செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

ட்ரீ ஆஃப் லைஃப் (The Tree of Life): நட்சத்திரங்களைத் தேடித் துழாவும் ஓக் மரத்தின் வேர்கள்

  

        சென்ற  ஆண்டு(2011) வெளியான ட்ரீ ஆஃப் லைஃப் (The Tree of Life) எனக்குப் பிடித்தபடங்களின் வரிசையில்  இல்லை என்றாலும் கண்டிப்பாகத் தவிர்க்க முடியாத படம். சினிமாவின் வணிக நிர்பந்தங்களுக்குள்ளும்  இத்தகைய முயற்சிகளுக்கு இடம்மிருப்பதுதான் ஹாலிவுட்டின் பலம்.


இப்படத்தின் கதையை  விவரிக்க முயற்சிப்பது வீண்வேலை. கதை சொல்வதற்கு அப்பாற்பட்டு முழுக்க முழுக்க காட்சிப் படிமங்களாலான  உரையாடலுக்குள் இறங்கிவிடுகிறார்  இயக்குநர். 1950களில் டெக்ஸாஸில் வாழ்ந்த குடும்பம். அதன் கண்டிப்பான தந்தையுடன் மகனுக்கிருக்கும் வித்தியாசமான  உறவு. மூன்று ஆண்குழந்தைகளுள் மூத்தவனான ஜாக்கின் வாழ்க்கைப் பயணத்தினூடான தரிசனங்கள் தொடர்பற்ற காட்சித்துணுக்குகளால் கோர்க்கப்படுகின்றன. ஜெஸிக்கா செஸ்டெய்ன் (Jessica Chastain) அம்மாவாக வருகிறார். சென்ற ஆண்டு இரண்டு முக்கியமான படங்களில் முற்றிலும் வேறுபட்ட பாத்திரமாக நடித்திருக்கிறார்.

 

நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கே இருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.  அப்பொழுது விடிற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே என்ற (யோபு:4,7) பைபிளின் வாசகங்களோடு படம் தொடங்குகிறது. 4வது வசனத்திற்கும் 7வது வசனத்திற்கும் இடையில் விடுபட்ட இரண்டு வசனங்களையும் சேர்த்துப்படித்தால் சிறிதாக விளங்குவதுபோலும்  விளங்காத்து போலும் தடுமாறுகிறது. 

நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கே இருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடிற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே என்கிற வாசகங்கள் வாழ்க்கையை அளக்க முற்படும் மனித  அறிவிற்கு அப்பாற்பட்ட இறைவனின் நிமித்தங்களை, தத்துவார்த்தமாகப் பேசமுற்படுகிறது.
அம்மாவும் மூன்றுசகோதரர்களுமாய்  ஓடிஆடிவிளையாடி மகிழ்ந்த குழந்தைப்பருவ நினைவுகளில் நனையும் மூத்தவனின் பார்வையில்  பிரபசம், வாழ்க்கை பற்றிய தத்துவ விசாரமாய் நீள்கிறது படம். சகோதரர்களில் ருவன்  இறந்துவிடுகிறான். தாயின் சசலமான முகபாவங்களும்  ஆழமான  உணர்வுகளை வெளிக்காட்டும்  தருணங்களும் படம் நெடுகிலும் காணப்படுகின்றன.



      திரைக்கதையாக  இப்படத்தைக் கற்பனைசெய்வது கடினம். நாடகப்பாங்கான காட்சிகள், அரூப ஓவியங்களைப் போன்ற வண்ணக் குழப்பங்களால்  ஆன காட்சித்துணுக்குகள், கேமராவால் மட்டுமே சாத்தியப்படும்  அற்புதமான  அண்மைக்காட்சிகள், தூரக்காட்சிகள். இதற்கிடையே ஒரு குடும்பம். மூன்று சிறுவர்கள். யாரையும் மையப்படுத்தி திட்டமிட்டு நகராத கதை. கதைஎன்று  ஒன்று இருக்கிறதா என்ன? 

      இந்தப்படத்தைப் பார்த்து முடித்தபோது எனக்குச் சிலகேள்விகள் எழுந்தன. இத்தகைய திரைக்கதைப் பிரதியை அங்கீகரித்து படமாக தயாரிக்க நிறுவனங்கள்  இருக்கின்றனவா? பிராட்பிட், ஷான் பேன் போன்ற பிரபலங்கள் இப்படியான படங்களில் நடிக்க எப்படி ஒத்துக்கொள்கிறார்கள்? வணிக ரீதியாக இப்படத்தின்  தலைவிதிதான் என்ன? எல்லாவற்றுக்கும் மேலாக  இப்படத்தின்  இயக்குநர் யார்?

 

     இப்படத்தின்  இயக்குநர் டெரன்ஸ் மாலிக்(Terrence Malick) அமெரிக்காவில் பிறந்தவர். 1965ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் பட்டம் பெற்றவர். பின்  உதவித்தொகையுடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஹெக்டெக்கரின்  தத்துவங்கள் பற்றிய  ஆராய்ச்சிக்காகச் சென்று அவர் வழிகாட்டியுடன்  ஏற்பட்ட கருத்துமுரண்பாட்டால்  ஆராய்ச்சியை முடிக்காமலேயே பாதியில் விட்டு, எம்.ஐ.டியில்  விரிவுரையாளராகப் பணியாற்றினார்.  ஹெக்டேக்கரின் நூலை மொழிபெயர்த்து  "The Essence of Reasons" என்ற நூலையும் வெளியிட்டார். 1969ல் American Film  Institute of Conservatory யில் நுண்கலையில் முதுகலைப்பட்டம் பெற்றார். The Thin Red Line உட்பட ஏழுபடங்களை  இயக்கியிருப்பவர்.

       இவருடைய படங்களில் இயற்கை ஒரு முக்கிய  அம்சமாக இடம் பெறும் என்றும் வெளிப்புறங்களிலேயே படம்பிடிக்க விரும்புபவர், பெரும்பாலும்  முக்கியப் பாத்திரத்தின் வாய்மொழியாகவே பட்த்தை நகர்த்துபவர், கூட்டத்திலிருந்து ஒதுங்கியிருக்க விரும்பும் மாலிக் நேர்காணல்களை பெரும்பாலும் தவிர்த்துவிடக்கூடியவர்  என்கிறார்கள்.
இந்தப்பின்னனியோடு படத்தைப் பார்த்தால் கூடுதலாகப் புரிவதற்கான சாத்தியப்பாடுகள்  உண்டு.


       இப்படத்தில் இடம்பெறும் பிரம்மாண்டமான ஓக்  மரம்  அடியோடு பெயர்த்துகொண்டுவரப்பட்டதாம். 65,000 பவுன்டுகள் செலவழித்தார்களாம். (முடிந்தால் பெருக்கி ரூபாயில் சொல்லுங்கள்)  $32,000,000 மொத்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட  இப்படம்  $54,303,319 வசூலித்திருப்பது இன்னொரு  விசித்திரம்.

      சிறந்த ஒளிப்பதிவிற்காக 18விருதுகளையும், சிறந்த படத்திற்காக 10 விருதுகளும், சிறந்த   இயக்குநருக்கான  8விருதுகளையும் பெற்றது. எதிரும் புதிருமான விமர்சனங்களை இப்படம்  எதிர்கொண்டது. அபூர்வமான படம்மென்றும், சினிமாவிற்கான லட்சணங்கள்  இல்லாத்து இப்படம் என்பதான  விமர்சனங்களைப் புறம்தள்ளி சர்வதேச அளவில் 62 விருதுகளை  அள்ளிச்சென்றது. ஆஸ்கரில் மூன்றுவிருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.




                     நிச்சயமான ஒரு பரிசோதனைமுயற்சி.



1 கருத்து:

  1. அழகான விமர்சனம்...படம் ஆரம்பித்து 10 நிமிடங்கள் மாதிரிப் பார்த்தேன். அழகான ஒளிப்பதிவு இருந்தாலும், காட்சிகள் சம்பந்தமில்லாமல் நகர்வது போலத் தெரிந்ததால் நிறுத்தி வைத்துவிட்டேன். மீண்டும் ஞாபகப்படுத்திவிட்டீர்கள். பார்க்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.