வெள்ளி, 9 மார்ச், 2012

அ ர வா ன் : க ள ப் ப லி யா? ப லி க டா வா?ஒரு வரலாற்று காலகட்டத்தை சித்தரிக்க முயற்சித்த படம் என்ற வகையிலும், ஒரு எழுதப்பட்ட இலக்கியப் பிரதியிலிருந்து உருவான சினிமா என்ற வகையிலும், வழக்கமான தமிழ்சினிமா சூத்திரங்களிலிருந்து மாறுபட்ட முயற்சி என்ற வகையிலும் பார்வையாளர்களாலும் விமர்சகர்களாலும் சிலாகிக்கப்படுகிற படமாகியிருக்கிறது அரவான். அதற்கான அருகதையும் இப்படத்திற்கு உண்டுதான். ஆனால் இத்தகைய முன்னோடி முயற்சிகள் ஒரு போக்காக (trend) தமிழ் சினிமாவில் மாறவேண்டுமானால் இன்னும் கொஞ்சம் கடுமையாகவே இத்தகைய படங்களை அணுகவேண்டும்.

வசந்தபாலன் இந்தப் படத்திற்கான மூலக்கதையை அல்லது கதைக்கான ஒரு பகுதியை ‘காவல் கோட்டம்எனும் நாவலில் இருந்து எடுத்துக் கொண்டுள்ளார். திருடுவதை தொழிலாகக் கொண்ட ஒரு சமூகம் அல்லது இனக்குழு தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. அதற்கான ஒரு பண்பாட்டோடும்,   அறவியல் நியாயங்களோடும் அது வாழ்ந்திருக்கிறது. இந்த சுவாரஸ்யமான கதைக்களம் ஒரு இயக்குநரை ஈர்க்கக்கூடியதுதான். இதில் இயக்குநர் முதலில் தெளிவுபடுத்த வேண்டிய விசயம் ஏன் ஒரு சமூகம் திருடுவதை வாழ்வாதாரமாகக் கொள்ள வேண்டியதாயிற்று? என்பதைத்தான். 200ஆண்டுகளுக்கு முன் நிலம் சார்ந்த வாழ்வியல் சூழல்கள் நிலவிய காலத்தில் வேளாண்மைக்கான வாய்ப்பற்ற, மழைப்பொழிவு மிகக் குறைந்த, இயற்கைவளங்கள் இல்லாத சூழல்தான் ஒரு சமூகத்தை களவைத் தொழிலாகக் கொள்ள நிர்பந்தித்தது என்று பார்வையாளன் முடிவு செய்துவிட முடியாதபடி, பசுபதி குழுவினர் களவுக்குச் செல்லும் போதெல்லாம் ஒரு பசுமையான அடர்ந்த வனத்தைக் கடந்து செல்கின்றனர். பற்றாக்குறைக்கு நயகரா போன்ற அருவிவேறு கூப்பிடுதூரத்தில் கொட்டோகொட்டென்று கொட்டித்தள்ளுகிறது. ஆனால் நம் நாயகர்கள் வாழும் வேம்பூர் கிராமத்தில் பேருக்கு ஒரு மரத்தைக் காணமுடிவதில்லை. இந்த நிலவியல் குழப்பம் சில அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது. ஒரு சமூகம் திருடித்தான் வாழ்வோம் என்று சபதம் செய்துகொள்ளுமா? அப்படி செய்து கொள்வதற்கான அவசியம் யாது? தமிழகத்தில் காடாறுமாதம் நாடாறு மாதம் என்று வாழுகிற சாதிகள் உண்டுதான். ஊர் ஊராய் போய் குறி சொல்லிவிட்டு சொந்த ஊரில் பாதிநாட்களைக் கழிக்கும் சமூகங்கள் உண்டு. அதற்குப்பின்னாலான பண்பாட்டுக்காரணங்களும் உண்டு.
அடுத்து இயக்குநர் ஆரம்பகாட்சிகளில் கதையின் ஆதார சுருதியைத் தவரவிடுவதால், களவுக்குச் செல்லும் பசுபதி குழுவினரை ரெம்பவும் ரொமாண்டிசைஸ் பண்ணுகிறார். போருக்குச் செல்வதுபோன்ற முஸ்தீபுகளைச் செய்கிறார்கள். நாடகத்தனமான அசைவுகளும், வரிசையாக கம்புகளோடு நிற்பதுமான காட்சிப்படிமங்கள் கதைப்போக்கோடு ஒன்றவில்லை. வழக்கமான ஹீரோ-வில்லன் பாணியிலான சண்டைக் காட்சிகள் அலுப்பூட்டுகின்றன. பசுபதி அடிக்கையில் காவலர்கள் பக்கவாட்டில் பறந்து சிதறுகிறார்கள். கதை 18ஆம் நூற்றாண்டில் நடப்பதால் புவியீர்ப்புவிசை கண்டுபிடிக்கப்பட்டது அடிவாங்கியவர்களுக்குத் தெரியாதோ என்னவோ?   பசுபதி மாட்டிக்கொண்டு அடிவாங்கி குற்றுயிராய் வரும்போது எந்த அநுதாபமும் எழுவதில்லை. களவானியப் புடிச்சா கொஞ்சவா செய்வாங்கஎன்று தோன்றிவிடுகிறது.


அரவான் என்ற படத்தை உருவாக்குவதற்கான உந்துதலை வசந்தபாலன், மெல்கிப்சனின் பிரேவ் ஹார்ட்(Brave Heart), அப்போகலிப்டொ(Apocalypto) ஆகிய படங்களில் இருந்து பெற்றிருப்பார் போலத் தோன்றுகிறது. கரிகாலன் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் உருவ அமைப்பு சிகை அலங்காரமும் சில காட்சி அமைப்புகளும் அப்போகலிப்டோவில் வருவதை ஒத்திருக்கின்றன. அடிபட்ட பசுபதி வண்டியில் கொண்டுவரப்படும் காட்சியும், ஆதி கடைசியில் ஏசுநாதர் போல் பலிக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சியும் பிரேவ் ஹார்ட் படத்தின் காட்சிகளை நினைவூட்டுகின்றன. களவுக்குச்செல்லும் பசுபதி குழுவினர் கஜானாவை உடைக்கும்போது கிழவியின் வெற்றிலை உரலோடு ஒத்திசைந்து அடிக்கும் காட்சி ஸ்பீல்பர்க்கின் இண்டியானா ஜோன்ஸ் அண்ட் லாஸ்ட் குருசேட் படத்தில், நூலகத்தில் ரப்பர் ஸ்டாம்ப் அடிக்கும் ஓசையோடு தரையைப் பெயர்க்கும் காட்சியில் இருந்து அப்பட்டமாய் பிரதியெடுக்கப்பட்டிருக்கிறது. உலக சினிமாவின் தரத்தை எட்டவேண்டும் என்பதை நம் இயக்குநர்கள் தவறாகப் புரிந்துகொண்டு உலக சினிமாக்களிலிருந்து காட்சிகளை உருவி விடுவதற்கு வசந்தபாலனும் விதிவிலக்கல்ல என்பது சோர்வை உண்டாக்குகிறது.

தொழில்நுட்பரீதியியில் நம் கலைஞர்கள் உலகத்தரத்தை எட்டிவருகிறார்கள். 7ஆம் அறிவு, எந்திரன் ஆகிய படங்களைப் பார்க்கும்போது கலை இயக்குநர்கள்,  ஒப்பனை, ஒளிப்பதிவு எல்லாமே உலகத்தரம்தான். இயக்குநர்கள்தான் அவர்களுக்கு இணையாக இல்லைபோலத் தோன்றுகிறது. அரவானும் அதே உணர்வை சில இடங்களில் ஏற்படுத்துகிறது.  களவுக்குச் செல்லும்போது, இண்டர்கட்டில் எப்படி வீடு குறிக்கப்படுகிறது என வரும் காட்சிகளின் படத்தொகுப்பு பாணியும், திருடப்போன இட்த்தில் தூக்கில் தொங்கும் பெண்ணின் கதையாக, வெளித்தெரியும் வெட்டுகளுடன்(visible cuts) தொகுக்கப்படும் பெண்ணின் கதையும் நான்லீனியர்(non-linear) வகையான படங்களுக்கே பொருத்தமாக இருக்கும். இங்கு இது ஒரு உத்தியாக துருத்துகிறது. (ரன் லோலா ரன் எனும் ஜெர்மானியப் படத்தில் இந்த உத்தி மிகப் கலாப்பூர்வமாகப் பொருந்தியிருக்கும்).18ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதைக் களத்தை எவ்வகையான இசையால் அடிக்கோடிடுவது? தமிழில் இந்த மாதிரி முயற்சிகளுக்கு யாரை முன்னுதாரணமாகக் கொள்ளலாம்? கண்ணுக்கெட்டிய தூரத்தில் எந்தப் படமும் தென்படவில்லைதான். இளையராஜா கூட இந்தச் சவாலைச் சந்தித்ததில்லை என்பதே உண்மை. பாவம் கார்த்திக் என்ன செய்வார். வித்தியாசமான ஓசைகளைப் பயன்படுத்தவேண்டுமென்ற முனைப்புத் தெரிந்தாலும், கடைசியில் வழக்கமான வயலின்கள், புல்லாங்குழல் மற்றும் தாளக்கருவிகளின் இடைவிடாத துரத்தலுமாய் அமைந்திருக்கிறது. மற்ற துறைகளோடு ஒப்பிடும்போது, பின்னனி இசையில் உலகத்தரத்தை எட்ட நாம் வெகுதூரம் பயணிக்கவேண்டும் என்பதை இந்தப்படமும் உணர்த்துகிறது.

இசை வடிவமைப்பு (music design) என்று ஒன்று உலகப்படங்களில்  இருக்கிறது. ஒரு படத்தின் கதை, களம், காலம் என எல்லாக் கூறுகளையும் கணக்கில் கொண்டு, இந்தப்படத்தின் இசை எப்படியிருக்கவேண்டும்? எந்தெந்தக் கருவிகள் பயன்படுத்தப்படவேண்டும்? எந்தெந்த கருவிகள் தவிர்க்கப்பட வேண்டும்? என்பன விரிவாக விவாதிக்கப்பட்டு இசை அமைப்பாளர் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. குறிப்பாக வரலாற்றில் பின்னோக்கிப் பயணம் செய்யும் இந்த வகையான கதைகளைக் கையாளும்போது கூடுதல்கவனம் தேவைப்படுகிறது. அரவானில் வறண்ட நிலம், போராட்டம், குற்றம் ஆகிய அம்சங்களை இசை அடிப்படையாகக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் கார்த்திக்கின் அடர்த்தியான இசைக்கோர்வைகள் ரொமாண்டிக்காக ஒலிப்பதால், இசை எதிர்திசையில்  இயங்குவதுபோல் இருக்கிறது. பல நேரங்களில் காட்சியின் அழகியலுக்குள் இசை புகுந்துகொள்கிறது. ஆனால் தமிழ் சினிமாக்களின்  வழக்கமான அர்த்தத்தில் கார்த்திக்கின் இசை படத்தை கெடுக்கவில்லை. ஆனால் படத்திற்கு கூடுதல் பலம் அளிக்கவில்லை என்பதோடு, இது ஒரு புதிய வகையான படம் என்ற உணர்வை ஏற்படுத்தவில்லை. தமிழ்க்காதுகளுக்குப் பழக்கப்பட்ட இசை பார்வையாளனுக்குக் கிட்டும் புதுவகையான காட்சி அனுபவத்தை கட்டுப்படுத்திவிடுகிறது. இயக்குநரின் புதிய அணுகுமுறையை சிதைத்துவிடக்கூடும்.கதைமாந்தர்களின் பேச்சுவழக்கைத் தீர்மானிப்பதில் குழப்பம் இருக்கிறது. மதுரை வழக்கும் உசிலம்பட்டி வழக்கும் கலந்துவருகின்றன. அஞ்சலியின் தோற்றமும் உடைகளும் எதிலும் ஒட்டவில்லை. ஒற்றையாளாய் தீப்பந்தம் சுற்றுவது என்ன வகையான கூத்து என்று தெரியவில்லை. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் நம் இயக்குநர்கள் ஏன் இவ்வளவு அசட்டையாக இருந்துவிடுகிறார்கள் என்பது புரியவில்லை. அவ்வளவு அதிகாரம் படைத்த ஒரு பாளையக்காரர், ஒரு அத்தர் விற்பவனைத் தனியாளாய்த் துரத்திவந்து, கழுத்தறுத்து அண்ணாக்கொடியைப் பறிகொடுத்து அருவித்தண்ணீரில் உயிர்விடுவது  போன்ற எளிமையான தர்க்க மீறல்களுக்கும் பஞ்சமில்லை.

அடப்பாவிகளா, ஒருத்தன் வம்பாடுபட்டு எடுத்த படத்த ஈவிரக்கமில்லாம விளாசித்தள்றீங்களேடா, நீங்களாம் நல்லாருப்பீங்களா? என்று ஆதங்கப்படும் நல்ல ஆத்மாவாக நீங்கள் இருக்கும்பட்சத்தில் மேற்கொண்டு படிக்கலாம். உங்களுக்காகவும் சில விசயங்கள் உண்டு.

வசந்தபாலன் பாத்திரத்தேர்வை மிகக் கச்சிதமாகச் செய்துவருகிறார். முந்தைய படங்களிலும் அதைப் பார்க்கமுடியும். அஞ்சலி தவிர்த்து அத்தனை மாந்தர்களும் மிகப் புதிதாக இருக்கிறார்கள். ஆதி மட்டும் தேவைக்கதிகமாக ஜிம்முக்குப் போய் உடம்பில் ஏற்றியிருந்த தவளைகளைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். களவுக்குப் போன இடத்தில் ஆதி, இருட்டில் பெண்ணின் பாதங்களைக் கட்டிக்கொள்வது ஒரு அபூர்வமான இடம். இந்த மாதிரி களத்தையும் காலத்தையும் கொண்ட சினிமாவை முயற்சிப்பது ஒன்றும் சாமாண்யமான வேலையல்ல என்பது நமக்குத் தெரிந்ததுதான். ஆனாலும் இலக்கியப் பரிச்சயமும், உலகசினிமாபற்றிய புரிதலும் உடைய வசந்தபாலன் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால் உண்மையான உலகசினிமாவைக்  கொடுக்கத் தகுதியானவர்தான் என்பதில் சந்தேகமில்லை.கூட்டிக்கழித்துப் பார்க்கையில், தன் கழுத்தைத் தானே அறுத்துக் கொண்டு களப்பலியானது அரவான்மட்டும் அல்ல  இயக்குநரும்தான் என்று தோன்றுகிறது. ஆனால் பலிகடாவானது பார்வையாளர்களா? தயாரிப்பாளரா? என்பது இந்த வார இறுதிக்குள் தெரிந்துவிடும். 

8 கருத்துகள்:

 1. நுழைந்தாயிற்று. தொடர்ந்து எழுத, வளர வாழ்த்துகள் ...

  word verification-யை எடுத்து விட்டால் நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'தொடர்ந்து எழுத...’ என்பதில் இருப்பது நக்கலா? சீண்டலா? உங்களுக்காகவாவது தொடர்ந்து எழுதுவேன். வாழ்த்துக்கு நன்றி.

   நீக்கு
 2. தற்போதைய விமர்சகர்கள் பெரும்பாலும் (தொலைக்காட்சி, செய்தித்தாள்க்ள்) சினிமா விமர்சணங்களை 'PAID NEWS' ஆக மட்டுமே வெளியிடுகின்றனர். பாக்கியராஜோ, மதனோ, சுகாசினியோ இதற்கு விதிவிலக்கல்ல. தொலைக்காட்சியில் வரும் 'TOP 10' வரிசைகளும் அப்படித்தான். நல்ல விமர்சணங்கள் இயக்குநர்களை சீர்படுத்தும், பொதுமக்களீடம் நல்ல ரசனையை தூண்டும். உங்கள் விமர்சணம் நல்ல தரமானதாக உள்ளது. தொடரட்டும் உங்கள் களப்பணி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ‘பிகே’. தொடர்ந்து வாசித்து கருத்து கூறுங்கள்.

   நீக்கு
 3. ஐயா, நீங்கள் ப்ளாக் ஆரம்பித்தது கேள்விப்பட்டு மிகுந்த சந்தோஷம் அடைந்தேன். தொடர்ந்து படிக்கிறேன்.. வலைப் பூக்களில் உங்களின் பிரவேசம் உங்களின் மாணவர்களில் பலருக்கும் ஒரு உத்வேகம் கொடுக்கும் என்பது நிச்சயம்..

  கலக்குங்க..

  -அசோக்ப்ரபா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வகுப்பறைகளில் கேட்பதற்கு ஆளில்லாததால்தான் வலைப்பூக்களின் பக்கம் திரும்பியிருக்கிறேன்.

   நீக்கு
 4. //வகுப்பறைகளில் கேட்பதற்கு ஆளில்லாததால்தான் வலைப்பூக்களின் பக்கம் திரும்பியிருக்கிறேன்.//

  ஓய்வுக்குப் பின் இ(ரு)ந்த நிலையே பதிவு ஆரம்பிக்க என்னைத் தூண்டியது.

  பதிலளிநீக்கு

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.