திங்கள், 7 அக்டோபர், 2013

தி செசன்ஸ் (THE SESSIONS) : மாற்றுத்திறனாளியின் பாலியல் - உரையாடலுக்கான ஒரு தொடக்கம்




மிக இளம்வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக்கீழ் அசைவற்றவராக, நுரையீரல் செயல்பாடும் சிக்கலான நிலையில் இரும்புக் கூண்டுக்குள் பெரும்பாண்மை வாழ்க்கையைக் கழித்துவந்த மார்க் ஓ பெரின் (Mark O'Brien) ஒரு கவிஜர், பத்திரிக்கையாளர். அவர் 1990இல் சன் இதழில் "On Seeing a Sex Surrogate" எனும் தலைப்பில் தன் சொந்த அனுபவத்தை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதினார்.

நான் என்னுடைய வாழ்க்கையில் பெண்கள் ஆண்கள் என்று பலரையும் மோகித்திருக்கிறேன். யாராலாவது நேசிக்கப்படவேண்டும். யாராவது மோகித்து என்னைத் தூண்டி பாலியல் இன்பத்துக்குள் இழுத்துச் செல்லவேண்டும் என்று கற்பனை செய்துகொள்வேன, ஆனால் அப்படி எதுவும் நடக்கவே இல்லை எனும் பெரின் பாலியல் சுதந்திரம் வழிந்தோடும் அமெரிக்காவில் தன்னுடைய 38ஆவது வயது வரையில்  பாலியல் அனுபவம் கிட்டாதவராக இருந்தார். தன்னுடைய ஆண்மை, தகுதி பற்றிய மனக்குழப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்க, மறுக்கப்பட்ட பாலியல் வேட்கையுடன் கடவுளை சபித்தவராக விரக்தியின் விளிம்புக்குச் சென்ற போது, பாலியல் தேவைகளுக்காக வாடகைக்கு ஒரு பெண்ணை அமர்த்திக்கொள்வது பற்றிய ஆலோசனைகளைப் பெறுகிறார். 

  
மாற்றுத் திறனாளிகளின் பாலியல் பிரச்சனைகளைக் கையாளும் மையம்(Center on Sexuality and Disability) ஒன்றைத்தொடர்பு கொள்ளும் பெரின் அங்கு சில தொடர்புகளைப் பெறுகிறார். Sex Surrogate (வாடகைப் பாலியல் துணை / பணியாளர் என்று மொழிபெயர்க்கலாமா?) ஒருவரை அணுகலாம் என்று முடிவுசெய்த போது, வாடகைத் தாய்(Surrogate mother)  எனும் பதம் போல இது தெளிவாக இல்லை என்பதை பெரின் உணர்கிறார். தொழில்முறை பாலியல் தொழிலாளிகளுக்கும் இவர்களுக்குமான  வேறுபாடு பற்றிய குழப்பங்கள் படிப்படியாக நீங்குகின்றன. Sex Surrogate என்பவர் சமூகப்பணியில்(social work) முதுகலைப் பட்டம்பெற்று பதிவு செய்துகொண்ட தாதியாவார். அவர்கள் மாற்றுத் திறனாளிகளின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்கிறவர்கள் அல்ல. மாறாக அவர்களின் சுயமரியாதைக்குப் பங்கம் விளையாமல் அவர்களின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கி அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்துப்வர்கள். அவர்கள் பாலியலின் உடல் மற்றும் உளச் செயற்பாடுகளை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் என்பதால் அவர்களால் சிக்கலான சூழல்களையும் எதிர்கொள்வது ஏதுவாகிறது. அவர்களை மாற்றுத் திறனாளிகள் நேரடியாக அமர்த்திக் கொள்வதும் இயலாது என்பதோடு ஆறிலிருந்து எட்டு அமர்வுகள் மட்டுமே சிகிச்சைக்கான எண்ணிக்கையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையாளரோடு காதல் வயப்பட்டுவிடக்கூடாதென்ற விதிமுறையும் உண்டு. ஒரு மணி நேர அமர்வுக்கு 70டாலர்கள் குறைந்தபட்சக் கட்டணம்.

எல்லாவற்றையும் படித்தும் கேட்டும் தெரிந்துகொள்ளும் பெரின்செரில்’ (Cheryl) எனும் வாடகைப் பாலியல் பணியாளரைக் கண்டு பிடிக்கிறார். அதன்பின் பெரினின் எதிர்பார்ப்புகள், அவர்களின் முதல் சந்திப்பு, ஒவ்வொரு அமர்விலும் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை விரிவாக விவரிக்கிறது அந்தக் கட்டுரை. மாற்றுத் திறனாளிகளின் பாலியல் பற்றித் தொடர்ந்து எழுதிவந்த பெரின் தனது 49ஆவது வயதில் மரணித்தார். (கட்டுரையை முழுமையாகப் படிக்க: http://thesunmagazine.org/issues/174/on_seeing_a_sex_surrogate)

இந்தக் கட்டுரை ஒருவகையில் மாற்றுத் திறனாளிகளின் பாலியல் தேவைகளைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கியது எனலாம். இந்தக்கட்டுரையைப் படிக்கத் தூண்டுகோலாக இருந்தது தி செசன்ஸ்’ (The Sessions)   என்ற ஆங்கிலப்படம்தான். 2012இல் வெளியான இப்படம் மேலே விவரிக்கப்பட்ட "On Seeing a Sex Surrogate" எனும் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு குறைந்தபட்ச இடைச் செருகல்களோடு தயாரிக்கப்பட்டது. இப்படத்தை இயக்கியவர் பென் லிவின் (Ben Lewin). இவரும் ஆறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவர் என்பதாலோ என்னவோ இக்கட்டுரையை இணையத்தில் படித்து உந்துதல் பெற்று பெரினுடன் உளவியல் சிகிச்சையாளராக இருந்த சூசன் மற்றும் பாலியல் சிகிசையாளரான செரில் ஆகியோருடன் கலந்துரையாடி இத்திரைக்கதையை அமைத்துள்ளார். படுத்த படுக்கையிலிருந்து உட்காரும் திறன்கூட அற்றவரான ஒருவரை நாயகனாக வைத்து 95 நிமிடங்கள் ஓடும் ஒரு திரைப்படத்தை எடுக்கமுடியும் என்பது ஆச்சரியமான உண்மை. இப்படத்தில் பெரினாக நடித்த ஜான் ஹாக்ஸூம்(John Hawkes) செரிலாக  நடித்த ஹெலன் ஹன்ட்டும் (Helen Hunt) மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்திருந்தார்கள்.


முதல் உலக நாடுகளில் மாற்றுத் திறனாளிகளின் பாலியல் பிரச்சனைகளை ஆலோசிப்பதற்கான மையங்களும், அதைப்பற்றிய பல்கலைக்கழக படிப்புகளும் அவர்களுக்கான பாலியல் சிகிச்சையாளர்களும் இருக்கிறார்கள் என்பதைப்படிக்கும்போது இந்தியச் சூழல் எப்படியிருக்கிறது எனும் ஒப்பீடு நம்மை வந்தடைவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்திய நகரங்களின் நடைபாதைகளில் இருக்கும் மின்சார டிரான்ஸ்பார்மர்களில் முட்டிக்கொள்ளும் பார்வையற்றவர்கள், சக்கர நாற்காலிகள் செல்லமுடியாத படிக்கட்டுகளைக் கொண்ட பொது அலுவலகங்கள், மாற்றுத்திறனாளிகளை மனதில் கொள்ளாத பொதுக்கழிப்பறைகள் போன்ற அடிப்படைப் பிரச்சனைகளையே தீர்க்க முயற்சிக்காத இந்திய சமூகம் அவர்களின் பாலியல் தேவைகளைத்தானா கணக்கில் கொள்ளப்போகிறது. ஆனால் உலகிலேயே அதிக மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட சமூகம் நமதுதான். அதேபோல் அவர்களை பொருட்படுத்தாத அநாகரிக சமூகமும் நம்முடையதுதான்.
2001 குடிமைக் கணக்கெடுப்பின் படி 2.19 கோடி மாற்றுத்திறனாளிகள் (பார்வைக் குறைபாடு, கேட்க முடியாதவர்கள், பேச்சுத்திறனற்றவர்கள், மனநலம் மற்றும் இதர உடல்திறன் குன்றியவர்கள்) நம்நாட்டில் வாழ்கிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களில் 465 குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளாகப் பிறந்துள்ளன என்கின்றன செய்தித்தாள்கள். (தினமலர் செய்தி 25.08.2013) செப்டம்பர் மாதத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்த பார்வையற்றவர்களின் போராட்டம் பொதுமக்களால் கண்டுகொள்ளப்படவேயில்லை என்பதோடு சாலைமறியல் செய்தவர்களை கைதுசெய்த தமிழக போலீசார் அவர்களைக் கைதுசெய்து எந்த இடம் என்று சொல்லாமல் எங்கோ இறக்கிவிட்டுச் சென்றார்களாம். வேறுவழியில்லாமல் அங்கேயே தூங்கி எழுந்து காலையில் விசாரித்தபோதுதான் தெரிந்த்து அது ஒரு சுடுகாடு என்பது.   என்பதெல்லாம் நம் கவனத்தில் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?

1 கருத்து:

  1. யாருமே யோசித்துப்பார்த்திராத ஒரு சமூக அவலத்தை சுட்டிக்காட்டி விழிப்புணர்வு ஊட்டியதற்கு நன்றி .
    பட வேண்டியவர்களின் கண்ணில் படுமா இந்த கட்டுரை?

    பதிலளிநீக்கு

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.