திங்கள், 4 நவம்பர், 2013

கிராவிட்டி (GRAVITY) : இரண்டு பாத்திரங்கள் – நான்கு குரல்கள்… ஒரு விண்வெளிக் காவியம்


 

அறிவியல் புனைகதை மற்றும் விண்வெளியில் நடக்கும் கதைகளென்றாலே எனக்கு கொஞ்சம் ஒவ்வாமை உண்டு. அந்தத் தயக்கத்தோடே தியேட்டருக்குப் போனேன். பெங்களூர் பிவிஆர் ஐ மாக்ஸில் 600ரூபாய் கட்டணம் கொடுத்த போது ஒவ்வாமை இன்னும் அதிகமானது. படம் முடிந்தபோது 'நான் மட்டும் பழைய காலத்து ஊதாரி மன்னர்களுள் ஒருவனாக இருந்தால், சுஜாதா சொன்ன மாதிரி என் ராஜ்ஜியத்தில் பாதியை இயக்குநருக்கு கொடுக்கத் தயங்கமாட்டேன் என்று தோன்றியது.

இரண்டு பாத்திரங்களையும் நான்கு குரல்களையும் கொண்டு வெண்திரையில் எழுதப்பட்ட விண்வெளிக்காவியம் கிராவிட்டி.

 இது அறிவியல் புனைகதை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கற்பனையை கன்னாபின்னாவென்று ஓடவிட்டு நம்மைப்போல் எளிமையான ஜீவராசிகளின் கற்பனை வறட்சியை பறைசாற்றும் முயற்சிகள் இல்லை. பயணம் செல்லும் விண்வெளிக் கப்பலில் பழுது ஏற்படுகிறது. கப்பலில் செல்லும் நால்வரில் ஒருவர் ரயான் ஸ்டோன் (சான்ட்ரா புல்லக்) மருத்துவ பொறியாளர். அவருக்கு இது முதல் விண்வெளிப் பயணம். இன்னொருவர் மாட் க்வாஸ்கி (ஜார்ஜ் க்ளூனி) விண்ணியலாளர். விண்கலத்தின் கமாண்டர். இந்தப்பயணத்துடன் ஓய்வு பெறும் உற்சாகத்தில் இருப்பவர். ரஷ்ய விண்கலம் ஒன்று (ஹாலிவுட்டுக்கு இன்னும் வில்லன் ரஷ்யாதான்) பழுதான சாட்லைட் ஒன்றுடன் மோதியதன் தொடர் விளைவாக விண்வெளியின் விண்கலக் கழிவுகள் மோதக் கூடும் என்ற தகவலைத் தொடர்ந்து தொடர்புகள் அறுந்துபோக, விண்கலக் கழிவுகளால் கப்பல் பெருத்த சேதமடைகிறது. கப்பலிலிருந்த  மற்றும் இருவர் இறந்து விடுகிறார்கள். இப்போது ரயானும் க்வாஸ்கியும் பேரண்டப் பெருவெளியில் தனித்து விடப்படுகிறார்கள். ஒருவர் மட்டுமே தப்பமுடியும் என்ற சூழலில் க்வாஸ்கி ரயானிடம் விண்வெளியில் விடைபெற்று பேரண்டத்தில் கலந்துவிடுகிறார். ரயான் பூமிக்குத்திரும்பினாரா? என்பதுதான் மீதமுள்ள படம்.


3டி தொழில்நுட்பத்தின் மகத்துவத்தை இந்தப் படத்தில் உணரமுடிந்தது.  ஈர்ப்பு விசையற்ற வெளியில் மிதந்தலையும் உடல்கள், பொருட்களோடு நாமும் மிதந்தலையத் தொடங்குகிறோம். விண்வெளியிலிருந்து பூமியைப் பார்ப்பதும், செய்தித் தாள்களில் ஒரு பத்தியில் படித்த விண்கலங்களின் பிரம்மாண்டத்தையும் பேரண்டத்தில் மனிதன் செய்துகொண்டிருக்கும் பரிசோதனைகளின் வீச்சையும் முப்பரிமாணத்தில் திரையில் பார்ப்பது பரவசமான அனுபவம். அவதார் ‘கேமரூன்’ சொன்னமாதிரி ‘விண்வெளியில் கதை நிகழும் படங்களில் இது ஒரு மைல்கல்’ என்ற வார்த்தை மிகையானதல்ல.

படத்தின் இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம் ‘ஒலி வடிவமைப்பு’ (sound design). க்வாஸ்கி விண்வெளியில் உலாவிக்கொண்டே பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்களோடு பேசும் உரையாடலும் (பெரும்பாலும் புரியாவிட்டாலும்) வானொலியில் பாடல்கள் கேட்பதும் அற்புதம். விண்வெளியின் வேறுபட்ட சூழலில் பெரும் பகுதி அமைதியும் மிக அமைதியுமாகக் கழிகிறது. இசை மிகச் சொற்பம். (விண்வெளியில் ஓசை கேட்காது என்பதால் பாத்திரங்களின் முகக் கவசத்திற்குள் இசை ஒலிப்பதாகக் கருதவேண்டும்)




படத்தின் இறுதியில் இரண்டு/ மூன்று நிமிடங்கள் மட்டுமே முழு உடலைக்காண்பிக்கும் சான்ராபுல்லக் படத்தின் பெரும்பகுதி கவசத்திற்குள் முகத்தையும் சிறிய அளவில் விண்கலத்திற்குள் சாதாரண உடையில் மிதக்கிறார். இதற்காக ஆறுமாதம் நடிப்புப் பயிற்சி எடுத்தாராம்.

50களின் தொடக்கத்திலிருக்கும் அல்போன்சோ குவாரான் (Alfonso Cuarón) எனும் மெக்ஸிக்க இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஹாரிபோட்டர் உட்பட சில படங்களையே இயக்கியிருப்பவர்.  ஜோனஸ் குவாரான் (Jonás) என்பவரோடு இணைந்து இந்தத் திரைக்கதையை எழுதியுளார். இருவரும் தந்தையும் புதல்வரும் என்பது கூடுதல் விசித்திரம்.

Alfonso Cuarón

இந்தப்  படத்தை 3டியில் மட்டுமே பாருங்கள். ஐ மாக்ஸ் 3டியில் பார்ப்பவர்கள் பாக்யவான்கள். 2013ஆம் ஆண்டின் தலைசிறந்த படம்.   

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

மஞ்ஞாடிக்குரு (Manjadikuru): அதிர்ஷ்டக்கார சிவப்பு விதைகள்





தெரிவுசெய்யப்படும் விதைகளைவிட உதாசீனம் செய்யப்படும் குறையுள்ள விதைகளே மண்ணில் விழுந்து புதைந்து செடியாய் முளைத்து எழும். அவைகளே அதிர்ஷ்டக்கார விதைகள் என்பதே இப்படத்தின் ஊடிழை.

 

உள்ளூரில் சினிமா கற்றுக்கொண்ட இளைர்கள் ஒருவகையான வீரிய இன (hybrid) திரைக்கதைகளை உலவவிட்டுக் கலக்கிக் கொண்டிருக்கையில் லண்டன் திரைப்படக் கல்லூரியில் படித்த அஞ்சலி மேனன் கேரளத்தின் ஆன்மாவை தொட்டுவிடும் அருமையான அலட்டலில்லாத ஒரு திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார். இயக்குநர் குறிப்பிடுவதுபோல் இப்படம்வேர்களைத் நோக்கித் திரும்புகிற ஒரு பயணம்தான்

ஒரு புகைப்படத்தால் தூண்டப்பட்டு இந்தத் திரைக்கதையை எழுதியதாகக் கூறும் அஞ்சலி..இரண்டாம் தலைமுறையாக வெளிநாட்டில் வாழும் ஒரு இந்தியர்/ மளையாளி.

 ஒரு மரணச் சடங்கில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வழக்கமான அவலச்சுவை வழிந்தோடும் ஒரு சூழலில் மகிழ்ச்சியான முகபாவங்களோடு நின்றிருந்த சிறுவர்குழாமின் முரண்பட்ட இருப்பே இந்த்த் திரைக்கதைக்கான உந்துதலாக அமைந்தாம். ஒரு பெரிய குடும்பத்தின் இறப்புச் சடங்கிற்காக ஒன்று கூடும் உறவினரிடையே இழப்பின் துயரத்தைச் சுமந்து நிற்கும் பெரியவர்களிடையே, எதிர்பாராமல் ஒன்று சேரும் சிறுவர்கள் புதிதாகக் கிடைத்த நட்பின் மகிழ்ச்சியில் திளைக்கும் எதிரும் புதிருமான உணர்வுகளின் ஊடே விரியும் எளிமையான கதை.


அந்நிய மண்ணில் வாழ நேர்ந்துவிடும் ஒருவனுக்கு வேறுபட்ட பல இடங்கள் இருந்தாலும் எதையுமே சொந்தம் கொண்டாட முடியாத இயலாமை மேலோங்கும்போது தன் பூர்வீக மண்ணின் வேர்களைத் தேடி ஓட வேண்டியவனாகிறான். என்னுடைய நாயகனான விக்கியும் அதைத்தான் செய்கிறான் என்கிறார். 
 
இந்தத் திரைக்கதையை எழுதும் போதுதான் மளையாளத்தைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்ட அஜ்சலி, ஆங்கிலத்தில் சிந்தித்து மளையாளத்தில் எழுதுவது பெரும் அவஸ்த்தையாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

ஒரு பெரிய குடும்பத்தின் தலைவர் இறந்துவிடுகிறார். மத்திய கிழக்கிலிருந்து புருஷன் மற்றும் கதை நாயகனா சிறுவன் விக்கியுடன் வரும் மகள் ஒருத்தி. லண்டனிலிருந்து நிறைமாத கர்ப்பிணியாய் இன்னொரு மகள். டெல்லியில் அரசு உயரதிகாரியான புருஷன் மற்றும் ஐ..எஸ்., தேர்வுக்குத் தயாராவது கெட்டுவிட்டதாக குறைபட்டுக்கொண்டிருக்கும் மகளோடு வந்திருக்கும் இன்னொரு மகள், உள்ளூரில் கஷ்ட ஜீவனம் செய்து கொண்டிருக்கும் கைக் குழந்தைக்குத் தாயான இன்னொரு மகள், தன் இருபதுகளில் நகஸலைட்டாக வீட்டைவிட்டு ஓடிப்போய் காவிவேட்டியோடு திரும்பி வந்து யாரிடமும் ஒட்ட முடியாமல் நிற்கும் மூத்தமகன். உள்ளூரில் தந்தையோடு இருந்து எல்லாச்சுமைகளையும் தான் சுமந்து தீர்த்ததான எரிச்சலில் கடனுக்கு வந்திருக்கும் உடன்பிறப்புக்களை சபித்தவாறு இருக்கும் இன்னொரு மகன். அவரவர் வாழ்வின் அவசரங்களுக்கிடையே உழன்று கொண்டிருக்கும் அவர்களை அங்கே இருத்தி வைத்திருப்பது 16ஆம் நாள் சடங்கு முடிந்தவுடன் வாசிக்கப்படவிருக்கும் தந்தையின் உயில். உயிலில் யாருக்கு என்ன? என்பது பற்றிய ஆர்வமே மேலோங்கியிருக்கும் அந்த 16 நாட்களும், துபாயிலிருந்து வந்திருக்கும் விக்கி எனும் சிறுவனின் நினைவலைகளாக விவரிக்கப்படுகிறது.


பொறாமையும் பாவனைகளும் நிரம்பிய பெரியவர்களின் உலகத்திலிந்து விலகி சிறுவனான விக்கி அவன் மாமாவின் குழந்தைகளுடன் கொள்ளும் புதிய நட்பும் அவர்களைவிட சற்றுப் பெரியவளான ரோஜா என்ற வேலைக்காரத் தமிழ் சிறுமியுடனான ஸ்நேகமும் அவனின் தற்காலிக உலகங்களாகின்றன. கறுப்பி என்றும் தமிழச்சி என்றும் அழுக்கானவள் என்றும் விளிக்கப்படும் ரோஜாவை அவளின் துயரங்களிலிருந்து விடுவித்துவிட முடியுமென்று நம்பும் விக்கி அவளை ஊருக்கு அனுப்பிவிட முயன்று, கன்றிப்போன காயங்களுடனும் கண்ணீருடனும் ரோஜா திரும்பவும் அங்கேயே கொண்டுவந்து விடப்படுவதை பார்த்தபடியே துபாய்க்குக் கிளம்ப வேண்டியதாகிறது.


ஒரே சொத்தான அந்த பிரம்மாண்டமான வீட்டை பாட்டியின்  ஜீவபரியந்தம் அவரின் பெயருக்கு எழுதிவிடும் தாத்தாவின் உயில் எல்லோரையும் அவசரமாக ஊருக்கு அனுப்பிவிடுகிறது. தாத்தாவின் மறைவுக்கப்புறம் 20 வருடங்கள் உயிர்வாழ்ந்த பாட்டியைப் பராமரித்துவந்த ரோஜாவை பாட்டியுடன் புகைப்படமெடுக்கும் இருபதுகளில் இருக்கும் இளைனான விக்கியின் குரலிலேயே மொத்தக் கதையும் விவரிக்கப் படுகிறது.


படத்தில் தாத்தாவாக வரும் திலகன் பிணமாகவும் பின் புகைப்படமாகவும் இரண்டொரு ஷாட்களில் மட்டுமே தென்படுபவராகவும் மட்டுமே வருகிறார். வளர்ந்த ரோஜாவாக வரும் பத்மப்ரியா கடைசி ஷாட்டில் பாட்டியின் தோளை கட்டிக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பவராக மட்டுமே வருகிறார். பெரிய வேடிக்கை, நாயகனான பிரிதிவிராஜின் குரலிலேயே மொத்தக் கதையும் சொல்லப்பட்டாலும் கடைசிக் காட்சியிலே சில நிமிடங்களே வந்து போகிறார் அவர்.இது மளையாளத்தில் மட்டுமே சாத்தியம் என்று நினைக்கிறேன்.

கதை கூறுவதற்காக எந்தப் புதிய உத்திகளையும் பரிசோதிக்காமல் நேர்கோட்டில் இயல்பாய் விவரிக்கப்படும் இப்படத்தின் இயக்குநர் எதிர்காலத்தில் மிகவும் காத்திறமான படைப்புகளை இந்திய சினிமாவிற்குக் கொடுப்பார் என்று நம்ப இடமிருக்கிறது. தொழில்நுட்ப விசயங்களிலும் ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு இசை போன்றவற்றிலும் தென்படும் முதிர்ச்சி இந்திய இயக்குநர்களிடையே அரிதான ஒன்று. குறிப்பாக நவீன சத்தங்களின், கருவிகளின் ஒத்தாசையில்லாமல் இந்தியக் கருவிகளைக் கொண்டே அற்புதமான பின்னனி இசையை வடிவமைத்திருக்கிறார்.

ஞ்சலி மேனன்
இவர்தான் உஸ்தாத் ஓட்டல்படத்தின் திரைக்கதையாசிரியர். இரண்டு படங்களிலும் தமிழர்களைப் பெருமைப்படுத்தியிருப்பது தற்செயல்தானா என்று தெரியவில்லை. உஸ்தாத் ஓட்டலில் நாயகனை அவன் தாத்தா வாழ்வின் அர்த்தத்தை நீ அறிந்துகொள்ள வேண்டுமானால் மதுரைக்குப் போய் என் நண்பரிடம் இந்தப்பணத்தைக் கொடுத்துவிட்டுவாஎன்று அனுப்பி வைப்பார். மதுரையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்து அந்தப் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். (அஜ்சலி மேன்னுக்குத் தெரிந்தது மதுரைக்கார அரிவாள் இயக்குநர்களுக்குப் பொருட்டாகத் தெரியாத்தில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதான்) இந்தப் படத்திலும் பழி சுமத்தப்படும் வேலைக்காரத் தமிழ்ச் சிறுமி ரோஜாதான் பாட்டியின் தள்ளாத வயதில் கூட இருப்பவள். சிறுமி அருமையாக நடித்திருந்தாள்.
 
கேரள அரசின் விருதுகள் உட்பட பல சர்வதேச விருதுகளை வென்ற ‘ஞ்ஞாடிக்குரு’ வேர்களை அரிக்கத் தொடங்கியிருக்கும் நவீன வாழ்க்கையின் ஒரு துளி.  

வியாழன், 17 அக்டோபர், 2013

எ டேஜ்சரஸ் மெத்தட் (A Dangerous Method): மனமெனும் புதிர்வெளி...




1993இல் ஜான் கெர் (John Kerr) எனும் எழுத்தாளர் யுங், ஃப்ராய்ட் மற்றும் யுங்கிடம் சிகிச்சைக்கு வந்தவரான சபீனா (Sabina Spielrein) எனும் இளம்பெண் ஆகியோரைப் பற்றிய வரலாற்றுச் சம்பவங்களை கொண்ட நூல் ஒன்றை எழுதினார். அந்நூலை அடியொற்றி 2002 இல் மேடையேற்றப்பட்ட The Talking Cureஎனும் நாடகத்தைத் தழுவி உருவாக்கப்பட்ட திரைக்கதையே இப்படம். நாடகத்தையும் திரைக்கதையையும் எழுதியவர் கிறிஸ்டோபர் ஹாம்ப்டன் (Christopher Hampton).

2011இல் வெளியான ஜெர்மன் கனடா கூட்டுத்தயாரிப்பான இப்படம் சைக்கோ அனாலிஸிசின் (Psychoanalysis) தோற்றுநரான சிக்மன்ட் ஃப்ராய்ட், அனலிடிகல் சைக்காலஜியை( Analytical Pschycology) உருவாக்கிய கார்ல் யுங் அவரின் நோயாளித் தோழியான சபீனா ஆகிய மூவருக்குமிடையேயான சம்பவங்களைக் கொண்ட கதையாகும். ஆனால் யுங் – சபீனா இடையேயான காட்சிகளே பிரதானமானவை.


ஹிஸ்டீரியா எனும் மனநோயினால் பாதிக்கப்பட்ட சபீனா இளம் மனநல மருத்துவரான யுங்கிடம் சிகிச்சைக்காக அழைத்துவரப்படுகிறார். வார்த்தைகளுக்கிடையிலான தொடர்புகளைக் சொல்லச் செய்வதன் மூலமாகவும் கனவுகளை விளக்கப்படுத்துவதன் மூலமாகவும் சபீனாவின் நோயின் மூலத்தைக் கண்டறிய முற்படுகிறார் யுங்.

நிஜத்திலோ கற்பனையிலோ ஒரு  குழந்தைக்கு ஏற்படும் பாலியல் அனுபவங்களே எல்லா மன நோய்களுக்குமாக மூலகாரணம் எனும் ப்ராய்டின் அணுகுமுறையின் படி தொடர் சிகிச்சையின் மூலம் சபீனாவின் குழந்தைப்பருவத்தை அலசுகிறார் யுங். கண்டிப்பான சபீனாவின் தந்தை சபீனாவின் சிறுவயதில் அவளை தண்டிக்க முற்படும் போதெல்லாம் அவளை நிர்வாணமாக நிறுத்துகிறார். சபீனாவின் தாயோ தன் கணவனுக்கு உண்மையில்லாதவளாக இருக்கிறாள் என்பதையெல்லாம் சபீனாவிடமிருந்து அறிந்துகொள்ளும் யுங் அவளின் சராசரிக்குக் கூடுதலான புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்படுகிறார். நோயாளியுடன் உடல்தொடர்பு கூடாது எனும் பழைய அறத்தை மீறுகிறார். நாளடைவில் அந்த மருத்துவமனையில் யுங்கிற்கும் இன்னொரு  ,மருத்துவருக்கும் உதவியாளர் போலாகிறார் சபீனா. உளவியல் மருத்துவம் பயிலத்தொடங்கும் சபீனாவின் ஆய்வுக்கட்டுரைக்கு (thesis) உதவுகிறார். சுயமான மகத்தான படைப்பாக்கங்கள் பெரும் முரண்களிலிருந்தே மகிழ்க்கின்றன என்ற அவரின் கருதுகோள்கள்  எதிர்பாலின ஈர்ப்பு, மரபான நம்பிக்கைகளைத் தகர்ப்பதான உள்ளுணர்வின்பாற்பட்டது என்பதாக நீள்கிறது.













உளவியலின் சிடுக்கான கோட்பாடுகளைப் பரிச்சயம் உடையவர்களுக்கு இப்படம் பெரும் விருந்தாய் அமையக்கூடும். மற்றபடி நேர்த்தியான தொழில்நுட்பங்களோடு அற்புதமான நடிகர்களின் பங்களிப்பால் குறிப்பாக சபீனாவாக நடித்திருக்கும் கெய்ரா கிறிஸ்டினா நைட்லியால் ( Keira Christina Knightley)  இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே ப்ரைட் அன்ட் பிரிஜுடிஸ் (Pride & Prejudice) பைரேட்ஸ் ஆஃப் கரிபியன்  (Pirates of the Caribbean) மூன்று பாகங்களிலும் நடித்திருக்கும் கெய்ரா, ஹிஸ்டீரியாவின் உச்சத்தில் வெளிப்படுத்தும் நடிப்பு ஒரு மைல்கல். யுங்காக நடித்திருக்கும் மிக்கேல் ஃபாஸ்பென்டரும் (Michael FassBender) ஃப்ராய்டாக நடித்திருக்கும் விக்கோ மார்ட்டென்சனும் (Viggo Mortenswn) ஏற்கனவே பிரபலமான நடிகர்கள். பின்னனி இசையும் சிறப்பானது.







என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.