வியாழன், 5 ஏப்ரல், 2012

WAR DANCE : ரத்தத்தில் மலர்ந்த கவிதை...




நான்சிக்கு வயது 13. அவள் விவரிக்கிறாள். ‘என்னுடைய அப்பாவும் அம்மாவும் அன்றைக்கு அதிகாலையிலேயே வயலுக்குப் போய்விட்டார்கள். மாலை என் அம்மா வீட்டுக்கு வந்தபோது அப்பா உடன் வரவில்லை. அப்பா எங்கே? என்று அம்மாவிடம் கேட்டதற்கு அவள் பதிலொன்றும் கூறவில்லை. என் தந்தையை கலக ராணுவத்தினர் கொன்றுவிட்டதாகச் சொன்னாள். துண்டம் துண்டமாக வெட்டப்பட்ட என் தந்தையை எரித்துவிடும் படி அம்மாவுக்கு உத்தரவிட்டார்களாம். அம்மாவால் அதைச் செய்து முடித்துவிட்டுத்தான் வீட்டுக்கு வரமுடிந்தது. அன்று இரவு எங்கள் வீட்டுக்கதவு தட்டப்படட்து. அவர்களேதான். எங்கள் போர்வைகளை உருவி எழுப்பி, கண்களை மூடச்சொல்லிவிட்டு, அம்மாவை மட்டும் காட்டின் இருட்டுக்குள் கூட்டிச்சென்றனர். அதற்குப் பிறகு அம்மா திரும்பவேயில்லை... மூன்று நாட்கள் கழித்து நானும் என் சகோதர சகோதரிகளும் இந்த முகாமை வந்தடைந்தோம்.

 

 டாமினிக். எனக்கு அப்போது வயது 9. நானும் என் சகோதரனும் இரவு வீட்டைத் தவிர்த்துவிட்டு பள்ளிக்கட்டிடத்திற்கு படுக்கச் சென்றோம். ஏனென்றால் பள்ளிக் கதவுகளும் சன்னல்களும் உறுதியானவை. கலக ராணுவத்தினரின் நடமாட்டம் அருகாமையில் இருப்பதாகச் கேள்விப்பட்டதாலும், பாதுகாப்பிற்கு ராணுவத்தினரும் பள்ளிக்கு அருகே முகாமிட்டு இருந்ததுவும் ஒரு காரணம். நாங்கள் பள்ளிக்குள் நுழைந்தபோது ஏற்கனவே பல சிறுவர்கள் அங்கே படுத்திருந்தார்கள். நாங்கள் தூக்கத்திலிருந்தோம். கதவை துப்பாக்கி முனையிலிருக்கும் கத்தியால் நெம்பித்திறக்க முனையும் ஓசை கேட்டு நள்ளிரவில் விழித்தோம். தொடர்ந்து பெரும் நிசப்தம். தப்பிக்க வழியின்றி . பெஞ்சுகளின் கீழ் ஒளிந்துவிட முயற்சித்தோம்.  சிறிது நேரத்தில் கோடாரியால் சன்னல் கம்பிகளை உடைக்கும் ஒசையைத்தவிர எந்த சப்தமும் இல்லை. என் சகோதரன் சொன்னான். நீ மிகச் சிறியவன். அதனால் உன்னைக் தூக்கிச் செல்லமாட்டார்க்ள் என்று. சன்னல் உடைந்து விழுந்தது. கலக  ராணுவத்தினர் துப்பாக்கி முனைகளை நீட்டியபடி உள்ளே நுழைந்தார்கள். நிறையப் பேர். ஒருவன், யாராவது என்னைப் பார்த்தால் சுட்டுவிடுவேன் என மிரட்டினான். எங்கள் எல்லோரையும் கட்டி புதர்களுக்குள் மொத்தமாய் நடத்திச் சென்றார்கள். அதன் பிறகு என் சகோதரனுக்கு நடந்த கொடுமைகளை நான் பார்க்க வேண்டியிருந்தது. அவனை அடித்துச் சித்திரவதை செய்தார்கள். எங்களிடமிருந்து தனிமைப்படுத்தி அவனைக் கொண்டு சென்றார்கள். இன்றுவரை அவன் என்ன ஆனான் என்று எனக்குத் தெரியவில்லை. புதர்களுக்குள் இரண்டு வாரங்கள் எங்களை இருத்தி வைத்திருந்தார்கள். அது இரண்டு வருடங்கள் போலத் தோன்றியது. அங்கு நான் பார்த்த மரணங்கள் கொடூரமானவை. அதை எல்லாம் வெளியில் சொல்லுவதற்கான தைரியம் இப்போது கூட எனக்கு இல்லை.

 

              இது போல கலக ராணுவத்தால் பிடிக்கப்பட்ட 30,000 சிறுவர்களில் டாமினிக்கும் ஒருவன். அவர்கள் பிற்பாடு ராணுவத்திற்குள் கட்டாயமாக சேர்க்கப்படுகிறார்கள்
ரோஸ். வயது 14. என் அம்மா இருந்திருந்தால், நான் பாடற்குழுவில் பாடுவதைப் பற்றிச் சொல்லியிருப்பேன். அவளும் பெருமைப் பட்டிருப்பாள். இப்போது என் அத்தையுடன் நான் வசிக்கிறேன். எல்லாம் தலைகீழாகிவிட்டது. ரோஸ், தண்ணீர் எடுத்து வா. சீக்கிரம். நான் சொல்லுவது காதில் விழவில்லை? துணிகளைத் துவைக்க வேண்டும். குழந்தைகளை குளிப்பாட்டிவிடு. வீட்டை பெருக்கியாகி விட்டதா? இப்போதெல்லாம் நான் ஒரு சிறு தவறு செய்தாலும் அதை சகித்துக் கொள்வதற்கு ஆளில்லை. என்னுடைய அத்தை என்னை கம்போலாவில் நடக்கும் இசைப்போட்டிக்கு அனுப்பப் போவதில்லை. நான் போய்விட்டால் இந்த வேலைகளை எல்லாம் யார் பார்ப்பார்கள். இந்த வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு சீக்கிரம் நான் தூங்கச் செல்லவேண்டும். நான் தூக்கத்தில் என் பெற்றோரை நினைத்துக் கொள்வேன். என் கனவில் அவர்களைப் பார்ப்பேன். பொட்டாங்கோ கிராமத்தில் என் பெற்றோர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போதுதான்  கலக ராணுவத்தினர் வந்தனர். நாங்கள் புதர்களுக்குள் ஒளிந்திருந்தோம். எங்கே உன் பிள்ளைகள் என்று என் அம்மாவைக் கேட்டபோது, எனக்குக் குழந்தைகள் இல்லை என்று சொன்னாள். நாங்கள் மறைவிடத்திலிருந்து வெளியே வந்த போது, ராணுவ வீரர்கள் மட்டுமே அங்கிருந்தனர். எங்கே என் பொற்றோர் என்று கேட்டோம். எங்களை ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒரு பெரிய மரம் இருந்தது. அங்கே எறுப்புகளும் பூச்சிகளும் மொய்த்துக் கொண்டிருந்தன. உடைந்த பானைகளுக்குள் வெட்டப்பட்ட தலைகள். என் அம்மாவின் தலை ஒரு பானையிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டபோது நான் என் நிலையில் இல்லை. நாங்கள் ஒளிந்திருந்த்தை அம்மா  சொல்லியிருந்தால் ஒருவேளை, அவர்கள் அவளை உயிரோடு விட்டிருப்பார்களோ? என்னைத் தொடர்ந்து துரத்தும் கேள்வி இதுதான். இதற்குமேல் சொல்வதற்கு எனக்கு ஒன்றுமில்லை.

வடக்கு உகாண்டாவில் போரினால் அநாதையாக்கப்பட்ட 2 லட்சம் குழந்தைகளில் ரோஸூம் ஒருத்தி. 

நான்சி – டாமினிக் – ரோஸ். வடக்கு உகாண்டாவின் 20ஆண்டுகால போர் அவலங்களின் உதாரணங்களில் சிறுதுளி. இவர்கள் மூவரும் அச்சோலி (Acholi tribe) எனும் பழங்குடிப்பிரிவைச் சார்ந்தவர்கள். அச்சோலி என்பவர்கள், வடக்கு உகாண்டாவில் வாழும் ஒரு  பழங்குடி இனம்.  ஜோசப் கோனி(Joseph Kony) எனும் மத அடிப்படைவாதியினால் 1986ல் ஆரம்பிக்கப்பட்ட, ‘கடவுளின் ராணுவம்’  என்ற பெயரில் இயங்கும் ஒரு கலகக் குழுவால் 20ஆண்டுகளுக்கும் மேலாக  தொடர் இன்னல்களுக்குள்ளாகி வருபவர்கள். கோனியின் ராணுவம் அவர்களின் 30,000 குழந்தைகளை ராணுவத்தில் கட்டாயமாகச் சேர்த்து, அவர்களின் சொந்த இனத்தையே கொல்வதற்கு பயன்படுத்தியது.  போரில் கொல்லப்பட்ட பெற்றோரின் அநாதையான  குழந்தைகள் மட்டும் 2 லட்சத்திற்கும் மேல். போரினால் இடம் பெயர்ந்து முகாம்களில் வாழ்பவர்கள்  20 லட்சம் பேர்.
 


அத்தகைய முகாம்களில் பொட்டாங்கோ என்பது ஒரு தொலைதூரக் கிராமம் என்பதோடு எப்போது வேண்டுமானாலும் கலகராணுவத்தால் தாக்கப்படத்தக்க சூழலில் இருக்கும் முகாம். மாதத்தில் ஒருநாள் ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் உணவுப் பொருள்களைப் பெறுவதற்காக 60,000 மக்கள் அங்கே காத்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தைப் பார்த்தபோது என்னைத் தொடர்ந்து உறுத்திய ஒருவிசயம், நம் தமிழ் இயக்குநர்களின் அழகியல் பற்றிய பார்வை. குறிப்பாக கறுப்புத் தோல் பற்றிய தீராத தாழ்வு மனப்பான்மையும், பெரும்பாண்மை மக்கள் கறுப்பாக இருக்கும் ஒரு சமூகத்தில் அதை ஒரு கேலிப்பொருளாக ஆகியிருப்பதையும் என்னால் நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. இந்தப்படத்தின் இயக்குநர்கள் இருவரும் வெள்ளையர்கள். ஆனால் அவர்கள் கேமரா, அந்த ஒப்பனையற்ற கறுப்புக் குழந்தைகளை அணுகியிருக்கிறவிதம், அவர்களை தேவதைகளாக மாற்றியிருக்கிறது. ஒரு இயக்குநருக்கு கலை, அழகியல் பற்றிய பார்வை எவ்வளவு முக்கியம் என்பதை இப்படத்தில் நாம் உணர முடியும். படம் முழுக்க புழுதிபடர்ந்த, அழுக்கான அந்த நிலவெளியும் மனிதர்களும் குழந்தைகளும், அழுத்தமான வண்ணங்களில் அடடா.. வார்த்தைகளைத் தேடத்தான் வேண்டும்.

நான் பார்த்த ஆவணப் படங்களில் மிக அற்புதமான படம் என்று இதைச் சொல்வேன். இதை வெறும் போர் சூழலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றியதாக மாற்றி எளிமைப்படுத்தாமல், இதை அச்சோலி மக்களின் நிலவியல், வாழ்வியல், இசை, நடனம் ஆகிய பண்பாட்டுக் கூறுகளினூடான பயணமாக மாற்றுவதற்கு ரெம்பவுமே மெனக்கெட்டிருக்கிறார்கள் இயக்குநர்கள்.

ஸீன் ஃபைன்( Sean Fine ) மற்றும் ஆன்ரேயா நிக்ஸ்( Andrea Nix) இருவரும் ஒளிப்பதிவையும் இயக்கத்தையும் செய்திருப்பவர்கள். உகாண்டாவில் போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை எடுக்கவேண்டும் என்று முனைந்தபோது, என்னுடைய மொழி பெயர்ப்பாளர் அங்கு தேசிய அளவில் நடைபெறவுள்ள இசை மற்றும் நடனப் போட்டியைப் பற்றிச் சொன்னார். பள்ளிக் குழந்தைகளுக்கான அந்த போட்டியில் பங்கு பெறும் பள்ளி எதுவும் போர் முகாமில் இருக்கிறதா என்று கேட்டபோது, பொட்டாங்கோ  எனும் தொலைதூர முகாமைப் பற்றிச் சொன்னார். ஆனால் அங்கு செல்வது அபாயகரமானது என்பதையும் அவர் சொல்லத் தவறவில்லை. 800மைல்கள் சாலை வழியாகப் பயணித்து, முகாமை அடைந்தபோது, பெரும் கூட்டம், சந்தடி.  கார் ஜன்னலைத் திறந்தபோது பயிற்சி  செய்துகொண்டிருந்தவர்களின் பாடல் காற்றில் கலந்து வந்தது. முற்றிலும் வேறான அனுபவம் அது. டாமினிக் – ரோஸ் – நான்சி மூவரும் தனிப்பட்ட குழந்தைகளல்ல. ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பிரதிநிதிகள். மூன்று கட்டங்களாக படப்பிடிப்பை நட்த்தினோம். முதல் ஷெட்யூலில் படப்பிடிப்புக் குழுவென்பது மூன்றே பேர்தான். அப்புறம் நான்குபேர். இறுதிகட்டத்தில், போட்டி நடக்கும் காட்சிகளுக்கு கூடுதல் கேமராமேன் ஒருவரை வைத்துக் கொண்டோம்இவ்வளவு சிறிய குழுவா இப்படியொரு படத்தை எடுத்திருக்கிறது? நல்ல சினிமா என்பது இவ்வளவு எளிமையானதா? என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

 .


வருடந்தோறும் உகாண்டாவில் பிரைமரி பள்ளிகளுக்கிடையில் நடக்கும் தேசிய அளவிலான இசை மற்றும் நடனப்போட்டியில் பொட்டாங்கோ முகாம் பள்ளிமாணவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அவர்களுக்கு பயிற்சியளிக்க இரு நிபுணர்களும் வந்து சேர்கிறார்கள். அவர்கள் பயிற்சி பெறுவது, போட்டிக்குத் தயாராவது, முகாமிலிருந்து ராணுவக் காவலுடன் தலைநகருக்குப் பயணமாவது, போட்டிகளில் பங்கு பெறுவது,  முகாமிற்குத் திரும்புவது இதன் ஊடாக நான்சி – டொமினிக் – ரோஸ் ஆகியோரின் நெஞ்சைப்பிளக்கும் அனுபவங்கள் என்பதாக படம் நீள்கிறது. இதில் வயதுக்கு மீறிய வன்முறைகளையும் குரூரங்களையும் சந்தித்து மனதளவில் நொறுங்கிய அக்குழந்தைகளுக்கு இசையும் நடனமும் ஒரு சிகிச்சை முறையாக(art as therapy ) இருப்பதும் ஒரு விசயமாக வந்து போகிறது. இவர்களை இந்த இசையும் பாட்டும்தான் மீட்க முடியும் என்பார் அந்த இசை ஆசிரியர். பாட்டும் ஆட்டமுமாய் இருக்கும் போது உற்சாகமும் மகிழ்ச்சியுமாக அவர்கள் பரவசமடைவதை அழகான அண்மைக்காட்சிகளில்(close-up shots) வெளிப்படுத்துகிறார் இயக்குநர். (மன நோயாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள், போர், பாலியல் வன்முறை, இயற்கைச் சீற்றங்களால் அசாதாரண சூழல்களை எதிர்கொண்டு பாதிப்படைந்தவர்களை இசை, நடனம், நாடகம் போன்ற கலைகளால் குணமாக்கும் ஒரு சிகிச்சை மேலைநாடுகளில் புழக்கத்தில் இருக்கிறது)

இசையும் சிறப்பு ஒலிகளும்(sound effects) எப்படிப் பயன்படுத்தப் படவேண்டும் என்பதற்கு இப்படம் சிறந்த எடுத்துக்காட்டு. தங்கள் பெற்றோர் கொல்லப்பட்ட சம்பவத்தை விவரிக்கும் போது, திரையில் வன்முறைக்கான காட்சிப் படிமங்கள் எதுவும் தோன்றுவதில்லை. மரங்கள், புதர்கள், உடைந்த பானைகள், மண்டையோட்டில் ஊர்ந்து திரியும் எறும்புகள் இவைகள்தான். ஆனால் மெலிதான இசை, சிறப்புச் சப்தங்கள், அதி அண்மைக்காட்சிகள்(extreme close – up shots)) சேர்ந்த கலவையாக ஒரு அபூர்வமான திரைமொழியை இயக்குநர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். எந்த கூடுதல் சாதனங்களும் இல்லாமல் கையிலோ, தொளிலோ வைத்து எடுக்கப்பட்ட ஷாட்கள், இந்த ஆவணப்படத்தை ஒரு காட்சிக் கவிதையாக மாற்றுகின்றது.

படம் பார்த்து முடிக்கும் போது உங்கள் விழித்திரைகளில் காட்சிகள் நனையும். ஆனால் சிலவாரங்களுக்காவது உகாண்டாவின் அந்த சின்னக் குழந்தைகளின் அழகிய முகங்கள் நினைவில் அலைந்தபடி இருக்கும்.
____________________________________________________________________________________

(2008ல் சிறந்த ஆவணப்  படத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட படம். 2010ல் சிறந்த ஆவணப்படம், சிறந்த ஒளிப்பதிவிற்காக எம்மி விருதுகளை வென்றது. இவை தவிர சிறந்த படத்திற்கான 4சர்வதேச விருதுகளையும், ஒளிப்பதிவிற்கான 3விருதுகளையும் பெற்றுள்ளது. இந்தக் குழந்தைகளின் நிலையை வெளிஉலகத்திற்குக் கொண்டுவரவேண்டும் என்பதற்காக Shine Globe எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்காக எடுக்கப்பட்ட ஆவணப்படம் என்பது மிக முக்கியமான தகவலாகவே எனக்குப் படுகிறது)

 இயக்குநர்கள் ஸீன் ஃபைன்( Sean Fine ) மற்றும் ஆன்ரேயா நிக்ஸ்( Andrea Nix)

1 கருத்து:

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.