திங்கள், 23 ஜூலை, 2012

த்ரீ மங்கீஸ்(Three Monkeys): குரங்குகளின் கதையல்ல



 இஸ்தான்புல்லின் கீழ்நடுத்தர வர்க்க மனிதனான எயூப்(Eyup) தன் மனைவி , ஹசர்(Hacar) 20களில்  இருக்கும் ஒரே மகனுடன் வசித்துவரும்  எளிய மனிதன். ஒரு அரசியல் வாதியின் டிரைவர். நள்ளிரவிலொருநாள்  அரசியல்வாதியும்  எஜமானருமான செர்வட் (Servet) தொலைபேசியில்  அழைத்து, தானொரு பாதசாரியைக் காரால் மோதி விபத்துக்குள்ளாகி விட்டதாகவும், குற்றத்தை நீ ஏற்றுக்கொண்டு சிறைசெல்ல வேண்டுமென்றும். சிலமாதங்களுக்குள்  வெளிவந்து விடலாமென்றும், அதற்காக பெரும் தொகையொன்றைத் தருவதாகவும் வாக்களிக்கிறான். எயூப்பும் அதை ஏற்றுக்கொண்டு சிறைசெல்கிறான்.
இதற்கிடையே தொடர்ந்து படிக்க முடியாத மகன் இஸ்மாயில்  காரொன்றை வாங்க பணம்  வாங்கி வரும்படி நச்சரிக்க, ஹசர் அரசியல்வாதியைச் சந்தித்து பணம் கேட்டுவருகிறாள். செர்வட் பேருந்திற்காகக் காத்திருக்கும் ஹசருக்கு லிப்ஃட் தருகிறான்.


 தந்தையைச் சிறையில் சந்திக்க பக்கத்து நகருக்குச் செல்கிறான்  இஸ்மாயில். ரயில்நிலையத்தில் திடீரென வாந்திஎடுத்து சட்டையை நாசமாக்கிவிடும் இஸ்மாயில் உடைமாற்றவேண்டி வீட்டுக்குவர, அங்கே தன்  தாயுடன் அப்பாவின் எஜமானர் படுக்கையில் இருப்பதைப் பார்த்துவிடுகிறான்.
ஒருவருடத்திற்கும் மேலாக சிறையிலிருந்துவிட்டு வீட்டுக்கு வந்த எயூப், வீட்டின் சூழ்நிலையில் மாற்றமிருப்பதை உணர்கிறான். வீட்டிலிருக்கப் பிடிக்காமல் தேநீர்க்கடைக்குச் சென்று அங்கு வேலைக்கிருக்கும் பைராமிடம்  அளவளாவுகிறான். ஹசரால் அவனை மறக்கமுடியவில்லை. அவன் காலைப்பிடித்துக் கேட்கிறாள். செர்வட், நமக்குள்  இனி எதுவுமில்லை என அவளைத் துரத்தி அடிக்கிறான்.
ஒருநாள் செர்வட் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறான். இஸ்மாயில் தான்  அந்தக் கொலையைச்  செய்ததாகக் கூறுகிறான். எயூப் அந்தத் தேநீர்கடை வேலையாளிடம் தன்  எஜமானர்  தன்னிடம் கேட்ட அதே   கோரிக்கையைக் கேட்கிறான்.  தன் மகனின் குற்றத்தை  ஏற்றுக்கொள்ளும் படி. மனப்பாரத்துடன் மொட்டை மாடியில் நின்றவாறு வானத்தை பார்க்கிறான் எயூப். மேகங்கள் கருத்து நகர்ந்தபடியிருக்க  இடியுடன் மழைபெய்யத் தொடங்குகிறது.


 இப்படத்தின்  எளிமையே இதன் வசீகரம். எந்தவிதமான  உத்திகளுக்காகவும் மெனக்கட்டுக் கொள்ளாத கதையோட்டம். நான்கே பாத்திரங்கள். 90% படத்திலும்  இவர்களே நடமாடுகிறார்கள். பெரும்பாலும் நீளமான ஷாட்கள். நிதானமான அண்மைக்காட்சிகள். மொத்த வசனங்களையும் எழுதிக்கொள்ள ஒரு 40பக்கம் நோட்டு அதிகம். காட்சி அழகியலுக்காக எந்த கூடுதல் முயற்சியும்  எடுக்கவில்லை எனினும் அழகான ஒளியமைப்பில் ஷாட்கள் மிளிர்கின்றன. டிஜிட்டல் சினிமோட்டோகிராபி என்பது கூடுதல்  ஆச்சரியம். படத்தில் இசையென்பதே இல்லை. ஒரு  பார்ட்டியில் கூட்டமாக ஆடும்போது வரும் இசையைத்தவிர,  உணர்ச்சிகளை கொட்டிக்கவிழ்க்க   இசையைச் சீண்டவேயில்லை. ஆனால் ரயில்பெட்டிகள் கடக்கும்  ஓசையும்  இடியும் மழையோசையும் பொருத்தமான  இடங்களில்  இசைக்கு பதிலியாக  அமைகின்றன.

 

யாருக்கோ நடந்த விபத்தில் ஒரு குடும்பம் அமைதியிழக்கிறது. ஒரு உண்மையை பார்க்காமலிருந்திருக்கலாம். பேசாமலும், கேட்காமலும்கூட  இருந்திருக்கலாம். யார் எதைப் பார்த்த்து? கேடட்து? பேசியது? மூன்று குரங்குகளில் யார் எந்தக் குரங்கு என்பதை படம்பார்த்து முடிவுசெய்துகொள்ளுங்கள்.


2008ல் வெளியான துருக்கித் திரைப்படமான மூன்று குரங்குகள்,  அந்த ஆண்டில் கேன்ஸ் படவிழாவில் சிறந்த இயக்குநருக்கானவிருது உட்பட பல படவிழாக்களில் விருதுகளைப் பெற்றது. இப்படத்தை  இயக்கியிருப்பவர்


நூரி பில்ஜேசைலன் (NuriBilgeCeylan). இவர்1959ல் துருக்கியில்  இஸ்தான்புல்லில் பிறந்தார். பொறியியல் பட்டதாரியான இவர் இரண்டாண்டுகள் திரைப்படக்கல்வி கற்று பின் படங்களை இயக்கத் தொடங்கினார். மிகக் குறைந்த பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் நூரியின் பெரும்பாண்மையான படங்களின் நடிகர்கள்  அவருடைய பெற்றோர்களும்  மனைவியுமே. அமச்சூர் நடிகர்களையே பயன்படுத்தும் நூரி இதுவரை 6 திரைப்படங்களை  இயக்கியிருக்கிறார்.

புதன், 11 ஜூலை, 2012

ஹுகோ (HUGO): கனவுகளை விதைத்தவன்


2011ஆம் ஆண்டு சினிமா ரசிகர்களுக்கு  உண்மையிலேயே  சிறப்பான  ஆண்டு என்றுதான்  கூறவேண்டும். ‘The Help, Tree of Life, Incendies, The Artist ‘என்று திருப்தியான படங்கள் நிறைய. அந்த வரிசையில் ‘ஹுகோவும் ஒன்று என்பேன்.
 
Taxi Driver, Raging Bull, The Last Temptation of Jesus Christ, The Aviator உட்பட்ட சினிமாக்களை எடுத்த மார்டின் ஸ்கார்சிஸ்சின் (Martin Scorsese) முதல் 3டி படம் ஹீகோ என்கிறார்கள்.

ஹுகோ எனும் சிறுவன் பாரீஸ் நகர ரயில்நிலையத்தின் பிரம்மாண்ட மணிக்கூண்டில் வசிப்பவன். ரயில்நிலைய காவலரின் கண்களில் படாமல் நடமாடி, திருடிச்சாப்பிட்டு தன் நாட்களைக் கழித்து வருபவன். கடிகாரங்கள் செய்பவரான  அவனின்  ந்தையார்  எங்கோ ஓரு அருங்காட்சியகத்தில் கிடைத்த உலோக மனிதனை வைத்துக்கொண்டு, அவனை  இயங்கச் செய்வதற்கு பல்வேறு பிரயத்தனங்கள் செய்துவருபவர்.  அவருக்கு ஜார்ஜியஸ் மிலியஸின் படங்கள் பிடித்தமானவை. மிலியஸின் படங்களுக்குத் தன்னுடன்  அவனையும்  அழைத்துச்செல்வது வழக்கம். அருங்காட்சியகத் தீ விபத்தில் தந்தை இறந்துவிட நிர்க்கதியான ஹீகோவை  அவனுடைய மாமா  அழைத்துச்செல்கிறார். மாமாவிற்கு பாரீஸ் நகர ரயில்நிலைய கடிகாரத்தைப் பராமரிக்கும் வேலை. அவருக்கு வீடென்றோ குடும்பமென்றோ எதுவுமில்லை. மணிக்கூண்டிலேயே வாசம்செய்யும்  அவருடன்  அங்கேயே தங்கவேண்டியதாகிவிடுகிறது ஹீகோவுக்கு. இந்தப்பின்புலத்தில்தான் ஹீகோ மணிக்கூண்டில்  வசிக்கவேண்டியவனாகிறான்.




     மாமாவும்  எதிர்பாராமல் ஒருநாள்  இறந்துபோகிறார். இப்போது சட்டவிரோதமாக ரயில் நிலையத்தில் தங்கியிருக்கும் ஹீகோ அங்கிருக்கும் காவலருக்குத் தெரியாமல் நடமாடவேண்டியிருக்கிறது. அவனுடைய  அப்பாவின் உலோகமனிதனை  இயங்க வைக்கத்தேவைப்படும்  உதிரி பாகங்களையும்  அவனுக்குத்தேவையான்  உணவையும் சாமர்த்தியமாகத் திருடிச் சமாளிக்க வேண்டியிருக்கிறது.




     அப்படி ரயில்நிலைய கடை ஒன்றில் திருடும் போது கடைக்கார முதியவரிடம் பிடிபட்டு விடுகிறான் ஹீகோ. இயந்திர ஓவியங்களடங்கிய அவனுடைய சிறிய குறிப்பேட்டை பிடுங்கி வைத்துவிட்டு அவனைவிரட்டிவிடுகிறார் பெரியவர். நோட்டுக்காக  அவரைப் பின்தொடரும் ஹீகோ அவரின் வளர்ப்பு மகளான  இசபெல்லுக்கு நண்பனாகிறான். இசபெல்லின் கழுத்தில் தொங்கும்  இதயவடிவிலான சாவிதான் தன் தந்தையின்  உலோகமனிதனை  இயங்கவைக்கத்  தான்  தேடிக்கொண்டிருக்கும் கடைசி பாகம்  என்பதை உணர்ந்து மகிழ்கிறான். இருவரும் உலோகமனிதனிடம் சாவியைப்பொருத்த  அவன் இயங்குகிறான்.  உலோகமனிதன் வரையும்  ஓவியம், தான் தந்தையுடன் பார்த்த Voyage to the Moon என்ற சினிமாவில் வரும் காட்சி என்பதைக் கூறுகிறான். ஓவியத்தின் கீழிருக்கும் கையெழுத்து தன் வளர்ப்புத் தந்தையினுடையது என்கிறாள்  இசபெல்.

     இபெல் எனும் அப்புதிய சிநேகிதி அவனை ஒரு புத்தகக் கடைக்கு அழைத்துச்செல்கிறாள். அங்கு இருவரும் சினிமாவின் வரலாறு எனும் புத்தகத்தைப் படித்துப் பார்க்கையில் சினிமா முன்னோடிகளில்  ஒருவரான மிலியஸ், முதல் உலகப்போரில்  இறந்துவிட்டதாக எழுதப்பட்டுள்ளமையைக்  கண்டு வருத்தமடைகிறார்கள். அந்நூலாசிரியரும் பேராசிரியருமான டபார்டிடம் (Tabard) விசயத்தைச் சொல்கிறார்கள். மிலியஸின் ரசிகரான டபார்டு இருவருடனும் மிலியஸைச் சந்திக்க வருகிறார். மிலியஸின் மனைவி அவர் சினிமா நினைவுகளிலிருந்து ஒதுங்கி  இருப்பதைக்கூறுகிறாள்.  மிலியஸின்  மனைவி, அவரின் படங்களில் நடித்திருப்பதை பேராசிரியர் நினைவுகூற, அவள் கடந்தகால நினைவுகளில் நனைகிறாள். கையோடு கொண்டுவந்திருக்கும் Voyage to the Moon படத்தை திரையிடலாமா? எனக்கேட்கும்போது அவளால் மறுக்கமுடியவில்லை.  படத்தை நால்வரும் பார்த்து முடிக்கும்போது, பின்னால் மிலியஸ் நின்றுகொண்டிருக்கிறார்.


     முதலுலகப்போர் தொடங்கியபோது அன்றாட ஜீவனத்திற்காக தன் படங்களை வந்த விலைக்கு விற்க நேர்ந்ததையும், தான்  உருவாக்கிய உலோகமனிதன் காணாமல் போனதையும் தன் திரைப்பட நினைவுகளோடு பகிர்ந்துகொள்கிறார்.

     பேராசிரியர் மிலியஸுக்கு ஒரு பாராட்டுவிழாவை ஏற்பாடுசெய்கிறார் பேராசிரியர். திரைக்கலையின் முன்னோடியான ஜார்ஜியஸின் 80க்கும் மேற்பட்ட படங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளன என்ற செய்தியை அறிவித்து அப் படங்களைத் திரையிட்டு மிலியஸை மேடைக்கு அழைக்கிறார்.  மிலியஸ் மேடையில் “My friends, I address you all tonight as you truly are: wizards, mermaids, travelers, adventurers… magicians. Come and dream with me.” என்று கனவு காண அழைத்துவிட்டு மேடையின்  திரைச்சீலைக்குள்  மறைந்துவிடுகிறார்.



ஜார்ஜியஸ் ழீன் மிலியஸ்(Georges Jean Méliès) 1861ல் பாரீஸில் பிறந்து கலை ஆர்வத்தில் திரிந்து மேடை வடிவமைப்பு மற்றும் பொம்மலாட்டத்தில் சிறப்புத்தேர்ச்சி பெற்றிருந்தார். லண்டனில் படித்துவிட்டுத் திரும்பி, தந்தையின் காலனித் தொழிற்சாலையை நிர்வகிக்கத் தொடங்கினார். ஆனால் அவருக்குள்  ஒளிந்திருந்த கூத்தாடி சும்மா  இருப்பானா என்ன? நாடகங்களில் மந்திரக் காட்சிகளை ஒத்த ஜாலக் காட்சிகளை உருவாக்கிப் புகழ்பெற்றார்.


1895ல் லூமியர் சகோதரர்கள் உலகின் முதல் சலனப் படக்காட்சியைத் திரையிட்டபோது குழுமியிருந்த பார்வையாளர்களில்  ஒருவராக அமர்ந்திருந்த மிலியஸ் காட்சி முடிந்தவுடன்  அவர்களை  அணுகி அவர்களின் சாதனங்களை வாங்க  ஆவலாயிருப்பதைத் தெரிவித்தார். அடுத்த ஆண்டே 1896ல் அவர் தன்னுடைய சொந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்டினார்.

சினிமா வரலாற்றில் ஜார்ஜியஸ் மிலியஸ் எனும் பெயர் மிகமுக்கியமானது. நாடகக் கலையின்  அரங்க நுணுக்கங்களை சினிமாவிற்குள் இணைத்துப்பார்த்தார். சினிமாவில் முதன்முதலாக double exposure, split screen, dissolve  ஆகிய உத்திகளை பரிசோதித்து வெற்றிகண்டார்.

தொடக்ககால சினிமாவை ஒரு கலையாக மட்டுமல்லாமல் தொழிலாகவும் பாவித்து அதை இயக்குநர்  என்ற ஒரு நபரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தவர் மிலியஸ். இன்றளவும் பல்துறை ஆளுமை உடையவர்களே சினிமாவைக் கையாள்வதில் முதன்மையானவர்களாய் இருக்கிறார்கள். மிலியஸ்  ஒரு பல்துறை வல்லுநர். செவ்வகப்படச் சட்டகத்திற்குள் பல்வேறு சாத்தியங்களைப் பரிசோதித்தவர், ஒவ்வொரு ப்ரேமாக வண்ணம் தீட்டியது  உட்பட. ஆனால் காலம் யாரை விட்டுவைத்தது?

1923ல்  அவர் ஆசையாய் வாங்கிப் பராமரித்துவந்த நாடக்  அரங்கம் தரைமட்டமானது. அவர் திவாலானவராக 1920களின்  இறுதிவரை முகவரியற்றுப் போகிறார். முதல்  உலகப்போரைத் தொடர்ந்து  ஏற்பட்ட பல்வேறு சூழல்கள் காரணமாக சினிமாவிலிருந்து விலகி பிழைப்பிற்காக ஒருபுத்தகக் கடை வைத்து 1938ல் மறைந்தார் என்பார்கள்.  ஆனால்  அவர் முதலீடு செய்த, தயாரித்த, நடித்த, ஒளிப்பதிவு செய்த, இயக்கிய படங்களாக 500க்கும் மேற்பட்ட படங்களை   சினிமா வரலாறு அவர்  கணக்கில் பதிவுசெய்துள்ளது.

2007ல் பிரைன் செல்ஸ்நிக் (Brian Selznick) எனும்  அமெரிக்க எழுத்தாளரால்  அவர் வரைந்த சித்திரங்களுடன் வெளியிடப்பட்ட The Invention of Hugo Cabret  எனும் நாவல்தான் ஹீகோவாக  உருமாறியிருக்கிறது. ஜார்ஜியஸ் மிலியஸின் வாழ்க்கைச் சம்பங்களை  ஹீகோ என்ற சிறுவனின் கதையான ஒரு புனைவுக்குள் பிணைப்பதன் மூலம்  ஒரு சுவாரஸ்யமான சினிமாவை கற்பனை செய்திருக்கிறார் ஸ்கார்சிஸ். 


 கதையைப் பொறுத்தளவில்  சிலாகித்துச் சொல்வதற்கான   அம்சங்கள் குறைவுதான்  என்றாலும்  இந்தக்கதை நிகழும்  இடம்  இப்படத்தை  மிகுந்த  சவாலானதாக  மாற்றியிருக்கிறது.  கதையின் பெரும்பகுதி  பாரிஸ் நகரின் 1930களின் ரயில்நிலையம்.  அங்கே நடமாடும் நூற்றுக்கணக்கான பயணிகள். கடைக்காரர்கள். நீராவிப் புகை உமிழும் அந்தக்கால ரயில்வண்டிகள். அதன் ராட்சத மணிக்கூண்டு.   அதன் பிரம்மாண்டமான சக்கரங்கள். 

பனிபொழியும் பாரிஸ் நகர தூரக்காட்சியிலிருந்து ரயில் நிலையத்திற்குள் நுழைந்து  புகைவிட்டுக்கொண்டிருக்கும்  இரண்டு ரயில்களுக்கு  ஊடாகப்  பயணம்செய்து  செல்லும்  போதும்,  கடிகாரச் சக்கரங்களினூடாக ஓடித்திரியும் ஹீகோவைப் பின்தொடரும் போதும் காமராவின்  அசைவுகள், அதிலும் இடைவெட்டுக்கள்  எதுவுமின்றி நீளூம் காட்சிகளின் நேர்த்தி, மாயாஜாலமாத் தோன்றும்.. உங்களை வாயைப்பிளக்க வைத்துவிடும். அதேபோல் ரயில்நிலையத்தில் ஹீகோவை  காவலர் துரத்தும் காட்சியும்.



மிலியஸாக நடித்திருப்பவர் பென்கிங்ஸ்லி என்பதை என்னால்  உடனடியாகக் கண்டு கொள்ளமுடியவில்லை. தோற்றம் முழுமையாக மாறி புது அவதாரமாகியிந்தார்.  மிலியஸின் மறு  உருவாக்கம் செய்யப்பட்ட தொடக்ககால சினிமா படப்பிடிப்புக் காட்சிகள் சுவாரஸ்யம். 

2011ஆம் ஆண்டில் உலக  அளவில் அதிக விருதுகளைக்குவித்த படம்  இதுவாகத்தான் இருக்கும். 11பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, கலைஇயக்கம்(Art Direction), ஒளிப்பதிவு(Cinematography), ஒலித்தொகுப்பு(Sound Editing), ஒலிக்கலவை(Sound Mixing), விஷுவல்  எபக்ட்ஸ்(Visual Effects)    ஆகிய 5பிரிவுகளில்  ஆஸ்கர் விருதைப் பெற்றிருப்பதை படத்தில் தரிசிக்க முடியும்.

ஒரு முழுமையான சினிமா அனுபவம். திரைக்கலை முன்னோடிக்கு அசலி.


செவ்வாய், 3 ஜூலை, 2012

தி ஹெல்ப் (THE HELP): இருளைச் சுமந்தவர்கள்





எதிர்கால சந்ததியினருக்கு வரலாற்றின் மனசாட்சியாக இருக்கப்போவது சினிமாக்களே என்று தோன்றுகிறது. மிகுந்த வணிக நிர்பந்தங்களுடன் இயங்கும் ஹாலிவுட் சினிமாவிலும் கூட இத்தகைய நேர்மையான பதிவுகள் இருந்து வருவது கவனிக்கத்தக்கது. அந்தவகையில் ‘தி ஹெல்ப்’ (THE HELP) ஒரு வரலாற்று ஆவனம். அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாத்தில் 1960களில் நடைபெறுவதான கதை. கதை என்று சொல்வதைவிட அமெரிக்க வெள்ளையின குடும்பங்களில் ஓர் அங்கமாகத் திகழ்ந்த ஆப்பிரிக்க அமெரிக்க பணிப்பெண்களின்  வலிமிகுந்த பதிவுகள்  எனலாம். 
நடுத்தர வயதைக்கடந்த  ஏபிலீன (Aibileen) ஒரு  கறுப்பின  பணிப்பெண்.  வெள்ளையின  வீடுகளில்  பணிப்பெண்ணாகப்  பணியாற்றுவதைத்  தவிர  பிழைப்பதற்கு  வேறு போக்கிடமில்லாத  கறுப்பினப்  பெண்களில்  ஒருத்தி. தற்போது ஒரு  வீட்டில் ஒரு பெண்குழந்தையைப் பராமரித்துப் பேணி வருகிறாள்.  அது அவள்  வளர்க்கும் பதினேழாவது  வெள்ளைக் குழந்தை. உரிய நேரத்தில்  மருத்துவ  வசதி கிடைக்காமல் பதின் வயதில் செத்துப்போய் புகைப்படமாய்  தொங்கும் தன் மகனை மனதில் நினைத்தபடி அடிமனதின்  ஆழமான  நினைவுகளோடு வாழ்பவள். 


 மின்னி (Minny). இன்னொரு கறுப்பின பணிப்பெண். ஏபிலீனின் தோழி. தன் வாய்த்துடுக்கினால் வேலை இழந்து நகருக்கு புதிதாய் குடியேறிய வெள்ளைத் தம்பதியின்  வீட்டில் வேலையிலிருப்பவள்.


 22 வயதான ஸ்கீட்டர் (Skeeter) அப்போதுதான் பட்டப்படிப்பை  முடித்து நகருக்கு வந்து சேர்கிறாள். எழுத்தாளராகவேண்டுமென்ற கனவோடு வரும் ஸ்கீட்டர்  ஒரு வெள்ளையின  இளம் யுவதி. ஒரு பத்திரிக்கைக்காக கட்டுரையொன்று  எழுத திட்டமிடுகிறாள். தெற்கு மிஸிசிப்பி பகுதியில் எல்லா வெள்ளையர் வீடுகளிலும் குழந்தைப் பராமரிப்பிலும் இன்னபிற பணிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் கறுப்பின பணிப்பெண்களின் கதைகளை, கருத்துக்களைப் பதிவுசெய்வதே அவள் கட்டுரைத்திட்டம். தன் தோழியின் வீட்டுப்பணிப் பெண்ணான ஏபிலீனிடம் உரையாடத் தொடங்குகிறாள்.  தயக்கத்தோடு  தொடங்கும் உரையாடல் முயற்சிகளில் படிப்படியாக  ஏபிலீனின் நம்பிக்கையைப் பெறுகிறாள் ஸ்கீட்டர். பின்  ஏபிலீனின்  தோழியான மின்னியிடம் பேசத்தொடங்குகிறாள். இயல்பிலேயே நல்லியல்புகள் கொண்ட ஸ்கீட்டர், க்றுப்பினப் பெண்களின் பக்கமிருந்து விசயங்களை புரிந்துகொள்ளத் தொடங்குகிறாள்.


 வெள்ளையர் வீடுகளில், அவர்களுக்கு  உணவு தயாரித்து, அவர்களின் குழந்தைகளைச் சொந்தக் குழந்தைகளாய் வளர்க்கும் அப்பணிப்பெண்கள் அவர்களின் கழிப்பறைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. மழைபொழியும் ஒரு நாளில் தன்சிறுநீரை அடக்கமுடியாமல் தவிக்கும் மின்னி  எஜமானியின் கழிப்பறையைப்  பயன்படுத்தியதால் வேலையிழக்கிறாள்

பின் மின்னி தன் சிறப்புத்,தயாரிப்பான பதார்த்தம் ஒன்றோடு, எஜமானியிடம் மன்னிப்புக்கோரி மன்றாடியதால்  மீண்டும் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்படுகிறாள். மின்னி கொண்டுவந்தகேக்கைஒரு கை பார்த்துக்கொண்டிருக்கிறாள் எஜமானி. இடையில் உள்ளேவரும் எஜமானியின் தாய்  (மின்னியிடம் எப்போதும் அனுசரணையாக இருப்பவள்) ‘கேக்கைவேண்டி கை நீட்ட, மின்னி வேண்டாம் என்கிறாள். மின்னி உனக்கென்ன பைத்தியமா? அம்மாவுக்கு ஒரு துண்டு கேக்  கொடு.. என்று மிரட்டும் எஜமானியிடம். அவர்களுக்குக் கொடுக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் தின்பது என்னுடைய மலம் என்கிறாள். மீண்டும் அவள் வேலையிழந்தாள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

 

இன்னொரு வீட்டின் சாப்பாட்டு மேசையில் வெள்ளையின தம்பதிகளுக்கு உணவு பறிமாறிவிட்டு தயக்கத்துடன் பேச்சைத் தொடங்குகிறாள் ஒரு பணிப்பெண். தன்னுடைய் இரண்டு பையன்களுக்கும் பள்ளிக்கட்டணம் செலுத்துவதில்  இருக்கும் சிரமங்களைச் சொல்லி, நீங்கள் கடனாகக் கொடுத்தால்  அதைநான் வேலை செய்து அடைத்துவிடுவேன் என்று சொல்லிமுடிக்கும் முன்பே ‘ஓ..எனக்கு நேரமாகிவிட்ட்து என்று நழுவுகிறான் கணவன். நான் உனக்கு ஒரு அறிவுரை சொல்ல விரும்புகிறேன். உனக்குத் தேவையான பணத்தை நீயேதான் சம்பாதிக்க வேண்டும் என்ற பொன்மொழிகளோடு அப்பிரச்சனையை முடிக்கிறாள் எஜமானி. தொடர்ந்த ஒரு நாளில் வீட்டுக்கூடத்தைச் சுத்தம் செய்து கொண்டிருக்கையில் ஒரு தங்க மோதிரத்தை அப்பணிப்பெண் கண்டெடுக்கிறாள். தன் பணத்தேவையால் அதை அடகுகடையில் விற்று, போலீசில் மாட்டுகிறாள். வேலைமுடிந்து பணிப்பெண்கள் குழுமியிக்கும் பொழுதில், அவள் ஒரு மிகப் பெரிய கிரிமினலைப்போல போலீசாரால் இழுத்துச் செல்லப்படுகிறாள். அச்சம்பவம் பணிப்பெண்களின் மனத்தடையை உடைக்கிறது. ஸ்கீட்டரிடம் அனைவரும்பேசத் துணிகிறார்கள்.


 எல்லாக்கதைகளையும் எழுதி முடித்தபின், ஸ்கீட்டர் தன்னுடைய வீட்டிலும் சொல்லப்படாத கதை ஒன்று உண்டு என்பதை உணர்கிறாள். தன்னை வளர்த்து ஆளாக்கிய, தன்னுடைய வீட்டில் 29ஆண்டுகள் பணிசெய்த தன்  அன்புக்குரிய தாதி கான்ஸ்டன்டைன்(Constantine) எங்கே என்று அம்மாவைக் கேட்கிறாள். அம்மாவின் தோழிகளும் ஊரின் முக்கியப் பெண்மணிகளும், அவள் வீட்டில் விருந்தில் கூடியிருக்கும் போது, கான்ஸ்டன்டைனின் மகள்  ஊரிலிருந்து தாயைப்பார்க்க வருகிறாள். கதவைத்திறக்க மறுக்கும் ஸ்கீட்டரின் தாய், அவளை சமயலறையில் காத்திருக்கச் சொல்கிறாள். என் அம்மாவைப் பார்த்துவிட்டுத்தான் போவேனென்று வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்துவிடுகிறாள் காண்ஸ்டன்டைனின் மகள். விருந்தினர்களின் முன் அவமானமுற்றதாகக் கருதும் ஸ்கீட்டரின்  தாய், இருவரையும் அப்போதே வீட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடுகிறாள். ஊரைவிட்டுப்போன காண்ஸ்டன்டைன் விரைவிலேயே இறந்தும் போகிறாள்.


இப்படி எல்லாக் கதைகளையும் தொகுத்து ‘த ஹெல்ப் என்ற பெயரில் புத்தகமாக பதிப்பிக்கிறாள் ஸ்கீட்டர். அதிர்ச்சியோடு அந்தக்கதைகளை, தாங்களும் பாத்திரங்களாகி உலாவும் வரலாற்று ஆவனத்தை தனியாகவும் குழுவாகவும் படிக்கிறார்கள்.
நீண்டநாட்களுக்குப் பின் ஒரு உணர்ச்சிகரமான காவியத் தன்மையுடைய கதையுலகிற்குள் பயணித்த  அற்புதமான  உணர்வைக் கொடுத்த ஒரு திரைப்படம். கேத்ரைன் ஸ்டாகெட்(Kathryn Stockett) எனும் அமெரிக்க நாவலாசிரியை 2009ல் எழுதிய நாவலான ‘தி ஹெல்ப்பின் திரைவடிவமே இப்படம். 33நாடுகளில் மூன்று மொழிகளில் பிரசுரிக்கப்பட்ட இந்நாவல், கறுப்பினப் பெண்களின் நோக்குநிலையில் வெள்ளையினப் பெண்களைப் பற்றியதாக  இருந்ததால்  சர்ச்சைக்குரியதாக பிரபலமானதாகத் தெரிகிறது.


 பாத்திரங்களின் குணாதிசயங்களும், அதற்கான நடிகர்களும் மிக  அற்புதமாகப் இப்படத்தில் பொருந்தியிருந்தார்கள். சின்னச்சின்னச் சம்பவங்களின் மூலமே துலக்கமான வேறுபாடுகளுடன், தனித்தன்மைகளுடன் பாத்திரங்கள் மிளிர்வதை கவனிக்காமல்லிருக்க முடியாது. குறிப்பாக ஏபிலீனாக நடித்த வயோலா டேவிஸ் (Viola Davis) வும்,  மின்னியாக  நடித்த ஆக்டாவியா ஸ்பென்சர் (Octavia Spencer) ம்  பண்பட்ட நடிப்பால் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார்கள். ஏபிலீன் அந்த வெள்ளைக் குழந்தையை பேணுகிற அழகும்,

You is kind,  you is smart,  you is important

என்று சொல்லிகொடுக்கும் பாங்கும்  அதை அக்குழந்தை திரும்பச் சொல்லும் அழகும் ‘ஏபிலீன் யு ஆர் மை ரியல் மதர் என்று மழலையில் சொல்வதும்  கவித்துவமான தருணங்கள்.


மிஸிசிப்பியின் நிலக்காட்சிகளும், பரந்த பண்ணை வெளிகளும், அறுபதுகளின் தெருக்களும் வீடுகளுமாய் விரியும் பிம்பங்கள் உன்னதமான  காட்சி அனுபவத்தைத்தருவன.  
ஸ்கீட்டராக வலம்வந்த எம்மா ஸ்டோனும் (Emma Stone)  சீலியாவாக வந்த ஜெஸிக்கா செஸ்டைனும்(Jessica Chastain) ஏன் ஒவ்வொருவரின் நடிப்பும் கச்சிதம்.  பாத்திரவார்ப்புக்காகவும், மிகச்சிறந்த நடிப்பிற்காகவுமே பார்க்கவேண்டிய படமென்பேன்.
நடிப்பிற்காக சர்வதேசவிருதுகளை ஜெஸிக்காசெஸ்டைனும், வயோலா டேவிஸும், ஆக்டோவியா ஸ்பென்சரும் அள்ளிக்குவித்திருக்கிறார்கள். சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை ஆக்டோவியா ஸ்பென்சர் பெற்றார். சிறந்த நடிகைக்காக வயோலா டேவிஸ் பரிந்துரைக்கப்பட்டார்.

Viola Davis
Octavia Spencer














இப்படத்தின் இயக்குநர் டேட் டைலர் (Tate Taylor)ஒரு இயக்குநர் மட்டுமல்லாமல் நடிகரும் திரைக்கதையாசிரியருமாவார். நாவலாசிரியையின் இளம் பருவத்தோழராதலால், நாவல் வெளிவருவதற்கு முன்பே 2008லேயே  இதைப்படமாக்குவதற்கான  உரிமையைப் பெற்றிருந்தாராம். தொழில்நுட்ப மிரட்டல்கள் எதுவுமின்றி முழு நிறைவைத்தந்த திரைப்படம் 'தி ஹெல்ப்'

Tate Taylor

 (தேவையற்ற ஒரு பின் குறிப்பு: கறுப்பினத்தவரை மனச்சாய்வுடன் சித்தரிக்கும் ஹாலிவுட் திரைப்படங்கள் இருக்கவே செய்கின்றன என்றாலும், கறுப்பின மக்களின் வலிகளை, விழுங்க இயலாத கசப்புகளை தொடர்ந்து நேர்மையாகச் சித்தரிக்க முயலும் வெள்ளையின இயக்குநர்கள் இருந்துவருவது ஆச்சரியமளிக்கும் உண்மை. சொந்தசாதிப் பெருமைகளையே இன்னும் பேசித்தீர்க்காத நம் இயக்குநர்கள் தங்கள் மூதாதைகளால் புறம்தள்ளப்பட்ட மக்களை, தங்களுக்குச் சேவை சாதிகளாய் காலகாலமாய் சுரண்டப்பட்ட சலவைத்தொழிலாளர்களின் , நாவிதர்களின், தலித்துக்களின் சொல்லப்படாத கதைகளை  என்றைக்குப்படம் எடுக்கப்போகிறார்கள்?)

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.