வெள்ளி, 4 ஜூலை, 2014

குயின் (QUEEN) : அந்தப்புரத்தைத் துறந்த ராணி






பொதுவாக இந்தியாவில் வரவேற்பறை அல்லது நடுக்கூடும் என்பது எப்போதும் ஆண்களுக்கான இடமாகவே வரையறுக்கப் பட்டுள்ளது. அங்கு பெண்கள் கைகால்களை நீட்டி அக்கடாவென்று உட்கார்ந்துவிட முடியாது. அவர்களின் வெளி என்பது சமயலறை. அம்பை சொன்னதுமாதிரி ‘வீட்டின் மூலையில் ஒரு சமயலறை’. சத்யஜித்ரேயின் ஒருபடத்தில் ஒரு ஜமீந்தார் குடும்பத்தில் ஆண்கள் மட்டுமே புழங்கும் வெளிக்குள் அந்தக்குடும்பத்துப் பெண் நுழைகிறாள். அந்தக்காட்சியை ஸ்லோ மோஷனில் படமாக்கியிருப்பார். வீட்டின் உள்ளிருந்து நடுக்கூடத்துக்கு வருவதை நீண்ட நேரம் நடந்து வருவதாகப் படமாக்கியிருப்பார். அக்காட்சியை ‘ ஒரு இந்தியப் பெண் தன் சொந்தவீட்டின் நடுக்கூடத்துக்கு வந்துசேர இத்தனை நூற்றாண்டுகள் ஆகிவிட்டன என்பதையே அந்த மெதுநகர்வுக்காட்சி குறிப்பிடுகிறது என்றார்கள் விமர்சகர்கள். 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியப் பெண்கள் நடக்கூடத்தைத் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டார்கள் (மெதுநடையாகத்தான் (ஸ்லோ மோஷனில்)). என்பதைக் காட்டும் சமகால சினிமாக்களில் முக்கியமானது இப்படம்.

தில்லியில் வசிக்கும் ராணி 20களில் திருமணக்கனவோடு உலாவரும் பாரம்பரிய பஞ்சாபிக் குடும்பத்தைச் சார்ந்த சராசரிப்பெண்.  ரோட்டோரக்கடையில் தோழியுடன் நின்று கொண்டிருக்கும்போது விஜய் அவள் மேல் காதல் கொள்கிறான். வழக்கமான பாணியில் அவளை கவர பல்வேறு அமெச்சூர் முயற்சிகளில் இறங்குகிறான். தொடர்ந்து தன் மேல் பைத்தியமாக இருப்பவனை நிராகரிக்கக் காரணமின்றி காதலை ஏற்றுக்கொள்கிறாள். படிப்பு முடிந்து   பெரியவேலையில் சேர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் நடந்து திருமணம் நடக்க இரண்டுநாட்களே இருக்கிறது. இந்தியச் சராசரி பெண்களின் பிறவிப் பயனான திருமணம்... அதுவும் தன்னைத் துரத்திக் காதலித்தவனுடன்... உறவினர்களும் தோழிகளும் சூழ இனிப்பும் பாட்டும் மகிழ்ச்சியும் உபரியாய் வழிந்தோட, கனவுகளில் மிதந்தபடி இருக்கிறாள் ராணி. இன்னும் இரண்டு நாள். இரண்டே நாள். பக்கத்தில் இருக்கும் காபி ஷாப்பிற்கு அழைக்கும் விஜய்யைப் பார்க்க விரைகிறாள் ராணி. தன்னுடைய தகுதி மற்றும்  வாழ்க்கை முறைக்கு பொருத்தமானவளாய் ராணி இல்லை என்பதால் இந்தத் திருமணத்தை நிறுத்திவிடப் போவதாய் அவன்  ராணியிடம் சொல்கிறான். ராணிக்குக் காரணம் புரியாமல் அவனுக்காக என்னவிதமாகவும் தன்னை மாற்றிக்கொள்ளத் தான் தயாராக இருப்பதாகக் கெஞ்சுகிறாள். நிர்த்தாட்சன்யமாய் மறுத்துவிடுகிறான். காபி ஷாப்பில் இருப்பவர்களைக் கூடப் பொருட்படுத்தாமல் அழத்தொடங்குகிறாள். வீட்டுக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொள்கிறாள். பெற்றோரும் உற்றோரும் பதறுகிறார்கள்.


அவளுக்கு ஒரு மாறுதல் வேண்டியிருப்பதுபோல் தோன்றுகிறது. திருமணம் முடிந்து தேனிலவுக்காக பாரீஸ் மற்றும் ஆம்ஸ்டர்டாம் செல்வதற்காக பதிவுசெய்த பயண ஏற்பாடுகள் நினைவுக்குவர, பாரீஸ் செல்ல முடிவுசெய்கிறாள். பெற்றோரிடம் நான ஹனிமூன் செல்கிறேன் என்கிறாள் அப்பாவியாக. சூழலின் கனத்தைக் குறைக்க அரைமனதுடன் சம்மதிக்கின்றனர். தனியாக ஹனிமூன் செல்கிறாள் ராணி. முன்பின் அறிமுகமற்ற பாரிசில், அடிபட்ட இதயத்துடன், முற்றிலும் புதிய கலாச்சாரச் சூழலில் சிலநாட்கள் சுற்றித்திரியும் ராணி திருமணத்திற்கு அப்பாலான ஒருவாழ்வின் சாத்தியங்களையும், அர்த்தப்பூர்வமான உறவுகள் எப்போதும் நம்மைச் சுற்றிலும் கண்டுகொள்ளப்படாமல் சிதறிக் கிடப்பதையும் கண்டுகொள்கிறாள். இந்தியச் சமூகம் கற்பித்துவைத்திருக்கும் மரபான ஒழுக்கம்பற்றிய சிலந்திவலைகளைப் பிய்த்து எறிந்து தன் சுயத்தைக் கண்டுகொண்டவளாய் மீள்கிறாள்.

சினிமாத்தனமில்லாத திரைக்கதையும் பாத்திரங்களும் மிகவும் இயல்பான உணர்ச்சிகரமான அனுபவத்தைச் சாத்தியமாக்குகின்றன.

ராணி பாரீசில் இறங்கியவுடன் ஒரு ஹோட்டலில் தங்குகிறாள். அங்கு பக்கத்து அறையில் ஏடாகூடமான சப்தங்கள் கேட்கின்றன. ஒரு கவர்ச்சியான இளம்பெண் உள்ளாடைகளுடன் பால்கனிக்கு, பொதுவாக ஆடவர்களை வைதபடியே வருகிறாள். ராணியைப் பார்த்து... என்ன இலவச ஷோ.. எப்படி? என்கிறாள். ராணி முதல் கலாச்சார அதிர்ச்சியான விஜயலட்சுமியைச் சந்திக்கிறாள். பாரிசில் எப்படி விஜயலட்சுமி? என் அம்மா ஸ்பானிய பிரஞ்சுக்காரி. கோவாவுக்கு வந்த இடத்தில் இந்தியரான என் தந்தையைத் தற்சமயமாகச் சந்தித்தாராம். அங்கு இருவருக்கும் பூம்     பூம் ஆகிவிட்டது. அதுதான் நான் என்று சிரிக்கிறாள். அவளுக்கு ஒரு மகன் இருப்பதும் கணவன் என்று யாரும் இல்லாததும் எப்போதும் பைக்குள் ஆணுறைகளை வைத்திருப்பதும், வேலை – ஒயின் – கொண்டாட்டம் – மகன் என்று அப்பழுக்கற்ற சந்தோசமான ஒரு வாழ்க்கை வாழ்வதையும் பார்க்கிறாள். விஜயலட்சுமியுடன் பாரீசை வலம் வருகிறாள்.


அங்கிருந்து ஆம்ஸ்டர்டாம் செல்கிறாள். ஒரு ஹோட்டலில் இவளுக்கென்று கொடுக்கப்பட்ட அறையின் கதவைத் திறந்தவேகத்தில் அலறியவாறு வரவேற்பறைக்கு வருகிறாள். அறையின் உள்ளே இரண்டு ஆண்கள் கட்டிப்பிடித்து விளையாடிக்கொண்டிருப்பதைக் பார்த்த அதிர்ச்சியில் நிற்கிறாள். ‘இது ஹோட்டல் அல்ல. ஹாஸ்டல். இங்கே அறையைப் பகிர்ந்துகொள்ளத்தான் வேண்டும். தனி அறைக்கு வாய்ப்பில்லை என்கிறான் வரவேற்பாளன். இரவென்பதால் வேறுவழியில்லாமல் அறைக்குச் செல்கிறாள். அங்கே ஒரு ஜப்பானியனும் ரஷ்யனும் ஒரு கறுப்பின இளைஞனுமாக மூவருடன் தங்கவேண்டியதாகிறது. அறையைவிட்டு வெளியே வந்து படுக்கிறாள் முதல்நாள். அவர்கள் இந்தியாவில் தனியாக மாட்டிக்கொள்ளும் பெண்ணைக் கையாள முயலும் இந்திய ஆண்கள் மாதிரியானவர்கள் இல்லை என்பது புரியத் தொடங்குகிறது. அவர்கள் அவளைப் பெண் என்பதாகவே பொருட்படுத்தாமலிருப்பதும் ஓரிருநாட்களிலேயே அவர்களைக் கல்மிசமில்லாமல் தொட்டு விளையாட முடிவதும் இயல்பாக நிகழ்வதை உணர்கிறாள். மூவரும் சேர்ந்து நகரைச் சுற்றுகிறார்கள். ஒரு செக்ஸ் ஷாப்பிற்குள் நுழைந்து வேடிக்கை பார்க்கிறார்கள். அது என்ன மாதிரியான பொருட்கள்விற்கும் கடை என்பதைக் கூட புரிந்துகொள்ள முடியாதவளாய்... ஒரு வைப்ரேட்டரை கையில் வைத்துக் கொண்டு, என் அப்பாவுக்கு முதுகுவலி இந்த மசாஜ் சாதனத்தை அவருக்காக வாங்கப் போகிறேன் என்கிறாள். மூவரும் அவளுக்குத் தெரியாமல் விழுந்துவிழுந்து சிரிக்கிறார்கள். கருப்பன் கிதார் வாசிக்கிறான். ரஷ்யன் எப்போதும் படம் வரைகிறான். நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்கிறாள். ‘உன்னை யார் தடுத்தது?’ என்ற ரஷ்ய இளைஞனின் கேள்விக்கு அவளிடம் பதிலில்லை.

 
ஒரு நாள் பசியுடன்  உணவுவிடுதி தேடி அலைகிறாள். இவள் தடுமாற்றத்தைப் பார்த்து ஒருவன் ‘அழகிய பெண்ணே! (ப்ரட்டி லேடி) என்ன தேடுகிறாய் என்று கேட்கிறான். சாப்பிட வேண்டும் என்கிறாள். எதிரிலிருக்கும் உணவகத்தைக் காட்டி.. நான் அங்குதான் சாப்பிடுவேன். பிரமாதமாக இருக்கும் என்கிறான். ராணி உணவு மேசையில் உட்கார்ந்ததும் அதே இளைஞன் அவளிடம் ‘அழகிய பெண்ணே என்ன சாப்பிடுகிறாய்? என்று சிரித்துக் கொண்டே, இது என்னுடைய உணவகம்தான் என்கிறான். அவள் கேட்ட உணவு வந்ததும் ருசித்துப் பார்த்து ‘எனக்குக் கொஞ்சம் மிளகு, உப்பு, பூண்டு, இஞ்சி கிடைக்குமா? என்கிறாள். அவனுக்கு ஒன்றும் புரிவதில்லை. ஏற்கனவே நான் சமைத்திருக்கும் உணவில் இதெல்லாம் கலக்கப் போகிறாயா? அப்படியானால் என் சமையல் உனக்குப் பிடிக்கவில்லையா? ஏன் இந்தியர்கள் இப்படி எல்லாவற்றிலும் கண்டதைச் சேர்க்கிறீர்கள்? என்று கோபத்தில் கத்தத் தொடங்க அவள் பணத்தை வைத்துவிட்டு ஓடுகிறாள். உன் பணம் எனக்கு வேண்டாம் என்று கத்திக் கொண்டே அவளைத் துரத்துகிறான் அவள் ஓடிவிடுகிறாள்.

அறை நண்பர்களுடன் தெருவில் நின்று கொண்டிருக்கும்போது அந்த உணவுவிடுதிக்காரன் அவளிடம் வந்து ‘ப்ரட்டி லேடி.. உன் பணத்தை நீ வாங்கிக் கொள்ளவேண்டும்... நீ சாப்பிடாமல் உன் பணம் எனக்குத் தேவையில்லை என்று அவளிடம் கொடுக்கிறான். அதுசரி ‘ என் உணவில் அவ்வளவு திருத்தங்கள் சொன்ன உனக்கு சமையல் தெரியும் என்று நினைக்கிறேன். வரும் வாரம் ஒரு உணவுத் திருவிழா நடக்கிறது. நீ ஏன் உன்நாட்டு உணவொன்றைச் சமைக்கக்கூடாது. என்னுடைய சமையலறையை நீ பயன் படுத்திக் கொள்ளலாம் என்கிறான். ஏன் செய்துபார்க்கக் கூடாது என்று தோன்றவே.. அவள் என்ன சமைக்கலாம் என்று மண்டையை உடைத்து கடைசியில் ‘பானிபூரி’ செய்து வாடிக்கையாளர்களுக்காய் காத்திருக்கிறாள். ஒருவர் வந்து ஒன்றை வாயில் போட்டுப் பார்த்து ‘என்ன இவ்வளவு காரம்.. என்னைக் கொல்லப் பார்க்கிறாயா?’ என்று கேட்டுச் செல்கிறார்.. மிகுந்த மனச் சோர்வுக்கு ஆளாகும்போது... கோபமாகச் சென்றவரே மீண்டும் வந்து.. முதலில் காரமாகத் தோன்றியது... சில நிமிடங்களில்... அற்புதமான சுவையாகத் தோன்றுகிறது.. இன்னொன்று கொடு.. என்கிறார்.... தொடர்ந்து வரிசை நீள்கிறது. முழுவதும் விற்றுத்தீர்க்க.. உணவக உரிமையாளனான இளைஞன்... இந்தா உன்னுடைய சம்பாத்யம் என்று பணத்தைக் கொடுக்கிறான். நன்றி என்கிறாள். அப்படியானால் எனக்கொரு முத்தம் தா.. என்கிறான்... இப்போது ராணிக்கு எந்தப் பதட்டமும் இருப்பதில்லை. லிப் டு லிப்பா.. என்று கேட்கிறாள். அப்புறம் ‘நீ டு நீயா’( முட்டங்காலும் முட்டங்காலுமா?) என்கிறான். தயக்கமில்லாமல் அவன் இதழ்களில் இதழ் பதிக்கிறாள். 


இதற்கிடையே விஜய் ராணியைத் தேட ஆரம்பிக்கிறான். தொலை பேசியில் தொடர்பு கொள்ள முயல்கிறான். அவள் பேசுவதைத் தவிர்க்கிறாள். அவளைத் தேடி ஆம்ஸ்டர்டாமுக்கும் வருகிறான். தெருவில் மூன்று நண்பர்களுடன் சந்திக்கிறான். அவள் நடை உடை பாவனைகள் மாறியிருப்பதைக் கவனித்து அதிர்ச்சி அடைகிறான். இவர்களெல்லாம் உன் நண்பர்களா? இவர்களுடனா நீ தங்கியிருக்கிறாய்?... வா.. வந்துவிடு.. நான் உன்னைக் காதலிக்கிறேன்.. என்று அழைக்கிறான். நான் தில்லியில் வந்து உன்னைச் சந்திக்கிறேன் என்று கூறிச் சென்றுவிடுகிறாள்.

தில்லிவிமான நிலையத்தில் வந்திறங்கி பெற்றோரை அனுப்பிவிட்டு விஜய் வீட்டுக்குப் போகிறாள். விஜய்யின் அம்மா அவளை ஆச்சரியத்துடன் வரவேற்று திருமணத்தைப் பற்றிப் பேசுகிறாள். கவலைப்படாதே ஆண்களெல்லாம் வேலைக்குப் போனபின் நிறைய கேளிக்கைகள் நமக்கு இருக்கிறது... ராணியும் குடும்பத்தலைவியாய் தன்னுடன் இருக்கப் போகிறவள் என்பதாய் அவள் பேச்சுதொடர்கிறது. விஜய் மாடியிலிருந்து வருகிறான். ஆசையுடன் ராணியை நெருங்குகிறான். ராணி பண்பட்டமுறையில் அவனை கட்டிக் கொண்டு விலகி விஜய்யின் கைகளைத் திறந்து ஏதோ ஒன்றை வைக்கிறாள். விஜய் கைகளைத் திறந்து பார்க்கிறான். அவன் ராணிக்கு அணிவித்திருந்த நிச்சயதார்த்த மோதிரம். நிமிர்ந்து பார்க்கும்போது ராணி வாசலைத்தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறாள். தேநீர் கோப்பைகளுடன் வந்த விஜய்யின் அம்மா திகைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் பார்வையாளர்களுடன் சேர்ந்து. இப்போது ராணியின் கலக்கமற்ற மகிழ்ச்சி பரவ அவளையறியாமலே நடையில் ஒரு துள்ளலும் இணைந்து கொள்கிறது.


இப்படத்தின் சிறப்பு, இது ஒரு சராசரிப் பெண்ணின் அகவிடுதலையைப் பற்றியது என்பதுதான். படம் மொத்தமும் விசயங்களை உரத்த குரலில் பேச முயல்வதில்லை. இடப்பெயர்வும் பயணங்களும் ஒரு மனுஷியின் இருண்ட/ கலங்கிய மனதில் இப்படி ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்ச முடியும் என்பதைப் பற்றியதாகவும் இருக்கிறது. மிக முக்கியமாக மேற்கத்திய கலாச்சாரத்தின்/ நவீன யுகத்தின் அடிப்படையான தனிமனித சுதந்திரமும், ஆண் பெண் பால்பேதமற்ற புழங்குவெளிகளும், மனத்தடைகளைத் தகர்த்து அவரவர் வாழ்வுக்கான அர்த்தங்களை அவரவர் உருவாக்கிக் கொள்வதன் சாத்தியங்களைப் பேசாமல் பேசுகிறது என்றும் தோன்றுகிறது. மாற்றுப்படங்கள் என்ற முஸ்தீபுகளுடன் எடுக்கப்படும் படங்களின் தொனியைத் தவிர்த்து முழுக்க முழுக்க பொதுப்பார்வையாளர்கள் சுவாரஸ்யமாக பார்க்கும் விதமாகவும் அதே நேரத்தில் நுணுக்கமான விவரணைகள் உள்ளதாகவும் உருப்பெற்றுள்ளது. 

கலைச்சினிமா – வணிகசினிமா – மாற்றுசினிமா என்கிற எல்லைகள் தகர்ந்துவிட்டநிலையில் வணிகஎல்லைக்குள் செயல்படும் இத்தகைய முயற்சிகளே வெகுமக்கள் ரசனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி மேம்பட்ட சினிமாக்களுக்கான தேவையை உருவாக்கக் கூடியவை. 


இப்படத்தின் இயக்குநர் விகாஸ் பாஹி(Vikas Bahl) ஊடகத்துறையில் இருந்தவர். ரேடியோ மிர்ச்சியின் மார்க்கெட்டிங் தலைவராக இருந்து அதை முதல்வரிசைக்கு நகர்த்தியவர். 25 பேர் கொண்ட படப்பிடிப்புக்குழுவோடு சென்று 40நாட்களில் 105 (locations) வெவ்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தியதை ஒரு சாதனையாகவே குறிப்பிடுகிறார்கள். மொத்தம் 45 நாட்களே மொத்தப் படப்பிடிப்பு நிகழ்ந்ததாம். படத்தின் மிகப்பெரிய பலமான கங்கனா ரனாவத் சொந்த வசனங்களை இணைத்துக் கொள்ளுமளவுக்கு படத்தோடு ஒன்றியிருந்தாராம். வணிக ரீதியாகவும்பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.

வியாழன், 12 ஜூன், 2014

முதுமக்கள் தாழியும்... கலர் டி.வி.யும்..: கூத்துப் பாக்கப் போன கதை


பழைய மாணவர் பூபதி இரண்டு நாட்களுக்கு முன்னால் கல்லூரி வாசலருகில் ‘தோன்றினார்’ என்றுதான் என்றுதான் சொல்ல வேண்டும். பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தேன் உங்களைப்பார்த்ததும் வந்தேன் என்றார். என்ன விசேசம் என்றேன். எங்க ஊர் பக்கத்தில முளையூர்ல நாலு வருசத்துக்கு ஒருதரம் நடக்குற கூத்து இன்னைக்கு ராத்திரி இருக்கு வற்றீங்களா? என்றார். காட்டுமாட்டுக்கூத்து , கரடிக்கூத்து என்று இரு கூத்துகள் நடக்கப் போவதாகவும், ரெம்ப வித்யாசமா இருக்கும் என்பதோடு நிறுத்திக் கொண்டார். வருவதாக இருந்தால் அலைபேசியில் பேசுங்கள் என்றும் கூறிச் சென்றார். ‘என்ன சாமி’.. என்றபோது ‘அரவான் கோயில்’ என்றார். அரவானுக்கு இந்தப்பகுதியில் கோயில் இருப்பதும், அவருக்கு நாலுவருசத்துக்கு ஒரு திருவிழா இருப்பதும் கூடுதல் வசீகரமாக இருந்தது. 

கிராமத்துத் திருவிழாக்கள் பார்த்து நாளாகிவிட்டது என்பதாலும் கேள்விப்படாத கூத்துப் பெயராக இருக்கிறதே என்பதாலும் போய்வரலாம் என்று தோன்றியது. முளையூர் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் கிராமம் என்பதால் ஆர்வமானவர் யாரையாவது துணைக்குக் கூட்டிச்செல்லலாம் என்ற யோசனையில் பேராசிரியர் ஹரிபாபுவுக்கும் நாடகங்களில் அநாவசிய  ஆர்வம் காட்டிவரும் என்னுடைய மாணவரும் யோகா குருவுமான ஆனந்துக்கும் அழைப்பு விடுத்தேன். 

இரவு 10:00 மணிக்கு கிளம்பி நத்தம் என்ற ஊரில் பூபதியை இணைத்துக் கொண்டு நத்தம் - திண்டுக்கல் சாலையில் பிரிந்து செல்லும் சிறுசாலையில் சில கிலோமீட்டர்களில் சுற்றிலும் உயரமில்லாத மலைகள் சூழ இருக்கும் கிராமம் முளையூர் அடைந்து காரை நிறுத்திவிட்டு ஊருக்குள் நுழைந்தபோது மணி 11 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. ட்யூப் லைட்டுகள், சீரியல் பல்புகள் (சீரியல் என்பது சரியா தெரியவில்லை, அப்டித்தான் சொல்லிக்கிட்டு வற்றோம் ரெம்ப காலமா...). ஆனால் வழக்கமான ஒலிபெருக்கி அலறல்கள் இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. கடலை பொரிக் கடைகள்.. ரத்தச் சிவப்பான சர்பத் கடைகள்... மிளகாய் பஜ்ஜிக்காக வருசக்கணக்காய் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிகள்... ஜெயன்ட் வீல்... என்று அச்சு அசலான திருவிழாக் கோலம். மனசுக்குள் சின்ன வயது உற்சாகம் பரவ ஆரம்பித்தது. சற்றுதூரம் நடந்தவாறே நோட்டமிட்டபோதுதான் கவனித்தேன். யாருடைய காலிலும் செருப்பு இருக்கவில்லை. விசாரித்தபோது பூபதி சொன்னார். ஆமா செருப்புப் போடக்கூடாது.. கழற்றி காரில் போட்டுவிடலாம் என்றார். வழியில் பார்த்தபோது மூன்று போலீஸ்காரர்களும்கூட செருப்பில்லாமல் தேநீர் கடையில் நின்று கொண்டிருந்தார்கள்.

பக்கத்துல போய் உக்காராட்ட ஒண்ணும் தெரியாது.. வாங்க எடம் புடிப்போம்.. என்றார் பூபதி. கோயில் இருக்கும் மைதானம் கண்மாய் கரையை ஒட்டி ஆலமரங்களுடன் விசாலமானதாக சினிமா கிராமம் மாதிரி இருந்தது. ஏற்கனவே ஒரு பத்தாயிரம்பேர் குடும்பம் குடும்பமாக ஜமுக்காளங்களையும் பாய்களையும் விரித்து வசதியாய் உட்கார்ந்திருந்தார்கள். நாங்களும் அதற்குள் இடம்பிடித்துக் கொண்டோம். மணி 12ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. படிப்படியாக விளக்குகள் அணையத் தொடங்கின. சீரியல் பல்புகள், டியூப் லைட்டுகள், திருவிழாக் கடைகள், ஜெயன்ட் வீல்  அலங்கார விளக்குகள் என்று எல்லா மின் விளக்குகளும். வீடுகளின் விளக்குகளும் கூட. விளக்குகள் அணைய அணைய பேச்சொலிகளும் படிப்படியாக குறைவதைக் காணமுடிந்தது. மேலே முக்கால் நிலா துலக்கமாக நகர்ந்துகொண்டிருக்க, சுற்றிலும் மலை முகடுகளின் விளிம்புகள், ஆலமரங்கள் எல்லாம் சேர்ந்து பார்த்திராத சித்திரமாக உருக்கொள்ள ஆரம்பித்திருந்தது. அப்போது கூட்டத்திற்குள் ஒருவர் ‘ செல்போனை அணைச்சுருங்க.. செல்போனை அணைச்சுருங்க...’ என்று சொன்னவாரே செல்ல... செல்பேசிகள் மின் மினிகளைப் போல ஒளிர்ந்து ஒளிர்ந்து அணைந்தவண்ணம் இருந்தன. ஏ.. ஓக்காருங்கப்பா... ஒக்காருங்க.. என்ற சத்தங்களைத் தொடர்ந்து... கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் யாரும் நின்று கொண்டிருக்கவில்லை. சில மணித்துளிகளில் படிப்படியாக பேச்சுக்குரல்கள் இருளுக்குள் மூழ்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. பத்திலிருந்து பதினைந்தாயிரம் பேர் குழுமியிருக்கும் இடத்தில் இப்படி ஒரு அமைதி சாத்தியம் என்பது நம்ப இயலாததாக இருந்தது. மூன்று குழந்தைகளின் அழுகுரல்களும் அடக்கமுடியாத இருமல்களும் கூட தேய்ந்து முற்றிலுமான நிசப்தம் இருளோடு கலந்தபோது இருந்த சூழல் வாழ்நாளில் எப்போதும் சந்தித்திராததாக இருந்தது. சில நிமிடங்கள் தாங்கமுடியாத நிசப்தம். இப்போது தூரத்திலிருந்து மாடுகளின் கழுத்து மணியொலி போன்றதொரு ஒலி மெல்ல அன்மிக்கத் தொடங்கி கூட்டத்தைப் பிளந்து கோயிலுக்கு வந்து கொண்டிருந்தது. பின், தலையில் விறகுகளைக் கிரீடம் மாதிரி கட்டிக்கொண்ட பத்திருபதுபேர் கோயிலைச் சுற்றிலும் அமர... அவர்கள் குறி சொல்பவர்கள் என்பதாகவும் அவர்களிடம் குறி கேட்பதாகவும் சொன்னார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் தூரத்திலிருந்து தீப்பந்த ஒளியும் விலங்குகளை விரட்டுவதான ஒலிகளும் நெருங்கத் தொடங்கின. இப்போது தீப்பந்த வெளிச்சத்தில் காட்டு எருமையின் உருவம் தாவித்தாவி வந்துகொண்டிருந்த காட்சி அபூர்வமான நாடகப் படிமமாகக் கடந்துசென்று கொண்டிருந்தது. மூன்று முறை கோயிலைச் சுற்றியபின் நாட்டுத்துப்பாக்கிகள் வெடிக்கும் ஒலிகள் அடங்க மாடு சலனமற்றுப் போகிறது. தொடர்ந்து நிலைகொண்ட நிசப்தத்தில் உடலும் மனமும் பரவசமான நிலைக்குச் சென்று மீண்டன. தொடர்ந்து பத்து முப்பது வெடிகளின் பேரோசை மலைகளில் எதிரொலித்து மீண்ட வண்ணமிருந்தன. இப்போது சிலர் ‘ ஏய்.. அவுட்ட போடு, அவுட்ட போடு..’ என்றார்கள். இப்போது கூடுதல் ஒலியுடனான பட்டாசுகள் வெடிக்கப்பட்டதும் .. அவுட் என்பது சடங்கு முடிவதற்கான சமிக்ஞை என்பதாகப் புரிந்து கொண்டேன். விளக்குகள் எரியத் தொடங்க கூட்டம் கலையத் தொடங்கியது... மீண்டும் திருவிழாக் கோலம்... மிளகாய் பஜ்ஜிகள் எண்ணெய்க்குள் குதிக்கத் தொடங்கின. ‘அய்யா ஒரு பெரிய நாடகம் நடந்து முடிஞ்ச மாதிரி இருக்கு என்றார்’ ஆனந்த். வெகுநேரம் கூட்டம் கலைவதையே நின்று பார்த்துக்கொண்டிருந்தோம். மணி ஒன்றைத் தாண்டிவிட்டிருந்தது.

எங்களுக்கு வியப்பான விசயம் என்னவென்றால்.. இவ்வளவு கட்டுப்பாடான ஒரு திருவிழா எப்படி சாத்தியம். பத்தாயிரம் பேருக்குமேல் திரளும் கூட்டத்திற்கு பந்தோபஸ்துக்கு மூன்றே போலீசார் அதுவும் காலில் செருப்பணியாமல். இளவட்டங்கள், உள்ளூர் சன்டியர்கள், சரக்கு போட்டுக்கொண்டு சளம்புபவர்கள்... யாருமே இல்லாத ஒரு கிராமத்து திருவிழாவா? பெயருக்கு ஒரு ஒலிபெருக்கி.. ஆனால் அதிலும் காதைக் கிழிக்கும் பாடல்களோ... அறிவிப்பு என்ற பெயரில் விழாக்குழுவினரின் அலறல்களோ இல்லை... ஒரு புகைப் படம் எடுக்கலாம் என்ற யோசனையில் பக்கத்துப் பெரியவரிடம் பேச்சுக்கொடுத்தோம். ம்ஹும்... போட்டோ... வீடியோ எதற்கும் அனுமதியில்லை என்றார். ராஜ்கிரன் ஏதோ ஒரு படத்துக்காக காமராவைக் கோயிலை நோக்கித் திருப்பியதாகவும்... காமரா பழுதானதாகவும் கூடுதல் தகவலைப் போகிறபோக்கில் சொல்லிப் போனார். அப்புறம் ஏன் படமெடுக்கப் போகிறோம்...

பூபதியிடம் கேட்டோம்... கூத்து இருக்குன்னு சொன்னீங்களே.. அதக் கண்ணுல காட்டலயே? என்று. இதுதான் அது என்றார். சுமார் ஒருமணிநேரம் நிகழ்ந்த அந்த நிகழ்வை சடங்கு என்றுதான் கூறவேண்டும்.  சில வருடங்களுக்கு முன் வரை இந்தச் சடங்கு நிகழ்வில் மிகவும் கொச்சையான பாலியல் வசனங்களும், ஊர் பெரியதனக்காரர்களை பஞ்சாயத்து தலைவரை அவர் குடும்பத்தினரை பற்றியதான வம்புகளும் ஆபாச வதந்திகளும் பேசப்பட்டனவாம். அதேபோல் பெண்களும் இச்சடங்கைப் பார்க்க அனுமதிக்கப்பட்டதில்லையாம்.

இதில் வேடிக்கையான விசயம் இந்த பகுதியில் ஏன் அரவானுக்குக் கோயில் இருக்கிறது? அதிலும் வலையர், பிறமலைக்கள்ளர், கோனார், ஆசாரி, பறையர் போன்ற பல சாதிகளும் வசிக்கும் ஒரு வழக்கமான தமிழக கிராமச் சூழலில் எல்லோரும் வழிபடும் கோயிலாக இருப்பது எப்படி? பெண்களுக்கு எப்படி சடங்குபார்க்கும் உரிமை இல்லை/ பின் எப்படி மாற்றம் வந்தது.... துப்பாக்கியால் சுடுவதும்கூட சடங்கின் பகுதியாக மாறியிருப்பது எப்படி? ஆகிய பல கேள்விகளைப் பறிமாறிக் கொண்டோம்... ஒரு நவீன தர்க்கத்திற்குள் நாட்டுப்புறச் சடங்கைப் புரிந்துகொள்ளமுடியாது என்றும், ஏன் புரிந்துகொள்ளவேண்டும்.. என்றும் சமாதானப் பட்டுக்கொண்டோம். நாட்டுப்புற ஆய்வாளர்கள் இதுபற்றி எதும் எழுதியிருக்கிறார்களா என்று விசாரிக்கவேண்டும் என்பதும் மனசுக்குள் ஓடியது.

செல்பேசிகளும் இணையமும் உலகம் முழுவதும் பண்பாடுகளை மாற்றி அமைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் ஊடகவியல் ஆய்வாளர்கள். நாம் பார்க்கத் தக்கதான மாற்றங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் தமிழக நாட்டுப்புற திருவிழாக்களையும் சடங்குகளையும் அவதானித்தால் ஆய்வாளர்கள் கொஞ்சம் திணறித்தான போவார்கள். ஒருவகையில் உலகமய தாக்குதல்களையும் இணையப் புரட்சிகளையும் கடந்து தமிழ்ச் சமூகம் பாரம்பரிய வேர்களோடு இறுக்கமாகத் தன்னைப் பிணைத்துக் கொண்டுள்ளதாக ஆறுதல் கொள்ளலாம். ஆனால் இன்னொருவகையில் இந்த பாரம்பரிய வேர்கள் முடிச்சிட்டுக் கிடக்குமிடம் சாதி அமைப்புதான் என்பது கூர்ந்து நோக்கும்போது புரியத்தொடங்குகிறது.  ஒரு உள்ளூர் தலித் சகோதரருடன் உரையாடியபோது அவர் சொன்னார்... ‘நாங்கதான் மொதல்ல பொங்க வைக்கனும்.. எங்க பானைய ஏத்தினபெறகுதான் மத்தசாதிக்காரங்க பானையெல்லாம்... சாமி எங்க தெருவத்தான பாத்துக்கிட்டு இருக்கு.... அங்க வெளுத்துக்கிட்டு இருக்காங்களே தப்பை...(தப்பாட்டம்) நம்ம பசங்கதான்.. என்றார் பெருமிதத்துடன். நீங்க கோயிலுக்குள்ள போவீங்களா? என்றதும் ... அதெப்படி... நாங்க வெளியிலருந்தே கும்பிட்டுக்கிடுவோம்...இதுக்குப்போயி சண்டையும் சச்சரவும் பண்ணிக்கிட்டு.. அப்ப நம்ம தாத்தைங்கள்லாம் கேனப்பயகளா...  சாமி என்ன கோயிலுக்குள்ள மட்டுமா இருக்கு...’ என்றார்.

மணி பின்னிரவு 2:30ஐத் தாண்டியிருந்தது. மதுரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். திறந்திருந்த கார் சன்னல் வழியாக இதமான காற்று முகத்தைத் தடவிச் சென்றுகொண்டிருந்தது. மனம் என்னமோ புழுக்கமாகவே இருந்தது.


திங்கள், 9 ஜூன், 2014

பேசாதவர் பேசினால்... மணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல்






மணிரத்னம் பொதுவாக அதிகம் பேசாதவர். தன் படங்களைப் பற்றி விரிவாக எங்கும் பேசியதில்லை. அவரைப் பற்றிய பல்வேறுவிதமான விமர்சனங்களுக்கு இடமுண்டு என்றாலும் 1980களில் இந்திய சினிமாவின் முகத்தை மாற்றியவர் என்பது நிஜம். சினிமா பற்றிய, அவரின் படங்கள் பற்றிய முழுமையான உரையாடலாக வெளிவந்திருக்கும் நூல் இது. இந்நூல் மணிரத்னம் பற்றிய எதிர்மறையான அபிப்ராயங்களை மாற்றுகிறது என்றே சொல்லவேண்டும்.

இந்நூல் முழுமையும் பத்திரிக்கையாளர் பரத்வாஜ் ரங்கன் மணிரத்னத்துடன் பல்வேறு அமர்வுகளில் உரையாடியவைகளைத் தொகுத்துள்ளார். மணி அவர் படைப்புகளைப் பற்றி மிக நேர்மையாகத் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது முக்கியமானது. குறிப்பாக உரையாடுபவர், சில காட்சிகளைப் பற்றிய கூடுதல் அர்த்தங்களைச் சுமத்த முனையும்போது, ஆமாம் என்று ஒற்றைவார்த்தையில்  அதைத் தன் மேதாவித்தனமாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ளாதவராக இருப்பது அவரின் ஆளுமைக்கு ஒரு சான்று. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் சுருக்கமாக 'நான் அப்படி நினைத்து அந்தக்காட்சியை எடுக்கவில்லை. அது சாதாரணமானதுதான்' என்று மறுத்துவிடுகிறார்.
 அவருடைய ஒவ்வொரு படக்கதைகளும் உருவான விதம், படப்பிடிப்பு அனுபவங்கள், படங்களின் வெற்றி தோல்வி பற்றிய அவரின் பார்வை ஆகியன இளம் இயக்குநர்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.  தன் பட உருவாக்கத்தில் எழுத்தாளர்களைக் இணைத்துக் கொண்ட அனுபவங்கள், குறிப்பாக சுஜாதா, ஜெயமோகன் ஆகியோரோடு வேலைசெய்தமை பற்றியும் விரிவாகப் பேசியிருக்கிறார். இளையராஜா, ரஹ்மான் பற்றிய அவரின் கணிப்புகள், பணியாற்றிய போதான அபூர்வமான தருணங்களையும் பதிவு செய்துள்ளார். பாடல்களை கதை கூறலின் பகுதியாக மாற்றியவர் மணிரத்னம் என்ற வகையில் பாடல்களின் தேவை, உருவாக்க முறைகளைப் பற்றியதான பதிவுகள் சுவையானவை.

இந்த நூலில் விடுபட்ட அம்சம் என்பது மணிரத்னத்தின் படங்களைப் பற்றிய இன்னொரு தரப்பினரின் பார்வைவையை உரையாடியவர் விவாதத்திற்குள்ளாக்காததே. காரணம் பரத்வாஜ் ரங்கன் மணிரத்னத்தின் தீவிர விசிறியாகமட்டுமே தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். விசிறியாக இருந்ததனால் மட்டுமே அவரை அணுக முடிந்ததோ எண்ணவோ? ஆனாலும் இத்தகைய உரையாடல்கள் தமிழ்ச்சூழலுக்கு மிக அவசியமானவை.
  
 நம் இயக்குநர்கள் திரைக்கதைகளைப் புத்தகங்களாக வெளியிடுவதை விடுத்து தங்கள் பட உருவாக்க அனுபவங்களை நேர்மையாகப் பதிவு செய்வது எதிர்கால இயக்குநர்களுக்கு உரமாக அமையும். குறிப்பாக பாரதிராஜா, பாலச்சந்தர் போன்றவர்களும் இத்தகைய பதிவுகளைச் செய்யவேண்டும்.

மணிரத்னத்தின் எல்லாப் படங்களையும் உன்னிப்பாகப் பார்த்து மிகுந்த காலத்தைச் செலவழித்து இந்த உரையாடலை நிகழ்த்திய பத்திரிக்கையாளர் பரத்வாஜ் ரங்கன் உண்மையிலேயே பாராட்டுக்குறியவர்.  அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூலைத் தமிழில் அரவிந்த் சச்சிதானந்தம் சரளமாக மொழிபெயர்த்திருக்கிறார். தமிழில் கிழக்கு வெளியீடாக வெளிந்திருக்கிறது.

திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான வரவு.



என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.