புதன், 30 ஏப்ரல், 2014

வெஜைனா மோனோலாகிஸ் (THE VAGINA MONOLOGUES): பேசும் பெண்குறிகள்







எப்போதும் சென்னை வந்து இறங்கியவுடன் இரண்டு ஆங்கிலச் செய்தித்தாள்களையாவது வாங்கிவிடுவது வழக்கம். செய்திகளுக்காக அல்ல. நகரில் ஏதாவது நல்லது கெட்டது நடக்கிறதா என்று பார்க்கத்தான். கண்காட்சிகள், இசைநிகழ்ச்சிகள் கண்ணில் தட்டுப்படும். வாய்ப்பிருந்தால் ஒருநடை பார்த்துவிட முயற்சிப்பதுண்டு. இந்த முறை ஒரு நாடகத்தைப் பற்றிய சின்ன செய்தி தென்பட்டது. தலைப்பு வேறு ஆர்வத்தைத் தூண்டியது. முதல் நாள் முழுவதும் வேலை மும்முரத்தில் நினைவில் கொள்ளமுடியவில்லை. மறுநாள் தற்செயலாக (மாஜி) நாடகக்காரரான நண்பர் சுபகுணராஜனைச்  சந்திக்க நேர்ந்தபோது நாடகம் பற்றிய நினைவு வந்தது. பிற்பகல் 3 மாலை 5, இரவு 7 என மூன்றுகாட்சிகள் என்பதால் 7 மணிக்குப் போகலாம் என முடிவு செய்தோம்

தமிழ்நாட்டில் நவீன, பின்நவீன இத்யாதி நாடகம் என்றால்  பதட்டப்படாமல் போகலாம். ஏனென்றால்  இந்தமாதிரி நாடகங்களைப் பார்ப்பவர்கள் மொத்தமே 300 பேர்தான் தேறுவார்கள். அதிலும் 250பேர் நடிகர்கள், இயக்குநர்கள். மீதமுள்ள 50பேர் நடிகர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள். அந்த நினைப்பில் 6:30க்கு அல்லயன்ஸ் பிரான்சே அரங்குக்குப் போய்ச் சேர்ந்தோம்.  'நீங்கள் ஏற்கனவே புக் செய்திருக்கிறீர்களா?' என்றபோதுதான் ஆகா இது வேறு சமாச்சாரம் என்று புரிந்தது. கொஞ்சம் ஆறுதலாக நீங்கள் வெயிட் பண்ணுங்கள் புக் செய்து வராமல் போனால் உங்களுக்குக் கிடைக்கும் என்றார் வரவேற்பில் இருந்தவர். அப்போதுதான் ஆன் லைனில் புக்செய்யவேண்டும் என்பதும் கட்டணம் 300 ரூபாய் என்பதும் தெரியவந்தது. மூன்றுநாட்கள் தினசரி 3காட்சிகள் என்பதும் இது கடைசிகாட்சி என்பதும் கூடுதல் தகவல்களாகத் தெரிய வந்தன. சில வராமல்போன நல்லவர்களின் புண்ணியத்தில் அரங்குக்குள் சென்று அமர்ந்தபோது அரங்கம் நிறைந்திருந்தது

பார்வையாளர்களுக்குள்ளிருந்து பேசிக்கொண்டே எட்டுப் பெண்கள், இருபதிலிருந்து நாற்பதுகளுக்குள். குறிப்பாக எதையும் உணர்த்தாத அவரவர்க்குப் பிடித்த அல்லது சௌகர்யமான உடைகளில்... ஏதோ ஷாப்பிங் போனவர்கள் அரங்கத்திற்குள் நுழைந்தமாதிரி... இந்த மாதிரி எவ்வளோவோ பாத்தாச்சும்மா...என்று மனக்குரலில் பேசி முடிப்பதற்குள் அதிர்ச்சி வைத்தியத்தை ஆரம்பித்தார்கள். எந்தவிதமான சோடனைகளுமற்ற அரங்கங்த்தில் ஆங்காங்கே அமர்ந்தபின் பெண்குறிகளின் தனிமொழிகளாக...குறியே மனமாகவும் உடலாகவும் மாறும் விந்தை நிகழத்தொடங்கியது.



 தன்னைவிட்டு பிற பெண்களைப் புணரும் கணவனைப் பற்றிப் பேசும் நடுத்தரவயதுப் பெண்...தன் காதலனுடனான முதல் அனுபவத்தை விவரிக்கும் ஒரு எழுபதுவயது மூதாட்டி.. அறியாவயதில் தந்தையின் நண்பரால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதைச் சொல்லும் பெண்... பக்கத்துவீட்டு நடுத்தரவயதுப் பெண்ணால் ஒருபால் உறவுக்குள்ளாக்கப்பட்டவள்... தன் குறியின் அழகில் மயங்கிக் கிடந்த கணவனைப் பற்றிப் பேசும் பெண்...பாலியல் வல்லுறவுக்குள்ளான கிராமத்துப் பெண்......கடைசியாக தான்  ஒரு குழந்தையைப் பிரவித்ததை விவரிக்கும் பெண்...என்பதாக வடிவமைக்கப்பட்ட நாடகம்.

ஒவ்வொரு கதைக்குமிடையில் பார்வையாளர்களிடம் நேரடியான உரையாடலாக ஒருவர் கட்டியங்காரன் பாணியில் உரையாடி நாடகத்திற்கான ஒரு அரசியல் சங்கிலியை இணைத்துச் செல்கிறார். தொடக்கத்தில் பெண்குறியைப் பற்றிய விதவிதமான படிமங்களைப் பேசிச் செல்கிறார் ஒருவர். அடுத்ததாக பெண்குறி பற்றி உலகின் பல மொழி வார்த்தைகள், பலபகுதிகளில் கேலியாக, வக்கிரமாக, சங்கேதமாக எப்படியெல்லாம் உச்சரிக்கப்படுகின்றன என்பதை இன்னொருவர் சொல்லிச் செல்கிறார். உலகம் முழுவதும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையைப் பட்டியலிடுகிறார் இன்னொருவர். போஸ்னியாவிலும் இன்னும்பல பகுதிகளிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் உடல் ரீதியான வன்முறைகள் விரிவாகப் பேசப் படுகின்றன. இன்னொருவர் புணர்தலின் போது பெண்களின் முனகல் எப்படியிருக்கும் என்பதை விவரிக்கும்போது... ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கப்பெண், ஒரு பெங்காலிப் பெண், ஒரு கிறித்தவப் பெண், ஒரு மளையாளிப்பெண் என்பதாக நடித்துக்காட்டிய போது அரங்கம் அதிர்ந்து அடங்கியது.       . 

கடைசியாக ஒரு பிரசவத்தை விவரித்தலின் மூலமாக பெண்மையின் தாய்மையின் வலியை உணர்வையும் பேசிவிடுகிறது. அதற்காக முந்தைய காட்சிகளையெல்லாம் இதை நோக்கியதாக நகர்த்தி வந்ததாகவும் சொல்லமுடியாது. தாய்மையின் மகத்துவத்தைப் பேசுவதாகவும் எளிமைப் படுத்தமுடியாது. பெண்ணுறுப்பின் இன்பத்தை, வலியை, அவமதிப்பை, கொண்டாட்டத்தை பெண்களின் பார்வையில் சமரசமற்ற தொனியில் பேச முற்படுவதிலேயே இந்நாடகம் தனித்து நிற்கிறது.

 

மூலப்பிரதியைப் போதுமான அளவிற்கு இந்தியப் படுத்தியிருப்பது பார்வையாளர்களோடு கூடுதலான தொடர்பை உண்டாக்குகிறது. ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்ட இந்நாடகத்தை இந்திய மொழிகள் எதிலும் குறிப்பாக தமிழில் மொழிபெயர்ப்பதற்கோ நிகழ்த்துவதர்க்கோ சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்நாடத்தின் பிரதியை அரங்கத்தில் நிகழ்த்துவாதென்பது இந்தியச் சூழலில் எளிதான கற்பனையல்ல. அந்த வகையில் பெங்களூர் ‘குரைக்கும் நாய்கள்’ குழுவினர் அசாத்தியமான அரசியல் தெளிவுடனேயே இந்நாடகத்தை நிகழ்த்திவருகிறார்கள் என்பதை அவர்களின் ஈடுபாடும் நிகழ்த்துமுறையும் உணர்த்தியது. முழுக்க தனிமொழியாகவே (monologue) நிகழ்த்தப்படும் இந்நாடகத்தில் நடிகர்களாக மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்தார்கள். பேசத் தயங்குகிற, பேச இயலாத எந்த ஒரு விசயத்தையும் ஒரு கலைவடிவத்தால் கையாள முடியும் என்பதற்கு இந்நாடகம் ஒரு உதாரணம்.


இந்நாடகத்தின் மூல ஆசிரியர் பற்றி இணையத்தில் தேடியபோது... ஈவா என்ஸ்லர் (Eva Enslar) எனும் அமெரிக்க பெண்ணிய நாடகாசிரியர், செயல்பாட்டாளர் 1996இல் எழுதிய இந்நாடகம் 48 மொழிகளில் பெயர்க்கப்பட்டு 140 நாடுகளில் நிகழ்த்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறதுஓப்ரா வின்ஃபிரே, உஃபி கோல்ட்பர்க் உள்ளிட்ட பிரபலங்கள் இந்நாடகத்தில் நடித்திருப்பதாகத் தெரிகிறது. நியூயார்க்கில் பிறந்த ஈவா சிறுவயதில் தன்னுடைய 5 லிருந்து 10வயதுகாலகட்டத்தில் தந்தையால் வன்முறைக்கும் வல்லுறவுக்கும் உள்ளாக்கப்பட்டமையை தன்நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார். இவரின் ‘வி-டே’ (V-Day) எனும் அமைப்பு, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான வன்முறைகளைக் களைய செயல்படுமொரு அமைப்பாகும். வி- எனும் எழுத்து Victory, Valentine மற்றும் Vagina வைக் குறித்து நிற்கிறது. 2002இல் விஜினல் மோனோலாகிஸ் திரைப்படமாகவும் வந்ததாகவும் தெரிகிறது. படம் பார்க்கக் கிடைக்கவில்லை.


பெங்களூரைச் சார்ந்த 'குரைக்கும் நாய்கள்' (Barking Dods ) குழுவினர் பற்றி அறிய முற்பட்டபோது, அவர்கள் 2011லிருந்து பெங்களூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் குழு என்று தெரிகிறது. சினிமா, ஃபாஷன், புகைப்படம், விளம்பரம் என பலதுறைகளைச் சார்ந்தவர்களும் சேர்ந்து இயங்கும் இக்குழுவினர் 70திற்கும் மேற்பட்ட நிகழ்த்துதல்களைச் செய்திருக்கிறார்கள். தொடர்ந்த அவர்களின் செயல்பாடுகளும் எதிர்கால திட்டங்களும் நம்பிக்கையளிக்கக்கூடியவை.



தமிழ்நாட்டில் 80களில் ஒரு பாய்ச்சலாகத் தொடங்கிய நவீன நாடக அலை 90களைத் தாண்டுவதற்குள்ளாகவே ஓய்ந்து குளம் போல் தேங்கிவிட்டது. துர்கிர அவலம், ஸ்பார்டக்கஸ், ஊர்வலம், சூரியனின் முதல் கிரணத்திலிருந்து முதல் கிரணம் வரை, பல்லக்குத் தூக்கிகள் என்று தமிழில் பார்த்த நல்ல நாடகங்கள் நினைவில் வந்து போகின்றன. மதுரை, சென்னை, திருச்சி என்று நடந்த நாடகவிழாக்கள் தூரத்து நினைவுகளாக மாறிவிட்டன.  என்ன செய்ய.. கலைவறட்சிமிக்க ஒரு மாநிலத்தில் வாழநேர்கிற அவலத்தை நினைத்து நொந்துகொள்வதைத் தவிர?

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

பாம்பே டாக்கீஸ் 1 (Bombay Talkies) : 'அப்பா...நான் அலி அல்ல... நான் ஒரு ஹோமோசெக்ஸுவல்…'


இந்திய சினிமாவின் நூறாண்டு நிறைவை நினைவுறுத்தும் விதமாக 2013 இல் வெளிவந்திருக்கும் நான்கு குறும்படங்களை உள்ளடக்கிய பாம்பே டாக்கீஸ், இந்தி சினிமா உலகிற்கு ஒரு நாகரீகமான சமர்ப்பணம்.
தலைப்பில்லாத இந்த நான்கு படங்களை கரன் ஜோஹர், தீபங்கர் பானர்ஜி, ஜோயா அக்தர், அனுராக் காஸ்யப் ஆகியோர் இயக்கி இருக்கிறார்கள்.

மும்பையின் நடுத்தர வர்க்க குடியிருப்பு. வேகமாக வீட்டுக்குள் நுழையும் இளைஞன் அவினாஷ் படுக்கையிலிருக்கும் தந்தையின் சட்டையைப் பிடித்து எழுப்பி சுவரோரமாய்ச் சார்த்திநான் அலி அல்ல.. நான் ஒரு ஹோமோசெக்ஸுவல்நான் அலி அல்ல…’ என்று அழுகையும் ஆக்ரோஷமுமாய் கத்திவிட்டு பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியேறுகிறான். அம்மா செய்வதறியாது திகைத்துப் பார்த்துக் கொண்டிக்கிறாள்.


ஒரு மேல்நடுத்தரக் குடியிருப்பு. தொலைக்காட்சி சேனலில் பணிபுரியும் தேவும் ஒரு பத்திரிக்கையில் பணிபுரியும் காயத்ரியும் கணவன் மனைவி. முதுகு முழுவதும் தெரியும் படியான கவர்ச்சியான உடையணிந்து அலுவலகத்திற்குப் புறப்பட தயாராகிக் கொண்டிருக்கும் மனைவியாகிய காயத்ரியை சட்டைசெய்யாமல் சம்பிரதாயமாக விடைபெற்று வெளியேறுகிறான் தேவ். இல்லறவாழ்வின் சலிப்பும் பரஸ்பர ஆர்வமின்மையும் அப்பட்டமாய் தெரிகிறது.

காயத்ரியின் அலுவலகத்தில் மூன்றுமாதத்திற்கு வேலைசெய்ய வந்திருக்கும் அவினாஷ், காயத்ரியிடம் எடுத்த எடுப்பில்… ‘பை த வே .. நான் ஒரு gay.. ‘ என்கிறான். அவளும் சற்றும் சளைக்காமல்நீ ஒன்னும் டெர்ரிஸ்ட் இல்லையே…’ என்றவாறு சகஜமாகிறாள். இருவரும் நண்பர்களாக பழகத்தொடங்குகிறார்கள்.



சங்கோஜமில்லாமல் எல்லாவற்றையும் பேசிக்கொள்கிறார்கள். ஒருவனை ‘ gay’ என்று எப்படி அடையாளம் காண்பது? என்கிறாள். நீ மாதுரி ரசிகனா? ஶ்ரீதேவி ரசிகனா? என்று கேட்டால் தெரிந்துவிடும் என்கிறான். ஒருவன் ஶ்ரீ தேவி ரசிகன் என்றால் அவன் ஒரு ‘gay’ ஆகத்தான் இருப்பான் என்கிறான்கொஞ்ச நேரத்தில் காயத்ரி அந்த அலுவலகத்தில் திடகாத்திரமான ஒருவனை அழைத்துவந்து, அவினாஷ் இவர் ஶ்ரீ தேவி ரசிகராம்.. என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறாள்.

ஒரு நாள் அலுவலகத்தின் நடுவில் வைத்துகாயத்ரி.. எத்தனை தடவை நீங்க செக்ஸ் வைச்சுக்கிறீங்க.. என்கிறான்…. யோவ் நடு அலுவலகத்தில் என் செக்ஸ் வாழ்க்கையைப் பத்திச் சொல்லணுமாஎன்று தணிந்த குரலில் கோபிக்கிறாள்.. அவினாஷ் தொடர்ந்து நச்சரிக்கிறான்இரண்டு தடவை என்கிறாள்வாரத்துக்கு ரென்டு தடவைமோசமில்லை என்கிறான்.. இல்ல .. மாதத்திற்கு ரென்டு தடவைஎன்கிறாள்..


அவினாஷின் பிறந்த நாளன்று அவனை தன் வீட்டுக்கு டின்னருக்குக் கூப்பிடுகிறாள். என்னவோ அவினாசின் பேச்சும் நடவடிக்கைகளும் தேவுக்குப் பிடிப்பதில்லை. ஆனால் இருவருக்கும் ஒரு விசயத்தில் ஒத்த ரசனை இருப்பது தெரியவருகிறது. இருவரும் பழைய இந்திப்படப்பாடல் ரசிகர்கள் என்பதுதான் அது. ஆனால் அவினாஷுக்கு தேவை பிடித்துப் போகிறது. இப்போது காயத்ரிதேவ்  எனும் தம்பதிகளுக்கிடையே தன்னை வெளிப்படையாக ‘gay‘ என்று அறிவித்துக் கொள்ளும் அவினாஷின் வருகை என்ன செய்யக் காத்திருக்கிறது என்பதுதான் கதை. (முழுவதும் கதையைச் சொல்லி படம் உண்டாக்கும் சுவாரஸ்யத்தை குறைக்கக் கூடாதென்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்)


ஒரு சிறுகதைக்குண்டான தன்மையில், இடையில் ஆரம்பித்து இடையிலேயே முடிவற்று விடும் இந்தக் கதை மாறிவரும் இந்தியாவின் மாற்றுப் பாலினத்தவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறு முயற்சியாக இருக்கிறது. தன்னை மாற்றுப் பாலினத்தவராக உணர்ந்தும் வெளிப்படுத்த முடியாமல், வெளிப்படுத்தி குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு தற்கொலையைத் தீர்வாக்கும் இந்தியச் சூழலில் இத்தகைய படங்கள் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. மாற்றுப் பாலினத்தவரின் பிரச்சனைகளைப் பேசுகிற படம் இதுவல்ல என்றாலும் அவர்களை முக்கியப் பாத்திரங்களாக உலவவிடும்போது பொதுப்புத்தியில் அவர்களை சகஜமாக ஏற்றுக்கொள்கிற மனநிலை உருவாகும் என்று நம்பலாம்.

மனிதர்களில் எதிர்பால் (straight sex) அதாவது ஆண் x பெண் உறவு உள்ளவர்கள் 90% பேர். சுயபால் ஈர்ப்பு உள்ளவர்கள் (Homosexuals) 5% பேர் மட்டுமே. இருபால் ஈர்ப்புள்ளவர்கள் (By Sexual) 80% பேர் என்கின்றன ஆய்வுகள். ஒரு சுயபால் ஈர்ப்பு உள்ளவன் தன்னை வெளிப்படையாக வெளிப்படுத்திக் கொள்வதைச் சொல்லும் படமாக இருக்கும் அதே வேளையில் தான் இருபால் ஈர்ப்பு உள்ளவன் என்பதை ஒருவன் சந்தர்ப்பவசத்தால் கண்டுகொள்கிற படமாகவும் இதைக் கொள்ள முடியும். மொத்தத்தில் இந்திய சினிமா கையாளத் தயங்குகிற விசயத்தை எடுத்துக் கொண்டதற்காக இப்படத்தை ஆதரிக்க வேண்டும்.

மிக சுவாரஸ்யமான உரையாடல்களும் அழகான ஒளிப்பதிவும் மிகப் பொருத்தமான நடிகர்களும்  சிறப்பான இசையும் அற்புதமான திரைப்பட அனுபவத்தைச் சாத்தியமாக்குகின்றன. இந்தியாவில் சிறந்த பின்னனி இசையை வழங்கக் கூடியவராக அமித் திரிவேதியைக் குறிப்பிடலாம் என்று தோன்றுகிறது. இந்தியப் படங்களின் சாபக்கேடு பின்னனி இசைதான். இந்திப் படங்களில் இந்நிலை மாறிவருகிறது. இப்படத்தின் நான்கு படங்களிலும் இசை மிகச் சிறப்பான பங்கு வகிக்கிறது. கரன் ஜோஹரின் நேர்த்தியான இயக்கத்தில் வெளிவந்துள்ள நல்ல குறும்படம் இது.


வியாழன், 16 ஜனவரி, 2014

த குட் ரோட் (The Good Road ): இன்னும் மீதமிருக்கும் நம்பிக்கை..




இந்தியாவின் 60 ஆவது தேசிய திரைப்பட விருதுப் பட்டியலில் 2013இன் சிறந்த குஜராத்திப் படமாகத் தேர்வுசெய்யப்பட்ட படம் த குட் ரோட்’.. இந்திய நெடுஞ்சாலைகளில் வாரக்கணக்காய் சரக்குலாரிகளைச் ஓட்டிச் செல்லும் லாரி ஓட்டுநர்கள். அவர்களின் உதவியாளர்களான கீளீனர்கள். அவர்களை நம்பி இயங்கும் சாலையோர உணவகங்கள். விடுதிகள். விபச்சாரத் தொழில்கள். இந்தப் பின்புலத்தில்  இரண்டு குழந்தைகளின் வீடுதிரும்பல். அல்லது பெற்றோரைத் தொலைத்த இரண்டு குழந்தைகள்.

டேவிட் - கிரண் இருவரும் மேல் நடுத்தரவர்க்க தம்பதிகள். 7வயது மகனான ஆதித்யாவுடன் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்குக் காரில் சென்று கொண்டிருக்கிறார்கள். வழியில் சாலையோரக்கடையில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்குகிறான் டேவிட். அப்போது மனைவி முன் சீட்டிலும் மகன் பின்னாலும் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். டேவிட் கடைக்குச் சென்ற சிறிது நேரத்தில் சிறுவன் எழுந்து தந்தையைத் தேடி கீழே இறங்குகிறான். ஒரு நாய்க்குட்டியைப் பின் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் டேவிட், மகன் இறங்கியது அறியாமல் வண்டியைக் கிளப்பிச் சென்றுவிடுகிறான்.


பூனம் எனும் சிறுமி நகரத்திலிருந்து வீட்டு வேலையோ எதுவோ செய்து பிடிக்காமல் பாட்டியின் ஊருக்குச் சென்று கொண்டிருக்கும்போது பாதிவழியில் இறக்கிவிடப்பட்டு நெடுஞ்சாலையின் ஓரத்தில் இடிபாடான கட்டிடம் ஒன்றில் இவளைவிட கொஞ்சம் மூத்த சிறுமிகள் கும்பலாக இருப்பதைப் பார்க்கிறாள். தாகமும் பசியும் விரட்ட அடைக்கலம் கேட்கிறாள். அங்கிருக்கும் முதலாளி போன்றவன் அவளைநீ இந்த இடத்திற்குச் சரிப்படமாட்டாய்என்றுவிரட்டுகிறான். கடைசியில் சாயங்காலம் போய்விடவேண்டும் என்ற உத்தரவோடு அங்கிருக்கச் சம்மதிக்கிறான். இரவாகத் தொடங்கியதும் அந்த இடம் களைகட்டுகிறது. வண்ணவிளக்கொளியில் சிறுமிகளும் மிக இளம் வயதுப் பெண்களும் மலிவான ஒப்பனை அலங்காரங்களுடன் அணிவகுத்து நிற்கிறார்கள். அது ஒரு விபச்சாரம் நடக்கும் இடம் என்பதைப் புரிந்து கொள்ளும் விவரம் இல்லாத பூனம்... அவர்களைப் போலவே உடையணிந்து உலவ ஒருவன் அவளைத் தேர்வு செய்கிறான். பூனம் மறுத்து தப்பி ஓடுகிறாள்...


பப்பு ஒரு லாரி டிரைவர். மாமாவின் பராமரிப்பில் வளர்ந்து லாரியில் தன் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கும் நடுவயதுக்காரன். அவனுடைய லாரிமுதலாளி, லாரியின் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக லாரியை விபத்துக்குள்ளாக்கிவிட்டு ஓடிவிடும்படி கூறி ஒரு தொகையைக் கொடுக்கிறான். சிறுவன் இங்கிருந்தால் வீண் பிரச்சனைகள் வரும் என்று கருதி, சிறுவன் ஆதித்யாவை வழியில் இறக்கிவிட்டுவிடும்படி அவனுடன் அனுப்பிவைக்கிறான்.


சிறுவனைத் தேடும் பெற்றோர்கள் - ஆதித்யாவை வண்டியிலிருந்து அநாதரவாக இறக்கிவிட மனதில்லாத ப்பபு, ப்பபுவோடும் கீளீனரோடும் நட்பாகி லாரி பயணத்தை எந்தக் கவலையுமின்றி தொடரும் சிறுவன்விபச்சார விடுதியிலிருந்து பாட்டிவீட்டுக்கு இன்னொரு லாரியில் என்ன நடக்கக்கூடுமென்ற பயமற்ற குழந்தைத் தனத்துடன் பயணத்தைத் தொடரும் சிறுமி பூனம். பூனம் பயணம் செய்யும் லாரியும் சிறுவன் ஆதித்யா பயணம் செய்யும் லாரியும் ஒரே நெடுஞ்சாலையில் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்வதைத் தவிர பெரிய தர்க்கரீதியான தொடர்புகள் இல்லை. ஆனாலும் குஜராத் கட்ச் நிலப்பரப்பின் கரடுமுரடான தன்மையைப் போலவே நிச்சயமற்ற மனதைக் கணக்கச் செய்யும் சாமான்ய மக்களின் வாழ்க்கைமுறை குறுக்குவெட்டாக இப்படத்தில் துலக்கமாகிறது.


நெடுஞ்சாலைகளும் அது உருவாக்கும் புதிய வேலைகளும் வாழ்க்கைமுறைகளும் மனிதர்களும், அவர்களின் சட்டவிரோத வாழ்வியலும் அதற்குமுரணாக வழிந்தோடும் பக்தியும், அன்பும், கடமைஉணர்வும், மீதமிருக்கும் மனிதநேயமும் என ஒரு நம்பிக்கையூட்டும் விதத்தில் படத்தை நகர்த்தி முடிக்கிறார் இயக்குநர். குழந்தைகளின் அநாதரவான நிலை நமக்குள் ஏற்படும் பதட்டத்தை நாடகத்தனமாகக் கையாளமல் பக்குவமாக திரைக்கதையைக் கொண்டு செல்கிறார்.

பூனம் எனும் சிறுமி தற்காலிகமாக அந்த விபச்சார விடுதியில் தங்குகிறாள். அங்கு ஒருவன் அச்சிறுமியை தேர்வு செய்கிறான். அவ்விடத்தின் முதலாளி சிறுமியை அழைக்கிறான். அவள் மறுக்கிறாள். ‘இங்க இதுதான்.  இங்கவற்ரவங்க ... அதுக்காகத்தான் வற்றாங்க. சில நிமிஷங்கள்தான். வா.. ‘ என்கிறான்... பூனத்தின் ஒரு நாள் சிநேகிதியான இன்னொரு பதின்வயதுப் பெண்எங்களுக்கு ஒரு கொறையும் இல்ல... நீயும் இங்கயே இருந்துரு’  என்கிறாள். ஆனால் சிறுமி பூனம் மறுத்து நான் பாட்டியிடம் போகிறேன் என்கிறாள். ‘சரி வா... உன்னை அனுப்பிவைக்கிறேன்... என்று அவளை ஒரு லாரியில் ஏற்றி அனுப்புகிறான் அந்த முதலாளி. இந்தமாதிரி சிறுமிகளை வைத்து விபச்சாரம் செய்யும் ஒருவன் இப்படி இருப்பானா என்ன? என்ற கேள்வி வருவதற்குப் பதில்... இப்படியும் ஒரிருவர் இருக்கக் கூடும்தானே? என்பதைவிடவும் இப்படியும் ஒருவர் இருக்கட்டும்... என்று நம் மனம் கொள்ளும் ஆசுவாசம்.. மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது.


சிறுவன் ஆதித்யாவை வீண்தொந்தரவாக நினைக்கும் கிளீனர், ‘பாஸ் இவனை சீக்கிரம் இறக்கிவிட்டுவிடலாம்... எங்காவது போலீஸ் சோதனையில் மாட்டிக் கொள்வோம்’  என்று நச்சரிக்கும் போதும், முதலாளி போனில் பப்புவைக் கூப்பிட்டுஅவனை இறக்கி விட்டு விடு. அவன் என்ன ஆகிறான் என்பது முக்கியமல்ல.. நீ வேலையை ஒழுங்கா முடி... ‘ என உத்தரவிடும்போதும்  ‘ஏழு வயது சிறுவனை அப்படி கண்ட இடத்தில் இறக்கிவிட முடியாது. அவன் இப்போது என் பொறுப்பில் இருக்கிறான்.. ‘ என்று பேச்சைத் துண்டிக்கும் டிரைவர் பப்பு...மாதிரி ஆட்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று நம்பவேண்டியது இக்காலத்தின் தேவையாகவல்லவா இருக்கிறது. சுற்றிலும் பழகிய பெண்கள் பார்த்திருக்க கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கீறிய... புண்யவான்கள் வாழும் குஜராத்தில் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு நகைமுரணாக இருந்தாலும் அது விளைவிக்கும் நம்பிக்கை முக்கியமானது.


 குஜராத்தின் நெடுஞ்சாலைகளை மையப்படுத்திய மூன்று கதைகளைச் சொல்லவேண்டுமென்று நினைத்தேன்அதிலும் குழந்தைகள் வீடுதிரும்புதலைப் பற்றியதாக. என் மனைவியின் ஊரான குஜராத்திற்கு வரும்போதெல்லாம் கட்ச் பகுதி மக்கள் வாழ்க்கை என்னைத் தூண்டுவதாக இருந்தது எனும் இயக்குநர் கயான் கோரா (Gyan Correa) தான் விளம்பரத்துறையிலிருந்து,  திரைப்படம் எடுக்கத் தூண்டுகோலாக இருந்தது இரானிய ஐரோப்பிய படங்கள்தான் என்கிறார்.

எந்த தொழில்நுட்பத்தையும் தனியாகச் சொல்லவேண்டிய அவசியமில்லாமல்  ஒளிப்பதிவு, இசை எல்லாமே இணக்கமாகப் பொருந்திப் போகின்றன. பெரும்பாண்மை தொழில்முறையல்லாத நடிகர்கள், இயற்கையான படப்பிடிப்புச் சூழல்கள்  என்று ஒரு மாற்றுசினிமாவின் லட்சணங்கள் கச்சிதமாகப் பொருந்தியுள்ள படம்.

இந்த ஆண்டு சிறந்த வெளிநாட்டுப் படங்களின் போட்டிப் பிரிவுக்கு இந்தியாவிலிருந்து  ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப் பட்டுள்ள குட் ரோட் ‘,  ‘லஞ்ச் பாக்ஸ் எனும் இந்திப் படத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சென்றிருக்கிறது. ஒரு மகத்தான படமாக இல்லாவிட்டாலும் இந்தியாவின் மரியாதையைக் காப்பாற்றக் கூடிய படைப்பு என்று தைரியமாகச் சொல்லலாம்.




செவ்வாய், 14 ஜனவரி, 2014

திருமணம் எனும் நிக்கா: இந்த ஆண்டின் இனிய இசை வரவு..


நம்பிக்கையூட்டும் வரவாகவாகை சூட வாவில்அறிமுகமான இசையமைப்பாளர் ஜிப்ரான் மீண்டும்திருமணம் எனும் நிக்காஎனும் திரைப்படத்தின் மூலம் நம்பிக்கையூட்டும் பாடல்களுடன் களமிறங்கியுள்ளார். தமிழில் உலவிக் கொண்டிருக்கும் 200க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களில் ஒரு கை விரல்களுக்குள் அடங்குபவர்களே இசை என்பதற்கான நியாயத்தைப் புரிந்து இயங்குபவர்களாக உள்ளனர். அந்த வகையில் ஜிப்ரானுக்கு மெட்டும் இசைக்கருவிகளைக் கையாள்வதிலும் அரேஞ்மன்ட்டிலும் இருந்த முதிர்ச்சி முதல் படத்திலேயே வெளிப்பட்டது. ஆனால் முதல்படத்திற்குப் பின் அவருக்கு அமைந்த படங்களாலோ என்னவோ அவரின் வீச்சு எதிர்பார்த்தவிதத்தில் அமையவில்லை. ‘திருமணம் எனும் நிக்காபடத்தில் ரசிகர்கள் முணுமுணுக்கும் பாடல்களைத் தந்துள்ளார்.



சில்லென்ற சில்லென்ற காற்றிலே…’ இந்த ஆண்டின் சிறந்த மெலடிகளில் ஒன்றாகக் கருதத்தக்கது. அருமையான கோரஸில் ஆரம்பிக்கும்போதே ஆன்மாவைத் தொடுகின்ற மெலடியாக உருப்பெரும் அழகு தெரியத் தொடங்குகிறது. இசைக்கருவிகளின் துல்லியமும் இடையிசையும் மிக நேர்த்தியாக பாடலோடு இணைந்து கொள்கின்றன. சுந்தர்ராவ் மற்றும் கவுசிக் சக்ரவர்த்தி மற்றும்  முன்னா சவுக்கத் அலியோடு ஜிப்ரானும் பாடியிருக்கிறார். ஆண்குரல் அபாயகரமான உச்ச ஸ்தாயிக்குச் சென்று மீள்வது அருமையான இடமாக இருந்தாலும் பாடகர் சற்று அசௌகரியமாவது தெரியவே செய்கிறது. காதல் மதியும் சவுக்கத் அலியும் தமிழிலும் உருதுவிலும்? எழுதியிருக்கிறார்கள். ஒரு முறை கேட்டவுடன் ஒட்டிக்கொள்கிற மெட்டு. அதுதான் ஒரு பாடலின் முதல் தகுதி.


கண்ணுக்குள் பொத்திவைத்த செல்லக் கண்ணனே வாஒரு செமி கிளாசிக்கல் ரகம். சில ராகங்கள் ஊடாடுகிற பாடல். சாருலதாமணி, சாதனா சர்கம் விஜய் பிரகாஷும் பாடியிருக்கிறார்கள். இந்த ஆல்பத்தில் குரல்கள் மிகக் கச்சிதமாய் பொருந்தியிருக்கிற பாடல் இதுதான். சாருலதாவின் அடக்கமான கமகங்களும் சாதனா சர்கத்தின் இனிமை சொட்டும் குரலும் இருவரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும் விஜய்பிரகாஷின் உணர்ச்சித்தும்பும் அநாயசமாக பாடும் முறையும் கணேசின் ஜதிகளும் அற்புதமாக ஒன்றிணைந்த பாடல். இப்பாடலில் முன் இசையாகவும் இடையே வரும் ஜலதரங்கம் ஒரு புதிய உணர்வைத் தருகிறது. Sampling செய்த ஜலதரங்கமாக இல்லாமல் இரண்டு ஜலதரங்க கலைஞர்களை live ஆக இசைக்கச் செய்திருப்பது பாராட்டுக்குறியது.


யாரோ இவள்.. யாரோ இவள்..’ ஆண்குரலில் வரும் ஒரு சரணத்தோடு முடியும் பாடல். யாசின் நிஜார் எனும் பாடகர் புது வரவாக இருக்கக் கூடும். உச்ச ஸ்தாயிப் பாடல்.. நன்றாகவே பாடியிருக்கிறார். எழுதியவரும் ஒரு புது கவிஞரான பார்வதி. இந்தப்பாடலின் வயலின் இசைக் கோர்வைகள் மிக நேர்த்தியாகவும் சுகமாகவும் அமைந்திருக்கின்றன. இசையமைப்பாளரின் கற்பனைக்கும் திறமைக்கும் இது சான்று. ஜிப்ரானின் ட்ரேட் மார்க்காக இருக்கும் எளிமையான அழகான தாளக் கருவிகள் பாடலை தனியாக நிறுத்துகின்றன.


‘ஹாஜா ஜீ எனும் சிறிய பாடல் சுஃபி சாயல் உள்ள அழகான பாடல்.  அரிஃபுல்லா ஷா காலிப் மற்றும் ரிஃபாயி குழுவினர் பாடியது. இந்தப் படத்தின் பாடல்களில் இஸ்லாமிய பண்பாட்டின் இசைக்கூறான சுஃபி இசையின் சாயல் அவ்வப்போது தலைகாட்டுவது பாடல்களுக்கு புதிய மெருகை கொடுப்பதாகவே இருக்கிறது.

என் தாரா .. என் தாராநீயே என் தாரா..’ ஒரு சுமாரான மெலடியாக இருந்தாலும் பாடல்வரிகள் மெட்டின் காலைப் பிடித்து இழுப்பதுபோல் தோன்றுகிறது. தாராபூரா.. நேராஎனும் வார்த்தைகள் கேட்பதற்கு சுகமாக இல்லை. தமிழில் மெல்லோசை, வல்லோசை என்று உண்டு. ‘’, ‘போன்ற எழுத்துக்களில் சொற்கள் முடியும்போது அவ்வளவு இணக்கமாக இருப்பதில்லை. ‘ஆசை, ஓசைஎன்று முடிவதில் உள்ள சுகம் தாரா.. பூராவில் இருப்பதில்லை. சதாப் ஃபர்டி எனும் பாடகரும் சின்மயியும் பாடியிருக்கிறார்கள். சதாபுக்கு  உதித்நாராயணன் போல் குரல். பாடுவதும் ஏறத்தாழ அப்படியே.  மொழி புரியாமல் பாடுவது குரலில் வெளிப்படையாகவே தெரிவது ஒரு பெரும் குறைதான்.

ரயிலே ரா…’ ஒரு கூடுதல் மசாலா சேர்க்கும் முயற்சி. குழந்தைகளும் இணைந்து பாடியிருக்கும் இப்பாடல் படத்தின் காட்சிச் சூழலோடு ஒரு வேளை சிறப்பாக இருக்கக் கூடும். குழந்தைகள் விரும்பும் ஹிட் பாடலாக அமையக்கூடும். ஆனால் ஜிப்ரான் பெருமைப் படத்தக்க ஒரு பாடல் அல்ல என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

மொத்ததில் இந்த ஆண்டு நீண்டநாட்கள் ரசிகர்கள் விரும்பி கேட்கத்தக்க தரமான பாடல்களுடன் வந்திருக்கும் இசைத் தொகுப்பு ‘திருமணம் எனும் நிக்கா என்பது என் கணிப்பு.

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

The Secret life of Walter Mitty: மிட்டி என்ற பகல் கனவுக்காரன்



1939 இல் இதே தலைப்பில்  ஜேம்ஸ் துர்பர் (James Thurber) எழுதிய சிறுகதையைத் தழுவிய படம்தான் இது. 1947இல் இக்கதை திரைப்படமாக மாற்றப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக இப்போது 2013இல்.  
1883 இல் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட லைப் (Life) இதழ் பின்னாளில் புகைப்பட இதழியல் (Photo Journalism) வகையில் குறிப்பிடத்தக்க இதழாக விளங்கியது. 2009இல் மூடப்பட்டு இணைய இதழாக மாற்றம் பெற்றது. அச்சில் வரப்போகிற அதன் கடைசி இதழுக்கான வேலைகள் நடைபெறும்போது படத்தின் கதை தொடங்குகிறது. அந்த அலுவலகத்தின் புகைப்படப்பிரிவில் பொறுப்பாளராக இருக்கும் வால்டர் மிட்டி ஒரு பகல் கனவுப் பேர்வழி. அவ்வப்போது கனவுலகில் நாயகனாக சாகசங்களில் ஈடுபடும் சாமான்யன். அவர் பொறுப்பில் கடைசி இதழுக்கான புகைப்பட நெகட்டிவ் தொகுப்பில் 25 எண்ணுள்ளது  மட்டும் காணாமல் போயிருக்கிறது.  அதை அனுப்பிய புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் ஸான் ஓ கானல் ஒரு வித்யாசமான நபர். தொலைபேசி வைத்துக் கொள்ளாத தன் இருப்பை யாருக்கும் தெரிவிக்காத நபர். மற்ற நெகட்டிவ்களிலிருந்து அவரின் இருப்பைத் தெரிந்து கொள்ள முயலும் வால்ட்டர் மிட்டி, வேலை போய்விடும் சூழலில் ஸானைத் தேடி ஐஸ்லான்டுக்கும் கீரீன் லான்டுக்கும் ஆப்கானிஸ்தானை ஒட்டிய இமய மலைக்கும் பயணமாகிறார். வழியில் அவரின் பகல்கனவுகள் அவரோடு சேர்ந்து கொள்ள நமக்கு ஒரு சுவாரஸ்யமான சினிமா கிடைக்கிறது.


ஒரு சாதாரண கதையை சுவாரஸ்யமான எளிமையான திருப்பங்களோடு திரைக்கதையாக்கியுள்ள விதம் சிறப்பானது.
ஐஸ்லாந்து கிரீன்லாந்து சுற்றி இமயமலையில் கேமராவிற்குப் பின்னால் ஒரு பனிச்சிறுத்தைக்காகக் காத்திருக்கும் புகைப்படக்கலைஞர் ஓ கானலைச் சந்திக்கிறார் மிட்டி. வா... வந்து பார்... என்று வியூ பைன்டரைக் காட்டுகிறார். மிட்டி பார்க்கிறான். கானல் தேடிக்காத்திருந்த பனிச்சிறுத்தை. புகைப்படமாக்கு என்கிறான் மிட்டி. சில நேரங்களில் நான் அப்படித்தான். காமராவின் சத்தம் சிறுத்தைக்குத் தொந்தரவாக மாறக்கூடுமல்லவா... என்று கூறிவிட்டு கீழே உதைபந்தாட்டம் விளையாடும் இளைஞர்களோடு சேர்ந்து கொள்கிறான். மிட்டியும் அவர்களோடு இணைந்து கொள்கிறான்.


லைப் பத்திரிக்கையின் கார்ப்பரேட் இயந்திரத்தனமான வாழ்க்கைமுறை... வேலை .. இலக்கு... இல்லையேல் துரத்தியடித்தல்... என்ற வாழ்க்கைமுறைக்கு முற்றிலும் மாறான புகைப்படக்கலைஞனின் இலக்கற்ற திட்டமில்லாத பயணங்களால் ஆன வாழ்க்கைமுறை. இரண்டுக்குமிடையில் மிட்டி, மூச்சுத்திணறும் வாழ்க்கைக்குள் தன்னைத்தானே பகல்கனவுகளுக்குள் ஆழ்த்திக் கொள்வதன் மூலமாக வாழ்வை அர்த்தப் படுத்திக் கொள்ளும் யத்தனம் என்பதாக இப்படத்தை வாசிக்க இயலும்.

அற்புதமான காட்சிப்பின்புலங்களும், பென் ஸ்டில்லர் (Ben Stiller)   போன்ற அருமையான நடிகர்களும், (ஸான் பென் (Sean Penn), புகைப்படக் கலைஞராக சில நிமிடங்களே தோன்றுகிறார்) இப்படத்தை ஒரு அருமையான காட்சி அனுபவமாக்குகின்றன. (மதுரை நகரில் புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் ஐனாக்ஸ் திரையரங்கில் கச்சிதமான ஒலிஅமைப்புடன்  2014இல் நான் பார்த்த முதல் திரைப்படம். புத்தாண்டு நன்றாக ஆரம்பிப்பதான பிரமையை ஏற்படுத்துகிறது)


என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.