பழைய மாணவர் பூபதி
இரண்டு நாட்களுக்கு முன்னால் கல்லூரி வாசலருகில் ‘தோன்றினார்’ என்றுதான் என்றுதான்
சொல்ல வேண்டும். பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தேன் உங்களைப்பார்த்ததும் வந்தேன் என்றார்.
என்ன விசேசம் என்றேன். எங்க ஊர் பக்கத்தில முளையூர்ல நாலு வருசத்துக்கு ஒருதரம் நடக்குற
கூத்து இன்னைக்கு ராத்திரி இருக்கு வற்றீங்களா? என்றார். காட்டுமாட்டுக்கூத்து , கரடிக்கூத்து
என்று இரு கூத்துகள் நடக்கப் போவதாகவும், ரெம்ப வித்யாசமா இருக்கும் என்பதோடு நிறுத்திக்
கொண்டார். வருவதாக இருந்தால் அலைபேசியில் பேசுங்கள் என்றும் கூறிச் சென்றார். ‘என்ன
சாமி’.. என்றபோது ‘அரவான் கோயில்’ என்றார். அரவானுக்கு இந்தப்பகுதியில் கோயில் இருப்பதும்,
அவருக்கு நாலுவருசத்துக்கு ஒரு திருவிழா இருப்பதும் கூடுதல் வசீகரமாக இருந்தது.
கிராமத்துத் திருவிழாக்கள்
பார்த்து நாளாகிவிட்டது என்பதாலும் கேள்விப்படாத கூத்துப் பெயராக இருக்கிறதே என்பதாலும்
போய்வரலாம் என்று தோன்றியது. முளையூர் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் கிராமம்
என்பதால் ஆர்வமானவர் யாரையாவது துணைக்குக் கூட்டிச்செல்லலாம் என்ற யோசனையில் பேராசிரியர்
ஹரிபாபுவுக்கும் நாடகங்களில் அநாவசிய ஆர்வம்
காட்டிவரும் என்னுடைய மாணவரும் யோகா குருவுமான ஆனந்துக்கும் அழைப்பு விடுத்தேன்.
இரவு 10:00 மணிக்கு
கிளம்பி நத்தம் என்ற ஊரில் பூபதியை இணைத்துக் கொண்டு நத்தம் - திண்டுக்கல் சாலையில்
பிரிந்து செல்லும் சிறுசாலையில் சில கிலோமீட்டர்களில் சுற்றிலும் உயரமில்லாத மலைகள்
சூழ இருக்கும் கிராமம் முளையூர் அடைந்து காரை நிறுத்திவிட்டு ஊருக்குள் நுழைந்தபோது
மணி 11 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. ட்யூப் லைட்டுகள், சீரியல் பல்புகள் (சீரியல் என்பது
சரியா தெரியவில்லை, அப்டித்தான் சொல்லிக்கிட்டு வற்றோம் ரெம்ப காலமா...). ஆனால் வழக்கமான
ஒலிபெருக்கி அலறல்கள் இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. கடலை பொரிக் கடைகள்.. ரத்தச்
சிவப்பான சர்பத் கடைகள்... மிளகாய் பஜ்ஜிக்காக வருசக்கணக்காய் கொதிக்கும் எண்ணெய்ச்
சட்டிகள்... ஜெயன்ட் வீல்... என்று அச்சு அசலான திருவிழாக் கோலம். மனசுக்குள் சின்ன
வயது உற்சாகம் பரவ ஆரம்பித்தது. சற்றுதூரம் நடந்தவாறே நோட்டமிட்டபோதுதான் கவனித்தேன்.
யாருடைய காலிலும் செருப்பு இருக்கவில்லை. விசாரித்தபோது பூபதி சொன்னார். ஆமா செருப்புப்
போடக்கூடாது.. கழற்றி காரில் போட்டுவிடலாம் என்றார். வழியில் பார்த்தபோது மூன்று போலீஸ்காரர்களும்கூட
செருப்பில்லாமல் தேநீர் கடையில் நின்று கொண்டிருந்தார்கள்.
பக்கத்துல போய்
உக்காராட்ட ஒண்ணும் தெரியாது.. வாங்க எடம் புடிப்போம்.. என்றார் பூபதி. கோயில் இருக்கும்
மைதானம் கண்மாய் கரையை ஒட்டி ஆலமரங்களுடன் விசாலமானதாக சினிமா கிராமம் மாதிரி இருந்தது.
ஏற்கனவே ஒரு பத்தாயிரம்பேர் குடும்பம் குடும்பமாக ஜமுக்காளங்களையும் பாய்களையும் விரித்து
வசதியாய் உட்கார்ந்திருந்தார்கள். நாங்களும் அதற்குள் இடம்பிடித்துக் கொண்டோம். மணி
12ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. படிப்படியாக விளக்குகள் அணையத் தொடங்கின. சீரியல் பல்புகள்,
டியூப் லைட்டுகள், திருவிழாக் கடைகள், ஜெயன்ட் வீல் அலங்கார விளக்குகள் என்று எல்லா மின் விளக்குகளும்.
வீடுகளின் விளக்குகளும் கூட. விளக்குகள் அணைய அணைய பேச்சொலிகளும் படிப்படியாக குறைவதைக்
காணமுடிந்தது. மேலே முக்கால் நிலா துலக்கமாக நகர்ந்துகொண்டிருக்க, சுற்றிலும் மலை முகடுகளின்
விளிம்புகள், ஆலமரங்கள் எல்லாம் சேர்ந்து பார்த்திராத சித்திரமாக உருக்கொள்ள ஆரம்பித்திருந்தது.
அப்போது கூட்டத்திற்குள் ஒருவர் ‘ செல்போனை அணைச்சுருங்க.. செல்போனை அணைச்சுருங்க...’
என்று சொன்னவாரே செல்ல... செல்பேசிகள் மின் மினிகளைப் போல ஒளிர்ந்து ஒளிர்ந்து அணைந்தவண்ணம்
இருந்தன. ஏ.. ஓக்காருங்கப்பா... ஒக்காருங்க.. என்ற சத்தங்களைத் தொடர்ந்து... கண்ணுக்கெட்டிய
தூரம் வரையில் யாரும் நின்று கொண்டிருக்கவில்லை. சில மணித்துளிகளில் படிப்படியாக பேச்சுக்குரல்கள்
இருளுக்குள் மூழ்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. பத்திலிருந்து பதினைந்தாயிரம் பேர்
குழுமியிருக்கும் இடத்தில் இப்படி ஒரு அமைதி சாத்தியம் என்பது நம்ப இயலாததாக இருந்தது.
மூன்று குழந்தைகளின் அழுகுரல்களும் அடக்கமுடியாத இருமல்களும் கூட தேய்ந்து முற்றிலுமான
நிசப்தம் இருளோடு கலந்தபோது இருந்த சூழல் வாழ்நாளில் எப்போதும் சந்தித்திராததாக இருந்தது.
சில நிமிடங்கள் தாங்கமுடியாத நிசப்தம். இப்போது தூரத்திலிருந்து மாடுகளின் கழுத்து
மணியொலி போன்றதொரு ஒலி மெல்ல அன்மிக்கத் தொடங்கி கூட்டத்தைப் பிளந்து கோயிலுக்கு வந்து
கொண்டிருந்தது. பின், தலையில் விறகுகளைக் கிரீடம் மாதிரி கட்டிக்கொண்ட பத்திருபதுபேர்
கோயிலைச் சுற்றிலும் அமர... அவர்கள் குறி சொல்பவர்கள் என்பதாகவும் அவர்களிடம் குறி
கேட்பதாகவும் சொன்னார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் தூரத்திலிருந்து தீப்பந்த
ஒளியும் விலங்குகளை விரட்டுவதான ஒலிகளும் நெருங்கத் தொடங்கின. இப்போது தீப்பந்த வெளிச்சத்தில்
காட்டு எருமையின் உருவம் தாவித்தாவி வந்துகொண்டிருந்த காட்சி அபூர்வமான நாடகப் படிமமாகக்
கடந்துசென்று கொண்டிருந்தது. மூன்று முறை கோயிலைச் சுற்றியபின் நாட்டுத்துப்பாக்கிகள்
வெடிக்கும் ஒலிகள் அடங்க மாடு சலனமற்றுப் போகிறது. தொடர்ந்து நிலைகொண்ட நிசப்தத்தில்
உடலும் மனமும் பரவசமான நிலைக்குச் சென்று மீண்டன. தொடர்ந்து பத்து முப்பது வெடிகளின்
பேரோசை மலைகளில் எதிரொலித்து மீண்ட வண்ணமிருந்தன. இப்போது சிலர் ‘ ஏய்.. அவுட்ட போடு,
அவுட்ட போடு..’ என்றார்கள். இப்போது கூடுதல் ஒலியுடனான பட்டாசுகள் வெடிக்கப்பட்டதும்
.. அவுட் என்பது சடங்கு முடிவதற்கான சமிக்ஞை என்பதாகப் புரிந்து கொண்டேன். விளக்குகள்
எரியத் தொடங்க கூட்டம் கலையத் தொடங்கியது... மீண்டும் திருவிழாக் கோலம்... மிளகாய்
பஜ்ஜிகள் எண்ணெய்க்குள் குதிக்கத் தொடங்கின. ‘அய்யா ஒரு பெரிய நாடகம் நடந்து முடிஞ்ச
மாதிரி இருக்கு என்றார்’ ஆனந்த். வெகுநேரம் கூட்டம் கலைவதையே நின்று பார்த்துக்கொண்டிருந்தோம்.
மணி ஒன்றைத் தாண்டிவிட்டிருந்தது.
எங்களுக்கு வியப்பான
விசயம் என்னவென்றால்.. இவ்வளவு கட்டுப்பாடான ஒரு திருவிழா எப்படி சாத்தியம். பத்தாயிரம்
பேருக்குமேல் திரளும் கூட்டத்திற்கு பந்தோபஸ்துக்கு மூன்றே போலீசார் அதுவும் காலில்
செருப்பணியாமல். இளவட்டங்கள், உள்ளூர் சன்டியர்கள், சரக்கு போட்டுக்கொண்டு சளம்புபவர்கள்...
யாருமே இல்லாத ஒரு கிராமத்து திருவிழாவா? பெயருக்கு ஒரு ஒலிபெருக்கி.. ஆனால் அதிலும்
காதைக் கிழிக்கும் பாடல்களோ... அறிவிப்பு என்ற பெயரில் விழாக்குழுவினரின் அலறல்களோ
இல்லை... ஒரு புகைப் படம் எடுக்கலாம் என்ற யோசனையில் பக்கத்துப் பெரியவரிடம் பேச்சுக்கொடுத்தோம்.
ம்ஹும்... போட்டோ... வீடியோ எதற்கும் அனுமதியில்லை என்றார். ராஜ்கிரன் ஏதோ ஒரு படத்துக்காக
காமராவைக் கோயிலை நோக்கித் திருப்பியதாகவும்... காமரா பழுதானதாகவும் கூடுதல் தகவலைப்
போகிறபோக்கில் சொல்லிப் போனார். அப்புறம் ஏன் படமெடுக்கப் போகிறோம்...
பூபதியிடம் கேட்டோம்...
கூத்து இருக்குன்னு சொன்னீங்களே.. அதக் கண்ணுல காட்டலயே? என்று. இதுதான் அது என்றார்.
சுமார் ஒருமணிநேரம் நிகழ்ந்த அந்த நிகழ்வை சடங்கு என்றுதான் கூறவேண்டும். சில வருடங்களுக்கு முன் வரை இந்தச் சடங்கு நிகழ்வில்
மிகவும் கொச்சையான பாலியல் வசனங்களும், ஊர் பெரியதனக்காரர்களை பஞ்சாயத்து தலைவரை அவர்
குடும்பத்தினரை பற்றியதான வம்புகளும் ஆபாச வதந்திகளும் பேசப்பட்டனவாம். அதேபோல் பெண்களும்
இச்சடங்கைப் பார்க்க அனுமதிக்கப்பட்டதில்லையாம்.
இதில் வேடிக்கையான
விசயம் இந்த பகுதியில் ஏன் அரவானுக்குக் கோயில் இருக்கிறது? அதிலும் வலையர், பிறமலைக்கள்ளர்,
கோனார், ஆசாரி, பறையர் போன்ற பல சாதிகளும் வசிக்கும் ஒரு வழக்கமான தமிழக கிராமச் சூழலில்
எல்லோரும் வழிபடும் கோயிலாக இருப்பது எப்படி? பெண்களுக்கு எப்படி சடங்குபார்க்கும்
உரிமை இல்லை/ பின் எப்படி மாற்றம் வந்தது.... துப்பாக்கியால் சுடுவதும்கூட சடங்கின்
பகுதியாக மாறியிருப்பது எப்படி? ஆகிய பல கேள்விகளைப் பறிமாறிக் கொண்டோம்... ஒரு நவீன
தர்க்கத்திற்குள் நாட்டுப்புறச் சடங்கைப் புரிந்துகொள்ளமுடியாது என்றும், ஏன் புரிந்துகொள்ளவேண்டும்..
என்றும் சமாதானப் பட்டுக்கொண்டோம். நாட்டுப்புற ஆய்வாளர்கள் இதுபற்றி எதும் எழுதியிருக்கிறார்களா
என்று விசாரிக்கவேண்டும் என்பதும் மனசுக்குள் ஓடியது.
செல்பேசிகளும் இணையமும்
உலகம் முழுவதும் பண்பாடுகளை மாற்றி அமைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் ஊடகவியல்
ஆய்வாளர்கள். நாம் பார்க்கத் தக்கதான மாற்றங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால்
தமிழக நாட்டுப்புற திருவிழாக்களையும் சடங்குகளையும் அவதானித்தால் ஆய்வாளர்கள் கொஞ்சம்
திணறித்தான போவார்கள். ஒருவகையில் உலகமய தாக்குதல்களையும் இணையப் புரட்சிகளையும் கடந்து
தமிழ்ச் சமூகம் பாரம்பரிய வேர்களோடு இறுக்கமாகத் தன்னைப் பிணைத்துக் கொண்டுள்ளதாக ஆறுதல்
கொள்ளலாம். ஆனால் இன்னொருவகையில் இந்த பாரம்பரிய வேர்கள் முடிச்சிட்டுக் கிடக்குமிடம்
சாதி அமைப்புதான் என்பது கூர்ந்து நோக்கும்போது புரியத்தொடங்குகிறது. ஒரு உள்ளூர் தலித் சகோதரருடன் உரையாடியபோது அவர்
சொன்னார்... ‘நாங்கதான் மொதல்ல பொங்க வைக்கனும்.. எங்க பானைய ஏத்தினபெறகுதான் மத்தசாதிக்காரங்க
பானையெல்லாம்... சாமி எங்க தெருவத்தான பாத்துக்கிட்டு இருக்கு.... அங்க வெளுத்துக்கிட்டு
இருக்காங்களே தப்பை...(தப்பாட்டம்) நம்ம பசங்கதான்.. என்றார் பெருமிதத்துடன். நீங்க
கோயிலுக்குள்ள போவீங்களா? என்றதும் ... அதெப்படி... நாங்க வெளியிலருந்தே கும்பிட்டுக்கிடுவோம்...இதுக்குப்போயி
சண்டையும் சச்சரவும் பண்ணிக்கிட்டு.. அப்ப நம்ம தாத்தைங்கள்லாம் கேனப்பயகளா... சாமி என்ன கோயிலுக்குள்ள மட்டுமா இருக்கு...’ என்றார்.
மணி பின்னிரவு
2:30ஐத் தாண்டியிருந்தது. மதுரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். திறந்திருந்த கார்
சன்னல் வழியாக இதமான காற்று முகத்தைத் தடவிச் சென்றுகொண்டிருந்தது. மனம் என்னமோ புழுக்கமாகவே
இருந்தது.