புதன், 19 ஜூன், 2013

மிச்சம் மீதி: பழக்கமிஷன் தாத்தாவும் பால்டிமோர் பேரனும்




சமீபத்தில் வாசிக்கக் கிடைத்த சுவாரஸ்யமான புத்தகம் மிச்சம் மீதி. பர்மாவில் தந்தையுடன் இளம் பருவத்தை கடைவியாபாரத்தில் கழித்து, இரண்டாம் உலகயுத்தத்தினால் சொந்த ஊருக்கு விரட்டப்பட்ட சூழலில் கையில் ஒரு டிரங்குப்  பெட்டியுடன் தமயனாருடன் பர்மாவைவிட்டுப் புறப்பட்டாகவேண்டிய சூழல். 110மைல் நீளக் கால்நடைப் பயணம் உட்பட 1700கிலோ மீட்டர் தூரத்தை மாட்டுவண்டி, ரயில், படகு என்று சகல வழிகளிலும் பயணப்பட்டு சொந்த ஊர்வந்த கதை தமிழில் மிக அரிதானது.

தற்போது தன் முதுமைக்காலத்தை மதுரையில் கழித்துவரும் எம்.பி.மாரியப்பன்  எல்லாவற்றையும் இழந்தவராய் பர்மாவிலிருந்து வந்து பழக்கமிசன் யாவாரியாய் தலையெடுத்தபின் கல்விபெற்ற அவரின் வாரிசுகள் முதல்தலைமுறைப் படிப்பாளிகளாய் மருத்துவர்களாகவும் பொறியலாளர்களாகவும் ஏற்றம் பெற்றதைத்தொடர்ந்து மூன்றாவது தலைமுறையைச் சார்ந்த ஆனந்த் பாண்டியன் அமெரிக்காவில் கல்வி பெற்று பால்டிமோர் நகரத்தில் வசிக்கும் மானிடவியல் பேராசிரியர்.

மாநிடவியல் படித்ததாலோ என்னமோ அவருக்கு, ஒரு அசாதாரணமான காலச்சூழலில் வாழ நேர்ந்த தன் தாத்தாவின் வாழ்க்கையின் தற்செயல்கள் நிரம்பிய நாடகப்பாங்கான திருப்பங்களுடைய கதையோடு தானும் பிணைக்கப்பட்டிருப்பதன் விசித்திரம் அவரை ஈர்த்திருக்கவேண்டும். 1942ல் நான்கு லட்சம் பேர் அகதிகளாக வெளியேற நிர்பந்திக்கப்பட்டதையும் வழியில் ஐம்பதாயிரம் வரையிலானவர்கள் பசியில், தாகத்தில், பிணியில் இறந்திருந்தார்கள் என்பதையும் இணைத்துப் பார்க்கும் ஆனந்த்பாண்டியன் இந்த வரலாற்றைப் பதிவு செய்யவேண்டியதன் தேவையை உணர்ந்திருக்கிறார்..

ஒரு எளிய மனிதரின் பார்வையில், அவருடைய வாய்வார்த்தைகளிலேயே பதிவுசெய்யப்பட்டிருக்கும் இந்நூல், மிகவும்  கொந்தளிப்புமிக்க ஒரு வரலாற்றுக்கால கட்டத்தின் நிகழ்வுகள், வாழ்க்கை முறைகள், மனோபாவங்கள் உள்ளடுக்குகளாக விரவிக்கிடக்கும் இந்நூல் தமிழில் ஒரு முக்கியமான வரவு.    

தனது 90களில் வசிக்கும் இக்கதையின் நாயகர் எம்.பி.மாரியப்பனுக்கு மானிடவியல் படித்த பேரன் கிடைத்த்து ஒரு குடுப்பினைதான். இல்லாவிட்டால் இந்தப்பதிவு கூட இல்லாமல் போயிருக்கும். இதை வாசித்து முடித்தபோது எத்தனையோ எளிய மனிதர்களின் அசாதாரணமான வாழ்வனுபவங்கள் பதிவுசெய்யப்படாமல் காற்றில் கரைந்து விடுவதைப் பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

(காலச்சுவடு வெளியிட்டிருக்கும் ‘மிச்சம் மீதி ஓர் அனுபவக்கணக்கு எனும் இந்நூல் 2012ல் வெளிவந்துள்ளது)  

ஞாயிறு, 2 ஜூன், 2013

ஓநாய்ப் பையன்களும் சிறீ சாந்தும் ரன்பீர் கபூர்களும் – தமிழ்ச் சினிமாவைச் சூது கவ்விய கதை.






     1970களில் பாரதிராஜா தமிழ்ச் சினிமாவின் இரும்புக் கதவுகளை உடைத்துத் திறந்தார் என்பதாக திரைப்பட கட்டுரையாளர்கள் வர்ணிப்பது வழக்கம். அப்படி சுத்தியலோடு வந்துதான் இயக்குநராக வேண்டிய அவசியம் இன்றைக்கு இல்லை. உடைக்கவும் வேண்டாமல் திறக்கவும் செய்யாமல் இறகு மாதிரி காற்றில் மிதந்து தமிழ்ச் சினிமாக் கோட்டைக்குள் நுழைந்துவிடுகிற சூட்சுமம் கைவரப் பெற்றிருக்கிறார்கள் இன்றைய இளைர்கள்.

      ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து ஐந்திலிருந்து பத்து ஆண்டுகள் அவரிடம் தொழில்(?) கற்றுக்கொண்டு ஒரு  தயாரிப்பாளரையோ/ ஹீரோவையோ சில ஆண்டுகள் விரட்டி படம் இயக்குவதென்பது எல்லாவற்றையும் துறந்துவிட்டு சினிமாவுக்குத் தாலி கட்டிக் கொண்டதாகவே பொருள்படும். நம் உதவி இயக்குநர்கள் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதாலேயே அவர்கள் தங்கள் அனுபவங்களை எழுத முயல்வதில்லை. அப்படி எழுதுவார்களேயானால் அது நடிகைகளின் சுயசரிதைகளை விட சுவாரஸ்யமானதாக இருக்கும் என்பது நிச்சயம். ‘சூட்டிங் ஸ்பாட்ல எங்க டைரக்டர் குடுக்கிற டார்ச்சர்ல… எத்தனையோதரம்.. டாய்லட்ல கதவ மூடிக்கிட்டு அழுதுருக்கேன்’ என்றார் ஒரு உதவி இயக்குன நண்பர். ‘நாங்க சரக்கடிப்போம்னு தெரிஞ்சும் எங்கள முன்னால ஒக்கார வச்சுக்கிட்டு மிட் நைட்டு வரைக்கும் தண்ணியடிப்பாருங்க எங்க ஆளு’ என்பது இன்னுமிருவரின் புலம்பல். தனக்கு ஒரு ஆபீஸ் பாய் வேணுமென்று கேட்ட சக இயக்குநரிடம் ஒரு இயக்குநர் சொல்கிறார்… ‘புதுசா ஒருத்தன அசிஸ்ட்டென்ட் டைரக்டரா சேத்துக்கோ… அபீஸ்பாய் தனியா எதுக்கு?’ என்று. ஊரிலிருந்து இயக்குநராகும் சபதத்தோடு கிளம்பிவந்து எட்டு ஆண்டுகளாக இன்னும் தாய் தந்தையரைப் பார்க்கக்கூட ஊருக்கு இவர் சென்றதில்லை என்று ஒருவரைக் குறிப்பிட்டார் நண்பரொருவர். தன்னுடைய உள்ளாடைகளைத் துவைக்கச் சொன்னதால் அந்த பிரபல இயக்குநரிடமிருந்து வந்துவிட்டதாகச் சொன்னவர் இப்போது ஒரு பிரபல இயக்குநர். அவராவது உள்ளாடைகளை லான்டரிக்குப் போடுகிறாரா? என்பதை விசாரித்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை. இத்தகைய நவீன குருகுலங்களிலிருந்து ஒரு இயக்குநர் வெளிவர பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இன்றைய தகவல் தொழில்நுட்பப் புரட்சி பதினைந்து வருடங்களைப் பதினைந்து மாதங்களாகச் சுருக்கியிருக்கிறது.




       வழக்கமாக வெளிவரும் படங்களின் பெரிய பட்டியலில் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், சூது கவ்வும் ஆகியபடங்கள் பெற்றிருக்கும் வெற்றி தமிழ்சினிமாவின் அடுத்த நகர்வைச் சாத்தியமாக்கியிருக்கிறது. இதில் மிக முக்கியமான அம்சம் இந்த இயக்குநர்கள் யாரிடமும் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்தவர்களல்ல என்பதுதான். ஓநாய்கள் வளர்த்த குழந்தை, ஓநாயின் தன்மைகளைப் பெற்ற கதையைப் போன்று, சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளைர்கள், கோடம்பாக்கத்தில் குடியேறி இயக்குநராவதற்குள் அதன் பாரம்பரிய வழி முறைகளுக்குள் தங்கள் தனித்துவங்களைத் தொலைத்து தண்ணீரை நக்கிக் குடிக்கும் ஓநாய்ப் பையனாய் பரிணாமம் அடைந்து விடுவார்கள்.

   பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், சூது கவ்வும் உள்ளிட்ட படங்களின் இயக்குநர்கள் வழக்கமான வழிமுறைகளைப் புறக்கணித்தமையே அவர்களை முற்றிலும் மாறுபட்ட கதைக் களத்திற்குள் நகர்த்தியிருக்கிறது. இந்தியாவில் கற்றுக்கொள்வதில் ஒரே ஒரு முறைதான் புழக்கத்தில் இருக்கிறது. அது கேட்பது. கற்றலில் கேட்டலே நன்று அல்லவா? கேள்விகள் கூடக் கேட்காமல் ஆசிரியரிடம் பாடம் கேட்கும் பரம்பரையைச் சார்ந்தவர்கள் அல்லவா நாம். ஆகையால் சினிமாவிலும் இயக்குநரிடம் பார்த்தும் கேட்டும் கற்றுக்கொள்ளக் கடமைப் பட்டவர்களே நம் உதவி இயக்குநர்கள். அதனால் பத்துஆண்டுகள் கழித்து உதவி இயக்குநராக இருந்த ஒருவர் தன் கைப்பட எவற்றையெல்லாம் செய்து பார்த்திருப்பார் என்று சொல்வதற்கில்லை. கன்டினியூட்டி பார்ப்பது, ஃபீல்டு கிளியர் பண்ணுவது (பெரும்பாலும் ஆட்கள், ஆடு மாடுகள் இன்ன பிற ஜீவராசிகள் ப்ரேமுக்குள் வந்துவிடாமல் பார்த்துக் கொள்வது ) என்பதாக பெரும்பாலோர் பணி முடிந்துவிடும். ‘Learning by doing’ என்ற ஒன்றை முயற்சித்துப் பார்க்கும் வாய்ப்புப் பெற்றவர்கள் அல்ல நம் பழைய பரம்பரை உதவி இயக்குநர்கள். அப்படிச் செய்து பார்ப்பதற்கும் பல இலட்சங்கள் தேவைப்படும் சூழல். ஆனால் தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பம், பதினைந்தாயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்ச ரூபாய்க்குள் குறும்படங்களை எடுத்துப் பார்க்கும் வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. அத்தகைய வாய்ப்புப்  பெற்றவர்களில் சில சமர்த்தர்கள் சினிமா என்ற தொழில் நுட்பத்தை விளங்கிக் கொள்ளும் திறன் பெற்றவர்களாகி வருகிறார்கள். இவர்களுக்குத் தேவை ஐந்திலிருந்து பத்தாண்டுகளல்ல. சிலமாதங்களே.

 
 

      அந்தவகையில் சூதுகவ்வும் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது. தமிழில் யாரும் பரிட்சித்துப் பார்த்திராத வகைமை என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் வடிவ ரீதியான புதிய முயற்சிகள் நடைபெறாத வரையில் அது முன்னகர்வது சாத்தியமாகாது என்ற வகையில் 'சூது கவ்வும்' அரிதான முயற்சி. சூது கவ்வும் 'பின் நவீனத் தன்மைகள்' அதிகம் கொண்ட படம். இயக்குநர் மிகவும் திட்டமிட்டு இதைச்செய்தார் என்று சொல்வதற்கில்லைதான். ஆனால் அவர் சமகால பெருநகரப் பண்பாட்டின் அபத்தங்களை, தற்செயல்களை, முரண்களை பகடியும் எள்ளலும் நிறைந்த மொழியில் சொல்ல முயன்று சாதித்திருக்கிறார். வேலைக்குப் போவதன் அவசியத்தைப் பற்றிய எந்தக் குற்ற உணர்வும் இல்லாத, நயண்தாராவுக்குக் கோயில்கட்டும் இளைன் - காலையில் எழுந்து அவசரமாகக் குளித்து உடைமாற்றி அறையில் அமர்ந்து சரக்கடிப்பவன் - மனதில் அவன் காதலியைக் கண்டு சதா அவளோடு பேசிக்கொண்டிருப்பவன், மனப்பிறழ்வின் சாயலுடன் ஆட்களைக்கடத்தி பணம் பறிப்பதைக் கார்ப்பரேட் நேர்த்தியுடன் அணுகுபவன் - தறுதலையாக தன்னையே கடத்திப் பணம் பண்ண முயலும் அரசியல்வாதியின் மகன் - கட்சித்தலைவரே விரும்பாத அளவுக்கு நேர்மையாக இருந்து அரசியலிலிருந்து துத்தப்படும் அரசியல்வாதி தன்னைக் காதலிக்க மறுப்பவனை, தன்னை கொலை செய்ய முயற்சித்தவனாகச் சொல்லி அவனை வேலையை விட்டுத் துரத்தும் மென்பொருள் இளம் பெண் – இவர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை  அல்லது கதை போன்ற வஸ்து என்று சொல்லலாம். இப்படத்தை ஒரு காமடிப் படமாக எளிமைப் படுத்திவிட முடியாது.

      வேலை எதும் பாக்கலயா? எனக் கேட்கிறார். எதுக்கு பாஸ். அதுக்குள்ள என்ன அவசரம்? என்கிறார் நயந்தாராவுக்குக் கோயில் கட்டியவர்.
லட்சணமாக மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்த ஒருவன் வேலை போனபின் வெகு விரைவில் கடத்தல் கூட்டத்துடன் தன்னை இணைத்துக் கொள்கிறான்…
மனக்கண்ணில் காட்சிகளைக் கண்டு கொள்ளும் ஒருவன், திடீர் அரசியல் வாதியான ஒருவனுடன் நண்பர்கள் செட்டில் ஆகிவிட, அவன் தன் பழைய கடத்தல் தொழிலை அதே ஆர்வத்துடன் தொடர்கிறான். அவனுக்கு பணம் பொருட்டல்ல. அவனைச் செலுத்துவது எது என்பது பார்வையாளர்களின் ஊகத்திற்கு விடப்படுகிறது.
தன் கட்சியில் இருக்கும் ஒரே நேர்மையாளரான அமைச்சரை தூக்கி எறிந்து அந்த அமைச்சரின் தறுதலை மகனிடம் பேரம் பேசுகிறார் முதலமைச்சர். வருசத்துக்கு மூணு கோடி கொடுப்பதாக இருந்தால் தேர்தலில் உனக்கு சீட் தருகிறேன் என்கிறார். மகனும் பேரத்தை ஏற்றுக் கொள்கிறான். நேர்மையாளரான தந்தை முன்டா பனியனுடன் வீட்டில் ஈ ஓட்டுகிறார்.


 
 

     இலக்கும் இலட்சியமுமற்ற இளைர்கள், பொதுவாழ்வில் நேர்மை தகுதிக்குறைவாக மதிக்கப்படும் அவலம், தன் மகனைக் கடத்தியவனிடமே தொழில் பேரம் பேசும் தந்தை, கத்தையான கரன்சிகளால் ஆளப்படும் உலகம். தத்துவங்களையும் தர்க்கங்களையும் தகர்த்துவிடும் பணம், தற்காலிக வெற்றி – தற்போதைய தமிழகத்தை/ இந்தியாவை இதைவிட சிறப்பாகச் சித்தரித்துவிட முடியுமா என்ன?
எந்தப் பாத்திரத்தின் பின்புலங்களும் சொல்லப்படவில்லை. அவர்களின் தற்போதைய செயல்பாடுகளுக்கான காரணங்கள் தர்க்க ரீதியாக அலசப்படுவதில்லை. பெருநகர வாழ்க்கை தனிப்பட்ட நபர்களின் சுயங்களை நசுக்கி ஒரு ‘பொது மனநிலைக்குள்/ பண்பாட்டுக்குள் தள்ளிவிடுவதால், காட்சிகள், பாத்திரங்களின் செயல்பாடுகள், காட்சியமைப்புகள் துண்டிக்கப்பட்டவையாக, தொடர்ச்சி வேண்டாதவையாக அமைந்துவிடுகின்றன.

       பலகோடிகள் சம்பாதித்துக் கொண்டிருக்கும் சிறீ சாந்தைச் சூது கவ்வியதைப் பற்றிய நியாயங்கள் ஏதும் புரிகிறதா? பல கோடிகள் சம்பளம் வாங்கும் ரன்பீர்கபீர் விமானநிலையத்தில் வரிக்கட்டாமல் திருட்டுத்தனமாய் செல்ல முயன்றபோது பிடிபட்டார். அவர் கட்ட வேண்டியிருந்த தொகை வெறும் அறுபதாயிரம். எப்படிப்பட்ட ஹீரோக்களோடு வாழ்கிறோம் நாம்? இந்தக்கால கட்ட்த்தின் பொது உளவியலை வெளிப்படுத்தும் பின்நவீன வடிவம்தான் ‘சூதுகவ்வும்.

      குறும்பட இயக்குநர்களில் தொழில் நுட்ப ரீதியான தெளிவும் தான் செய்ய விரும்பியதை திருப்தியாகச் செய்துவிடுகிறவராகவும் இருக்கிறார் நலன் குமாரசாமி. உரையாடல்கள், நடிகர் தேர்வு, இசை ஆகினவற்றை மிக நேர்த்தியாகக் கையாள அவரால் முடிகிறது. மேலோட்டமாக எள்ளலும் நையான்டியும் விரவிக்கிடந்தாலும் தன் திரைப்பட வடிவத்தையே உள்ளடக்கமாக மாற்றியிருக்கும் நலன் குமாரசாமி ஒரு முக்கியமான வரவு.

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.