தமிழினி
எழுதிய தன்வரலாற்று நூலான ‘ ஒரு கூர்வாளின் நிழலில்’ தமிழீழ விடுதலை இயக்கத்தைப் பற்றிப்
பேசும் நூல்களில் மிக முக்கியமானதாக அமைந்துவிட்டிருக்கிறது. தனது கல்வியைப் பாதியில்
துறந்து, புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர் தமிழினி. இயக்கத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில்
தன்னை இணைத்துக்கொண்டு 18 ஆண்டுகள் தன் இளமையின் உச்சத்தை போராட்டக்களத்தில் கழித்த
ஒருவரின் வாக்குமூலமே இந்நூல். புலிகள் அமைப்பின் மையத்தை நோக்கிய அதிகாரக் குவிப்பும், உரையாடலுக்கு இடமில்லாத ராணுவக்
கட்டமைப்பும், காலத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்காத தலைமையின் முடிவுகளும் ஈழக்கனவை
முள்ளிவாய்க்காலில் மூழ்கடித்த வரலாற்று சோகத்தைத் தன் நேரடி அனுபவங்களினூடாக பதிவு
செய்திருக்கிறார் நூலாசிரியர். நூல் நெடுகிலும் இந்தியத் தழிழர்களை அரித்துக்கொண்டிருந்த
ஈழப்போராட்டம் பற்றிய எண்ணற்ற கேள்விகளுக்கான பதில்கள் சிதறிக்கிடக்கின்றன. இதயத்தை
நிறுத்திவிடும், நெகிழ்த்திவிடும் தருணங்கள் நூல் நெடுகிலும்… எல்லாவற்றையும் விட தன்
பதின் வயதில் போராட்ட இயக்கத்தில் இணைந்து, 18 ஆண்டுகளுக்குப் பின் தன் கனவுகளும் லட்சியங்களும்
நிர்மூலமான நிலையில், சிறைச்சாலைகளிலும் புனர் வாழ்வு மையங்களிலும் 4 வருடங்களைக் தொலைத்து,
2013 இல் வெளிஉலத்திற்கு வந்து திருமணம் முடித்து ஓராண்டுக்குள் புற்று நோய்ப் பாதிப்பினால்
2014 இல் மரணமடைந்த தமிழினியின் வாழ்வும் மறைவும் எழுப்பும் கேள்விகளுக்கு என்ன பதில்
இருக்க முடியும். போராட்ட காலத்தில் மரணத்தை பல முறை அருகாமையில் சந்தித்தவர். தான்
உயிர்தப்பிய சந்தர்ப்பங்களைத் ‘தற்செயலாகவே’ குறிப்பிடும் தமிழினிக்கு இயல்பான வாழ்க்கை
வாய்க்காமலே போனதன் தர்க்கத்தை எப்படிப் புரிந்து கொள்வது? இந்த வரலாற்று ஆவணத்தைக்
கடத்தி விட்டுச் செல்லத்தான் எல்லா இடர்களிலிருந்தும் அவர் உயிர்பிழைத்து வந்தாரோ என்னவோ?
மிக நேர்மையாக, அடங்கிய தொனியில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்நூல் கடந்த பத்தாண்டுகளில்
தமிழில் வெளிவந்துள்ள புனைவற்ற எழுத்துக்களில் முதன்மையானது என்று தயங்காமல் சொல்வேன்.
(காலச்சுவடு வெளியீடு – 2016 பிப்ரவரி – 255 பக்கங்கள் )