ஞாயிறு, 5 ஜனவரி, 2014

The Secret life of Walter Mitty: மிட்டி என்ற பகல் கனவுக்காரன்1939 இல் இதே தலைப்பில்  ஜேம்ஸ் துர்பர் (James Thurber) எழுதிய சிறுகதையைத் தழுவிய படம்தான் இது. 1947இல் இக்கதை திரைப்படமாக மாற்றப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக இப்போது 2013இல்.  
1883 இல் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட லைப் (Life) இதழ் பின்னாளில் புகைப்பட இதழியல் (Photo Journalism) வகையில் குறிப்பிடத்தக்க இதழாக விளங்கியது. 2009இல் மூடப்பட்டு இணைய இதழாக மாற்றம் பெற்றது. அச்சில் வரப்போகிற அதன் கடைசி இதழுக்கான வேலைகள் நடைபெறும்போது படத்தின் கதை தொடங்குகிறது. அந்த அலுவலகத்தின் புகைப்படப்பிரிவில் பொறுப்பாளராக இருக்கும் வால்டர் மிட்டி ஒரு பகல் கனவுப் பேர்வழி. அவ்வப்போது கனவுலகில் நாயகனாக சாகசங்களில் ஈடுபடும் சாமான்யன். அவர் பொறுப்பில் கடைசி இதழுக்கான புகைப்பட நெகட்டிவ் தொகுப்பில் 25 எண்ணுள்ளது  மட்டும் காணாமல் போயிருக்கிறது.  அதை அனுப்பிய புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் ஸான் ஓ கானல் ஒரு வித்யாசமான நபர். தொலைபேசி வைத்துக் கொள்ளாத தன் இருப்பை யாருக்கும் தெரிவிக்காத நபர். மற்ற நெகட்டிவ்களிலிருந்து அவரின் இருப்பைத் தெரிந்து கொள்ள முயலும் வால்ட்டர் மிட்டி, வேலை போய்விடும் சூழலில் ஸானைத் தேடி ஐஸ்லான்டுக்கும் கீரீன் லான்டுக்கும் ஆப்கானிஸ்தானை ஒட்டிய இமய மலைக்கும் பயணமாகிறார். வழியில் அவரின் பகல்கனவுகள் அவரோடு சேர்ந்து கொள்ள நமக்கு ஒரு சுவாரஸ்யமான சினிமா கிடைக்கிறது.


ஒரு சாதாரண கதையை சுவாரஸ்யமான எளிமையான திருப்பங்களோடு திரைக்கதையாக்கியுள்ள விதம் சிறப்பானது.
ஐஸ்லாந்து கிரீன்லாந்து சுற்றி இமயமலையில் கேமராவிற்குப் பின்னால் ஒரு பனிச்சிறுத்தைக்காகக் காத்திருக்கும் புகைப்படக்கலைஞர் ஓ கானலைச் சந்திக்கிறார் மிட்டி. வா... வந்து பார்... என்று வியூ பைன்டரைக் காட்டுகிறார். மிட்டி பார்க்கிறான். கானல் தேடிக்காத்திருந்த பனிச்சிறுத்தை. புகைப்படமாக்கு என்கிறான் மிட்டி. சில நேரங்களில் நான் அப்படித்தான். காமராவின் சத்தம் சிறுத்தைக்குத் தொந்தரவாக மாறக்கூடுமல்லவா... என்று கூறிவிட்டு கீழே உதைபந்தாட்டம் விளையாடும் இளைஞர்களோடு சேர்ந்து கொள்கிறான். மிட்டியும் அவர்களோடு இணைந்து கொள்கிறான்.


லைப் பத்திரிக்கையின் கார்ப்பரேட் இயந்திரத்தனமான வாழ்க்கைமுறை... வேலை .. இலக்கு... இல்லையேல் துரத்தியடித்தல்... என்ற வாழ்க்கைமுறைக்கு முற்றிலும் மாறான புகைப்படக்கலைஞனின் இலக்கற்ற திட்டமில்லாத பயணங்களால் ஆன வாழ்க்கைமுறை. இரண்டுக்குமிடையில் மிட்டி, மூச்சுத்திணறும் வாழ்க்கைக்குள் தன்னைத்தானே பகல்கனவுகளுக்குள் ஆழ்த்திக் கொள்வதன் மூலமாக வாழ்வை அர்த்தப் படுத்திக் கொள்ளும் யத்தனம் என்பதாக இப்படத்தை வாசிக்க இயலும்.

அற்புதமான காட்சிப்பின்புலங்களும், பென் ஸ்டில்லர் (Ben Stiller)   போன்ற அருமையான நடிகர்களும், (ஸான் பென் (Sean Penn), புகைப்படக் கலைஞராக சில நிமிடங்களே தோன்றுகிறார்) இப்படத்தை ஒரு அருமையான காட்சி அனுபவமாக்குகின்றன. (மதுரை நகரில் புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் ஐனாக்ஸ் திரையரங்கில் கச்சிதமான ஒலிஅமைப்புடன்  2014இல் நான் பார்த்த முதல் திரைப்படம். புத்தாண்டு நன்றாக ஆரம்பிப்பதான பிரமையை ஏற்படுத்துகிறது)


2 கருத்துகள்:

  1. பென் ஸ்டில்ல ரிடம் இருந்து சற்றும் எதிர்பாராத நேர்த்தியான படைப்பு ........
    ஆங்காங்கே ''ஸான் பென்''னின் IN TO THE WILDன் சாயல்கள் தெரிகிறது ,
    பின்னணி இசை , காட்சியமைப்பு , யதார்த்தமான கதாபாத்திரங்கள் என
    அத்தனையும் அருமை . 2014ஐ ரம்யமான படைப்புடன் துவக்கி வைத்ததற்காய் பென் ஸ்டில்லருக்கு மனமார்ந்த நன்றி .

    பதிலளிநீக்கு

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.