேட்டும் தெரிந்துகொள்ளும் பெரின் ‘செரில்’ (Cheryl) எனும் வாடகைப் பாலியல் பணியாளரைக் கண்டு பிடிக்கிறார். அதன்பின் பெரினின் எதிர்பார்ப்புகள், அவர்களின் முதல் சந்திப்பு, ஒவ்வொரு அமர்விலும் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை விரிவாக விவரிக்கிறது அந்தக் கட்டுரை. மாற்றுத் திறனாளிகளின் பாலியல் பற்றித் தொடர்ந்து எழுதிவந்த பெரின் தனது 49ஆவது வயதில் மரணித்தார். (கட்டுரையை முழுமையாகப் படிக்க: http://thesunmagazine.org/issues/174/on_seeing_a_sex_surrogate)

இந்தக் கட்டுரை ஒருவகையில் மாற்றுத் திறனாளிகளின் பாலியல் தேவைகளைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கியது எனலாம். இந்தக்கட்டுரையைப் படிக்கத் தூண்டுகோலாக இருந்தது ‘தி செசன்ஸ்’ (The Sessions)   என்ற ஆங்கிலப்படம்தான். 2012இல் வெளியான இப்படம் மேலே விவரிக்கப்பட்ட "On Seeing a Sex Surrogate" எனும் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு குறைந்தபட்ச இடைச் செருகல்களோடு தயாரிக்கப்பட்டது. இப்படத்தை இயக்கியவர் பென் லிவின் (Ben Lewin). இவரும் ஆறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவர் என்பதாலோ என்னவோ இக்கட்டுரையை இணையத்தில் படித்து உந்துதல் பெற்று பெரினுடன் உளவியல் சிகிச்சையாளராக இருந்த சூசன் மற்றும் பாலியல் சிகிசையாளரான செரில் ஆகியோருடன் கலந்துரையாடி இத்திரைக்கதையை அமைத்துள்ளார். படுத்த படுக்கையிலிருந்து உட்காரும் திறன்கூட அற்றவரான ஒருவரை நாயகனாக வைத்து 95 நிமிடங்கள் ஓடும் ஒரு திரைப்படத்தை எடுக்கமுடியும் என்பது ஆச்சரியமான உண்மை. இப்படத்தில் பெரினாக நடித்த ஜான் ஹாக்ஸூம்(John Hawkes) செரிலாக  நடித்த ஹெலன் ஹன்ட்டும் (Helen Hunt) மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்திருந்தார்கள்.


முதல் உலக நாடுகளில் மாற்றுத் திறனாளிகளின் பாலியல் பிரச்சனைகளை ஆலோசிப்பதற்கான மையங்களும், அதைப்பற்றிய பல்கலைக்கழக படிப்புகளும் அவர்களுக்கான பாலியல் சிகிச்சையாளர்களும் இருக்கிறார்கள் என்பதைப்படிக்கும்போது இந்தியச் சூழல் எப்படியிருக்கிறது எனும் ஒப்பீடு நம்மை வந்தடைவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்திய நகரங்களின் நடைபாதைகளில் இருக்கும் மின்சார டிரான்ஸ்பார்மர்களில் முட்டிக்கொள்ளும் பார்வையற்றவர்கள், சக்கர நாற்காலிகள் செல்லமுடியாத படிக்கட்டுகளைக் கொண்ட பொது அலுவலகங்கள், மாற்றுத்திறனாளிகளை மனதில் கொள்ளாத பொதுக்கழிப்பறைகள் போன்ற அடிப்படைப் பிரச்சனைகளையே தீர்க்க முயற்சிக்காத இந்திய சமூகம் அவர்களின் பாலியல் தேவைகளைத்தானா கணக்கில் கொள்ளப்போகிறது. ஆனால் உலகிலேயே அதிக மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட சமூகம் நமதுதான். அதேபோல் அவர்களை பொருட்படுத்தாத அநாகரிக சமூகமும் நம்முடையதுதான்.
2001 குடிமைக் கணக்கெடுப்பின் படி 2.19 கோடி மாற்றுத்திறனாளிகள் (பார்வைக் குறைபாடு, கேட்க முடியாதவர்கள், பேச்சுத்திறனற்றவர்கள், மனநலம் மற்றும் இதர உடல்திறன் குன்றியவர்கள்) நம்நாட்டில் வாழ்கிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களில் 465 குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளாகப் பிறந்துள்ளன என்கின்றன செய்தித்தாள்கள். (தினமலர் செய்தி 25.08.2013) செப்டம்பர் மாதத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்த பார்வையற்றவர்களின் போராட்டம் பொதுமக்களால் கண்டுகொள்ளப்படவேயில்லை என்பதோடு சாலைமறியல் செய்தவர்களை கைதுசெய்த தமிழக போலீசார் அவர்களைக் கைதுசெய்து எந்த இடம் என்று சொல்லாமல் எங்கோ இறக்கிவிட்டுச் சென்றார்களாம். வேறுவழியில்லாமல் அங்கேயே தூங்கி எழுந்து காலையில் விசாரித்தபோதுதான் தெரிந்த்து அது ஒரு சுடுகாடு என்பது.   என்பதெல்லாம் நம் கவனத்தில் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.