வெள்ளி, 23 மார்ச், 2012

HOWL : ஒரு கவிஞன் - ஒரு வழக்கு - சில கவிதைகள்




இந்தப் படத்தைப் பற்றி கேள்விப்படவும் இல்லை. எதிலும் படிக்கவும் வாய்க்கவில்லை. பல அபூர்வமான படங்கள் கண்ணில் படாமல் போய்விடுவது துர்பாக்கியம்தான். சமீபத்தில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய படம் Howl(2010). இரண்டு காரணங்கள். ஒன்று, இது ஒரு கவிஞரைப்பற்றிய படம். இரண்டாவது அசாத்தியமான வடிவம்  மற்றும் திரைக்கதை.
Howl என்பது 1957ல் வெளியான ஒரு சர்ச்சைக்குரிய  கவிதையின் தலைப்பு. அந்தக் கவிதையை எழுதியவர் 1926ல் அமெரிக்காவில் பிறந்த அலென் கின்ஸ்பர்க் (Allen Ginsberg). அவர் ஒரு கவிஞர். தேசாந்திரி,  சிவில் உரிமைப் போராளி,  Beat Generation எனும் இலக்கிய இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர், ஒரு புகைப்படக்கலைஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர். 
 
அமெரிக்காவில் Beat Generation எனும் போருக்குப்பிந்தைய இலக்கிய இயக்கத்தின் முன்னோடியான அலென் கின்ஸ்பர்க், மாற்றுப் பாலியல், போதை, கிழக்கத்திய மதங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மாற்றுப் பண்பாட்டை ஊக்குவித்த குழுவில் இருந்தார். பின்னர் 70களில் இது ஹிப்பிக் கலாச்சாரத்துடன் கலந்ததாகத் தெரிகிறது. 1957ல் Howl and other poems எனும் தலைப்பில் வெளியான கவிதை நூலில் இடம் பெற்ற Howl  அப்போதைய அமெரிக்காவை சலனத்திற்குள்ளாக்கிய கவிதைகளில் ஒன்று. ஓரினப் புனர்ச்சியாளரான அவர் சேரிகளில் வசிப்பதும், பழைய ஆடைகளை வாங்கி உடுத்துவதும், தன் வருமானத்தை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதுமாக தன் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டவர். 29 வயது இளைஞனாக அமெரிக்காவைத் தன் கவிதையால் வேறுவிதமாய் பார்க்கத் தொடகிய அலென் கின்ஸ்பர்க் 1997ல் ஈரல் புற்றுநோயால் இறந்தார்.
 
நான் மேலே சுருக்கமாகக் கூறியதை திரைப்படத்தின் கதையாகக் கொள்ளமுடியாது. எந்த வரிசைக்கிரம்மும் இல்லாமல், கின்ஸ்பர்க்கின் முழுவாழ்க்கைக் கதையாகவும் இல்லாமல், ஆனால் ஒரு கலைஞனின் உயிரோட்டமான காலப்பகுதியை ஒரு பின்நவீனத்துவ கவிதையாகச் சொல்ல முயற்சிக்கிறது இப்படம். வழக்கமான அர்த்தத்தில் இதை ஒரு சுவாரஸ்யமான படம் என்று கூறிவிடமுடியாது. ஆனால் இந்தப்பட இயக்குநர் ஒரு சுயசரிதையைப் படமாக மாற்றுவதற்கான ஒரு சுவாரஸ்யமான கதை கூறுதலை வந்தடைகிறார். மூன்று விசயங்களாகப் பகுத்துக்கொள்கிறார். கவிஞர் தன் கதையை அவரே கூறுவது, நேரடியாக கேமராவைப் பார்த்து, சில நேரங்களில் முகம் தெரியாத செய்தியாளர் ஒருவரிடம் கூறுவதாக. அப்போது அவர் விவரிக்கும் பகுதிகள் சில நேரங்களில் காட்சிப்படுத்தலாக விரிகின்றன. அவர் எழுதுவதைப் பற்றி, அவரின் ஆண் நண்பரைச் சந்தித்தது பற்றி, அவர் கவிதைகள் பற்றி.. தந்தையைப் பற்றி. இரண்டாவதாக அவருடைய  Howl  கவிதை சந்தித்த வழக்கு விசாரணை. நீதிமன்றத்தில் இருதரப்பு வழக்கறிஞர்கள், இலக்கிய வாதிகள், பேராசிரியர்கள் கவிதை பற்றிக் கருத்துச் சொல்வது என்பதாக நீளும் காட்சிகள். மூன்றாவது பகுதிதான் உண்மையில் என்னைக் கவர்ந்தது. கவிஞர் கவிதை வாசிக்கும் பகுதி/ எழுதும் பகுதி. 1950களின் காபி ஹவுசில் குழுமியுள்ள சிறிய கூட்டத்தினருக்கு அவர் கவிதையைப் படிக்கத் தொடங்கியதும், கவிதை வரிகளுக்கேற்ப வரைகலையில் (animation) தொடரும் காட்சிப்படிமங்கள். மிகுந்த கற்பனை வளத்துடன் கவிதையோடு இணைந்தும் முரண்பட்டும் கலக்கும் ஓவியங்கள். இயக்குநர் இம்மூன்றையும் இணைகோடுகளாகக் கலந்து செல்கிறார். 
 
இந்த Howl கவிதை பற்றிய வழக்கின் ஆவணங்கள், கின்ஸ்பர்க்கின் பல்வேறு நேர்காணல்கள் மற்றும்  கவிதைகளைக் கொண்டு இந்தத் திரைக்கதையை அமைத்துள்ளனர் இரட்டை இயக்குநர்களான ராப் எப்ஸ்டெய்ன்(Rob Epstein), ஜெஃப்ரி ஃரீட்மன்(Jeffrey Friedman). 
கறுப்பு வெள்ளையில் படம் தொடங்கும்போது ஒரு கூடம். ஒயின் அருந்திக்கொண்டும் சிகரெட் புகைத்துக் கொண்டும் இருக்கும் சிறுகூட்டம். அலென் கின்ஸ்பர்க் கவிதை வாசிப்பதற்கான முஸ்தீபுகளைச் செய்துமுடித்து, வாசிக்கத்தொடங்குகிறார். 

"I saw the best minds of my generation

 destroyed  by madness,

starving hysterical naked,

dragging themselves through the negro streets at dawn."


என்று நீளும் கவிதை ஓரிடத்தில் ஜாஸ் .. என முடியவும் ஜாஸ் இசைப் பின்ன்னியில் ஸ்பிலிட் ஸ்கிரீன் முறையில் ஒழுங்கற்ற துண்டுக்காட்சிகள் இணைக்கப்படும் போதே, நிமிர்ந்து உட்காரத் தோன்றிவிடுகிறது.

 வழக்கு நடக்கும் போது ஒரு உரையாடல் வருகிறது.  ஆங்கிலபேராசிரிடம் வழக்கறிஞர், கவிதை வரிகளுக்கு அர்த்தம் கேட்கிறார். பேராசிரியர் சொல்லிக்கொண்டே வரும்போது ஒரு கட்டத்தில், கவிதையை உரை நடையில் விளக்க முடியாது. அதனால்தான் அது கவிதைஎன்பார். நீதிமன்றக் காட்சிகள் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல. 1950களிலேயே அமெரிக்க குடிமைச் சமுதாயத்தின் கருத்துச் சுதந்திர வேட்கையை இது எடுத்துக்காட்டுவதாகவே தோன்றுகிறது. இறுதியில் நீதிபதி கருத்துச் சுதந்திரம் ஒரு தனிமனிதனுக்கும் தேசத்துக்கும் இன்றியமையாதது என்று கூறி இக்கவிதையில் ஆபாசம் இல்லை, இதை தடை செய்ய இயலாது  எனறு தீர்ப்பளிக்கிறார். இத்தீர்ப்பு அமெரிக்க இலக்கிய உலகில் ஒரு மைல்கல் தீர்ப்பாக நிலைபெறுகிறது.

ஒரு கலகத்தன்மையுடைய கவிஞன், மாற்று வாழ்வியலை பரிசோதித்தவனின் கதையை சொல்வதற்கான ஒரு வழக்கத்திற்கு மாறான திரைமொழியை கட்டமைப்பதில்தான் உலக இயக்குநர்கள் நம் இயக்குநர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள். அந்த வகையில்...

அ - நேர்கோட்டுப் படங்களில்(non-liner), சுயசரிதைப் படங்களில், இலக்கியவாதிகளைப் பற்றிய படங்களில் இது ஒரு முக்கியமான படம். இப்படத்தை இரண்டுமுறை பார்த்தபிறகு எனக்குத் தோன்றியது இதுதான் ‘ பாரதியைப் பற்றி ஒரு படம் எடுக்கவேண்டுமானால் இதுதான் வடிவமாக இருக்கமுடியும்.

4 கருத்துகள்:

  1. non-linear என்பதற்கான மொழி மாற்று 'அ - நேர்கோட்டுப் படங்கள்' என்பதா? வேறொரு சொல் இல்லையா?

    பதிலளிநீக்கு
  2. படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை.பார்ப்பதற்கு முயற்சிக்கிறேன். தகவலுக்கு நன்றி. நல்ல இடுகை.
    word verificationஐ நீக்கி விடுங்கள். பின்னூட்டமிட வசதியாய் இருக்காது.

    பதிலளிநீக்கு
  3. there are very few people in tamil who can appreciate cinema in its own way. This article is so fresh and precise, please continue your writings regarding films, music and mainly film and music- bragadish

    பதிலளிநீக்கு

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.