ஞாயிறு, 22 டிசம்பர், 2013

TRAFFIC (ட்ராஃபிக்): கதையல்ல... கதைகள்



வணிக ரீதியில் ஒரு திரைப்படத்தை எடுக்கத் தேவையாக இருப்பது இன்றும் கதை தான். கதை என்பது ஒரு தனிமனிதனை, குடும்பத்தை, சமூகத்தைச் சுற்றி நிகழும் சம்பவங்களின் தொகுப்பு. இன்னும் குறிப்பாக, ஒரு மையச் சரடால் பிணைக்கப்படும் சம்பவங்கள் அல்லது ஒரு மையத்தைச் சுற்றி, அதை நோக்கியே நகரும் விதமாய்த் தேர்ந்தெடுக்கப்படும் சம்பவங்கள்.

ஹாலிவுட்டில் 1990கள் வரையிலும் ஒரு பிரச்சனையை அறிமுகப்படுத்தி அதை தர்க்க ரீதியாக வளர்த்துச் சென்று அவிழ்ப்பது என்பது எழுதப்படாத விதி. வர்த்தக சினிமாவின் எல்லாப் படங்களுக்கும் ஓரளவிற்கு இந்தப் பார்முலா ஒத்துப் போகக் கூடியதுதான். அதிலும் ஒரு கதையில் ஒரு மையத்தை வளர்த்தெடுப்பதற்காகவே பாத்திரங்களும், சம்பவங்களும் உருவாக்கப்படும்.

ஒரு மையத்தை நோக்கிய, ஒரு கதைக்குப் பதிலாக மூன்று கதைகளை உள்ளடக்கிய முதல் படமாக டிராஃபிக் இருக்கக் கூடும்2000இல் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு துணை நடிகர், படத்தொகுப்பு, திரைக்கதை, இயக்குநர் ஆகிய நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றதும், சர்வதேசப் படவிழாக்களில் 57 விருதுகளை வென்றதும் மேலும் 46 விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டதுமான படம் டிராஃபிக்.

நான் -லீனியர் சினிமாவின் முன்னோடிகளில் இப்படமும் ஒன்று என்று தயங்காமல் கூறலாம்.

ஸ்டீபன் காகன் (Stephen Gaghan) திரைக்கதை அமைத்து ஸ்டீவன் சோடர்பர்க் (Stephen Soderbergh) இயக்கிய இப்படம் அமெரிக்காவின், ஏன் உலகின் பல நாடுகளிலும் பற்றி எரியும் ஒரு பிரச்சனையைப் பேசுகிறது.

1990களில் பிரிட்டன் தொலைக்காட்சியில் ஐந்து பாகத் தொடராக வந்து பெரும் வரவேற்பைப் பெற்ற டிராஃபிக்எனும் தொடரை அடியொற்றியதுதான் ஸ்டீபனின் திரைக்கதையும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற கீழை நாடுகளின் பாப்பிச் செடித் தோட்டங்களிலிருந்து எடுக்கப்படும்ஹெராயின்அய்ரோப்பியத் தெருக்களுக்கு வந்து விற்பனைப் பொருளாகும் போதைப் போக்குவரத்தைப் (Drug Traffic) பற்றியதே அத்தொலைக்காட்சித்தொடர். சோடர்பர்க்கின் திரைப்படமும் அதன் தலைப்பை வலியுறுத்துவதான போதைப் பொருள் போக்குவரத்தைப் பற்றியதுதான் என்றாலும் அதைத் திரைக்கதையாக்கிய விதத்தில் உலகம் முழுவதும் திரைப்படக் கலைர்களின் கவனத்தைத் திருப்பிய படம்.

மூன்று வெவ்வேறு கதைகளை ஒரே மையச் சரடில் பிணைத்து மூன்று கதைகளையும் இணையாகச் சொல்லிச் செல்லும் விதத்தில் ஒரு புதுமையான திரைமொழியை இயக்குநர் சாத்தியமக்கியிருக்கிறார்.

கதை: 1


ராபர்ட் வாக்பீல்டு எனும் ஒகாயோ மாநில சுப்ரீம் கோர்ட் நீதிபதி  மெக்சிக்கோவிற்கும் வட அமெரிக்காவிற்குமிடையேயான போதைப் பொருள் கடத்தலுக்கெதிரான முயற்சிகளுக்காக நியமிக்கப்படுகிறார். பேச்சுவார்த்தைகள், சந்திப்புகள் என வேலையில் மூழ்கியிருக்கும் நீதிபதி, தன் வீட்டுக் கழிப்பறைக்குள் தன் பதின்பருவ மகள் போதை வஸ்துக்களைப் பதுக்கி புழங்கிக் கொண்டிருப்பதைக் கவனிக்கத் தவறுகிறார். தன் வகுப்புத் தோழனால் போதைப் பொருளுக்கு அறிமுகப் படுத்தப்பட்டு நகரத்தின் தெருக்களில் எளிதாகக் கிடக்கும் போதைப் பொருட்களால் மிக விரைவில் அப்பழக்கத்திற்கு அடிமையாகிறாள்.

நீதிபதி, மகளின் பழக்கத்தைக் கண்டுபிடித்து , மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறார். அங்கிருந்து தப்பிக் காணாமல் போன மகளைத் நகரெங்கும் தேடுகிறார். இறுதியில் நகரத்தின் மலிவான விடுதியறை ஒன்றில் நடுத்தர வயது ஆணுடன் படுக்கையறையில் மயங்கிய நிலையில் மகளைக் காண்கிறார் நீதிபதி. குழந்தைத்தனம் மாறாத முகத்துடன் அரை மயக்கத்தில் டாடிஎன்கிற மகளைக் கட்டிக் கொண்டு குலுங்கி அழுகிறார் நீதிபதி. நீதிபதியாக நடிக்கும் மைக்கேல் டக்ளஸ் குறிப்பிட்ட அந்தக் காட்சியிலும் அதற்குப் பின் படம் நெடுகிலும் வலி நிறைந்த ஆழமான முகபாவத்தை வெளிப்படுத்தும் நடிப்பு மிகத் தேர்ச்சி பெற்ற நடிகர்கள் மட்டுமே  நிகழ்த்தக் கூடியது.

கதை: 2


ஜாவியர் என்ற மெக்ஸிக்கோ நாட்டின் போதைப் பொருள் தடுப்பு போலீஸ்காரனைப் பற்றியது. அவனும் நண்பனுமாக ஒரு பெரிய போதைக் கடத்தலைப் பிடிக்கிறார்கள். லாரியை மடக்கி ஓட்டுநர்களைச் சிறைப் பிடிக்கிறார்கள். ஆனால் அதற்குமேல் அவர்களால் கடத்தல் காரர்களை ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஏனெனில் மெக்சிக்கோவின் ராணுவக் கமான்டரே தன் பட்டாளங்களுடன் நேரில்வந்து லாரியை விடுவித்துச் செல்கிறார். ஞ்சமும் ஊழலும் நிறைந்த அரசுத்துறையில் எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல் எல்லா மட்டங்களிலும் தகவல்கள் கசிகின்றன. தான் தோற்கப் போகிற யுத்தத்தில் இருக்கிறோம் என்பது தெரிந்தும் தன் கடமையைச் செய்பவனாக நடித்திருக்குகும் பெனிச்சியோ டெல் டோரா இப்பாத்திரத்திற்காக ஆஸ்கார் வென்றார்.

கதை: 3


மெக்ஸிக்கோவிலிருந்து போதைப் பொருட்கள் கடத்தும் மேல்தட்டு அமெரிக்கத் தொழிலதிபரான கார்ல். போலீசாரால் கண்காணிக்கப்பட்டு திடீரெனக் கைது செய்யப்படுகிறான். அவன் கைதாகும்வரை அவனின் சட்டவிரோத நடவடிக்கைகளை  அவனுடைய மனைவி அறிந்திருப்பதில்லை. சிறுவனான மகனுடன் கர்ப்பிணியான அவள் அன்றாட வாழ்வின் நெருக்கடிகளைச் சந்திக்க நேர்கிறது. மேலும் சான்றுகள் தேடி தொடர்ந்து போலீசார் அவளைக் கண்காணித்தபடி இருக்கிறார்கள். கணவன் தண்டனையிலிருந்து தப்பி வெளிவர வேண்டுமென்றால், போலீஸ் காவலில் இருக்கும் ஒரே சாட்சியான ஒருவனைக் கொல்ல வேண்டும். தன்னுடைய பழைய வாழ்க்கை திரும்பக் கிடைக்க வேண்டுமெனில் ஒரே சாட்சியான போலீஸ்காவலில்  இருப்பவன்  சாகவேண்டும். அந்த வேலையைச் செய்ய அவளே களத்தில் இறங்கி அவனைக் கொலை செய்ய ஏற்பாடு செய்கிறாள். சாட்சி கொல்லப் படுகிறான். கார்ல் எந்த சிராய்ப்பும் இன்றி வெளியே வருகிறான்.

மேற்கண்ட மூன்று கதைகளும் எந்தப் புள்ளியிலும் ஒன்றுடன் ஒன்று இணையவில்லை என்றாலும் இக்கதைகள் இணையாகச் சொல்லப்படும் விதத்தில் தனித்தனிக் கதைகளாகப் பார்வையாளனை இடறுவதில்லை. மூன்று கதைகளும் தன்னளவில் தனித்து இயங்கக் கூடியவை என்பது உணர வைக்கிறது. இது சாத்தியமாவதற்குக் காரணம், ஒரு சமூகப் பிரச்சனையை வணிகச் சரக்காக்குவது என்றில்லாமல், பிரச்சனையின் பல தரப்புகளைப் பார்வையாளன் முன் விரித்துப் போட்டு ஒரு திறந்த உரையாடலைத் தொடங்கி வைக்கிறார் இயக்குநர்.

பொதுவாக ஹாலிவுட் படங்கள் ஒரு சமகாலப் பிரச்சனையை எடுத்து அர்னால்டு போன்ற அதிநாயகர்களிடம் கொடுத்துவிட்டால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். படம் முடிவதற்குள் சுமுகமாக முடித்து வைத்துவிட்டு  விடுமுறையை காதலியுடனோ மனைவியுடனோ  கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். பழைய மரபுப்படி ஒரு பிரச்சனையை அல்லது முரணை ஆரம்பித்தால் அதை நாயகன் முடித்து வைத்தாக வேண்டும். இல்லையெனில் சராசரி பார்வையாளன் அதிருப்தி கொள்வான் என்பது போன்ற  வணிகவிதிகளை இயக்குநர் சோடர்பர்க் பொருட்படுத்தவில்லை. மாறாக, போதை பொருள் கடத்தல், வர்த்தகம் மற்றும் போதைக்குப் பலியாபவர்களைப் பற்றிய புதிய உரையாடலைத் தொடங்கி வைக்கிறார்.


நீதிபதியின் மகள் போதைக்கு அடிமையாகி அபாகரமான ஒரு உலகினுள் புகுந்து வெளிவந்தும் மனதில் தழும்புகளைச் சுமக்கிறாள். பல ஆயிரம் குழந்தைகளை போதைக்கு அடிமையாக்கும் கார்ல் போன்ற கட்த்தல் மன்னர்கள் புன்னகைத்துக் கொண்டு நீதிமன்றத்தை விட்டு வெளிவந்து சுகபோக வாழ்க்கையைத் தங்கு தடையின்றித் தொடர்கிறார்கள். சட்டத்தை உயிராய் மதிக்கும் போலீஸ்காரர்கள் தெருக்களில் உயிர் துறக்கிறார்கள். அதிகார வர்க்கத்தின் எல்லா மட்டங்களிலும் இரகசியங்கள் பணத்திற்காகவும் இன்ன பிற தேவைகளுக்காகவும் கசிய விடப்படுகின்றன. இருந்தும் தொடரும் இந்த யுத்த்த்தில் தோற்பவர் யார்? ஜெயிப்பவர் யார்?

ஆண்டொன்றுக்கு 19 பில்லியன் டாலர்களைப் போதை பொருள் தடுப்பு யுத்தத்திற்காக அமெரிக்கா செலவிட்டாலும் போதைப் பொருட்களை ஒழிப்பதென்பது ஒருபோதும் சாத்தியமாகாத கனவாகவே இருந்து வருகிறது என்பதை உணர்த்தும் இயக்குநர், போதைப் பொருட்களின் தீய விளைவுகளாகப் படத்தைச் குறுக்காமல் போதை வர்த்தகத்தின் கண்ணிகள், விநியோகம், இவற்றுடன் தொடர்புடைய அதிகார வர்க்கம், அதன் இடைவெளிகள் பற்றிய திறந்த புத்தகமாகிறது திரைப்படம்.


போதைப்பொருட்கள் மனிதனைக் கொல்லும் என்றாலும் சிகரெட், புகையிலை, மது எல்லாமுமே நாளடைவில் கொல்லக்கூடியதாக இருக்கும் பட்சத்தில் ஏன் போதைப் பொருட்களுக்கான சட்டங்கள் இவ்வளவு கடுமையாக இருக்க வேண்டும். போதைப் பொருட்களை அளவாக அனுமதிக்கும் சட்டங்களாலும் இதன் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியலாம் அல்லவா என்ற ரீதியிலும் விவாதங்களை இந்தப் படம் எழுப்புகிறது. போதை வஸ்துக்களுக்கெதிரான போர் என்பது அரசுக்கும் கடத்தல் மன்னர்களுக்கும் இடையிலான போர் மட்டுமல்ல. கணவன் மனைவிக்கிடையேயான, சொந்தக் குழந்தைகளுக்கிடையேயான, அண்டை வீட்டார் நண்பர்களுக்கிடையேயான போராட்டமாகவும் மாறிவிடுகிறது என்பதும் ஊடு சரடாய் ஓடுகிறது.

திரைக்கதையின் தனித்துவத்தைப் போலவே திரை மொழியிலும், இயக்குநரின் உத்திகள் மிகுந்த புரிதலுடன் கையாளப்பட்டுள்ளன. படத்தில் இடம் பெறும் மூன்று கதைகளுக்கும் மூன்று விதமான கச்சா பிலிமை (Film Stock) பயன் படுத்தியுள்ளதோடு, மூன்றுவிதமான ஒளியமைப்பு, வண்ணச் சாயலையும் தேர்வு செய்துள்ளார்.

§  நீதிபதி அவரின் இளம் மகள் வரும் கதையில் மேலோங்கியிருக்கும் நீலவண்ணம் நீதிபதியின் வலிமிகுந்த இயலாமையையும் அவலத்தையும் அழுத்தமாக்குகிறது. மெக்சிக்கோ போலீஸ்காரனின் கதை, கூசும் வெளிச்சத்தில் மஞ்சள் வண்ணம் தூக்கலான ஒளியமைப்பு மெக்சிக்கோவின் வறன்ட நிலப்பரப்பையும், தோற்கும் விளையாட்டை கடமைக்காக விளையாடும் மனிதனின் மன உணர்வையும் காட்டுவதாக அமைகிறது.

§  கடத்தில் மன்னனின் கர்ப்பிணி மனைவியின் கதை இயற்கை வெளிச்சத்தில் இயல்பான வண்ணங்களுடன்..வண்ணங்களிலும் ஒளியமைப்பிலும் இயக்குநர் செய்துள்ள பரிசோதனைகளும் பெரும்பாண்மையும் கைகளில் காமராவை வைத்துக் (Hand Held Shots) கையாண்ட முறையிலும் மெக்சிக்கோ கதையில் இடம் பெறும் ஸ்பானிய உரையாடல்களும் இப்படத்திற்கு யதார்த்தத் தன்மையையும் சில இடங்களில் செய்திப்படத் தன்மையையும் (Documentary) உருவாக்குகிறது.

ஒரு கதையின் வரிசையை நேர்கோட்டில் சொல்லாமல் முன்பின் தாவும் வரிசைக் குலைப்பு பெருமளவு திரைப்படங்களில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரே மையத்தில் இயங்கும் மூன்று வெவ்வேறு கதைகளை, வெவ்வேறு வண்ணத்தில் ஒளியமைப்பில் பிணைத்து, தொடக்கமும் முடிவுமற்றதான கதைகளை வணிக சினிமாவில் பரிசோதனை செய்து ஸ்டீவன் சோடர்பர்க் உருவாக்கியுள்ள திரைமொழி திரையுலக வரலாற்றில் சந்தேகமில்லாமல் ஒரு புது முயற்சிதான்.


இயக்குநர் ஸ்டீவன் சோடர்பர்க் 1963இல் அமெரிக்காவில் பிறந்தவர். பேராசிரியரான தந்தைக்கு இரண்டாவதாகப் பிறந்தவர். 15 வயதில் அனிமேசனை பாடமாகக் கற்றார். பள்ளிப் படிப்புக்கு மேல் தொடராமல் ஹாலிவுட்டில் சிறிதுகாலம் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்தார். பின், வீட்டிலேயே எழுதுவதும் குறும்படங்கள் தயாரிப்பதுமாக இருந்தார். 1986 இல் ‘yes’ என்ற ராக் இசைக்குழுவைப்பற்றிய முழுநீள செய்திப்படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பைப் பெற்றார். ‘Yes 9012 Live’ எனும் இப்படமே இவரின் முதல் முழுநீளப் படம். இரண்டாவது கதைப்படமான ‘Sex, Lies and Video Tape’ (1989) விருதுகளைப் பெற்று இவரை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த்து. ‘Out of Sight’ வணிக ரீதியில் பெரும் வெற்றி பெற்றது. 2000 இல் வெளிவந்த ‘ Erin Brockovrich’ சமூகப் பிரச்சனைக்காகப் போராடிய ஒரு பெண்ணின் உண்மைக்கதையை அடியொற்றிய வெற்றிப்படம். தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், நடிகர், இசையமைப்பாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட இயக்குநரான இவரின் தயாரிப்பில் 2006இல் ‘Che’ எனும் பெயரில் சேகுவேராவின் வாழ்க்கைக் கதையும் படமாகியுள்ளது.

Traffic படத்தின் முழு ஒளிப்பதிவை சோடர்பர்க்கே செய்திருந்தாலும், ஒளிப்பதிவு இயக்கம் எனக் குறிப்பிடுவதற்கு ‘ Writers Guild Of America’ ஆட்சேபித்ததன் காரணமாக Peter Anderews என்ற பெயர் இடம் பெற்றதாம்.


என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.