அ-நேர்கோட்டுச் சினிமா(Non-liner Cinema) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அ-நேர்கோட்டுச் சினிமா(Non-liner Cinema) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

TRAFFIC (ட்ராஃபிக்): கதையல்ல... கதைகள்



வணிக ரீதியில் ஒரு திரைப்படத்தை எடுக்கத் தேவையாக இருப்பது இன்றும் கதை தான். கதை என்பது ஒரு தனிமனிதனை, குடும்பத்தை, சமூகத்தைச் சுற்றி நிகழும் சம்பவங்களின் தொகுப்பு. இன்னும் குறிப்பாக, ஒரு மையச் சரடால் பிணைக்கப்படும் சம்பவங்கள் அல்லது ஒரு மையத்தைச் சுற்றி, அதை நோக்கியே நகரும் விதமாய்த் தேர்ந்தெடுக்கப்படும் சம்பவங்கள்.

ஹாலிவுட்டில் 1990கள் வரையிலும் ஒரு பிரச்சனையை அறிமுகப்படுத்தி அதை தர்க்க ரீதியாக வளர்த்துச் சென்று அவிழ்ப்பது என்பது எழுதப்படாத விதி. வர்த்தக சினிமாவின் எல்லாப் படங்களுக்கும் ஓரளவிற்கு இந்தப் பார்முலா ஒத்துப் போகக் கூடியதுதான். அதிலும் ஒரு கதையில் ஒரு மையத்தை வளர்த்தெடுப்பதற்காகவே பாத்திரங்களும், சம்பவங்களும் உருவாக்கப்படும்.

ஒரு மையத்தை நோக்கிய, ஒரு கதைக்குப் பதிலாக மூன்று கதைகளை உள்ளடக்கிய முதல் படமாக டிராஃபிக் இருக்கக் கூடும். 2000இல் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு துணை நடிகர், படத்தொகுப்பு, திரைக்கதை, இயக்குநர் ஆகிய நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றதும், சர்வதேசப் படவிழாக்களில் 57 விருதுகளை வென்றதும் மேலும் 46 விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டதுமான படம் டிராஃபிக்.

நான் -லீனியர் சினிமாவின் முன்னோடிகளில் இப்படமும் ஒன்று என்று தயங்காமல் கூறலாம்.

ஸ்டீபன் காகன் (Stephen Gaghan) திரைக்கதை அமைத்து ஸ்டீவன் சோடர்பர்க் (Stephen Soderbergh) இயக்கிய இப்படம் அமெரிக்காவின், ஏன் உலகின் பல நாடுகளிலும் பற்றி எரியும் ஒரு பிரச்சனையைப் பேசுகிறது.

1990களில் பிரிட்டன் தொலைக்காட்சியில் ஐந்து பாகத் தொடராக வந்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘டிராஃபிக்’ எனும் தொடரை அடியொற்றியதுதான் ஸ்டீபனின் திரைக்கதையும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற கீழை நாடுகளின் பாப்பிச் செடித் தோட்டங்களிலிருந்து எடுக்கப்படும் ‘ஹெராயின்’ அய்ரோப்பியத் தெருக்களுக்கு வந்து விற்பனைப் பொருளாகும் போதைப் போக்குவரத்தைப் (Drug Traffic) பற்றியதே அத்தொலைக்காட்சித்தொடர். சோடர்பர்க்கின் திரைப்படமும் அதன் தலைப்பை வலியுறுத்துவதான போதைப் பொருள் போக்குவரத்தைப் பற்றியதுதான் என்றாலும் அதைத் திரைக்கதையாக்கிய விதத்தில் உலகம் முழுவதும் திரைப்படக் கலைஞர்களின் கவனத்தைத் திருப்பிய படம்.

மூன்று வெவ்வேறு கதைகளை ஒரே மையச் சரடில் பிணைத்து மூன்று கதைகளையும் இணையாகச் சொல்லிச் செல்லும் விதத்தில் ஒரு புதுமையான திரைமொழியை இயக்குநர் சாத்தியமக்கியிருக்கிறார்.

கதை: 1


ராபர்ட் வாக்பீல்டு எனும் ஒகாயோ மாநில சுப்ரீம் கோர்ட் நீதிபதி  மெக்சிக்கோவிற்கும் வட அமெரிக்காவிற்குமிடையேயான போதைப் பொருள் கடத்தலுக்கெதிரான முயற்சிகளுக்காக நியமிக்கப்படுகிறார். பேச்சுவார்த்தைகள், சந்திப்புகள் என வேலையில் மூழ்கியிருக்கும் நீதிபதி, தன் வீட்டுக் கழிப்பறைக்குள் தன் பதின்பருவ மகள் போதை வஸ்துக்களைப் பதுக்கி புழங்கிக் கொண்டிருப்பதைக் கவனிக்கத் தவறுகிறார். தன் வகுப்புத் தோழனால் போதைப் பொருளுக்கு அறிமுகப் படுத்தப்பட்டு நகரத்தின் தெருக்களில் எளிதாகக் கிடக்கும் போதைப் பொருட்களால் மிக விரைவில் அப்பழக்கத்திற்கு அடிமையாகிறாள்.

நீதிபதி, மகளின் பழக்கத்தைக் கண்டுபிடித்து , மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறார். அங்கிருந்து தப்பிக் காணாமல் போன மகளைத் நகரெங்கும் தேடுகிறார். இறுதியில் நகரத்தின் மலிவான விடுதியறை ஒன்றில் நடுத்தர வயது ஆணுடன் படுக்கையறையில் மயங்கிய நிலையில் மகளைக் காண்கிறார் நீதிபதி. குழந்தைத்தனம் மாறாத முகத்துடன் அரை மயக்கத்தில் ‘டாடி’ என்கிற மகளைக் கட்டிக் கொண்டு குலுங்கி அழுகிறார் நீதிபதி. நீதிபதியாக நடிக்கும் மைக்கேல் டக்ளஸ் குறிப்பிட்ட அந்தக் காட்சியிலும் அதற்குப் பின் படம் நெடுகிலும் வலி நிறைந்த ஆழமான முகபாவத்தை வெளிப்படுத்தும் நடிப்பு மிகத் தேர்ச்சி பெற்ற நடிகர்கள் மட்டுமே  நிகழ்த்தக் கூடியது.

கதை: 2


ஜாவியர் என்ற மெக்ஸிக்கோ நாட்டின் போதைப் பொருள் தடுப்பு போலீஸ்காரனைப் பற்றியது. அவனும் நண்பனுமாக ஒரு பெரிய போதைக் கடத்தலைப் பிடிக்கிறார்கள். லாரியை மடக்கி ஓட்டுநர்களைச் சிறைப் பிடிக்கிறார்கள். ஆனால் அதற்குமேல் அவர்களால் கடத்தல் காரர்களை ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஏனெனில் மெக்சிக்கோவின் ராணுவக் கமான்டரே தன் பட்டாளங்களுடன் நேரில்வந்து லாரியை விடுவித்துச் செல்கிறார். லஞ்சமும் ஊழலும் நிறைந்த அரசுத்துறையில் எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல் எல்லா மட்டங்களிலும் தகவல்கள் கசிகின்றன. தான் தோற்கப் போகிற யுத்தத்தில் இருக்கிறோம் என்பது தெரிந்தும் தன் கடமையைச் செய்பவனாக நடித்திருக்குகும் பெனிச்சியோ டெல் டோரா இப்பாத்திரத்திற்காக ஆஸ்கார் வென்றார்.

கதை: 3


மெக்ஸிக்கோவிலிருந்து போதைப் பொருட்கள் கடத்தும் மேல்தட்டு அமெரிக்கத் தொழிலதிபரான கார்ல். போலீசாரால் கண்காணிக்கப்பட்டு திடீரெனக் கைது செய்யப்படுகிறான். அவன் கைதாகும்வரை அவனின் சட்டவிரோத நடவடிக்கைகளை  அவனுடைய மனைவி அறிந்திருப்பதில்லை. சிறுவனான மகனுடன் கர்ப்பிணியான அவள் அன்றாட வாழ்வின் நெருக்கடிகளைச் சந்திக்க நேர்கிறது. மேலும் சான்றுகள் தேடி தொடர்ந்து போலீசார் அவளைக் கண்காணித்தபடி இருக்கிறார்கள். கணவன் தண்டனையிலிருந்து தப்பி வெளிவர வேண்டுமென்றால், போலீஸ் காவலில் இருக்கும் ஒரே சாட்சியான ஒருவனைக் கொல்ல வேண்டும். தன்னுடைய பழைய வாழ்க்கை திரும்பக் கிடைக்க வேண்டுமெனில் ஒரே சாட்சியான போலீஸ்காவலில்  இருப்பவன்  சாகவேண்டும். அந்த வேலையைச் செய்ய அவளே களத்தில் இறங்கி அவனைக் கொலை செய்ய ஏற்பாடு செய்கிறாள். சாட்சி கொல்லப் படுகிறான். கார்ல் எந்த சிராய்ப்பும் இன்றி வெளியே வருகிறான்.

மேற்கண்ட மூன்று கதைகளும் எந்தப் புள்ளியிலும் ஒன்றுடன் ஒன்று இணையவில்லை என்றாலும் இக்கதைகள் இணையாகச் சொல்லப்படும் விதத்தில் தனித்தனிக் கதைகளாகப் பார்வையாளனை இடறுவதில்லை. மூன்று கதைகளும் தன்னளவில் தனித்து இயங்கக் கூடியவை என்பது உணர வைக்கிறது. இது சாத்தியமாவதற்குக் காரணம், ஒரு சமூகப் பிரச்சனையை வணிகச் சரக்காக்குவது என்றில்லாமல், பிரச்சனையின் பல தரப்புகளைப் பார்வையாளன் முன் விரித்துப் போட்டு ஒரு திறந்த உரையாடலைத் தொடங்கி வைக்கிறார் இயக்குநர்.

பொதுவாக ஹாலிவுட் படங்கள் ஒரு சமகாலப் பிரச்சனையை எடுத்து அர்னால்டு போன்ற அதிநாயகர்களிடம் கொடுத்துவிட்டால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். படம் முடிவதற்குள் சுமுகமாக முடித்து வைத்துவிட்டு  விடுமுறையை காதலியுடனோ மனைவியுடனோ  கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். பழைய மரபுப்படி ஒரு பிரச்சனையை அல்லது முரணை ஆரம்பித்தால் அதை நாயகன் முடித்து வைத்தாக வேண்டும். இல்லையெனில் சராசரி பார்வையாளன் அதிருப்தி கொள்வான் என்பது போன்ற  வணிகவிதிகளை இயக்குநர் சோடர்பர்க் பொருட்படுத்தவில்லை. மாறாக, போதை பொருள் கடத்தல், வர்த்தகம் மற்றும் போதைக்குப் பலியாபவர்களைப் பற்றிய புதிய உரையாடலைத் தொடங்கி வைக்கிறார்.


நீதிபதியின் மகள் போதைக்கு அடிமையாகி அபாயகரமான ஒரு உலகினுள் புகுந்து வெளிவந்தும் மனதில் தழும்புகளைச் சுமக்கிறாள். பல ஆயிரம் குழந்தைகளை போதைக்கு அடிமையாக்கும் கார்ல் போன்ற கட்த்தல் மன்னர்கள் புன்னகைத்துக் கொண்டு நீதிமன்றத்தை விட்டு வெளிவந்து சுகபோக வாழ்க்கையைத் தங்கு தடையின்றித் தொடர்கிறார்கள். சட்டத்தை உயிராய் மதிக்கும் போலீஸ்காரர்கள் தெருக்களில் உயிர் துறக்கிறார்கள். அதிகார வர்க்கத்தின் எல்லா மட்டங்களிலும் இரகசியங்கள் பணத்திற்காகவும் இன்ன பிற தேவைகளுக்காகவும் கசிய விடப்படுகின்றன. இருந்தும் தொடரும் இந்த யுத்த்த்தில் தோற்பவர் யார்? ஜெயிப்பவர் யார்?

ஆண்டொன்றுக்கு 19 பில்லியன் டாலர்களைப் போதை பொருள் தடுப்பு யுத்தத்திற்காக அமெரிக்கா செலவிட்டாலும் போதைப் பொருட்களை ஒழிப்பதென்பது ஒருபோதும் சாத்தியமாகாத கனவாகவே இருந்து வருகிறது என்பதை உணர்த்தும் இயக்குநர், போதைப் பொருட்களின் தீய விளைவுகளாகப் படத்தைச் குறுக்காமல் போதை வர்த்தகத்தின் கண்ணிகள், விநியோகம், இவற்றுடன் தொடர்புடைய அதிகார வர்க்கம், அதன் இடைவெளிகள் பற்றிய திறந்த புத்தகமாகிறது திரைப்படம்.


போதைப்பொருட்கள் மனிதனைக் கொல்லும் என்றாலும் சிகரெட், புகையிலை, மது எல்லாமுமே நாளடைவில் கொல்லக்கூடியதாக இருக்கும் பட்சத்தில் ஏன் போதைப் பொருட்களுக்கான சட்டங்கள் இவ்வளவு கடுமையாக இருக்க வேண்டும். போதைப் பொருட்களை அளவாக அனுமதிக்கும் சட்டங்களாலும் இதன் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியலாம் அல்லவா என்ற ரீதியிலும் விவாதங்களை இந்தப் படம் எழுப்புகிறது. போதை வஸ்துக்களுக்கெதிரான போர் என்பது அரசுக்கும் கடத்தல் மன்னர்களுக்கும் இடையிலான போர் மட்டுமல்ல. கணவன் மனைவிக்கிடையேயான, சொந்தக் குழந்தைகளுக்கிடையேயான, அண்டை வீட்டார் நண்பர்களுக்கிடையேயான போராட்டமாகவும் மாறிவிடுகிறது என்பதும் ஊடு சரடாய் ஓடுகிறது.

திரைக்கதையின் தனித்துவத்தைப் போலவே திரை மொழியிலும், இயக்குநரின் உத்திகள் மிகுந்த புரிதலுடன் கையாளப்பட்டுள்ளன. படத்தில் இடம் பெறும் மூன்று கதைகளுக்கும் மூன்று விதமான கச்சா பிலிமை (Film Stock) பயன் படுத்தியுள்ளதோடு, மூன்றுவிதமான ஒளியமைப்பு, வண்ணச் சாயலையும் தேர்வு செய்துள்ளார்.

§  நீதிபதி அவரின் இளம் மகள் வரும் கதையில் மேலோங்கியிருக்கும் நீலவண்ணம் நீதிபதியின் வலிமிகுந்த இயலாமையையும் அவலத்தையும் அழுத்தமாக்குகிறது. மெக்சிக்கோ போலீஸ்காரனின் கதை, கூசும் வெளிச்சத்தில் மஞ்சள் வண்ணம் தூக்கலான ஒளியமைப்பு மெக்சிக்கோவின் வறன்ட நிலப்பரப்பையும், தோற்கும் விளையாட்டை கடமைக்காக விளையாடும் மனிதனின் மன உணர்வையும் காட்டுவதாக அமைகிறது.

§  கடத்தில் மன்னனின் கர்ப்பிணி மனைவியின் கதை இயற்கை வெளிச்சத்தில் இயல்பான வண்ணங்களுடன்..வண்ணங்களிலும் ஒளியமைப்பிலும் இயக்குநர் செய்துள்ள பரிசோதனைகளும் பெரும்பாண்மையும் கைகளில் காமராவை வைத்துக் (Hand Held Shots) கையாண்ட முறையிலும் மெக்சிக்கோ கதையில் இடம் பெறும் ஸ்பானிய உரையாடல்களும் இப்படத்திற்கு யதார்த்தத் தன்மையையும் சில இடங்களில் செய்திப்படத் தன்மையையும் (Documentary) உருவாக்குகிறது.

ஒரு கதையின் வரிசையை நேர்கோட்டில் சொல்லாமல் முன்பின் தாவும் வரிசைக் குலைப்பு பெருமளவு திரைப்படங்களில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரே மையத்தில் இயங்கும் மூன்று வெவ்வேறு கதைகளை, வெவ்வேறு வண்ணத்தில் ஒளியமைப்பில் பிணைத்து, தொடக்கமும் முடிவுமற்றதான கதைகளை வணிக சினிமாவில் பரிசோதனை செய்து ஸ்டீவன் சோடர்பர்க் உருவாக்கியுள்ள திரைமொழி திரையுலக வரலாற்றில் சந்தேகமில்லாமல் ஒரு புது முயற்சிதான்.


இயக்குநர் ஸ்டீவன் சோடர்பர்க் 1963இல் அமெரிக்காவில் பிறந்தவர். பேராசிரியரான தந்தைக்கு இரண்டாவதாகப் பிறந்தவர். 15 வயதில் அனிமேசனை பாடமாகக் கற்றார். பள்ளிப் படிப்புக்கு மேல் தொடராமல் ஹாலிவுட்டில் சிறிதுகாலம் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்தார். பின், வீட்டிலேயே எழுதுவதும் குறும்படங்கள் தயாரிப்பதுமாக இருந்தார். 1986 இல் ‘yes’ என்ற ராக் இசைக்குழுவைப்பற்றிய முழுநீள செய்திப்படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பைப் பெற்றார். ‘Yes 9012 Live’ எனும் இப்படமே இவரின் முதல் முழுநீளப் படம். இரண்டாவது கதைப்படமான ‘Sex, Lies and Video Tape’ (1989) விருதுகளைப் பெற்று இவரை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த்து. ‘Out of Sight’ வணிக ரீதியில் பெரும் வெற்றி பெற்றது. 2000 இல் வெளிவந்த ‘ Erin Brockovrich’ சமூகப் பிரச்சனைக்காகப் போராடிய ஒரு பெண்ணின் உண்மைக்கதையை அடியொற்றிய வெற்றிப்படம். தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், நடிகர், இசையமைப்பாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட இயக்குநரான இவரின் தயாரிப்பில் 2006இல் ‘Che’ எனும் பெயரில் சேகுவேராவின் வாழ்க்கைக் கதையும் படமாகியுள்ளது.

Traffic படத்தின் முழு ஒளிப்பதிவை சோடர்பர்க்கே செய்திருந்தாலும், ஒளிப்பதிவு இயக்கம் எனக் குறிப்பிடுவதற்கு ‘ Writers Guild Of America’ ஆட்சேபித்ததன் காரணமாக Peter Anderews என்ற பெயர் இடம் பெற்றதாம்.


ஞாயிறு, 17 ஜூன், 2012

இன்சென்டிஸ் (INCENDIES) : இடிபஸ் வேந்தனின் இன்னொரு சகோதரன



சென்ற ஆண்டு(2011) சிறந்த பிறமொழிப் படங்களுக்கான ஆஸ்கர் விருதை வென்றதாக குறிப்பிடப்பட்டிருந்ததைத் தவிர இப்படத்தைப் பற்றி நான் வெறெதுவும் கேள்விப்பட்டிருக்கவில்லை. கனடாவின்  Denis Villeneuve (முடிந்தால் தமிழில் சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள்) இயக்கிய படம்.

தற்போதைய திரைப்படங்களில் மிக முக்கிய அம்சமாக இருப்பது திரைக்கதைதான். குறிப்பாகத் தாவித்தாவி கதைகூறுகிற முறையில் கதைக்குப் புதிய வடிவத்தை வழங்கி வருகிறார்கள் புதிய தலைமுறை இயக்குநர்கள். அந்த வகையில் இப்படம் கனமான உள்ளடக்கத்தையும் அதற்கு அவசியமான மிகக் கச்சிதமான வடிவத்தையும் பெற்றிருக்கிறது.

 கனடாவில் வசிக்கும் நடுத்தரவயதைக் கடந்த பெண்ணொருத்தி பக்கவாதத்தால் படுத்த படுக்கையாகிறாள். அவளின் மகனும் மகளுமான  இருவரிடம் கொடுக்கப்படும் உயிலில்.. அவர்கள் இதுவரை கேள்விப்பட்டிராத, அவர்களின் தந்தையும், இன்னொரு சகோதரனும் இருப்பது தெரியவருகிறது. மத்திய கிழக்கு நாடொன்றில் இருக்கும் அவ்இருவருக்கும் கொடுப்பதற்கான இரண்டு மூடப்பட்ட கவர்களை அவர்களிடம் ஒப்படைத்துவிட்ட பிறகே என் கல்லறையில் என் பெயரைப் பொறிக்க வேண்டும் என்ற அம்மாவின் கோரிக்கைகள் அவர்களை குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றன. ம்கன் புறக்கணித்த அம்மாவின் கோரிக்கையை செயல்படுத்த மகள் கிளம்புகிறாள். பின் மகனும் இணைந்து கொள்கிறான்.


அம்மாவின் கடந்த காலம், மகளின் தேடுதல் என்பதாக கதை முன்பின் நகர்கிறது. இயக்குநர் திட்டமிட்டே கதை நடக்கும் இடத்தை அடையாளப் படுத்துவதைத் தவிர்க்கிறார். கதைச்சூழலை வைத்து லெபனானாக நாம் அதைக் கருதிக்கொள்ளலாம். ‘நவால் மார்வான்’ (Nawal Marwan) எனும் கிறித்தவப் பதின்வயதுப் பெண்ணான அவள் ஒரு இஸ்ஸாமியனோடு ஓடிப்போக முயலும் போது சகோதரர்கள் குறுக்கிட்டு காதலனைக் சுட்டுக் கொல்கிறார்கள். அப்போது அவள் வயிற்றில் அவன் குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறாள். பிறந்த குழந்தைக்கு குதிகாலில் மூன்று புள்ளிகளால் அடையாளமிட்டு, இதை வைத்து உன் குழந்தையை நீ அடையாளம் கண்டு கொள் என்று கூறி, அநாதை விடுதியொன்றில் சேர்த்துவிட்டு, நவாலை நகரத்துக்கு படிக்க அனுப்பிவைக்கிறாள் அவளின் பாட்டி. நகரத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது, மீண்டும் போர்ச்சூழலில் கல்வி நிலையங்கள் மூடப்படுகின்றன. தன் மக்னைத்தேடி நாட்டின் தெற்குப் பகுதியிலிருக்கும் அநாதை விடுதியைத் தேடிச்செல்கிறாள். இஸ்லாமியர்கள் பயணித்து வரும் பேருந்து ஒன்றில் இடம் பிடிக்கவேண்டி இஸ்லாமிய பெண்ணாக நடிக்கிறாள். வழியில் கிறித்தவ படையினரால் நிறுத்தப்படும் பேருந்து, குண்டுகளால் துளைக்கப்படுகிறது. குழந்தையுடன் பெண்ணொருத்தியும் நவால் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள். பேருந்தை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்த முற்படும்போது, சிலுவையை காட்டி தப்புகிறாள். அப்போது உயிருடன் இருக்கும் பெண்ணின் குழந்தையைத் தன்னுடையதாகக் கூறி தூக்கிவருகிறாள். ஆனால் அழுதபடியே குழந்தை அம்மாவிடம் ஓடும்போது சுடப்படுகிறது. மகன் இருந்ததாகக் கூறப்படட விடுதிக்கட்டிடம் குண்டுகளால் சிதறடிக்கப்பட்டு எரிந்து கிடக்கிறது. குழந்தைகள் அப்புறப்படுத்தப் பட்டார்கள் என்ற தகவல் மட்டும் கிடைக்கிறது.


இதற்கிடையில் புரட்சிகர அரசியல் இயக்கம் ஒன்றில் இணைந்து, கிறித்தவ தலைவர் ஒருவரை சுட்டுக்கொல்கிறாள். பலனாக சிறையில் 13 வருடங்களைக் கழிக்க நேர்கிறது. அங்கே எப்போதும் பாடல்களை முணுமுணுப்பவளாக இருப்பதால் ‘பாடும் பெண்ணாக’ அறியப்படுகிறாள். அங்கே போர் வீரன் ஒருவனால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள். ‘எங்கே இப்போது நீ பாடு’ என்றவாறு செல்கிறான். அத்தோடு அவள் பாடல் நின்றுவிடுகிறது. அங்கு இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். ஆற்றில் வீசி கொல்லப்படக் கொண்டு செல்லப்படும் குழந்தைகளை செவிலிப் பெண் காப்பாற்றுகிறாள்.

இப்படிப் படம் நெடுகிலும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் தொடர, தாயின் கதையைப் பின்தொடர்கிறார்கள். இறுதியில் தாங்கள் தேடிக்கொண்டிருக்கும்  அப்பாவும் சகோதரனும் ஒருவரே எனும் அதிர்ச்சியைக் கண்டடைகிறார்கள். ஒருவகையில் இருவரும் தங்களின் கதையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம் என்ற உண்மையையும் அப்போதுதான் உணர்கிறார்கள். சிறையில் அம்மாவைப் பாலியல் வன்முறைகுள்ளாக்கியவன் தன் சகோதரன் என்ற உண்மையைத் தொடர்ந்து, அவனும் தற்போது கனடாவில் வேறுபெயரில் வசித்துவருவதை கண்டு அவனிடம் இரண்டு கவர்களையும் ஒப்படைக்கிறார்கள்.


 கிரேக்கத் தொன்மக் கதையைத் தழுவிய  ‘இடிபஸ் ரெக்ஸ்’ நாடகத்தின் மையச்சரடை ஒத்திருக்கும் இப்படமும் ஒரு நாடகத்திலிருந்து தழுவப்பட்டது என்பது ஒரு தற்செயல் என்று என்னால் உறுதிசெய்ய முடியவில்லை. வாஜ்டி மொவாட் (Wajdi  Mouawad) என்பவரால் எழுதப்பட்ட Scorched எனும் ப்ரஞ்ச் நாடகம்தான் Denis Villeneuve என்பவரால் திரைக்கதையாக்கப்பட்டு இயக்கப் பட்டு ’இன்செண்டிஸ்’ என்ற படமாக வெளிவந்துள்ளதாகத் தெரிகிறது. இரண்டு கதைகளுக்கும் உள்ள வேறுபாடு, இடிபஸ் வேந்தனில், தந்தையால் கொலைசெய்யப்பட அனுப்பப்பட்ட மகன் ராஜாவாகி பக்கத்து நாட்டைக் கைப்பற்றித் தந்தையைக் கொன்று, தாயைத் தாரமாக்குகிறான். இன்செண்டிஸில் தாயால் அநாதை இல்லத்திற்கு அனுப்பப் பட்ட மகன்,  யாரென்று தெரியாமலேயே தாயை வன்புணர்ச்சிக்குள்ளாக்குகிறான். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, இரண்டு கதைகளுமே நமக்கு முகச்சுளிப்பையோ, அசூயை உணர்வையோ உருவாக்குவதில்லை. வாய்மொழி மரபில் புழங்கிய இடிபஸ் கதையை ‘சோபாக்ளிஸ்’ எனும் கிரேக்க நாடகாசிரியன் நாடகமாக்கிய காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு. ப்ரஞ்ச் நாடகாசிரியன் நாடகமாக்கியது 2007. அதிலும் ஒரு காட்சி ஊடகத்தில் இத்தகைய கதைகளைக் கையாள்வது எளிதானதல்ல. மிகுந்த கலை நேர்மையுடனும் பொறுப்புடனும் இயக்குநர் இச்சூழலை எதிர்கொள்கிறார். போர்களும் புகலிட வாழ்க்கைச் சூழல்களும் மனித சமூகத்தின் அறவியல் சார்ந்த ஒழுக்க மதிப்பீடுகளைச் சூறையாடுகின்றபோது வெறும் பார்வையாளர்களாய் மௌனித்திருப்பதைத் தவிர நாம் செய்வதற்கு என்ன இருக்கிறது? சாதாரண மனிதர்கள் அசாதாரண சூழல்களில் சிக்குண்டு மீள்வதை/ தவிப்பதை பேசுவதுதானே கலை?
 

இன்னொரு விசயமும் இந்தப்படத்தைப் பார்க்கும் போது எனக்கு நினைவில் ஓடியது. ‘இடிபஸ்’ ஐரோப்பாவில் நாடகமாக்கப்பட்டபோது, அதில் இடிபஸ் வேந்தனாக நடித்த லாரன்ஸ் ஒலிவியர் என்ற நடிகருக்கு, தான் திருமணம் செய்திருப்பது தன் தாய் என்பது தெரியவரும்போது, அதை ஒரு நடிகனாக எப்படி வெளிப்படுத்துவது என்பது பெரும் சவாலாக முன்நின்றது. உலகில் அதுவரை அப்படி ஒரு சூழல் எந்த மனிதனுக்கும் ஏற்பட்டதில்லையல்லவா? அது போலவே ‘இன்சென்டிஸ்’, இரண்டு சவாலான இடங்கள் வருகின்றன. ஒன்று அந்தத் தாய், பொது நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு கரையேற வரும்போது, பின்புறம் தெரியும் விதத்தில் ஒரு ஆண் இன்னொருவனோடு பேசிக்கொண்டிருக்கிறான். அவனுடைய காலைப் பார்த்தாகவேண்டிய அருகாமை உருவாகிறது. அவனுடைய குதிகாலில் தன் பாட்டி அடையாளமிட்ட மூன்று புள்ளிகள். தொலைந்து போய்விட்ட தன்மகன் கிடைத்துவிட்டான் என்ற மகிழ்ச்சி கலந்த பதட்டத்துடன் அவன் முகத்தைப் பார்க்கிறாள். அது சிறைச்சாலையில் தன்னை... இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாக்கின அவன். அப்படியே பேச்சுமூச்சற்று உறைந்து போய்விடுகிறாள். அதோடு அவள் புலன்கள் முடங்கிப்போகின்றன.

 

இரண்டாவது இடம், தந்தையையும் சகோதரனையும் தேடும் இரட்டையர்களுக்கு நேர்வது. சகோதரனைப் பற்றிய தகவல்களைப் பின்தொடர்ந்து செல்கையில் ஒரு இடத்தில் சகோதரனுக்கு முழுவிபரமும் தெரிய வருகிறது. சகோதரியின் அருகாமையில் அமர்ந்திருக்கிறான். அவன் சகோதரியிடம் சொல்கிறான். ’நாம் நினைப்பதுபோல் ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டு அல்ல’ என்கிறான். சகோதரிக்கு ஒன்றும் புரிவதில்லை. திரும்பவும் ’ ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டு அல்ல’  என்கிறபோது சகோதரிக்குப் புரிந்துவிடுகிறது. நாம் தேடிவந்த தந்தையும் சகோதரனும் வேறு வேறு நபர்கள் அல்லவென்று. அவள் தன் அதிர்ச்சியை, ஒரு விக்கல்போன்ற ஒலியால் அந்த வெளிப்படுத்துகிறாள். மிகவும் அருமையான இடம்.


 2010ன் சிறந்த அந்நிய மொழித்திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது இப்படம். சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஒட்டுமொத்த ஒலியமைப்பு மற்றும் ஒலித்தொகுப்பு, சிறந்த நடிகை  ஆகிய 8  பிரிவுகளில்  கனடாவின் ‘சினிமா மற்றும் டெலிவிஷன் அகாதமி’ வழங்கும் ஜெனி விருதுகளை அள்ளிக்கொண்ட படம். தொழில்நுட்ப நேர்த்திமிகுந்த்தாக இப்படம் இருந்தாலும், இப்படத்தின் கதையும் திரைக்கதையும் அதையெல்லாம் பொருட்டாகவிடாமல் செய்கின்றன. இன்னொருவிதத்தில் சொல்வதானால், பிற அம்சங்கள் அனைத்தும் கதையின் ஆன்மாவோடு இணைந்து பயணப்படுகின்றன.

வெள்ளி, 23 மார்ச், 2012

HOWL : ஒரு கவிஞன் - ஒரு வழக்கு - சில கவிதைகள்




இந்தப் படத்தைப் பற்றி கேள்விப்படவும் இல்லை. எதிலும் படிக்கவும் வாய்க்கவில்லை. பல அபூர்வமான படங்கள் கண்ணில் படாமல் போய்விடுவது துர்பாக்கியம்தான். சமீபத்தில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய படம் Howl(2010). இரண்டு காரணங்கள். ஒன்று, இது ஒரு கவிஞரைப்பற்றிய படம். இரண்டாவது அசாத்தியமான வடிவம்  மற்றும் திரைக்கதை.
Howl என்பது 1957ல் வெளியான ஒரு சர்ச்சைக்குரிய  கவிதையின் தலைப்பு. அந்தக் கவிதையை எழுதியவர் 1926ல் அமெரிக்காவில் பிறந்த அலென் கின்ஸ்பர்க் (Allen Ginsberg). அவர் ஒரு கவிஞர். தேசாந்திரி,  சிவில் உரிமைப் போராளி,  Beat Generation எனும் இலக்கிய இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர், ஒரு புகைப்படக்கலைஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர். 
 
அமெரிக்காவில் Beat Generation எனும் போருக்குப்பிந்தைய இலக்கிய இயக்கத்தின் முன்னோடியான அலென் கின்ஸ்பர்க், மாற்றுப் பாலியல், போதை, கிழக்கத்திய மதங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மாற்றுப் பண்பாட்டை ஊக்குவித்த குழுவில் இருந்தார். பின்னர் 70களில் இது ஹிப்பிக் கலாச்சாரத்துடன் கலந்ததாகத் தெரிகிறது. 1957ல் Howl and other poems எனும் தலைப்பில் வெளியான கவிதை நூலில் இடம் பெற்ற Howl  அப்போதைய அமெரிக்காவை சலனத்திற்குள்ளாக்கிய கவிதைகளில் ஒன்று. ஓரினப் புனர்ச்சியாளரான அவர் சேரிகளில் வசிப்பதும், பழைய ஆடைகளை வாங்கி உடுத்துவதும், தன் வருமானத்தை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதுமாக தன் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டவர். 29 வயது இளைஞனாக அமெரிக்காவைத் தன் கவிதையால் வேறுவிதமாய் பார்க்கத் தொடகிய அலென் கின்ஸ்பர்க் 1997ல் ஈரல் புற்றுநோயால் இறந்தார்.
 
நான் மேலே சுருக்கமாகக் கூறியதை திரைப்படத்தின் கதையாகக் கொள்ளமுடியாது. எந்த வரிசைக்கிரம்மும் இல்லாமல், கின்ஸ்பர்க்கின் முழுவாழ்க்கைக் கதையாகவும் இல்லாமல், ஆனால் ஒரு கலைஞனின் உயிரோட்டமான காலப்பகுதியை ஒரு பின்நவீனத்துவ கவிதையாகச் சொல்ல முயற்சிக்கிறது இப்படம். வழக்கமான அர்த்தத்தில் இதை ஒரு சுவாரஸ்யமான படம் என்று கூறிவிடமுடியாது. ஆனால் இந்தப்பட இயக்குநர் ஒரு சுயசரிதையைப் படமாக மாற்றுவதற்கான ஒரு சுவாரஸ்யமான கதை கூறுதலை வந்தடைகிறார். மூன்று விசயங்களாகப் பகுத்துக்கொள்கிறார். கவிஞர் தன் கதையை அவரே கூறுவது, நேரடியாக கேமராவைப் பார்த்து, சில நேரங்களில் முகம் தெரியாத செய்தியாளர் ஒருவரிடம் கூறுவதாக. அப்போது அவர் விவரிக்கும் பகுதிகள் சில நேரங்களில் காட்சிப்படுத்தலாக விரிகின்றன. அவர் எழுதுவதைப் பற்றி, அவரின் ஆண் நண்பரைச் சந்தித்தது பற்றி, அவர் கவிதைகள் பற்றி.. தந்தையைப் பற்றி. இரண்டாவதாக அவருடைய  Howl  கவிதை சந்தித்த வழக்கு விசாரணை. நீதிமன்றத்தில் இருதரப்பு வழக்கறிஞர்கள், இலக்கிய வாதிகள், பேராசிரியர்கள் கவிதை பற்றிக் கருத்துச் சொல்வது என்பதாக நீளும் காட்சிகள். மூன்றாவது பகுதிதான் உண்மையில் என்னைக் கவர்ந்தது. கவிஞர் கவிதை வாசிக்கும் பகுதி/ எழுதும் பகுதி. 1950களின் காபி ஹவுசில் குழுமியுள்ள சிறிய கூட்டத்தினருக்கு அவர் கவிதையைப் படிக்கத் தொடங்கியதும், கவிதை வரிகளுக்கேற்ப வரைகலையில் (animation) தொடரும் காட்சிப்படிமங்கள். மிகுந்த கற்பனை வளத்துடன் கவிதையோடு இணைந்தும் முரண்பட்டும் கலக்கும் ஓவியங்கள். இயக்குநர் இம்மூன்றையும் இணைகோடுகளாகக் கலந்து செல்கிறார். 
 
இந்த Howl கவிதை பற்றிய வழக்கின் ஆவணங்கள், கின்ஸ்பர்க்கின் பல்வேறு நேர்காணல்கள் மற்றும்  கவிதைகளைக் கொண்டு இந்தத் திரைக்கதையை அமைத்துள்ளனர் இரட்டை இயக்குநர்களான ராப் எப்ஸ்டெய்ன்(Rob Epstein), ஜெஃப்ரி ஃரீட்மன்(Jeffrey Friedman). 
கறுப்பு வெள்ளையில் படம் தொடங்கும்போது ஒரு கூடம். ஒயின் அருந்திக்கொண்டும் சிகரெட் புகைத்துக் கொண்டும் இருக்கும் சிறுகூட்டம். அலென் கின்ஸ்பர்க் கவிதை வாசிப்பதற்கான முஸ்தீபுகளைச் செய்துமுடித்து, வாசிக்கத்தொடங்குகிறார். 

"I saw the best minds of my generation

 destroyed  by madness,

starving hysterical naked,

dragging themselves through the negro streets at dawn."


என்று நீளும் கவிதை ஓரிடத்தில் ஜாஸ் .. என முடியவும் ஜாஸ் இசைப் பின்ன்னியில் ஸ்பிலிட் ஸ்கிரீன் முறையில் ஒழுங்கற்ற துண்டுக்காட்சிகள் இணைக்கப்படும் போதே, நிமிர்ந்து உட்காரத் தோன்றிவிடுகிறது.

 வழக்கு நடக்கும் போது ஒரு உரையாடல் வருகிறது.  ஆங்கிலபேராசிரிடம் வழக்கறிஞர், கவிதை வரிகளுக்கு அர்த்தம் கேட்கிறார். பேராசிரியர் சொல்லிக்கொண்டே வரும்போது ஒரு கட்டத்தில், ’கவிதையை உரை நடையில் விளக்க முடியாது. அதனால்தான் அது கவிதை’ என்பார். நீதிமன்றக் காட்சிகள் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல. 1950களிலேயே அமெரிக்க குடிமைச் சமுதாயத்தின் கருத்துச் சுதந்திர வேட்கையை இது எடுத்துக்காட்டுவதாகவே தோன்றுகிறது. இறுதியில் நீதிபதி கருத்துச் சுதந்திரம் ஒரு தனிமனிதனுக்கும் தேசத்துக்கும் இன்றியமையாதது என்று கூறி இக்கவிதையில் ஆபாசம் இல்லை, இதை தடை செய்ய இயலாது  எனறு தீர்ப்பளிக்கிறார். இத்தீர்ப்பு அமெரிக்க இலக்கிய உலகில் ஒரு மைல்கல் தீர்ப்பாக நிலைபெறுகிறது.

ஒரு கலகத்தன்மையுடைய கவிஞன், மாற்று வாழ்வியலை பரிசோதித்தவனின் கதையை சொல்வதற்கான ஒரு வழக்கத்திற்கு மாறான திரைமொழியை கட்டமைப்பதில்தான் உலக இயக்குநர்கள் நம் இயக்குநர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள். அந்த வகையில்...

அ - நேர்கோட்டுப் படங்களில்(non-liner), சுயசரிதைப் படங்களில், இலக்கியவாதிகளைப் பற்றிய படங்களில் இது ஒரு முக்கியமான படம். இப்படத்தை இரண்டுமுறை பார்த்தபிறகு எனக்குத் தோன்றியது இதுதான் ‘ பாரதியைப் பற்றி ஒரு படம் எடுக்கவேண்டுமானால் இதுதான் வடிவமாக இருக்கமுடியும்.’

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.