புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 மே, 2016

ஒரு கூர்வாளின் நிழலில்: நெஞ்சைப் பிளக்கும் ஆவணம்






தமிழினி எழுதிய தன்வரலாற்று நூலான ‘ ஒரு கூர்வாளின் நிழலில்’ தமிழீழ விடுதலை இயக்கத்தைப் பற்றிப் பேசும் நூல்களில் மிக முக்கியமானதாக அமைந்துவிட்டிருக்கிறது. தனது கல்வியைப் பாதியில் துறந்து, புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர் தமிழினி. இயக்கத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் தன்னை இணைத்துக்கொண்டு 18 ஆண்டுகள் தன் இளமையின் உச்சத்தை போராட்டக்களத்தில் கழித்த ஒருவரின் வாக்குமூலமே இந்நூல். புலிகள் அமைப்பின் மையத்தை நோக்கிய  அதிகாரக் குவிப்பும், உரையாடலுக்கு இடமில்லாத ராணுவக் கட்டமைப்பும், காலத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்காத தலைமையின் முடிவுகளும் ஈழக்கனவை முள்ளிவாய்க்காலில் மூழ்கடித்த வரலாற்று சோகத்தைத் தன் நேரடி அனுபவங்களினூடாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். நூல் நெடுகிலும் இந்தியத் தழிழர்களை அரித்துக்கொண்டிருந்த ஈழப்போராட்டம் பற்றிய எண்ணற்ற கேள்விகளுக்கான பதில்கள் சிதறிக்கிடக்கின்றன. இதயத்தை நிறுத்திவிடும், நெகிழ்த்திவிடும் தருணங்கள் நூல் நெடுகிலும்… எல்லாவற்றையும் விட தன் பதின் வயதில் போராட்ட இயக்கத்தில் இணைந்து, 18 ஆண்டுகளுக்குப் பின் தன் கனவுகளும் லட்சியங்களும் நிர்மூலமான நிலையில், சிறைச்சாலைகளிலும் புனர் வாழ்வு மையங்களிலும் 4 வருடங்களைக் தொலைத்து, 2013 இல் வெளிஉலத்திற்கு வந்து திருமணம் முடித்து ஓராண்டுக்குள் புற்று நோய்ப் பாதிப்பினால் 2014 இல் மரணமடைந்த தமிழினியின் வாழ்வும் மறைவும் எழுப்பும் கேள்விகளுக்கு என்ன பதில் இருக்க முடியும். போராட்ட காலத்தில் மரணத்தை பல முறை அருகாமையில் சந்தித்தவர். தான் உயிர்தப்பிய சந்தர்ப்பங்களைத் ‘தற்செயலாகவே’ குறிப்பிடும் தமிழினிக்கு இயல்பான வாழ்க்கை வாய்க்காமலே போனதன் தர்க்கத்தை எப்படிப் புரிந்து கொள்வது? இந்த வரலாற்று ஆவணத்தைக் கடத்தி விட்டுச் செல்லத்தான் எல்லா இடர்களிலிருந்தும் அவர் உயிர்பிழைத்து வந்தாரோ என்னவோ? மிக நேர்மையாக, அடங்கிய தொனியில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்நூல் கடந்த பத்தாண்டுகளில் தமிழில் வெளிவந்துள்ள புனைவற்ற எழுத்துக்களில் முதன்மையானது என்று தயங்காமல் சொல்வேன். (காலச்சுவடு வெளியீடு – 2016 பிப்ரவரி – 255 பக்கங்கள் )   

திங்கள், 9 ஜூன், 2014

பேசாதவர் பேசினால்... மணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல்






மணிரத்னம் பொதுவாக அதிகம் பேசாதவர். தன் படங்களைப் பற்றி விரிவாக எங்கும் பேசியதில்லை. அவரைப் பற்றிய பல்வேறுவிதமான விமர்சனங்களுக்கு இடமுண்டு என்றாலும் 1980களில் இந்திய சினிமாவின் முகத்தை மாற்றியவர் என்பது நிஜம். சினிமா பற்றிய, அவரின் படங்கள் பற்றிய முழுமையான உரையாடலாக வெளிவந்திருக்கும் நூல் இது. இந்நூல் மணிரத்னம் பற்றிய எதிர்மறையான அபிப்ராயங்களை மாற்றுகிறது என்றே சொல்லவேண்டும்.

இந்நூல் முழுமையும் பத்திரிக்கையாளர் பரத்வாஜ் ரங்கன் மணிரத்னத்துடன் பல்வேறு அமர்வுகளில் உரையாடியவைகளைத் தொகுத்துள்ளார். மணி அவர் படைப்புகளைப் பற்றி மிக நேர்மையாகத் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது முக்கியமானது. குறிப்பாக உரையாடுபவர், சில காட்சிகளைப் பற்றிய கூடுதல் அர்த்தங்களைச் சுமத்த முனையும்போது, ஆமாம் என்று ஒற்றைவார்த்தையில்  அதைத் தன் மேதாவித்தனமாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ளாதவராக இருப்பது அவரின் ஆளுமைக்கு ஒரு சான்று. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் சுருக்கமாக 'நான் அப்படி நினைத்து அந்தக்காட்சியை எடுக்கவில்லை. அது சாதாரணமானதுதான்' என்று மறுத்துவிடுகிறார்.
 அவருடைய ஒவ்வொரு படக்கதைகளும் உருவான விதம், படப்பிடிப்பு அனுபவங்கள், படங்களின் வெற்றி தோல்வி பற்றிய அவரின் பார்வை ஆகியன இளம் இயக்குநர்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.  தன் பட உருவாக்கத்தில் எழுத்தாளர்களைக் இணைத்துக் கொண்ட அனுபவங்கள், குறிப்பாக சுஜாதா, ஜெயமோகன் ஆகியோரோடு வேலைசெய்தமை பற்றியும் விரிவாகப் பேசியிருக்கிறார். இளையராஜா, ரஹ்மான் பற்றிய அவரின் கணிப்புகள், பணியாற்றிய போதான அபூர்வமான தருணங்களையும் பதிவு செய்துள்ளார். பாடல்களை கதை கூறலின் பகுதியாக மாற்றியவர் மணிரத்னம் என்ற வகையில் பாடல்களின் தேவை, உருவாக்க முறைகளைப் பற்றியதான பதிவுகள் சுவையானவை.

இந்த நூலில் விடுபட்ட அம்சம் என்பது மணிரத்னத்தின் படங்களைப் பற்றிய இன்னொரு தரப்பினரின் பார்வைவையை உரையாடியவர் விவாதத்திற்குள்ளாக்காததே. காரணம் பரத்வாஜ் ரங்கன் மணிரத்னத்தின் தீவிர விசிறியாகமட்டுமே தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். விசிறியாக இருந்ததனால் மட்டுமே அவரை அணுக முடிந்ததோ எண்ணவோ? ஆனாலும் இத்தகைய உரையாடல்கள் தமிழ்ச்சூழலுக்கு மிக அவசியமானவை.
  
 நம் இயக்குநர்கள் திரைக்கதைகளைப் புத்தகங்களாக வெளியிடுவதை விடுத்து தங்கள் பட உருவாக்க அனுபவங்களை நேர்மையாகப் பதிவு செய்வது எதிர்கால இயக்குநர்களுக்கு உரமாக அமையும். குறிப்பாக பாரதிராஜா, பாலச்சந்தர் போன்றவர்களும் இத்தகைய பதிவுகளைச் செய்யவேண்டும்.

மணிரத்னத்தின் எல்லாப் படங்களையும் உன்னிப்பாகப் பார்த்து மிகுந்த காலத்தைச் செலவழித்து இந்த உரையாடலை நிகழ்த்திய பத்திரிக்கையாளர் பரத்வாஜ் ரங்கன் உண்மையிலேயே பாராட்டுக்குறியவர்.  அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூலைத் தமிழில் அரவிந்த் சச்சிதானந்தம் சரளமாக மொழிபெயர்த்திருக்கிறார். தமிழில் கிழக்கு வெளியீடாக வெளிந்திருக்கிறது.

திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான வரவு.



ஞாயிறு, 17 நவம்பர், 2013

சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்: எரிந்த பெருங்கனவு





ஊகங்களும், மிகைப்படுத்தல்களும், அரசியல் சாய்வுகளும் நிரம்பிய கதைகளும் தகவல்களுமாய் ஈழத்தின் இறுதிப் போர் தமிழகத்தின் உரையாடல்களில் நீர்த்துப் போய் நெடுநாட்களாகிவிட்டது. ஆனால் ஈழக்கனவைச் சுமந்து திரிந்த உண்மையான இனஉணர்வாளர்கள் மற்றுமான சாமான்ய தமிழர்களின் பெரும்குழப்பத்தை தீர்க்கும்விதமானது இந்நூல்.

ஈழப் போரின் இறுதிநாட்களைப் பற்றிய உண்மையான சித்திரத்தை வெளிக்கொண்டுவரும் இந்நூல் பி.பி.சி. செய்தியாளரான ஃபிரான்சிஸ் ஹாரிசன் எனும் பெண்மணியால் எழுதப்பட்டுள்ளது. எழுதப்பட்டுள்ளது என்பதைவிட தொகுக்கப்பட்டுள்ளது என்பதே பொருத்தமானது. நூலாசிரியரான ஹாரிசனின் ஆவணப்படுத்தியுள்ள இந்நூல் ஈழப்போரின் இறுதிநாட்களைப் பற்றிய மிக முக்கியமான ஆவணம். இறுதிப் போர்முடிந்து போதுமான கால அவகாசத்தின் பின் போரின் நேரடி சாட்சியங்களாக இருந்த ஊடகவியலாளர், தமிழீழ விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர், புலிகளின் பகுதியில் இயங்கிய மருத்துவ மனையில் பணியாற்றிய மருத்துவர், மருத்துவ மனையில் சேவை புரிந்த  இலங்கையின் கத்தோலிக்கத் திருச்சபையின் கன்னிகாஸ்திரி, ஆசிரியையும் முன்னாள் போராளியின் மனைவியுமான பெண்மணி, போராளி ஒருவரின் விதவைத்தாய், போர்முனையில் பணியாற்றிய தன்னார்வத் தொண்டர், இறுதி நொடிவரை போரில் பங்கு பெற்றிருந்த போராளி, புலிகள் பகுதியில் வியாபாரம் செய்த கடைக்காரர், போராளிக் குடும்பத்திற்கு மருமகளாகச் சென்ற பெண் என பத்து பேரின் சாட்சியங்களைத் தொகுத்துரைப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. 

  இந்த சாட்சியங்கள் அனைவரும் இலங்கையிலிருந்து வெளியேறி மேற்குநாடுகளின் நகரங்களில் தஞ்சம் புகுந்து, அமைதியான வாழ்க்கையை வாழ முயற்சித்து நாளும் போர்க்கால நினைவுகளால் துரத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்கள். போரிலிருந்து மீண்டு எல்லாவற்றையும் நிதானமாக அசைபோடும் இடத்தை வந்தடைந்தவர்கள்.
40களில் இருந்த அந்த மருத்துவரின் அனுபவங்களும் சேவையும் ஒரு காவியம். நூலாசிரியர் சொல்வதைக் கேட்கலாம் “ அவரோடிருந்த மருத்துவர்கள், நர்சுகள் ஆகியோர் குறைந்தது 20,000 பேரையாவது காப்பாற்றியிருக்கிறார்கள் என்று கணக்கிடுகிறார்.  இருப்பினும் போரின் கடைசி நாளின்போது ஒரு மரத்தின் கீழ் தான் கைவிட்டுவந்த 150 நோயாளிகளைப்பற்றியே இன்னும் கவலைப்படுகிறார். அவருடைய சாரத்தை இழுத்துப் பிடித்த கைகளையும் தங்களைக் காப்பாற்றும்படி கெஞ்சிய குரல்களையும் விட்டு, தாறுமாறாகப் பறக்கும் தோட்டாக்களிலிருந்து தப்பித்து இலங்கை ராணுவத்திடம் சரணடைய ஓடியதை மறக்க நினைக்கிறார்.

இப்போதும் இலங்கை ராணுவத்தால் தேடப்படுகிறவராக இருக்கிறார். “நான் இலங்கையைவிட்டு வெளியேறியபின்பு அவர்கள் என்னைத் தேடினார்கள். ஆனால அது மிகப் பிந்திவிட்டது. முதலில் புலித்தலைவர்களைத் தேடினார்கள். அடுத்ததாக சாட்சிகளாக நாங்கள் முக்கியமானவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். (பக்.113)

கடைசியில் மக்களோடு சரணடைய வேண்டிய கட்டமும் வந்தது…
“அவ்விடத்தில் சோதனைக்காகப் பொதுமக்கள் வரிசையாக நிற்க வேண்டியிருந்த்து.மருத்துவர் நிரோனின் (கற்பனையான பெயர்) மருத்துவ உதவியாளன் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டுவிட்டான். மூன்று வருடங்களாக நூறாயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்த அந்த உதவியாளன் எந்தத் தடயமுமின்றி காணாமல் போய்விட்டான். விசுவாசத்துடன் உதவிய ஒருவனையே தன்னால் காப்பாற்ற முடியவில்லை என்ற கவலை புலம்பெயர்ந்த மருத்துவர் நிரோனை இன்னும் வதைக்கிறது…’

அடுத்து நடந்த விசயங்கள் எல்லாம் மங்கலானவையாகவே ஜாபகத்தில் இருந்தன. மருத்துவர் நிரோனுக்கு அவை துன்பமானவை. அவர் உடல் முழுவதும் கையைவிட்டுத் தேடினார்கள். அவர் முதுகில் சட்டையுடன் ஒட்டியிருந்த எரியுண்ட காயங்களை ராணுவத்தினன் தொட்டபோது வேதனையில் துடித்தார். அதன்பிறகு அவருக்கு நினைவில் இருந்தது தண்ணீர்த் தாகம் மட்டுமே. அவருடைய வாய் தவிப்பால் வறண்டுவிட்டது. புழுக்கத்தால் வியர்த்தொழுகும் மத்தியான வெயிலில் மயங்கி விழப்போகிறோம் என்று அவர் நினைத்தார். தமிழர் ஒருவர் கொண்டு சென்ற ஒரு கொள்கலன் தண்ணீரில் ஒரு சொட்டு நீர் தரும்படி கேட்டார்.

என்னை அவருக்குத் தெரியாது. அவர் எனக்குத் தரவில்லை. நான் இருபத்தாறு முறை என் நோயாளிகளுக்கு ரத்தம் தானம் செய்திருக்கிறேன் என்பதை அந்தத் தருணத்தில் நினைத்துக் கொண்டேன். இப்போது எனக்கு ஒரு சொட்டு நீர் கிடைக்கவில்லை. நான் யாரென்று அவருக்குச் சொல்லவில்லை. கொஞ்சம் தண்ணீர் தரும்படி அவரைக் கெஞ்சினேன். அவர் மறுத்துவிட்டார். (பக்.126-127)

ஒவ்வொருவரின் அனுபவங்களும் நம்மை உலுக்கிவிடக்கூடியவை. அதுபோலவே போரை ஆரம்பிக்கத் தெரிந்த புலிகளால் போரை நிறுத்தத் தெரியாமல் போன யதார்த்தமும் நமக்கு அச்சூழலை விளங்கிக் கொள்ள ஏதுவாகிறது.

“அவர்களுக்கு யதார்த்தம் பற்றிய உணர்வே இருக்கவில்லை. அவர்கள் பேசவே முன்வரவில்லை. நாங்கள் திகைத்துப்போய் நின்றோம்,” என்றார் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட நார்வே தூதர்களில் ஒருவர். பிரபாகரனின் சொற்களஞ்சியத்தில் சரணடைதல் என்னும் சொல்லே இல்லாமல் இருக்கலாம். எதிர்காலச் சந்ததியினர் தமிழரின் பிரிவினைக் கொள்கையை உயிருடன் வைத்திருப்பதற்காகத் தன் தியாகத்தால் உறுதி செய்தார் என்றும், அதுவே அவர் அவர்களுக்கு அளித்த கொடையும் வசீகரமும்  என்றும் சிலர் நம்புகிறார்கள். அவர் அரசியல் ரீதியாகத் தனிமைப்பட்டுப்போனபோது சிலர் பிழையான ஆலோசனைகளும் பிழையான தகவல்களைக்கூட அளித்துள்ளார்கள் என்றும் சிலர் சொல்கின்றார்கள்.(பக்.102)

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்நூலை மொழி பெயர்த்திருப்பவர் என்.கே. மகாலிங்கம். ஏற்கனவே ‘சிதைவுகள்’ உள்ளிட்ட முக்கிய மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளவர். இந்நூலின் மொழிபெயர்ப்பு மிகவும் உயிரூட்டமானது. அதற்கு தற்போது கனடாவில் வசித்துவரும் மொழிபெயர்ப்பாளர் ‘மகாலிங்கம்’ ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

காலச்சுவடு வெளியீடாக 2012இல் வெளிவந்துள்ள இந்நூலின் அடுத்தபதிப்பு வந்துவிட்டதாகவும் கேள்வி.

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.