புதன், 19 ஜூன், 2013

மிச்சம் மீதி: பழக்கமிஷன் தாத்தாவும் பால்டிமோர் பேரனும்




சமீபத்தில் வாசிக்கக் கிடைத்த சுவாரஸ்யமான புத்தகம் மிச்சம் மீதி. பர்மாவில் தந்தையுடன் இளம் பருவத்தை கடைவியாபாரத்தில் கழித்து, இரண்டாம் உலகயுத்தத்தினால் சொந்த ஊருக்கு விரட்டப்பட்ட சூழலில் கையில் ஒரு டிரங்குப்  பெட்டியுடன் தமயனாருடன் பர்மாவைவிட்டுப் புறப்பட்டாகவேண்டிய சூழல். 110மைல் நீளக் கால்நடைப் பயணம் உட்பட 1700கிலோ மீட்டர் தூரத்தை மாட்டுவண்டி, ரயில், படகு என்று சகல வழிகளிலும் பயணப்பட்டு சொந்த ஊர்வந்த கதை தமிழில் மிக அரிதானது.

தற்போது தன் முதுமைக்காலத்தை மதுரையில் கழித்துவரும் எம்.பி.மாரியப்பன்  எல்லாவற்றையும் இழந்தவராய் பர்மாவிலிருந்து வந்து பழக்கமிசன் யாவாரியாய் தலையெடுத்தபின் கல்விபெற்ற அவரின் வாரிசுகள் முதல்தலைமுறைப் படிப்பாளிகளாய் மருத்துவர்களாகவும் பொறியலாளர்களாகவும் ஏற்றம் பெற்றதைத்தொடர்ந்து மூன்றாவது தலைமுறையைச் சார்ந்த ஆனந்த் பாண்டியன் அமெரிக்காவில் கல்வி பெற்று பால்டிமோர் நகரத்தில் வசிக்கும் மானிடவியல் பேராசிரியர்.

மாநிடவியல் படித்ததாலோ என்னமோ அவருக்கு, ஒரு அசாதாரணமான காலச்சூழலில் வாழ நேர்ந்த தன் தாத்தாவின் வாழ்க்கையின் தற்செயல்கள் நிரம்பிய நாடகப்பாங்கான திருப்பங்களுடைய கதையோடு தானும் பிணைக்கப்பட்டிருப்பதன் விசித்திரம் அவரை ஈர்த்திருக்கவேண்டும். 1942ல் நான்கு லட்சம் பேர் அகதிகளாக வெளியேற நிர்பந்திக்கப்பட்டதையும் வழியில் ஐம்பதாயிரம் வரையிலானவர்கள் பசியில், தாகத்தில், பிணியில் இறந்திருந்தார்கள் என்பதையும் இணைத்துப் பார்க்கும் ஆனந்த்பாண்டியன் இந்த வரலாற்றைப் பதிவு செய்யவேண்டியதன் தேவையை உணர்ந்திருக்கிறார்..

ஒரு எளிய மனிதரின் பார்வையில், அவருடைய வாய்வார்த்தைகளிலேயே பதிவுசெய்யப்பட்டிருக்கும் இந்நூல், மிகவும்  கொந்தளிப்புமிக்க ஒரு வரலாற்றுக்கால கட்டத்தின் நிகழ்வுகள், வாழ்க்கை முறைகள், மனோபாவங்கள் உள்ளடுக்குகளாக விரவிக்கிடக்கும் இந்நூல் தமிழில் ஒரு முக்கியமான வரவு.    

தனது 90களில் வசிக்கும் இக்கதையின் நாயகர் எம்.பி.மாரியப்பனுக்கு மானிடவியல் படித்த பேரன் கிடைத்த்து ஒரு குடுப்பினைதான். இல்லாவிட்டால் இந்தப்பதிவு கூட இல்லாமல் போயிருக்கும். இதை வாசித்து முடித்தபோது எத்தனையோ எளிய மனிதர்களின் அசாதாரணமான வாழ்வனுபவங்கள் பதிவுசெய்யப்படாமல் காற்றில் கரைந்து விடுவதைப் பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

(காலச்சுவடு வெளியிட்டிருக்கும் ‘மிச்சம் மீதி ஓர் அனுபவக்கணக்கு எனும் இந்நூல் 2012ல் வெளிவந்துள்ளது)  

1 கருத்து:

  1. இதை படித்து மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஆர்வமுள்ள வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி. ஆனந்த் பாண்டியன்.

    பதிலளிநீக்கு

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.