திங்கள், 8 டிசம்பர், 2014

காவியத்தலைவன் : மேயாத மானைத் தேடி...





ஒரு இசைக்கலைஞன். சிறுபிராயத்திலே வியக்கத்தகு திறமை கொண்டவனாக விளங்குகிறான். வாத்தியங்களை வாசிப்பதிலும் சொந்தமாக இசைக்கோர்வைகளை உருவாக்குவதிலும் அவனிடம் வெளிப்படும் மேதமை அனைவரையும் வியக்க வைக்கிறது. இருபதுகளைத் தாண்டும்போது அவன் சாதனைகள் உச்சத்தை எட்டுகின்றன. ஆனால் அதற்குள் அவன் கேளிக்கைப் பிரியனாகவும், குடி விரும்பியாகவும் மாறியிருக்கிறான். ஆனால் அவன் படைப்பாற்றல் முனையளவும் சேதப்படவில்லை. அதே காலத்தில் அந்தப் புகழ்பெற்ற கலைஞனைப் போலவே இன்னொரு சிறுவனும் முறையாக இசை கற்றுக்கொள்கிறான். கடவுள் பக்தி மிக்கவனாகவும், எவ்வித இச்சைகளற்றவனுமாக தன்னைப் பேணிவருகிறான். ஆனாலும் அவனால் முந்தையவனைப்போல் ஆகச் சிறந்த படைப்புகளை உருவாக்க முடிவதில்லை. கடவுளிடம் கேட்கிறான். ‘இறைவா உன்னையும் இசையையும் தவிர வேறெதையும் நான் நினைத்தவனில்லை. ஆனால் அவனோ கேளிக்கைகளில் திளைப்பவனாகவும் தீயவற்றை விலக்காதவனாகவும் இருக்கிறான். ஆனால் என்னால் ஏன் அவனைப்போல் உன்னதமான படைப்புகளை உருவாக்க முடிவதில்லை. அவனிடம் பீரிட்டெழும் இசை எனக்கேன் வாய்ப்பதில்லை’.... எனக் கதறுகிறான். இது ‘அமேடியஸ்’ படத்தின் ஊடிழைகளில் (Subtext) ஒன்று. மொசார்ட்டின் வாழ்க்கைக் கதையாக விரியும் திரைப்படத்தில் மொசார்ட் வாழ்ந்த காலத்தில் அவன் சமகாலத்தவனாக இருந்த சாலியாரி என்பவனின் ஏக்கமாக வெளிப்படும் உபகதைதான் அது. இதே மையத்தைக் கொண்டியங்கும் படமாகவே ‘காவியத்தலைவனும்’ இருக்கிறது.

அதற்காக வசந்தபாலன் மேற்குறிப்பிட்ட படத்தை தழுவிவிட்டார் என்று சொல்ல முயல்வது நம் நோக்கமில்லை. அமேடியஸை பார்க்காமலேயே கூட இத்தகைய ஒரு கருவை தனதாக்கியிருக்க முடியும்.  ஒருவகையில் வசந்தபாலன் மிக அருமையான அரிதான ஒரு கதைக்களத்தையும் கருவையும்தான் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கதைக்களத்தின் / கதாபாத்திரங்களின் நம்பகத்தன்மையை (authenticity) உயிர்ப்புடன் பதிவுசெய்வதற்கு மெனக்கெடவில்லை. குறிப்பாக சினிமாத்தனமான அரங்க அமைப்புகள், அரங்கப் பொருட்கள், ஒப்பனை, ஆடை அணிகள் நாடகக் கலைஞர்களின் வாழ்வியலுக்கு அந்நியமாகத் தெரிகின்றன. ஜமீன் வீடு, நாடகக் கம்பெனி, நாடகக் கொட்டகை, மேடையில் காணப்படும் திரைச்சீலைகள், நடிகர்களின் கீரீடங்கள் இன்னபிற அலங்காரங்கள் ஆகியனவற்றில் காணப்படும் கூடுதல் பளபளப்பு தமிழ்சினிமாவுக்கே உரியது.


சங்கரதாஸ் சுவாமிகளை ஒத்த நாடகக் கலை ஆளுமைகளை நினைவூட்டும் சிவதாச சுவாமிகள். அவரிடம் சிறுவயதிலிருந்து வளர்ந்து வரும் இரண்டு நாடகக் கலைஞர்கள். அங்கு வந்து சேரும் நாயகி. அவளை ஒருவன் விரும்ப அவளோ இன்னொருவனை விரும்புகிறாள். நாயகி விரும்பும் நாயகன் நாடகம் போட வந்த இடத்தில் ஜமீன் பெண்ணை காதலிக்கிறான். நாயகனோடு சேரமுடியாமல் மணமுடைந்த ஜமீன் மகள் தற்கொலை செய்து கொள்கிறாள். குரு நாயகனுக்கு சாபமிடுகிறார். நாயகன் காணாமல் போகிறான். நாயகனுக்கும் சகநடிகனுக்குமான பொறாமை வஞ்சகமாகவும் துரோகமாகவும் மாறுகிறது. நாயகன் மரணிக்க ஒரு துன்பியல் நாடகமாக கதை நிறைவுறுகிறது. ஒரு முழுநீளத்திரைப்படத்திற்கான கதையும் நிகழ்வுகளும் திருப்பங்களுமாக கனமான திரைக்கதையாகத்தான் ‘காவியத்தலைவன்’ உருப்பெற்றிருக்கிறது. ஆனால் படமாக்கலில் இயக்குநர் அதைத் தன் தோளில் சுமக்கும் வலுவற்றிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

பொதுவாக விளையாட்டு, கலை பற்றிய படங்களில் அந்தக் கலையின் உச்சத்தை தொடுகின்ற தருணங்கள் மிக முக்கியமானவை. ஸ்வான் (Swan) என்ற படத்தில் நாயகி பாலே நாடகத்தில் பிரதானப் பாத்திரமேற்கிறாள். மிகுந்த போட்டிக்கிடையில் இயக்குநருக்குத் தன்னையே தாரைவார்த்து அந்த வேடத்தைக் கைப்பற்றுகிறாள். நாடகத்தின் உச்சகட்டக் காட்சியை உயிர்ப்பிக்கத் தன் உயிரையே கொடுக்கிறாள். ஏனெனில் பாலே நடனத்தின் உச்சத்தைத் தொடுவதுதான் அவள் லட்சியம். அமேடியஸ் திரைப்படத்தில் மொசார்ட்டை ஒரு பிறவிமேதை என்று பிரஸ்தாபிக்கிறார்கள். அதை பார்வையாளர்கள் நம்பும்விதமாக காட்சிப்படுத்தியாக வேண்டுமே.. மொசார்ட் ஏறத்தாழ மரணப் படுக்கையில் இருக்கிறார். தான் எழுதித்தருவதாகச் சொல்லி முன்பணம் வாங்கியிருந்த ஒரு இசைக்கோர்வையை முடித்துக் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. மொசார்ட்டின் மேல் வாழ்நாள் முழுவதும் பொறாமை கொண்டவனான சாலியாரி அருகில் இருக்கிறான். என்னவென்றே தெரியாத வியாதியால் உடல்நலம் குன்றத்தொடங்கியிருக்கிறது. மொசார்ட்டால் இசைக்குறிப்புகளை எழுத முடியாத நிலை. நீங்கள் சொல்லுங்கள் நான் எழுதுகிறேன் என்கிறான் சாலியாரி. மொசார்ட் அவருடைய கடைசி சிம்பொனியை அடுக்கடுக்காகச் சொல்ல ஆரம்பிக்கிறார். சாலியாரி எழுதுகிறான். சில வரிகள் எழுதி முடித்ததும் மொசார்ட் அதைவாங்கி சரிபார்ப்பதற்காக மனதுக்குள் வாசிக்கத் தொடங்க அவர் காதுகளுக்குள் ஒலிக்கும் இசை பொங்கிப் பிரவகிக்கும்போதுதான் பார்வையாளர்களுக்கு மொசார்ட்டின் மேதமை மனதைத் தொடும். இசைக்கருவியையே தொடாமல் மனதுக்குள்ளேயே உருவாகும் இசையை அடுக்கடுக்காக ஒன்றோடொன்று இயைபு கெடாமல் எழுதுவதென்பது படைப்பாற்றலின் உச்சம் என்பதை வெளிப்படுத்துவதாக அக்காட்சி இருக்கும். ஏன் தமிழில் கூட சிந்து பைரவி திரைப்படத்தில் ஜே.கே.பி. பாத்திரத்தை உயிர்ப்பிப்பது ‘மரிமரி நின்னேயும்’ ‘பூமாலை வாங்கி வந்தேன் பூக்களில்லையேயும்தான்’. ஆனால் மேடைநாடகக் கலையின் பொற்காலத்தில் வாழ்ந்த இரண்டு நடிகர்களைப் பற்றிய படத்தில் அந்தக்கால நாடகங்கள், மேடையிலான சுவாரஸ்யங்கள், நடிப்பின் உச்சங்கள் என்று எதையுமே அழுத்தமாகப் பதிவு செய்ய முயலவில்லை.


பிரிதிவிராஜ் சிறந்த நடிகர்தான் என்றாலும் அவருடைய மளையாள உச்சரிப்பு ஒரு தமிழ்நாடக நடிகர் பாத்திரத்திற்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதை இயக்குநர் எப்படிப் புறக்கணித்தார் என்று விளங்கவில்லை. நாசரின் மீசையும் சிகை அலங்காரமும் சிலம்ப வாத்தியார் பாணியில் இக்கிறது. அந்தக்காலத்தில் பாகவதர் கிராப் என்று ஒரு பாணியே உருவாகியிருந்ததான பதிவுகள் உண்டு.

இந்தப்படத்தோடு நேரடித்தொடர்புடைய மளையாளத்திரைப்படமான ‘நாடன்’ என்ற படம் பற்றி இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. அந்தத் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட மூன்று தலைமுறை நடிகர்கள், நாடகங்கள் அதனூடான நாடகக் கலைஞர்களின் பிரத்யேகமான வாழ்க்கை முறை அவர்களின் பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலத்தைக் கண்முன் கொண்டுவரும் இசை என்பதாக அப்படம்  அமைந்திருந்தது.

 
கடந்த காலத்தை ஒப்பனையில்லாமல் காட்சிப்படுத்துவது தமிழ் இயக்குநர்களுக்கு பெரும்பாலும் கைகூடுவதில்லை. ராஜராஜசோழனிலிருந்து ஒரு சாபம் போல் இது தொடர்கிறது. முழு ஒப்பனையில் தெருக்களில் நடிகர்கள் ‘நாடகம் பாக்க வாங்க’ என்று  கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைக்கத் தொடங்குவதிலிருந்து ஒரு விலகல் தென்பட ஆரம்பிக்கிறது. யாதார்த்தம் என்பது ஒன்று. சினிமா யதார்த்தம் என்பது இன்னொன்று. தமிழ்சினிமா யதார்த்தம் என்பது எங்குமில்லாத இன்னொன்று. வசந்த பாலனும் அத்தகைய தமிழ்சினிமா யதார்த்தத்தினூடான ஒரு காலத்தையே திரையில் சமைத்திருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து வேறுபட்ட கதைக்களங்களுக்குள் நுழைந்து பார்க்கும் வசந்தபாலனின் சாகக மனப்பான்மையை பாராட்டாமல் இருக்க முடியாது. 

1 கருத்து:

  1. பிரபா,
    நல்ல அலசல் .
    வசந்த பாலனின் தொடர் முயற்சிகளை பாராட்டவே வேண்டும்
    ஆனால் நீங்கள் குறிப்பிட்ட யாதார்த்தமில்லாத காரியங்களை தெரிந்து செய்தாரா தெரியாமல் செய்தாரா என்பதில்தான் மற்ற விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.
    படத்தின் இசையைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே ?

    பதிலளிநீக்கு

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.