உலக சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலக சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 அக்டோபர், 2013

எ டேஜ்சரஸ் மெத்தட் (A Dangerous Method): மனமெனும் புதிர்வெளி...




1993இல் ஜான் கெர் (John Kerr) எனும் எழுத்தாளர் யுங், ஃப்ராய்ட் மற்றும் யுங்கிடம் சிகிச்சைக்கு வந்தவரான சபீனா (Sabina Spielrein) எனும் இளம்பெண் ஆகியோரைப் பற்றிய வரலாற்றுச் சம்பவங்களை கொண்ட நூல் ஒன்றை எழுதினார். அந்நூலை அடியொற்றி 2002 இல் மேடையேற்றப்பட்ட ‘The Talking Cure’ எனும் நாடகத்தைத் தழுவி உருவாக்கப்பட்ட திரைக்கதையே இப்படம். நாடகத்தையும் திரைக்கதையையும் எழுதியவர் கிறிஸ்டோபர் ஹாம்ப்டன் (Christopher Hampton).

2011இல் வெளியான ஜெர்மன் கனடா கூட்டுத்தயாரிப்பான இப்படம் சைக்கோ அனாலிஸிசின் (Psychoanalysis) தோற்றுநரான சிக்மன்ட் ஃப்ராய்ட், அனலிடிகல் சைக்காலஜியை( Analytical Pschycology) உருவாக்கிய கார்ல் யுங் அவரின் நோயாளித் தோழியான சபீனா ஆகிய மூவருக்குமிடையேயான சம்பவங்களைக் கொண்ட கதையாகும். ஆனால் யுங் – சபீனா இடையேயான காட்சிகளே பிரதானமானவை.


ஹிஸ்டீரியா எனும் மனநோயினால் பாதிக்கப்பட்ட சபீனா இளம் மனநல மருத்துவரான யுங்கிடம் சிகிச்சைக்காக அழைத்துவரப்படுகிறார். வார்த்தைகளுக்கிடையிலான தொடர்புகளைக் சொல்லச் செய்வதன் மூலமாகவும் கனவுகளை விளக்கப்படுத்துவதன் மூலமாகவும் சபீனாவின் நோயின் மூலத்தைக் கண்டறிய முற்படுகிறார் யுங்.

நிஜத்திலோ கற்பனையிலோ ஒரு  குழந்தைக்கு ஏற்படும் பாலியல் அனுபவங்களே எல்லா மன நோய்களுக்குமாக மூலகாரணம் எனும் ப்ராய்டின் அணுகுமுறையின் படி தொடர் சிகிச்சையின் மூலம் சபீனாவின் குழந்தைப்பருவத்தை அலசுகிறார் யுங். கண்டிப்பான சபீனாவின் தந்தை சபீனாவின் சிறுவயதில் அவளை தண்டிக்க முற்படும் போதெல்லாம் அவளை நிர்வாணமாக நிறுத்துகிறார். சபீனாவின் தாயோ தன் கணவனுக்கு உண்மையில்லாதவளாக இருக்கிறாள் என்பதையெல்லாம் சபீனாவிடமிருந்து அறிந்துகொள்ளும் யுங் அவளின் சராசரிக்குக் கூடுதலான புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்படுகிறார். நோயாளியுடன் உடல்தொடர்பு கூடாது எனும் பழைய அறத்தை மீறுகிறார். நாளடைவில் அந்த மருத்துவமனையில் யுங்கிற்கும் இன்னொரு  ,மருத்துவருக்கும் உதவியாளர் போலாகிறார் சபீனா. உளவியல் மருத்துவம் பயிலத்தொடங்கும் சபீனாவின் ஆய்வுக்கட்டுரைக்கு (thesis) உதவுகிறார். சுயமான மகத்தான படைப்பாக்கங்கள் பெரும் முரண்களிலிருந்தே மகிழ்க்கின்றன என்ற அவரின் கருதுகோள்கள்  எதிர்பாலின ஈர்ப்பு, மரபான நம்பிக்கைகளைத் தகர்ப்பதான உள்ளுணர்வின்பாற்பட்டது என்பதாக நீள்கிறது.













உளவியலின் சிடுக்கான கோட்பாடுகளைப் பரிச்சயம் உடையவர்களுக்கு இப்படம் பெரும் விருந்தாய் அமையக்கூடும். மற்றபடி நேர்த்தியான தொழில்நுட்பங்களோடு அற்புதமான நடிகர்களின் பங்களிப்பால் குறிப்பாக சபீனாவாக நடித்திருக்கும் கெய்ரா கிறிஸ்டினா நைட்லியால் ( Keira Christina Knightley)  இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே ப்ரைட் அன்ட் பிரிஜுடிஸ் (Pride & Prejudice) பைரேட்ஸ் ஆஃப் கரிபியன்  (Pirates of the Caribbean) மூன்று பாகங்களிலும் நடித்திருக்கும் கெய்ரா, ஹிஸ்டீரியாவின் உச்சத்தில் வெளிப்படுத்தும் நடிப்பு ஒரு மைல்கல். யுங்காக நடித்திருக்கும் மிக்கேல் ஃபாஸ்பென்டரும் (Michael FassBender) ஃப்ராய்டாக நடித்திருக்கும் விக்கோ மார்ட்டென்சனும் (Viggo Mortenswn) ஏற்கனவே பிரபலமான நடிகர்கள். பின்னனி இசையும் சிறப்பானது.







புதன், 14 ஆகஸ்ட், 2013

நோவா ஜம்ப்லா( (NOVA ZEMBLA): உறைந்த கனவு




  

கண்டுபிடிப்புகளின் யுகமாக வரலாறு குறிப்பிடும் (Age of Exploration or age of Discovery)இருநூற்றாண்டுகளில் (1450 – 1650)  நிகழ்ந்த கடல் பயணங்கள் உலகத்தின் தலையெழுத்தையே மாற்றியமைத்த வரலாற்றுக் கதைகள் நாம் அறிந்த்தே.


சாகசங்கள் மீது குறிப்பாக, கடல் பயணங்கள் மீதும், வரலாற்றைப் புரட்டிப் போட்ட நிகழ்வுகளின் மீதும் ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்தப்படம் உங்களுக்கு மிகவும் பிடித்துப் போகக்கூடும்.  2011ல் வெளிவந்த நோவா ஜெம்ப்லா (NOVA ZEMBLA) ஒரு ஹாலிவுட் படமாக இல்லாத காரணத்தினாலேயே அது கவனம் பெறவில்லை என்று தோன்றுகிறது. நெதர்லாந்தில் டச்சு மொழியில் தயாரிக்கப்பட்ட இப்படம் பதினாறாம் நூற்றாண்டில்  கடல்வழி காணப் புறப்பட்ட ஒரு சாகசத்தைப் பேசுகிறது. 

 

டச்சு மாலுமி வில்லியம் பாரன்ட்ஸ் (Willem Barents), ஜேக்கப் வேன் ஹீம்ஸ்கெர்க் (Jacob Van Heemskerk) இருவரும் வடதுருவத்தின் வழியாக சீனாவுக்கு கடல்வழி காண்பதற்காக மேற்கொண்ட மூன்று பயணங்களில் மூன்றாவது பயணத்தின்போது எழுதப்பட்ட நாட்குறிப்புகளின் அடிப்படையிலான உண்மைச் சம்பவங்களை  அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப் பட்டபடம் நோவா ஜம்ப்லா. ஏற்கனவே இரண்டுமுறை முற்றுப் பெறாத பயணங்கள் செய்திருந்த வில்லியம் மூன்றாவது முறையாகப் பயணத்தைத் திட்டமிடுகிறார். ஸ்பெயினுடனான போருக்குப்பின் திவாலான நிலையில் ஹாலந்து இருந்தபோது தூரகிழக்கு நாடுகளுடன் வர்த்தகம் செய்து பொருளீட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் அது இருந்தது.  அதற்கான முகாந்திரங்களை யோசித்தபோது, கடல்வழி அதற்கான முட்டுக்கட்டையாக இருப்பது தெரிகிறது.  ஆம்ஸ்டர்டாம் நகர கவுன்சில் இந்தப் பயணத்தை ஊக்குவிக்கிறது. அதன் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட பயணமும் அதன் பதிவுகளுமே உண்மையில் வரலாற்றுச் சம்பவங்கள். இவற்றோடு ஒரு எளிமையான காதல் கதையையும் இணைத்திருக்கிறார்கள்.


நகர கவுன்சிலின் முக்கியஸ்தர்களில் ஒருவருக்கு தேவதை போன்ற மகள். அவள் காதலிக்கும் இளைஞன் கீரிட் டி வேர் (Gerrit de Veer), படித்தவன். நட்சத்திரங்களையும் கோள்களையும் பற்றிக் கற்றவன். எழுத்தாளனாகும் எண்ணம் உள்ளவன். எல்லாவற்றையும்விட எப்படியாவது காதலியை அடைந்துவிடத் துடிப்பவன். மிகச் சாதாரணமான அவனுக்கு மகளைக் கொடுக்க கவுன்சிலர் விரும்பாததில் என்ன ஆச்சரியம். அப்போது அந்நகரில் திட்டமிடப்படும் கடல் பயணத்தில் இணைந்து கொள்வதன் மூலம் செல்வந்தனாகித் திரும்பி காதலியைக் கைப்பிடிக்கலாம் என்று எண்ணமிடுகிறான். கேப்டனிடம் சென்று தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறான். வழி தேடிச்செல்லும் கடல் பயணத்தில் எழுத்தாளனுக்கு என்ன வேலை? என்கிறான் கேப்டன். நான் உங்கள் பயணத்தை எழுதி ஆவணப்படுத்துவதன் மூலம் உங்களைப் புகழடைச் செய்வேன் என்கிறான். வாஸ்கோடகாமாவும் கொலப்பஸும் அப்படி ஆவணப்படுத்தப்பட்டதால்தான் புகழடைந்தார்கள் என்பதை கேப்டன் புரிந்து கொள்கிறான்.

 

1596 மே 16ஆம் நாள் ஆம்ஸ்டர்டாம் நகரத்திலிருந்து அவர்களின் பயணம் தொடங்குகிறது. மூன்றுமாதப் பயணத்திற்குப் பின் 1596 ஆகஸ்டு 16ஆம்நாள் ஒரு நிலப்பரப்பை அடைகிறார்கள். வடதுருவத்திலிருக்கும் ‘நோவா ஜம்ப்லா’ எனும் தீவுதான் அது என அறிவிக்கிறார் கேப்டன். உற்சாகத்தில் துள்ளுகிறார்கள் மாலுமிகள். நோவா ஜம்ப்லாவின் ஓரமாக பனிப் பாறைகளின் ஊடாக பயணப்பட்டால் வெகுசீக்கிரம் சைனாவை/ இந்தியாவை அடைந்துவிட முடியும் என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால் சைனா அவர்கள் கற்பனை செய்வது மாதிரியான அருகாமையில் இல்லை என்பதையும், நோவா ஜம்ப்லா தீவு ஒரு கொடுங்கனவாக மாறப்போகிறது என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. தீவைக் கடக்குமுன்னமே கடல் உறையத் தொடங்கி பெரும் பனிப்பாறைகளுக்கிடையே கப்பல் சிக்குண்டு பயணம் ஸ்தம்பிக்கிறது. மரத்தால் தற்காலிகமாகத் தங்குவதற்காக தீவில் கட்டிய வீட்டில் மாதக்கணக்கில் தங்க வேண்டியிருக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. இருளும் இரத்தத்தை உறைய வைக்கும் குளிரும் அவர்களை வீட்டுக்குள் முடக்குகிறது. பசியும் பிணியும் மனச்சோர்வும் பீடிக்கத் தொடங்கும் வேளையில் துருவக் கரடியொன்றோடு போராடி அதைக் கொல்ல வேண்டிய இம்சையும் நேர்கிறது.

 
 
ஏறத்தாழ பத்து மாதங்களுக்குப் பின் 1597 ஜூன் 14ஆம் நாள் வடதுருவத்தின் இருளை சூரியன் முத்தமிட வெளிச்சக்கீற்றுகள் நம்பிக்கையையும் புதிய ஐயங்களையும் கொண்டுவருகின்றன. படுத்தபடுக்கையாகிவிட்ட கேப்டன். கப்பலை வழிநடத்தப்போவது யார்? என்ற கேள்வி எழ, நாயகன் எனக்கு நட்சத்திரங்களைத் தெரியும், வரைபடத்தையும் படிக்க முடியும் என்கிறான். கப்பலைச் சீர் செய்யமுடியாத நிலையில் எஞ்சியவர்கள் சிறு திறந்தபடகில் நம்பிக்கையற்ற பயணத்தை வீடுநோக்கி மேற்கொள்கிறார்கள். எழுபது நாட்கள் பயணம் செய்து தீவு ஒன்றை அடைந்தபோது படுக்கையில் இருந்த கேப்டன் இறந்து விடுகிறார். கண்மூடும்முன் நாயகன் கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டு கண்மூடுகிறார். கடிதத்தில் தன் காதலியின் தந்தை எழுதிய வாசகங்கள் ‘ இந்தப் பையனை அழைத்துச் செல்லுங்கள். என் மகளிடமிருந்து தூரமாக இருக்கட்டும். முடிந்தால் அவனை ஒரு முழுமனிதனாக மாற்றி அழைத்துவாருங்கள். இல்லையேல் அவனை அங்கிருக்கும் வட்துருவக் கரடிக்குத் தின்னக் கொடுத்துவிடுங்கள்’ என்பதைப் படிக்கிறான். தீவுக்கு அந்தப்புறம் டச்சுக் கப்பலொன்று நங்கூரமிட்டிருப்பதாக நண்பர்கள் கூவுகிறார்கள். கப்பலில் தஞ்சம் கேட்டு 1597 அக்டோபர் 06 ஆம்நாள் வீடுவந்து சேர்கிறார்கள்.

மேற்கத்திய படங்களுக்கே உரித்தான் நேர்த்தியான ஒளிப்பதிவும். இசையும், நடிகர்களும் படத்திற்கு மெருகூட்டுகிறார்கள். அளவான சம்பவங்களோடு டச்சுமொழியின் முதல் முப்பரிமான தொழில்நுட்பத்தில் வெளிவந்திருக்கும் இப்பட்த்தை ஒரு மிகச்சிறந்த தயாரிப்பு என்று கூற இயலாவிட்டாலும் அது பதிவுசெய்ய முயலும் வரலாற்றுத் தருணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது.    

புதன், 16 ஜனவரி, 2013

The Source : காதலெனும் ஆயுதம்... La source des femmes (original title)









வடக்கு ஆப்பிரிக்காவிற்கும் மத்திய கிழக்கிற்கும் இடைப்பட்ட  மொராக்கோவில் துல்லியமாக குறிப்பிடமுடியாத ஒரு மலைக்கிராமம். சுற்றிலும் மலைகள் என்று சொல்வதைவிட பாறைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கினுள் அமைந்திருக்கும் ஊர்.



வீட்டுக்குத்தேவையான தண்ணீரைச் சேகரித்துக் கொண்டுவரும் பொறுப்பு மூன்றாம் உலக நாடுகள் எங்கும் பெண்களின் கடமையாக இருப்பது போலவே, அங்கும். தண்ணீர்  கொண்டுவர குண்டும் குழியுமான மலைப்பாதையில் சில கிலோமீட்டர்கள் கால்நடையாகச் செல்லவேண்டியிருக்கிறது. பெண்கள் நால்வர் ஐவராக பேசிக்கொண்டே நடந்துசென்று இரண்டுவாளிகளில் பிடித்த தண்ணீரை நீண்ட கழியின் இருமுனைகளில் தொங்கவிட்டவாறு மலைப்பாதையில் இறங்கிச் செல்கிறார்கள்.
அன்றும், தண்ணீரைத் தெளித்து விளையாடிவிட்டு, அவரவர் வாளிகளைத் தூக்கிக்கொண்டு இறங்குகையில் கால் இடறி தடுமாறி விழுகிறாள் இளம் கர்ப்பிணி ஒருத்தி. மற்றபெண்கள் பதட்டத்துடன் அவளைச் சூழ்ந்து நிற்கவும், கலைந்த கரு குருதியாக கால்வழியாக  மண்ணில் சொட்டுகிற அதே நேரத்தில் ஊருக்குள் ஒரு பெண்ணுக்குப் பிரசவச் சடங்குகள் நடக்கிறது. மூதியவர்களாக சேர்ந்து செய்யும் பாரம்பரியமான பிரசவம். இதற்கிடையே எதைப்பற்றியும் கவலையில்லாமல், வேலையில்லாத ஆண்கள் ஊரின் ஒரே தேநீர்க்கடையில் தேநீர் குடித்தபடி பொழுதுகளைத் துரத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அன்று பெண்களெல்லாம் சேர்ந்து குளிக்கும் குளியலறையில் சிறுமிகளிலிருந்து பலதரப்பட்ட வயதினரும் குளித்துக்கொண்டிருக்கின்றனர். வழக்கம் போல் சீண்டல்கள், பாலியல் வம்புகளும் வெடிச்சிரிப்புமாய்.
 ’இன்றைக்கும் ஒருத்தியின் கரு கலைந்துவிட்டது’ என்ற லைலாவின் குரல் அனைவரின் கவனத்தையும் குவிக்கிறது.
இதையெல்லாம் இங்கு பேசத்தேவையில்லை என்கிறாள் லைலாவின் மாமியார்.
ஏன் பேசக்கூடாது. இப்படி நடப்பது முதல்முறையா?
ஆம். லைலாவும் அவளுடைய குழந்தையை மலையில்தான் இழந்தாள் என்கிறாள் இன்னொருத்தி.
நான் மட்டுமா? ஏன் ரஷிதா, யாஷ்மினா... ஆனா குழந்தையில்லை என்ற குறை எங்கள் மேல். எனக்கொரு மகள் பிறந்தால் அவளுக்கு இது நேரக்கூடாது.
நீ வெளியூர்க்காரி. நீ பேசக்கூடாது என்கிறாள் இன்னொருத்தி.
ஏன் மற்ற ஊர்களில் ஆண்கள் தண்ணீர் கொண்டு வருகிறார்களே..
 தண்ணீர் வீட்டுக்குத்தேவையான ஒன்று. அதை பெண்கள்தான் கொண்டுவர வேண்டும். ஆரம்பத்தில் இருந்து இப்படித்தான், அதுதான் நம்ம மரபு. அதை மாற்றுவதற்கு நீ ஆளல்ல என்கிறாள் லைலாவின் மாமியார்.
 ஆமாம். அன்றைக்கு ஆண்கள் நிலங்களில் வேலைசெய்யப்போனார்கள். போருக்குச் செல்லவேண்டியிருந்தது. இன்றைக்கு பெரும்பாலானபேர் நகரங்களில் வாழ்கிறார்கள். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? தேநீர்க்கடைகளில் தேநீர்குடிக்கவும் சீட்டுவிளையாடுவதுமாய் பொழுதைப் போக்குகிறார்கள். அவர்கள் தண்ணீர் சுமந்துவரட்டும்.
அப்படிச்சுமந்தாலாவது என் புருஷனுக்கு தசைகள் இருகும் என்கிறாள் ஒருத்தி. மீண்டும் சிரிப்பொலிகள் எழும்போது உள்ளே நுழைகிறாள் வயதுமுதிர்ந்த பெண்ணொருத்தி.
உட்காருங்கள். என்கிறாள்.
இது உன் விசயமல்ல. நீ தலையிட வேண்டாம் என்கிறாள் லைலாவின் மாமியார்.
போதும். நீ அதிகம் பேசிவிட்டாய். நீ உட்கார். அவள் ஒன்றும் வெளியூர்க்காரியல்ல. அவள் உன் மகனைக் கட்டியவள். 
ஒரு நாள் ஒரு ப்ரஞ்சுக்காரன் என்னிடம் கேட்டான். உன்னுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்கள் எவையென்று?
அது எல்லாமே 14வயதுக்குள்தான் என்றேன். ஏன் தெரியுமா? எனக்குத் 14வயதில்தான் திருமணமானது. அன்றைக்கு ராத்திரித்தான் ‘அது’ என்னவென்றே எனக்குத் தெரியும். அதற்குமுன் எந்த அனுபவமும் இல்லை. உங்களைப்பொலவே அவரைப் பார்த்ததுமில்லை. காலையில் கதவைத்திறக்கும் வரை நான் எதையுமே பார்க்கவில்லை. ஒரே இருட்டு. நான் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டேன். நான் நினைத்திருந்தேன். கணவன் என்பவன் பக்கத்தில் அமர்ந்து கைகளை இதமாகப்பிடித்து... ம்... அவருக்கு அப்போது வயது 40. ஏற்கனவே இரண்டுகுழந்தைகள். ஒன்று 10.இன்னொன்று 11 அவர்களுடைய தாய் நீண்டநாள் வியாதியில் படுத்துச ஆறு மாதங்களுக்கு முன்தான் செத்துப்போயிருந்தாள். நான் 14வயதில் தாயானேன். 19குழந்தைகளைப் பெற்றேன் 12செத்துப்போனது. மஃபீசா உனக்கு 12குழந்தைகள். 5 இறந்துபோனது.  உனக்கு 8. அதில் ஐந்து போய்ச்சேர்ந்த்து. யாஷ்மினா உனக்கு ஆறு. மூன்று செத்துப்போனது. பாதிகுழந்தைகளை கொல்கிறோம். அல்லது சாகடிக்கிறோம். இதுதான் நம் மரபு. என்னை வியாதிக்காரியாக என் புருஷன் நினைத்தான். என்னைத்தள்ளிவிட வழிபார்த்தான். இப்போது ஏழு குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கின்றனர். கடவுளுக்கு நன்றி. பின் எப்படி நான் 14வயதுக்குமேல் மகிழ்ச்சியாக இருந்திருக்கமுடியும்? எப்படி?
லைலா சொல்வது சரிதான். ஆண்கள் தண்ணீர் கொண்டுவரட்டும்.
எப்படி? அவர்களை நீங்கள் வற்புறுத்துவீர்களா? என்று ஒருத்தி கேட்கவும் நீண்ட அமைதி சூழ்கிறது. மௌனத்தை உடைக்கும் லைலா கூறுகிறாள்
நாம் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும்... ’காதல் வேலை நிறுத்தம்’. மீண்டும் மௌனம்.

 


ஏன் கூடாது.. காதல் வேலைநிறுத்தம். பெண்கள் புரிந்தும் புரியாமலும் ஒருவரை ஒருவரை பார்த்துக்கொள்கிறார்கள். எதிரும் புதிருமான வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டே கலைந்து செல்கிறார்கள்.
பாலுறவுதான் நம் ஆயுதம் என்கிறாள் லைலா
எனக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. 10வருஷத்திற்குமுன்பே என்புருஷனைக் குழியில் இறக்கிவிட்டேன். யாருக்கு தைரியம் இருக்கு? என்று முதியவள் கேட்டு முடிக்கும் போது எஞ்சியிருப்பவள் லைலா மட்டும்தான்.
படிப்படியாக லைலாவும் அந்த முதியவளும் பெண்களை சமாதானப்படுத்தி வெற்றிகரமாக வேலைநிறுத்தத்தை அமுல் படுத்திவிடுகிறார்கள். இரவில் மெல்ல நெருங்கும் கணவர்கள் விதவிதமான சல்ஜாப்புகளால் துரத்தப்படுகிறார்கள்.
சுற்றுலாப் பயணிகள் அந்த ஊருக்கு வருவது வழக்கம். அப்படி மறுநாள் ஒரு சுற்றுலா கும்பல் வரப்போவது கேள்விப்பட்டு, சுவற்றில் இந்த ஊரில் காதல் வேலைநிறுத்தம் என்று சுவரில் எழுதி வைக்கிறாள் லைலா.
அவர்கள் நினைத்த வேகத்தில் எதுவும் நடந்துவிடவில்லை. ஊரின் மையத்தில் ஆண்கள் கூடும் தேநீர்கடை முன் தங்கள் படுக்கைகளை கிடத்தி முற்களால் ஒரு கிணற்றை உருவாக்கி ஒரு வாளியையும் தொங்க விடுகிறார்கள். துணியில்
 ’உங்கள் இதயமும் இவ்வளவு வறண்டதா? இந்த கிணற்றைப்போல்’
என்று எழுதிவைத்து அமர்ந்துகொள்கிறார்கள். அவர்களுடைய மதகுரு அழைக்கப்படுகிறார். அவர் பெண்களுக்கு அறிவுறை சொல்ல முனைகிறார். நீங்கள் ஆண்களுக்கு எதிரான ‘ஜிகாத்தைக்’ கைவிட வேண்டும் என்கிறார்.
லைலா நசொல்கிறாள், ‘இது ஆண்களுக்கு எதிரான ‘ஜிகாத்’ அல்ல. அநீதிக்கு எதிரான ஜிகாத் என்கிறாள்.
கடைசியில் காதல் வேலைநிறுத்தம் ஜெயித்து தண்ணீர் வந்து சேர்கிறது ஊருக்கு. அருமையான ஒளிப்பதிவும் வேறுபட்ட நிலவியலும் மிகப்புதிய அழகியலை உருவாக்குகின்றன. இயக்குநரின் திரைக்கதையில் அந்த சமூகத்தின்  பண்பாட்டுச் சடங்குகள் கதையோடு இணைக்கப்பட்டுள்ள நேர்த்தி கவனிக்கத்தக்கது. நடிகர்கள் குறிப்பாக லைலாவாகவரும் Leïla Bekhti யின் ஓப்பனையற்ற அழகு பார்த்துக்கொண்டேயிருக்கத் தூண்டுவது. பாரம்பரிய இசையும் பாடல்களும் (இசை: Armand Amar) அற்புதமாகப் பொருந்திப் போகின்றன. மிகவும் கட்டுப்பெட்டியான இஸ்லாமிய சமூகத்தை பின்னனியாகக் கொண்ட இப்படம் ஒரு அற்புதமான பெண்ணியப் பிரதியாக முடிகிறது.
இந்தமாதிரி நடந்திருக்க் முடியுமா? என்பதைப் பற்றி உறுதியாகச் சொல்லமுடியாதுதான். யதார்த்தம் என்ற பெயரில் அவலங்களையே பதிவுசெய்துகொண்டிப்பதோடு, இம்மாதிரி நம்பிக்கைகளை விதைக்கிற கலைப்படைப்புகளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. 

'நாம் சிந்திக்கும் வேகத்தைவிட சமூகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது' எனும் ரது மிகைல்லியனு இப்படத்தின் இயக்குநர். ருமேனியாவில் பிறந்த பிரஞ்சு இயக்குநர். திரைக்கதை ஆசிரியர். கவிஞர்.
Radu Mihaileanu: “Society is moving along at a faster rate than our thinking”
ஐந்து படங்களை இயக்கியிருக்கும் இவரின் இன்னொரு முக்கியமான படம் ’தி கான்சர்ட்’(The Concert). சென்ற ஆண்டு கேன்ஸ் விழாவில் The Source மிகுந்த கவனத்தை ஈர்த்தது.

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.