வியாழன், 16 ஜனவரி, 2014

த குட் ரோட் (The Good Road ): இன்னும் மீதமிருக்கும் நம்பிக்கை..




இந்தியாவின் 60 ஆவது தேசிய திரைப்பட விருதுப் பட்டியலில் 2013இன் சிறந்த குஜராத்திப் படமாகத் தேர்வுசெய்யப்பட்ட படம் த குட் ரோட்’.. இந்திய நெடுஞ்சாலைகளில் வாரக்கணக்காய் சரக்குலாரிகளைச் ஓட்டிச் செல்லும் லாரி ஓட்டுநர்கள். அவர்களின் உதவியாளர்களான கீளீனர்கள். அவர்களை நம்பி இயங்கும் சாலையோர உணவகங்கள். விடுதிகள். விபச்சாரத் தொழில்கள். இந்தப் பின்புலத்தில்  இரண்டு குழந்தைகளின் வீடுதிரும்பல். அல்லது பெற்றோரைத் தொலைத்த இரண்டு குழந்தைகள்.

டேவிட் - கிரண் இருவரும் மேல் நடுத்தரவர்க்க தம்பதிகள். 7வயது மகனான ஆதித்யாவுடன் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்குக் காரில் சென்று கொண்டிருக்கிறார்கள். வழியில் சாலையோரக்கடையில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்குகிறான் டேவிட். அப்போது மனைவி முன் சீட்டிலும் மகன் பின்னாலும் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். டேவிட் கடைக்குச் சென்ற சிறிது நேரத்தில் சிறுவன் எழுந்து தந்தையைத் தேடி கீழே இறங்குகிறான். ஒரு நாய்க்குட்டியைப் பின் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் டேவிட், மகன் இறங்கியது அறியாமல் வண்டியைக் கிளப்பிச் சென்றுவிடுகிறான்.


பூனம் எனும் சிறுமி நகரத்திலிருந்து வீட்டு வேலையோ எதுவோ செய்து பிடிக்காமல் பாட்டியின் ஊருக்குச் சென்று கொண்டிருக்கும்போது பாதிவழியில் இறக்கிவிடப்பட்டு நெடுஞ்சாலையின் ஓரத்தில் இடிபாடான கட்டிடம் ஒன்றில் இவளைவிட கொஞ்சம் மூத்த சிறுமிகள் கும்பலாக இருப்பதைப் பார்க்கிறாள். தாகமும் பசியும் விரட்ட அடைக்கலம் கேட்கிறாள். அங்கிருக்கும் முதலாளி போன்றவன் அவளைநீ இந்த இடத்திற்குச் சரிப்படமாட்டாய்என்றுவிரட்டுகிறான். கடைசியில் சாயங்காலம் போய்விடவேண்டும் என்ற உத்தரவோடு அங்கிருக்கச் சம்மதிக்கிறான். இரவாகத் தொடங்கியதும் அந்த இடம் களைகட்டுகிறது. வண்ணவிளக்கொளியில் சிறுமிகளும் மிக இளம் வயதுப் பெண்களும் மலிவான ஒப்பனை அலங்காரங்களுடன் அணிவகுத்து நிற்கிறார்கள். அது ஒரு விபச்சாரம் நடக்கும் இடம் என்பதைப் புரிந்து கொள்ளும் விவரம் இல்லாத பூனம்... அவர்களைப் போலவே உடையணிந்து உலவ ஒருவன் அவளைத் தேர்வு செய்கிறான். பூனம் மறுத்து தப்பி ஓடுகிறாள்...


பப்பு ஒரு லாரி டிரைவர். மாமாவின் பராமரிப்பில் வளர்ந்து லாரியில் தன் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கும் நடுவயதுக்காரன். அவனுடைய லாரிமுதலாளி, லாரியின் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக லாரியை விபத்துக்குள்ளாக்கிவிட்டு ஓடிவிடும்படி கூறி ஒரு தொகையைக் கொடுக்கிறான். சிறுவன் இங்கிருந்தால் வீண் பிரச்சனைகள் வரும் என்று கருதி, சிறுவன் ஆதித்யாவை வழியில் இறக்கிவிட்டுவிடும்படி அவனுடன் அனுப்பிவைக்கிறான்.


சிறுவனைத் தேடும் பெற்றோர்கள் - ஆதித்யாவை வண்டியிலிருந்து அநாதரவாக இறக்கிவிட மனதில்லாத ப்பபு, ப்பபுவோடும் கீளீனரோடும் நட்பாகி லாரி பயணத்தை எந்தக் கவலையுமின்றி தொடரும் சிறுவன்விபச்சார விடுதியிலிருந்து பாட்டிவீட்டுக்கு இன்னொரு லாரியில் என்ன நடக்கக்கூடுமென்ற பயமற்ற குழந்தைத் தனத்துடன் பயணத்தைத் தொடரும் சிறுமி பூனம். பூனம் பயணம் செய்யும் லாரியும் சிறுவன் ஆதித்யா பயணம் செய்யும் லாரியும் ஒரே நெடுஞ்சாலையில் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்வதைத் தவிர பெரிய தர்க்கரீதியான தொடர்புகள் இல்லை. ஆனாலும் குஜராத் கட்ச் நிலப்பரப்பின் கரடுமுரடான தன்மையைப் போலவே நிச்சயமற்ற மனதைக் கணக்கச் செய்யும் சாமான்ய மக்களின் வாழ்க்கைமுறை குறுக்குவெட்டாக இப்படத்தில் துலக்கமாகிறது.


நெடுஞ்சாலைகளும் அது உருவாக்கும் புதிய வேலைகளும் வாழ்க்கைமுறைகளும் மனிதர்களும், அவர்களின் சட்டவிரோத வாழ்வியலும் அதற்குமுரணாக வழிந்தோடும் பக்தியும், அன்பும், கடமைஉணர்வும், மீதமிருக்கும் மனிதநேயமும் என ஒரு நம்பிக்கையூட்டும் விதத்தில் படத்தை நகர்த்தி முடிக்கிறார் இயக்குநர். குழந்தைகளின் அநாதரவான நிலை நமக்குள் ஏற்படும் பதட்டத்தை நாடகத்தனமாகக் கையாளமல் பக்குவமாக திரைக்கதையைக் கொண்டு செல்கிறார்.

பூனம் எனும் சிறுமி தற்காலிகமாக அந்த விபச்சார விடுதியில் தங்குகிறாள். அங்கு ஒருவன் அச்சிறுமியை தேர்வு செய்கிறான். அவ்விடத்தின் முதலாளி சிறுமியை அழைக்கிறான். அவள் மறுக்கிறாள். ‘இங்க இதுதான்.  இங்கவற்ரவங்க ... அதுக்காகத்தான் வற்றாங்க. சில நிமிஷங்கள்தான். வா.. ‘ என்கிறான்... பூனத்தின் ஒரு நாள் சிநேகிதியான இன்னொரு பதின்வயதுப் பெண்எங்களுக்கு ஒரு கொறையும் இல்ல... நீயும் இங்கயே இருந்துரு’  என்கிறாள். ஆனால் சிறுமி பூனம் மறுத்து நான் பாட்டியிடம் போகிறேன் என்கிறாள். ‘சரி வா... உன்னை அனுப்பிவைக்கிறேன்... என்று அவளை ஒரு லாரியில் ஏற்றி அனுப்புகிறான் அந்த முதலாளி. இந்தமாதிரி சிறுமிகளை வைத்து விபச்சாரம் செய்யும் ஒருவன் இப்படி இருப்பானா என்ன? என்ற கேள்வி வருவதற்குப் பதில்... இப்படியும் ஒரிருவர் இருக்கக் கூடும்தானே? என்பதைவிடவும் இப்படியும் ஒருவர் இருக்கட்டும்... என்று நம் மனம் கொள்ளும் ஆசுவாசம்.. மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது.


சிறுவன் ஆதித்யாவை வீண்தொந்தரவாக நினைக்கும் கிளீனர், ‘பாஸ் இவனை சீக்கிரம் இறக்கிவிட்டுவிடலாம்... எங்காவது போலீஸ் சோதனையில் மாட்டிக் கொள்வோம்’  என்று நச்சரிக்கும் போதும், முதலாளி போனில் பப்புவைக் கூப்பிட்டுஅவனை இறக்கி விட்டு விடு. அவன் என்ன ஆகிறான் என்பது முக்கியமல்ல.. நீ வேலையை ஒழுங்கா முடி... ‘ என உத்தரவிடும்போதும்  ‘ஏழு வயது சிறுவனை அப்படி கண்ட இடத்தில் இறக்கிவிட முடியாது. அவன் இப்போது என் பொறுப்பில் இருக்கிறான்.. ‘ என்று பேச்சைத் துண்டிக்கும் டிரைவர் பப்பு...மாதிரி ஆட்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று நம்பவேண்டியது இக்காலத்தின் தேவையாகவல்லவா இருக்கிறது. சுற்றிலும் பழகிய பெண்கள் பார்த்திருக்க கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கீறிய... புண்யவான்கள் வாழும் குஜராத்தில் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு நகைமுரணாக இருந்தாலும் அது விளைவிக்கும் நம்பிக்கை முக்கியமானது.


 குஜராத்தின் நெடுஞ்சாலைகளை மையப்படுத்திய மூன்று கதைகளைச் சொல்லவேண்டுமென்று நினைத்தேன்அதிலும் குழந்தைகள் வீடுதிரும்புதலைப் பற்றியதாக. என் மனைவியின் ஊரான குஜராத்திற்கு வரும்போதெல்லாம் கட்ச் பகுதி மக்கள் வாழ்க்கை என்னைத் தூண்டுவதாக இருந்தது எனும் இயக்குநர் கயான் கோரா (Gyan Correa) தான் விளம்பரத்துறையிலிருந்து,  திரைப்படம் எடுக்கத் தூண்டுகோலாக இருந்தது இரானிய ஐரோப்பிய படங்கள்தான் என்கிறார்.

எந்த தொழில்நுட்பத்தையும் தனியாகச் சொல்லவேண்டிய அவசியமில்லாமல்  ஒளிப்பதிவு, இசை எல்லாமே இணக்கமாகப் பொருந்திப் போகின்றன. பெரும்பாண்மை தொழில்முறையல்லாத நடிகர்கள், இயற்கையான படப்பிடிப்புச் சூழல்கள்  என்று ஒரு மாற்றுசினிமாவின் லட்சணங்கள் கச்சிதமாகப் பொருந்தியுள்ள படம்.

இந்த ஆண்டு சிறந்த வெளிநாட்டுப் படங்களின் போட்டிப் பிரிவுக்கு இந்தியாவிலிருந்து  ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப் பட்டுள்ள குட் ரோட் ‘,  ‘லஞ்ச் பாக்ஸ் எனும் இந்திப் படத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சென்றிருக்கிறது. ஒரு மகத்தான படமாக இல்லாவிட்டாலும் இந்தியாவின் மரியாதையைக் காப்பாற்றக் கூடிய படைப்பு என்று தைரியமாகச் சொல்லலாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.