ஞாயிறு, 17 நவம்பர், 2013

சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்: எரிந்த பெருங்கனவு





ஊகங்களும், மிகைப்படுத்தல்களும், அரசியல் சாய்வுகளும் நிரம்பிய கதைகளும் தகவல்களுமாய் ஈழத்தின் இறுதிப் போர் தமிழகத்தின் உரையாடல்களில் நீர்த்துப் போய் நெடுநாட்களாகிவிட்டது. ஆனால் ஈழக்கனவைச் சுமந்து திரிந்த உண்மையான இனஉணர்வாளர்கள் மற்றுமான சாமான்ய தமிழர்களின் பெரும்குழப்பத்தை தீர்க்கும்விதமானது இந்நூல்.

ஈழப் போரின் இறுதிநாட்களைப் பற்றிய உண்மையான சித்திரத்தை வெளிக்கொண்டுவரும் இந்நூல் பி.பி.சி. செய்தியாளரான ஃபிரான்சிஸ் ஹாரிசன் எனும் பெண்மணியால் எழுதப்பட்டுள்ளது. எழுதப்பட்டுள்ளது என்பதைவிட தொகுக்கப்பட்டுள்ளது என்பதே பொருத்தமானது. நூலாசிரியரான ஹாரிசனின் ஆவணப்படுத்தியுள்ள இந்நூல் ஈழப்போரின் இறுதிநாட்களைப் பற்றிய மிக முக்கியமான ஆவணம். இறுதிப் போர்முடிந்து போதுமான கால அவகாசத்தின் பின் போரின் நேரடி சாட்சியங்களாக இருந்த ஊடகவியலாளர், தமிழீழ விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர், புலிகளின் பகுதியில் இயங்கிய மருத்துவ மனையில் பணியாற்றிய மருத்துவர், மருத்துவ மனையில் சேவை புரிந்த  இலங்கையின் கத்தோலிக்கத் திருச்சபையின் கன்னிகாஸ்திரி, ஆசிரியையும் முன்னாள் போராளியின் மனைவியுமான பெண்மணி, போராளி ஒருவரின் விதவைத்தாய், போர்முனையில் பணியாற்றிய தன்னார்வத் தொண்டர், இறுதி நொடிவரை போரில் பங்கு பெற்றிருந்த போராளி, புலிகள் பகுதியில் வியாபாரம் செய்த கடைக்காரர், போராளிக் குடும்பத்திற்கு மருமகளாகச் சென்ற பெண் என பத்து பேரின் சாட்சியங்களைத் தொகுத்துரைப்பதாக இந்நூல் அமைந்துள்ளது

  இந்த சாட்சியங்கள் அனைவரும் இலங்கையிலிருந்து வெளியேறி மேற்குநாடுகளின் நகரங்களில் தஞ்சம் புகுந்து, அமைதியான வாழ்க்கையை வாழ முயற்சித்து நாளும் போர்க்கால நினைவுகளால் துரத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்கள். போரிலிருந்து மீண்டு எல்லாவற்றையும் நிதானமாக அசைபோடும் இடத்தை வந்தடைந்தவர்கள்.
40களில் இருந்த அந்த மருத்துவரின் அனுபவங்களும் சேவையும் ஒரு காவியம். நூலாசிரியர் சொல்வதைக் கேட்கலாம்அவரோடிருந்த மருத்துவர்கள், நர்சுகள் ஆகியோர் குறைந்தது 20,000 பேரையாவது காப்பாற்றியிருக்கிறார்கள் என்று கணக்கிடுகிறார்.  இருப்பினும் போரின் கடைசி நாளின்போது ஒரு மரத்தின் கீழ் தான் கைவிட்டுவந்த 150 நோயாளிகளைப்பற்றியே இன்னும் கவலைப்படுகிறார். அவருடைய சாரத்தை இழுத்துப் பிடித்த கைகளையும் தங்களைக் காப்பாற்றும்படி கெஞ்சிய குரல்களையும் விட்டு, தாறுமாறாகப் பறக்கும் தோட்டாக்களிலிருந்து தப்பித்து இலங்கை ராணுவத்திடம் சரணடைய ஓடியதை மறக்க நினைக்கிறார்.

இப்போதும் இலங்கை ராணுவத்தால் தேடப்படுகிறவராக இருக்கிறார். “நான் இலங்கையைவிட்டு வெளியேறியபின்பு அவர்கள் என்னைத் தேடினார்கள். ஆனால அது மிகப் பிந்திவிட்டது. முதலில் புலித்தலைவர்களைத் தேடினார்கள். அடுத்ததாக சாட்சிகளாக நாங்கள் முக்கியமானவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். (பக்.113)

கடைசியில் மக்களோடு சரணடைய வேண்டிய கட்டமும் வந்தது
அவ்விடத்தில் சோதனைக்காகப் பொதுமக்கள் வரிசையாக நிற்க வேண்டியிருந்த்து.மருத்துவர் நிரோனின் (கற்பனையான பெயர்) மருத்துவ உதவியாளன் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டுவிட்டான். மூன்று வருடங்களாக நூறாயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்த அந்த உதவியாளன் எந்தத் தடயமுமின்றி காணாமல் போய்விட்டான். விசுவாசத்துடன் உதவிய ஒருவனையே தன்னால் காப்பாற்ற முடியவில்லை என்ற கவலை புலம்பெயர்ந்த மருத்துவர் நிரோனை இன்னும் வதைக்கிறது…’

அடுத்து நடந்த விசயங்கள் எல்லாம் மங்கலானவையாகவே ஜாபகத்தில் இருந்தன. மருத்துவர் நிரோனுக்கு அவை துன்பமானவை. அவர் உடல் முழுவதும் கையைவிட்டுத் தேடினார்கள். அவர் முதுகில் சட்டையுடன் ஒட்டியிருந்த எரியுண்ட காயங்களை ராணுவத்தினன் தொட்டபோது வேதனையில் துடித்தார். அதன்பிறகு அவருக்கு நினைவில் இருந்தது தண்ணீர்த் தாகம் மட்டுமே. அவருடைய வாய் தவிப்பால் வறண்டுவிட்டது. புழுக்கத்தால் வியர்த்தொழுகும் மத்தியான வெயிலில் மயங்கி விழப்போகிறோம் என்று அவர் நினைத்தார். தமிழர் ஒருவர் கொண்டு சென்ற ஒரு கொள்கலன் தண்ணீரில் ஒரு சொட்டு நீர் தரும்படி கேட்டார்.

என்னை அவருக்குத் தெரியாது. அவர் எனக்குத் தரவில்லை. நான் இருபத்தாறு முறை என் நோயாளிகளுக்கு ரத்தம் தானம் செய்திருக்கிறேன் என்பதை அந்தத் தருணத்தில் நினைத்துக் கொண்டேன். இப்போது எனக்கு ஒரு சொட்டு நீர் கிடைக்கவில்லை. நான் யாரென்று அவருக்குச் சொல்லவில்லை. கொஞ்சம் தண்ணீர் தரும்படி அவரைக் கெஞ்சினேன். அவர் மறுத்துவிட்டார். (பக்.126-127)

ஒவ்வொருவரின் அனுபவங்களும் நம்மை உலுக்கிவிடக்கூடியவை. அதுபோலவே போரை ஆரம்பிக்கத் தெரிந்த புலிகளால் போரை நிறுத்தத் தெரியாமல் போன யதார்த்தமும் நமக்கு அச்சூழலை விளங்கிக் கொள்ள ஏதுவாகிறது.

அவர்களுக்கு யதார்த்தம் பற்றிய உணர்வே இருக்கவில்லை. அவர்கள் பேசவே முன்வரவில்லை. நாங்கள் திகைத்துப்போய் நின்றோம்,” என்றார் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட நார்வே தூதர்களில் ஒருவர். பிரபாகரனின் சொற்களஞ்சியத்தில் சரணடைதல் என்னும் சொல்லே இல்லாமல் இருக்கலாம். எதிர்காலச் சந்ததியினர் தமிழரின் பிரிவினைக் கொள்கையை உயிருடன் வைத்திருப்பதற்காகத் தன் தியாகத்தால் உறுதி செய்தார் என்றும், அதுவே அவர் அவர்களுக்கு அளித்த கொடையும் வசீகரமும்  என்றும் சிலர் நம்புகிறார்கள். அவர் அரசியல் ரீதியாகத் தனிமைப்பட்டுப்போனபோது சிலர் பிழையான ஆலோசனைகளும் பிழையான தகவல்களைக்கூட அளித்துள்ளார்கள் என்றும் சிலர் சொல்கின்றார்கள்.(பக்.102)

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்நூலை மொழி பெயர்த்திருப்பவர் என்.கே. மகாலிங்கம். ஏற்கனவே ‘சிதைவுகள்’ உள்ளிட்ட முக்கிய மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளவர். இந்நூலின் மொழிபெயர்ப்பு மிகவும் உயிரூட்டமானது. அதற்கு தற்போது கனடாவில் வசித்துவரும் மொழிபெயர்ப்பாளர் ‘மகாலிங்கம்’ ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

காலச்சுவடு வெளியீடாக 2012இல் வெளிவந்துள்ள இந்நூலின் அடுத்தபதிப்பு வந்துவிட்டதாகவும் கேள்வி.

திங்கள், 4 நவம்பர், 2013

கிராவிட்டி (GRAVITY) : இரண்டு பாத்திரங்கள் – நான்கு குரல்கள்… ஒரு விண்வெளிக் காவியம்


 

அறிவியல் புனைகதை மற்றும் விண்வெளியில் நடக்கும் கதைகளென்றாலே எனக்கு கொஞ்சம் ஒவ்வாமை உண்டு. அந்தத் தயக்கத்தோடே தியேட்டருக்குப் போனேன். பெங்களூர் பிவிஆர் ஐ மாக்ஸில் 600ரூபாய் கட்டணம் கொடுத்த போது ஒவ்வாமை இன்னும் அதிகமானது. படம் முடிந்தபோது 'நான் மட்டும் பழைய காலத்து ஊதாரி மன்னர்களுள் ஒருவனாக இருந்தால், சுஜாதா சொன்ன மாதிரி என் ராஜ்ஜியத்தில் பாதியை இயக்குநருக்கு கொடுக்கத் தயங்கமாட்டேன் என்று தோன்றியது.

இரண்டு பாத்திரங்களையும் நான்கு குரல்களையும் கொண்டு வெண்திரையில் எழுதப்பட்ட விண்வெளிக்காவியம் கிராவிட்டி.

 இது அறிவியல் புனைகதை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கற்பனையை கன்னாபின்னாவென்று ஓடவிட்டு நம்மைப்போல் எளிமையான ஜீவராசிகளின் கற்பனை வறட்சியை பறைசாற்றும் முயற்சிகள் இல்லை. பயணம் செல்லும் விண்வெளிக் கப்பலில் பழுது ஏற்படுகிறது. கப்பலில் செல்லும் நால்வரில் ஒருவர் ரயான் ஸ்டோன் (சான்ட்ரா புல்லக்) மருத்துவ பொறியாளர். அவருக்கு இது முதல் விண்வெளிப் பயணம். இன்னொருவர் மாட் க்வாஸ்கி (ஜார்ஜ் க்ளூனி) விண்ணியலாளர். விண்கலத்தின் கமாண்டர். இந்தப்பயணத்துடன் ஓய்வு பெறும் உற்சாகத்தில் இருப்பவர். ரஷ்ய விண்கலம் ஒன்று (ஹாலிவுட்டுக்கு இன்னும் வில்லன் ரஷ்யாதான்) பழுதான சாட்லைட் ஒன்றுடன் மோதியதன் தொடர் விளைவாக விண்வெளியின் விண்கலக் கழிவுகள் மோதக் கூடும் என்ற தகவலைத் தொடர்ந்து தொடர்புகள் அறுந்துபோக, விண்கலக் கழிவுகளால் கப்பல் பெருத்த சேதமடைகிறது. கப்பலிலிருந்த  மற்றும் இருவர் இறந்து விடுகிறார்கள். இப்போது ரயானும் க்வாஸ்கியும் பேரண்டப் பெருவெளியில் தனித்து விடப்படுகிறார்கள். ஒருவர் மட்டுமே தப்பமுடியும் என்ற சூழலில் க்வாஸ்கி ரயானிடம் விண்வெளியில் விடைபெற்று பேரண்டத்தில் கலந்துவிடுகிறார். ரயான் பூமிக்குத்திரும்பினாரா? என்பதுதான் மீதமுள்ள படம்.


3டி தொழில்நுட்பத்தின் மகத்துவத்தை இந்தப் படத்தில் உணரமுடிந்தது.  ஈர்ப்பு விசையற்ற வெளியில் மிதந்தலையும் உடல்கள், பொருட்களோடு நாமும் மிதந்தலையத் தொடங்குகிறோம். விண்வெளியிலிருந்து பூமியைப் பார்ப்பதும், செய்தித் தாள்களில் ஒரு பத்தியில் படித்த விண்கலங்களின் பிரம்மாண்டத்தையும் பேரண்டத்தில் மனிதன் செய்துகொண்டிருக்கும் பரிசோதனைகளின் வீச்சையும் முப்பரிமாணத்தில் திரையில் பார்ப்பது பரவசமான அனுபவம். அவதார் ‘கேமரூன்’ சொன்னமாதிரி ‘விண்வெளியில் கதை நிகழும் படங்களில் இது ஒரு மைல்கல்’ என்ற வார்த்தை மிகையானதல்ல.

படத்தின் இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம் ‘ஒலி வடிவமைப்பு’ (sound design). க்வாஸ்கி விண்வெளியில் உலாவிக்கொண்டே பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்களோடு பேசும் உரையாடலும் (பெரும்பாலும் புரியாவிட்டாலும்) வானொலியில் பாடல்கள் கேட்பதும் அற்புதம். விண்வெளியின் வேறுபட்ட சூழலில் பெரும் பகுதி அமைதியும் மிக அமைதியுமாகக் கழிகிறது. இசை மிகச் சொற்பம். (விண்வெளியில் ஓசை கேட்காது என்பதால் பாத்திரங்களின் முகக் கவசத்திற்குள் இசை ஒலிப்பதாகக் கருதவேண்டும்)




படத்தின் இறுதியில் இரண்டு/ மூன்று நிமிடங்கள் மட்டுமே முழு உடலைக்காண்பிக்கும் சான்ராபுல்லக் படத்தின் பெரும்பகுதி கவசத்திற்குள் முகத்தையும் சிறிய அளவில் விண்கலத்திற்குள் சாதாரண உடையில் மிதக்கிறார். இதற்காக ஆறுமாதம் நடிப்புப் பயிற்சி எடுத்தாராம்.

50களின் தொடக்கத்திலிருக்கும் அல்போன்சோ குவாரான் (Alfonso Cuarón) எனும் மெக்ஸிக்க இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஹாரிபோட்டர் உட்பட சில படங்களையே இயக்கியிருப்பவர்.  ஜோனஸ் குவாரான் (Jonás) என்பவரோடு இணைந்து இந்தத் திரைக்கதையை எழுதியுளார். இருவரும் தந்தையும் புதல்வரும் என்பது கூடுதல் விசித்திரம்.

Alfonso Cuarón

இந்தப்  படத்தை 3டியில் மட்டுமே பாருங்கள். ஐ மாக்ஸ் 3டியில் பார்ப்பவர்கள் பாக்யவான்கள். 2013ஆம் ஆண்டின் தலைசிறந்த படம்.   

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.