புதன், 22 ஆகஸ்ட், 2012

ஷட்டர் ஐலான்ட் ( Shutter Island): அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்


இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் 1945 ஏப்ரல் 29ல் ஜெர்மனியில் நாஜி வதைமுகாம்  ஒன்றை அமெரிக்கப்படை கைப்பற்றியபோது, நாற்பது மேற்புறம் திறந்த  ரயில்பெட்டிகளில்  அழுகிய நிலையில் மனித  உடல்கள் குவிந்துகிடந்தன. முகாமுக்குள்ளும் நிர்வாணமாக்கப்பட்ட எண்ணற்ற  உடல்கள் தரையிலிருந்து மேற்கூரைவரைக்கும்  கிடத்தப்பட்டிருந்தன.  அங்கே நுழைந்த  அமெரிக்க ராணுவமும் சரணடைந்த நாஜிகளைக் கணக்கில்லாமல் கொன்றுகுவித்தது.  இது Dachau என்ற  இடத்தில் நடந்ததால்  Dachau massacre  என்று அழைக்கப்படுகிறது.

 1880களின்  இறுதியில்  நரம்பியல் மருத்துவத்தில் சிலகுறிப்பிட்ட மனநோய்களுக்காக பரிசோதிக்கப்பட்ட  மூளை அறுவைச்சிகிச்சை முறை லொபாட்டமி(lobotamy) என்று அழைக்கப்பட்டது. மண்டையோட்டில் துளையிட்டு மூளைத்திசுக்களை  அழித்து மாற்றும் கொடூரமானமுறை அது. மனநோயாளிகளுக்கான சிகிச்சையாக  ஆரம்பிக்கப்பட்டு, சில நாடுகளில் மனதைக் கட்டுப்படுத்தும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும், ஒருவனை அவனுடைய நினைவுகளிலிருந்து முற்றிலும்  அப்புறப்படுத்தி, புதிய நினைவுகளைப் பதியமிடும் நோக்கங்களுக்கான ஆராய்ச்சியாக மாற்றம் பெற்றது. இத்தகைய ரகசிய  ஆராய்ச்சிகள்  மனிதநாகரீகத்திற்கு  அப்பாற்பட்டவையாகக் கருதப்பட்டு 1940களில் சோவியத்  உட்பட பலநாடுகள் இதைத் தடைசெய்தன.

 
மேற்கண்ட  இரண்டுவிசயங்களையும்  புனைவால்  இணைக்கும்மொரு  கதைதான் ஷட்டர்  ஐலான்ட். 2010ல் வெளியான ‘ஷட்டர்  ஐலாண்ட் பார்த்தே ஆகவேண்டிய படங்களின் வரிசையில்  எளிதாக  இடம்பிடிக்கக் கூடியது. உண்மைச் சம்பவங்களையும் புனைவையும் கலந்து திரைக்கதையாக்கும்  சாமர்த்தியசாலியான மார்ட்டின் ஸ்கார்சிஸ்ஸின்  இன்னொரு திரைக்காவியம்.
அமெரிக்காவின் பாஸ்டன்  துறைமுகத்திற்கு  அருகாமையில் உள்ள ஷட்டர்  ஐலான்டில் குற்றச்செயல்கள் புரிந்த மனநோயாளிகளுக்கான மனநோய்மருத்துவமனை இயங்கிவருகிறது. அங்கு காணாமல் போகும்    
ரு  பெண் நோயாளியைப் பற்றிய விசாரணைக்காக மார்ஷல்  எட்வர்டு டெடி டேனியலும் (நடிகர் டி காப்ரியோ) சக் அலெ (Chuck Aule) என்பவரும் ஷட்டர் ஐலான்டிற்கு வருகிறார்கள். ராணுவக்கட்டுப்பாட்டுடன்  இயங்கும்  அம்மருத்துவமனையில்  அவர்கள் தொடங்கும் விசாரணை  அவர்களை எங்கெல்லாமோ  இழுத்துக்கொண்டு போகிறது.
 
தலைமை மருத்துவரும்(பென் கிங்ஸ்லி), ஊழியர்களும்  ஒரேகுரலில் பேசுகிறார்கள். நோயாளிகள்  மட்டும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், நீ ஓடிவிடு. உன்னால்  இந்த  இடத்தைவிட்டுத்  தப்ப முடியாது என்று எச்சரித்தவண்ணம்  இருக்கிறார்கள்.  சிகிச்சையின்  உச்சகட்டமாக  நோயாளிகள்  மலையடிவாரத்தில்  இருக்கும்  லைட் ஹவுஸுக்கு  அனுப்பப்படுகிறார்கள். அங்கேதான் சைக்கோ சர்ஜரி எனப்படும் அறுவைச்சிகிச்சை செய்யப்படுகிறது.
தீவிற்கு வந்ததில் இருந்து எட்வர்டுக்கு  ஒற்றைத் தலைவலியும், தூக்கத்தில் கனவுகளும் துரத்துகின்றன. தீவில் சிகிச்சையைவிட ஆபத்தான ஆராய்ச்சிகள்  நடப்பதை எட்வர்டு  உறுதிசெய்யும் போது,  எட்வர்டே ஒரு நோயாளியாக்கப் படுகிறான். அவன் கண்டறிந்தவைகலெல்லாம்  அவன் கற்பனைகளாக  மாற்றப்படுகின்றன.  அவன்  வாயாலேயே  அவன்  மருத்துவர்கள் விரும்பும் பதில்களைச்  சொல்கிறான்.  இறுதிக்காட்சியில்  அவனைதன் சகாவிடம் ‘எது மோசமானது? ஒரு மிருகமாக வாழ்வதா? சிறந்த மனிதனாக வாழ்வதா?,( What would be worse? To live as a monster, or die as a good man?) என்று கூறியவாறு  எழுந்து சிகிச்சைக்காக அழைத்துப் போகவந்திருக்கும் பணியாளர்களோடு எழுந்துபோகிறான். திரை  இருண்டு  இசை  எழும்போது விவரிக்கமுடியாத உணர்வுகள்  நம் மனதை  அழுத்துகின்றன.
(இடையில்  கதையின் முக்கியச் சம்பவங்களை வேண்டுமென்றே  கூறாது விடுத்திருக்கிறேன்.)





அருமையான உரையாடல்களும் நேர்த்தியான நடிகர்களும் படத்தை சிகரங்களுக்கு நகர்த்துகிறார்கள். குறிப்பாக டி கேப்ரியாவின்  மிகச்சிறந்த  நடிப்பிற்கான  சூழலைத் திரைக்கதை  உருவாக்குகிறது. படத்தின் கதைக்களம் (location) ஒரு கதையின் காட்சி அனுபவத்தை  எப்படி மேம்படுத்த முடியும் என்பதற்கு  இப்படம்மொரு   உதாரணம். கடலிலிருந்து காட்டப்படும் தீவின் தூரக்காட்சிகளும் பாசிபடர்ந்த பழங்கால கட்டிடங்களும், சுவர்களும்,  எப்போதும் மழையும்  ஈரமும் காற்றுமாய்  புதிரின்  உறைந்த வடிவமான  தீவின் பசும் நிலப்பரப்பும், ஒளிப்பதிவாளர், கலை  இயக்குநரின் பொருத்தமான பங்களிப்பை வெளிப்படுத்துகின்றன.

 

20க்கும் மேற்பட்ட முழுநீளத்திரைப்படங்களை இயக்கியிருக்கும் மார்ட்டின் ஸ்கார்சிஸ்ஸுக்கு வயது 70தைத் தாண்டிவிட்டதாம். முதுமையின் அனுபவமும், புத்தம் புதிய திரைக்கலையின்  உத்திகளும்  இயைந்து மிளிரும்  இவர் படங்களில் இதுவும்  ஒன்று. இந்தப்படத்தின்  இசையைப் பற்றித்தனியாகக் குறிப்பிடவேண்டும். இப்படத்திற்குத் தனியாக  இசையமைப்பாளர்  யாரும்  இல்லை. பல்வேறு  இசையமைப்பாளர்களின் தேர்ந்தெடுத்த இசைக்கோர்வைகளைப் பயன் படுத்தியுள்ளார். ஜான் கேஜ்(John Cage) உட்பட தற்கால செவ்வியல்  இசையமைப்பாளர்களின்(Contemporary Classical Composers) கோர்வைகளை பெரும்பாலும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியுள்ளமை மிக  அருமை.
2003ல் Dennis Lehane எழுதி வெளிவந்த நாவல்தான் ஷட்டர்  ஐலன்ட். திரைக்கதையிலும்  இவரின் பங்களிப்பு  உண்டு.  2மணி 18 நிமிடங்கள் நீளமான இப்படம்  உங்களை அசையவிடாமல்  இருத்திவைக்கும்.

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.