இஸ்தான்புல்லின் கீழ்நடுத்தர வர்க்க மனிதனான எயூப்(Eyup) தன் மனைவி ,
ஹசர்(Hacar) 20களில் இருக்கும் ஒரே மகனுடன் வசித்துவரும் எளிய மனிதன். ஒரு அரசியல் வாதியின் டிரைவர்.
நள்ளிரவிலொருநாள் அரசியல்வாதியும் எஜமானருமான செர்வட் (Servet) தொலைபேசியில் அழைத்து, தானொரு
பாதசாரியைக் காரால் மோதி விபத்துக்குள்ளாகி விட்டதாகவும், குற்றத்தை நீ
ஏற்றுக்கொண்டு சிறைசெல்ல வேண்டுமென்றும். சிலமாதங்களுக்குள் வெளிவந்து விடலாமென்றும், அதற்காக பெரும்
தொகையொன்றைத் தருவதாகவும் வாக்களிக்கிறான். எயூப்பும் அதை ஏற்றுக்கொண்டு
சிறைசெல்கிறான்.
இதற்கிடையே தொடர்ந்து படிக்க முடியாத மகன் இஸ்மாயில் காரொன்றை வாங்க பணம் வாங்கி வரும்படி நச்சரிக்க, ஹசர்
அரசியல்வாதியைச் சந்தித்து பணம் கேட்டுவருகிறாள். செர்வட் பேருந்திற்காகக்
காத்திருக்கும் ஹசருக்கு லிப்ஃட் தருகிறான்.
தந்தையைச் சிறையில் சந்திக்க பக்கத்து
நகருக்குச் செல்கிறான் இஸ்மாயில்.
ரயில்நிலையத்தில் திடீரென வாந்திஎடுத்து சட்டையை நாசமாக்கிவிடும் இஸ்மாயில் உடைமாற்றவேண்டி
வீட்டுக்குவர, அங்கே தன் தாயுடன் அப்பாவின்
எஜமானர் படுக்கையில் இருப்பதைப் பார்த்துவிடுகிறான்.
ஒருவருடத்திற்கும் மேலாக
சிறையிலிருந்துவிட்டு வீட்டுக்கு வந்த எயூப், வீட்டின் சூழ்நிலையில்
மாற்றமிருப்பதை உணர்கிறான். வீட்டிலிருக்கப் பிடிக்காமல் தேநீர்க்கடைக்குச் சென்று
அங்கு வேலைக்கிருக்கும் பைராமிடம்
அளவளாவுகிறான். ஹசரால் அவனை மறக்கமுடியவில்லை. அவன் காலைப்பிடித்துக்
கேட்கிறாள். செர்வட், நமக்குள் இனி
எதுவுமில்லை என அவளைத் துரத்தி அடிக்கிறான்.
ஒருநாள் செர்வட் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறான்.
இஸ்மாயில் தான் அந்தக் கொலையைச் செய்ததாகக் கூறுகிறான். எயூப் அந்தத் தேநீர்கடை
வேலையாளிடம் தன் எஜமானர் தன்னிடம் கேட்ட அதே கோரிக்கையைக் கேட்கிறான். தன் மகனின் குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் படி. மனப்பாரத்துடன் மொட்டை
மாடியில் நின்றவாறு வானத்தை பார்க்கிறான் எயூப். மேகங்கள் கருத்து
நகர்ந்தபடியிருக்க இடியுடன் மழைபெய்யத் தொடங்குகிறது.
இப்படத்தின் எளிமையே இதன் வசீகரம். எந்தவிதமான உத்திகளுக்காகவும் மெனக்கட்டுக் கொள்ளாத
கதையோட்டம். நான்கே பாத்திரங்கள். 90% படத்திலும்
இவர்களே நடமாடுகிறார்கள். பெரும்பாலும் நீளமான ஷாட்கள். நிதானமான
அண்மைக்காட்சிகள். மொத்த வசனங்களையும் எழுதிக்கொள்ள ஒரு 40பக்கம் நோட்டு அதிகம்.
காட்சி அழகியலுக்காக எந்த கூடுதல் முயற்சியும்
எடுக்கவில்லை எனினும் அழகான ஒளியமைப்பில் ஷாட்கள் மிளிர்கின்றன. டிஜிட்டல்
சினிமோட்டோகிராபி என்பது கூடுதல்
ஆச்சரியம். படத்தில் இசையென்பதே இல்லை. ஒரு பார்ட்டியில் கூட்டமாக ஆடும்போது வரும் இசையைத்தவிர, உணர்ச்சிகளை கொட்டிக்கவிழ்க்க இசையைச் சீண்டவேயில்லை. ஆனால் ரயில்பெட்டிகள்
கடக்கும் ஓசையும் இடியும் மழையோசையும் பொருத்தமான இடங்களில்
இசைக்கு பதிலியாக அமைகின்றன.
யாருக்கோ நடந்த விபத்தில் ஒரு குடும்பம் அமைதியிழக்கிறது.
ஒரு உண்மையை பார்க்காமலிருந்திருக்கலாம். பேசாமலும், கேட்காமலும்கூட இருந்திருக்கலாம். யார் எதைப் பார்த்த்து? கேடட்து?
பேசியது? மூன்று குரங்குகளில் யார் எந்தக் குரங்கு என்பதை படம்பார்த்து
முடிவுசெய்துகொள்ளுங்கள்.
2008ல் வெளியான துருக்கித் திரைப்படமான மூன்று குரங்குகள், அந்த ஆண்டில் கேன்ஸ் படவிழாவில் சிறந்த
இயக்குநருக்கானவிருது உட்பட பல படவிழாக்களில் விருதுகளைப் பெற்றது. இப்படத்தை இயக்கியிருப்பவர்
நூரி பில்ஜேசைலன்
(NuriBilgeCeylan). இவர்1959ல் துருக்கியில் இஸ்தான்புல்லில் பிறந்தார். பொறியியல்
பட்டதாரியான இவர் இரண்டாண்டுகள் திரைப்படக்கல்வி கற்று பின் படங்களை இயக்கத்
தொடங்கினார். மிகக் குறைந்த பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் நூரியின்
பெரும்பாண்மையான படங்களின் நடிகர்கள்
அவருடைய பெற்றோர்களும் மனைவியுமே.
அமச்சூர் நடிகர்களையே பயன்படுத்தும் நூரி இதுவரை 6 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக