திங்கள், 15 ஆகஸ்ட், 2016

ஜோக்கர்: கொல்லைக்குப் போகமுடியாத வல்லரசு

ஜோக்கர் ஒரு சுதந்திரதின பரிசு. உரத்த குரலில் பேசும் எளிமையான படம். குறைகளைப் பொருட்படுத்தாமல் கொண்டாடுவதே சரி எனப்படுகிறது. 

வெள்ளி, 29 ஜூலை, 2016

கபாலி: திசை மாறும் விமர்சனங்கள்

கபாலி திரைப்படத்தைச் சார்பில்லாமல் விமர்சிக்க முடியுமா என்று தெரியவில்லை. வெளியாவதற்கு முன்பும் பின்புமாக ஊடகங்கள் பாய்ச்சிய வெளிச்சத்தில் கபாலியை ஒரு திரைப்படைப்பாக மட்டும் பேசமுடியாமல் விமர்சகர்கள் விக்கித் தவிக்கிறார்கள். கபாலியின் 'பலம், பலவீனம்' பற்றிய என்னுடைய கருத்தைத் தெரிந்துகொள்ள மேலே காணும் 'காணொளியைச்' சொடுக்குங்கள்.

வியாழன், 26 மே, 2016

ஒரு கூர்வாளின் நிழலில்: நெஞ்சைப் பிளக்கும் ஆவணம்






தமிழினி எழுதிய தன்வரலாற்று நூலான ‘ ஒரு கூர்வாளின் நிழலில்’ தமிழீழ விடுதலை இயக்கத்தைப் பற்றிப் பேசும் நூல்களில் மிக முக்கியமானதாக அமைந்துவிட்டிருக்கிறது. தனது கல்வியைப் பாதியில் துறந்து, புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர் தமிழினி. இயக்கத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் தன்னை இணைத்துக்கொண்டு 18 ஆண்டுகள் தன் இளமையின் உச்சத்தை போராட்டக்களத்தில் கழித்த ஒருவரின் வாக்குமூலமே இந்நூல். புலிகள் அமைப்பின் மையத்தை நோக்கிய  அதிகாரக் குவிப்பும், உரையாடலுக்கு இடமில்லாத ராணுவக் கட்டமைப்பும், காலத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்காத தலைமையின் முடிவுகளும் ஈழக்கனவை முள்ளிவாய்க்காலில் மூழ்கடித்த வரலாற்று சோகத்தைத் தன் நேரடி அனுபவங்களினூடாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். நூல் நெடுகிலும் இந்தியத் தழிழர்களை அரித்துக்கொண்டிருந்த ஈழப்போராட்டம் பற்றிய எண்ணற்ற கேள்விகளுக்கான பதில்கள் சிதறிக்கிடக்கின்றன. இதயத்தை நிறுத்திவிடும், நெகிழ்த்திவிடும் தருணங்கள் நூல் நெடுகிலும்… எல்லாவற்றையும் விட தன் பதின் வயதில் போராட்ட இயக்கத்தில் இணைந்து, 18 ஆண்டுகளுக்குப் பின் தன் கனவுகளும் லட்சியங்களும் நிர்மூலமான நிலையில், சிறைச்சாலைகளிலும் புனர் வாழ்வு மையங்களிலும் 4 வருடங்களைக் தொலைத்து, 2013 இல் வெளிஉலத்திற்கு வந்து திருமணம் முடித்து ஓராண்டுக்குள் புற்று நோய்ப் பாதிப்பினால் 2014 இல் மரணமடைந்த தமிழினியின் வாழ்வும் மறைவும் எழுப்பும் கேள்விகளுக்கு என்ன பதில் இருக்க முடியும். போராட்ட காலத்தில் மரணத்தை பல முறை அருகாமையில் சந்தித்தவர். தான் உயிர்தப்பிய சந்தர்ப்பங்களைத் ‘தற்செயலாகவே’ குறிப்பிடும் தமிழினிக்கு இயல்பான வாழ்க்கை வாய்க்காமலே போனதன் தர்க்கத்தை எப்படிப் புரிந்து கொள்வது? இந்த வரலாற்று ஆவணத்தைக் கடத்தி விட்டுச் செல்லத்தான் எல்லா இடர்களிலிருந்தும் அவர் உயிர்பிழைத்து வந்தாரோ என்னவோ? மிக நேர்மையாக, அடங்கிய தொனியில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்நூல் கடந்த பத்தாண்டுகளில் தமிழில் வெளிவந்துள்ள புனைவற்ற எழுத்துக்களில் முதன்மையானது என்று தயங்காமல் சொல்வேன். (காலச்சுவடு வெளியீடு – 2016 பிப்ரவரி – 255 பக்கங்கள் )   

புதன், 2 மார்ச், 2016

விசாரணை: எதற்கான யதார்த்தம்…?


ஊடகங்களின் பாராட்டொலிகள் உச்சத்தை எட்டியபிறகே ‘விசாரணையைப்’ பார்த்தேன். வெற்றிமாறனின் முந்தைய படத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது இதை ஒரு ‘.well crafted movie’ என்று சொல்ல முடியவில்லை. ஆனால் படம் முடியும் தறுவாயில் மூன்று நண்பர்களைச் சாகக் கொடுத்து மிச்சமிருப்பவர் என்று நூலாசிரியர் சந்திரக்குமாரின் குடும்பப் படத்தைக் காட்டும்போது படத்தின் எந்த தனிப்பட்ட காட்சியும் ஏற்படுத்தாத உணர்ச்சிமயத்திற்கு ஆட்பட்டு இருக்கையைவிட்டு எழமுடியாத நிலைக்கு ஆளானேன். ஆக ஒரு ரத்தமும் சதையுமான சக மனிதனுக்கு, இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனொருவன் இக்கதையின் பாத்திரம் எனும் உணர்வே படத்தின் பெரும் பலமாய் அமைந்திருக்கிறது.

படம் முடிந்து வந்த வேகத்தில் வாங்கி வைத்திருந்த சந்திரகுமாரின் ‘லாக்கப்’ நூலை வாசித்து முடித்தபோது ‘உண்மைக்கதை’ என்ற பின் ஒட்டு முழு உண்மையல்ல என்ற உண்மை புரிந்தது. ஒரு வழக்கில் குற்றவாளிகளாக்க இழுத்துச் செல்லப்படும் இளைஞரும் அவர் நண்பர்களும் சந்தித்த காவல்நிலைய சித்திரவதைகளே சந்திரக்குமாரின் நூல். இது திரைப்படத்தில் 25% மா? 50% மா? என்பதை பார்த்தவர்கள் யூகித்துக்கொள்ளலாம். மூலநூலாசிரியரின் கதை முடிந்தபின் தமிழ்நாட்டுப் போலீசிடம் மாட்டுவது, ஆடிட்டரின் கதை, ஏ.டி.எம். கொள்ளையர்களாக சித்தரிக்கப்பட்டு என்கவுண்டர் செய்யப்படுவது… எல்லாமே இயக்குநரின் புனைவுகள். ஒரு உண்மைச் சம்பவத்தோடு புனைவைச் சேர்க்கக் கூடாது என்று விதிகள் எதுவும் இல்லை. ஆனால் இயக்குநர் ஊடகங்கள் மூலமாகவும் படத்தின் இறுதியில் இணைக்கும் குறிப்பின் மூலமாகவும் இது மொத்தமும் சந்திரக்குமாரின் கதை போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார். இது இயக்குநரின் கலை நேர்மைக்கு உகந்ததாக இல்லை. இது அப்பட்டமான வணிகத் தந்திரம்போலவே  தோன்றுகிறது. உலகப்பார்வையாளர்களுக்கான, விருதுகளுக்கான பாதையை வெற்றிமாறன் ஒரு வழியாகக் கண்டடைந்துவிட்டார் என்று நம்பலாம். ஆனால் அது குறுக்குப்பாதைதான் என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.  எப்படியானால் என்ன? தமிழ்சினிமாக் குப்பைகளின் மத்தியில் இது ஒரு ரத்தினம்தான்.

      இரண்டாவதாக எனக்கு நெருடலாகப் பட்டது… இந்தப்படம் பார்வையாளனுக்கு எதைக் கடத்த முயல்கிறது என்ற விசயம். காவல்துறையும் அரசியல் மேல்மட்டங்களும் இணைந்துவிட்டால் அங்கே பூங்காவில் தூங்கி எழும் அன்றாடம் காய்ச்சியும் கோடிகளில் புரளும் ஆடிட்டர் போன்ற மேல் நடுத்தரவர்க்கத்தினனும் ஒன்றுதான் என்பதுதான் செய்தியா?. படம் முடிந்து வெளிவரும் பார்வையாளர்களின் முகங்கள் பீதியால் நிறைந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. படம் முடிஞ்சு வீட்டுக்குப் போகவே பயமாயிருந்தது என்று ஒரு நண்பர் சொன்னார். எதையும் எப்படியும் சமாளித்து விடும் காவல்துறையைப் பற்றிய சித்தரிப்புகள் உண்மையின் பகுதிகள்தான். நடப்பு இதைவிட மோசமானதாகவும் இருக்கக்கூடும். ஆனாலும் இந்த யதார்த்தம் எதற்காக? பொதுமக்களின் சமூக உளவியலில் இப்படம் நிகழ்த்தும் தாக்கம் காவல்துறைக்கே சாதகமானதாகத் தோன்றுகிறது. எங்ககிட்ட வச்சுக்கிடாதீங்க பொதுமக்களே… என்று காவல்துறை சொல்கிற ஒரு படமாக மாறிவிடுகிறது. ‘இப்படி ஒருவருக்கு நடந்தது. அதை அப்படியே சொல்லியிருக்கிறேன். நான் என்ன செய்ய?’ என்று இயக்குநர் தப்பித்துவிட முடியாது. ஏனென்றால் அவ்வளவு புனைவுகளைக் கதையில் இணைத்தவர் ஏன் இப்படி ஒரு நம்பிக்கை வறட்சியை, பயத்தை, கையறுநிலையை பார்வையாளர்களின் மனங்களில் விதைத்தார் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மூன்றாவதாக ஏன் இதையெல்லாம் விட புனைவுத்தன்மையும் அதிரவைக்கும் சம்பவங்களும் இணைந்த பல நாட்டு நடப்புகளை நம் இயக்குநர்கள் பாரா முகத்துடன் கடந்து போகிறார்கள்? என்ற துணைக்கேள்வியும் எனக்குள் தேவையில்லாமல் எழுந்ததை தவிர்க்க இயலவில்லை. விமர்சனம் என்பது ஒரு படத்தை புகழ்வதற்கோ திட்டித்தீர்ப்பதற்கோ மட்டுமானதல்ல என்றே நான நம்புகிறேன். ஒரு படைப்பை முன்வைத்து  நேரடித் தொடர்பு இருந்தும் இல்லாமலும் கூட நம்மை கிளர்த்தும் சிந்தனைகளையும் சொல்லிப்பார்க்கலாம்தானே. 20ஆண்டுகளுக்கு மேல் வழக்காக நடந்த ‘வாச்சாத்தி போலீஸ் வன்முறை’ ஒரு அற்புதமான திரைப்படத்திற்கான சம்பவம் அல்லது வரலாறு. கம்யூனிச இயக்கத்தினர் முன்னெடுத்து நடத்திய வரலாறு காணாத வரலாறு. பெண்களைக் கூட்டு வல்லுறவு செய்த காவல்துறை, அதை மறைக்க அரசு எந்திரம் செய்த முயற்சிகள்.. எல்லாவற்றையும் கடந்து அச்சம்பவத்தில் சம்மந்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட (240 என்று நினைவு) அத்தனை பேரும் குற்றவாளிகள் எனத்தீர்ப்பு எழுதப்பட்டபோது குற்றவாளிகளில் 50பேருக்கும் மேல் மரணமடைந்திருந்திருந்தார்கள். பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்த இழப்பீட்டைப் பெறுவதற்கான போராட்டம் தனிக்கதை…ஆனால் இதை நம் இயக்குநர்கள் தொடமாட்டார்கள். ஏனெனில் இதைப் படமாக்கினால் தி.மு,க., அ.தி.மு.க., அரசுகளைத் தொட்டாகவேண்டுமே? அதெல்லாம் நடக்கிற காரியமல்லவே! அதனால்தான் ஒருவேளை இதையெல்லாம் கண்டும் காணாமல் போய்விடுகிறார்கள் போலும்.


தமிழகத்தில் சினிமாத் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். சினிமாவைக் கலாப்பூர்வமாகக் கையாளக்கூடியவர்களும் பத்துக் கணக்கில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் சமூக அவலங்களைப் பேசமுயலும் போது அதிகார மையங்களை நோக்கிக் குரலை உயர்த்தும் துணிச்சல் உள்ளவர்களைத்தான் காணமுடிவதில்லை.

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.