கல்லூரிப்
படிப்பிற்காக 1980இல் மதுரை வருவதற்கு முன்னால் நான் அதிகம் சினிமா பார்த்தவனில்லை.
அம்மா மற்றும் சகோதரிகளோடு பார்த்த சிவாஜியின் அழுகைப் படங்கள் சிலவும் வீட்டுக்குத்
தெரியாமல் நடந்தும் சைக்கிளிலும் பக்கத்து ஊர் டென்ட் கொட்டகைகளில் பார்த்த புரட்சித்
தலைவர் படங்களுமாக அவை சொற்ப எண்ணிக்கையிலானவை. இவர்கள் இருவரையும்விட என் மனம் கவர்ந்த
ஒருவர் இருந்தார். தன் திரையுலக வாழ்க்கை முழுவதும் நடிக்கவே மாட்டேன் என்ற சபதத்தோடு
தென்னகத்தின் ஜேம்ஸ்பான்டாக குதிரைகளில் குறுக்குச் சந்தில் பயணித்துக் கொண்டிருந்த
ஜெய்சங்கர்தான் அவர். த.பி. சொக்கலால் பீடி கம்பெனியார் இலவசமாக திரையிட்டுவந்த ஜக்கம்மா
மூலமாக என் ரசனையை மழுங்கடிக்கத் தொடங்கிய அவர் ‘ஜம்பு’ வரை என்னை ஆக்ரமித்திருந்தார். விருதுநகர் கே.வி.எஸ்.
பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு சுதந்திர நன்னாளில் வெளிவந்த தேசபக்த காவியமான
‘ஜம்பு’வைப் பார்க்க கொடியேற்றிய கையோடு பதினோரு மணிக்காட்சிக்கு நுழைந்துவிட்டோம்.
அரங்கு நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. போகப்போகத்தான் தெரிந்தது கூட்டம் ஜெய்சங்கருக்காக
அல்ல ஜெயமாலாவுக்குத்தான் என்பது. (சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் சின்னத்திரை
இயக்குநர் ஜெரால்டின் படப்பிடிப்பிற்குச் சும்மா சென்றிந்தபோது அவர் என்னை அழைத்து
‘அய்யா வாங்க உங்களுக்குப் பிடித்த ஒருவரை அறிமுகப் படுத்துகிறேன்’ என்று பக்கத்து
அறைக்குக் கூட்டிச் சென்றார். அங்கே ஏறத்தாழ படுத்திருந்த ஒரு வயதான பெண்மணியிடம் ‘அம்மா
அய்யா உங்க ரசிகரு. ஸ்கூல் யூனிபார்மோட உங்க படத்தப் பாத்தவரு…’ என்றுகூறி என்காதில்
‘அய்யா உங்க கனவுக்கன்னி ஜெயமாலாதான் இவுங்க’ என்றார். கனவுக்கன்னிகளுக்காவது வயதாவதிலிருந்து
இயற்கை விலக்களித்திருக்கக் கூடாதா? கலவையான உணர்ச்சியோடு சித்தர்பாடல்கள் மனதில் ஓட
சீக்கிரமாகவே இடத்தைக் காலி பண்ணினேன்)
பீம்சிங்,
ஶ்ரீதர், பாலச்சந்தர் என்ற இயக்குநர் ஜாதியைப் பற்றிய எந்த மேலதிகத் தகவல்களும் தெரியாமல்
சிவனே என்று போய்க்கொண்டிருந்த என் கலையுலக வாழ்க்கையில் ‘சினிமாவை’ ஒரு பிரத்யேகமான
பதார்த்தமாக மனதில் பதியச் செய்தவர் பாரதிராஜாதான். எனக்கு மட்டுமல்ல 1980களில் பதின்பருவத்தில்
இருந்தவர்களுக்கு பாரதிராஜா என்ற பெயரோடு இருக்கும் நெருக்கம் பிரத்யேகமானது.
நான்
பார்த்த பாரதிராஜாவின் முதல் படம் புதியவார்ப்புகள். மதுரையில் ஒரு நவீன திரையரங்கில்
நான் பார்த்த முதல் படமும் அதுதான். சக்தி திரையரங்கின் முதல் வரிசையில் உட்கார்ந்து
அண்ணாந்து பார்த்துப் புல்லரித்துக் கிடந்தது நேற்றுப் போல் இருக்கிறது. தொடர்ந்து
அண்ணாந்து பார்க்கும் படியானவையாகவே அவரின் முயற்சிகள் இருந்தன. கல்லூரியில் முதலாண்டு
படித்துக் கொண்டிருந்தபோது கொஞ்சம் மார்க்சிசம்
கொஞ்சம் க்யூபிசம் என்று குழம்பிக்கிடந்த
நிலையில் ‘நிழல்கள்’ அப்போதைய மனநிலைக்கு மிகவும் உகந்ததாக இருந்தது. தொடர்ந்து மூன்று
முறை அப்படத்தைப் பார்த்தேன். கஞ்சா அடிக்கும்
நாயகனும், ஹார்மோனியப் பெட்டியை கடற்கரையில் கடாசிவிட்டு பைத்தியமாகும் சந்திரசேகரும்
70களின் இளையோர் உலகத்தை ‘புனைவுடன்’ பிரதிபலித்தார்கள்.
இதே காலகட்டத்தில்
பாரதிராஜாவைவிட நுணுக்கமாக சினிமாவைக் கையாளக் கூடியவராக மகேந்திரன் இருந்தார். ஆனால்
அவரால் பாரதிராஜாவைப் போல் தொடர்ந்து இயங்கமுடியாத சொந்த பலவீனங்களால் பின்தங்கி நீர்த்துப்போனார்.
ஆனால் பாரதிராஜா சில சறுக்கல்களுடன் தொடர்ந்து இயங்கக் கூடியவராகத் தன்னைத் தற்காத்துக்
கொண்டார். அவருடைய பிரதம சீடரான பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, ரங்கராஜ் எனப்பலரும்
இயங்க முடியாமல் ஒதுங்கிக் கொண்டபோதும், அவருடைய வெற்றியின் சரிபாதி என்று எல்லோரும்
நம்பிக்கொண்டிருந்த இளையராஜாவுடனான மனமுறிவுக்குப் பின்னரும் கருத்தம்மா, கிழக்குச்
சீமையிலே ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தார். என்னுடைய பார்வையில் அவரின் ஆகச் சிறந்தபடமாக
‘கிழக்குச் சீமையிலே’ படத்தையே சொல்வேன்.
மிகச்சிறந்த
இயக்குநர்களின் திறமை (casting) நடிகர்கள் தேர்விலேயே கண்கூடாகத் தெரிந்துவிடும். அந்த
வகையில் பாரதிராஜா புதுமுகங்களை நடிக்கவைப்பதில்
ஒரு பல்கலைக் கழகமாகவே திகழ்ந்தார். தமிழ் மொழிக்கும் பண்பாட்டுக்கும் தொடர்பற்ற கான்வென்ட்
காரிகைகளுக்குத் தாவனி சுற்றி கள்ளிக்காடுகளில் வாயசைக்கவைத்து ஹைபிரீட் தமிழச்சிகளை
உருவாக்கினார். தரையில் தூக்கியெறியப்பட்ட மீன்குஜ்சு வாயைத் திறப்பதுபோல் ‘வான் மேகங்களே’
பாடிய ரத்தி அக்னிஹோத்ரியையும் தங்குதடையில்லாமல் தமிழர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஒரு
வகையில் பிரபலமான நடிப்புக் கோட்பாடுகளை எள்ளி நகையாடினார் என்றும் கூறலாம். அவரே எல்லா
நடிகர்களுக்குமாக நடித்துக் காட்டுவதான ஒரு பாணியைப் பின்பற்றினார். குறிப்பாக கதாநாயகிகளின்
சில பாவங்களை சலிப்பேற்படுத்தும் வகையில் அன்னக்கொடி வரை தொடர்ந்தார். நாயகர்களைப்
பொறுத்தவரை தன்னைவிட தோற்றப்பொலிவு குன்றியவர்களை நாயகர்களாக்கி ஏதோவகையில் தமிழர்களைப்
பழிவாங்கி தன் காயப்பட்ட சுயத்தை திருப்திபடுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் மண்ணையும் நடிக்க வைப்பேன் என்ற அவரின்
இறுமாப்பு பெரும்பாலும் கேலிக்குரியதாக மாறியதில்லை ஒரு காலகட்டம் வரை.
தன் முதல்
படத்தில் ஒரு ஓரங்கட்டப்பட்ட சப்பானியை நாயகனாக்கியவர் இரண்டாவது படத்தில் தாலியின்
புனித பிம்பத்தை அறுத்தெறியும் துணிச்சல் மிக்கவரானார். மூன்றாவது படத்தில் நாவித இளைஞன் சாதி
இந்துப்பெண்ணை காதலித்து ரயிலேறுகின்ற புரட்சியைச் செய்தார். (அதெல்லாம் மருத்துவர்
அய்யா இல்லாத கலி காலம்) சுயசாதி முரண்களைப்
பேசி சொந்த சாதியினரின் விமர்சனங்களுக்கும் ஆளானார். ஒரு படைப்பாளிக்கான நேர்மையும்
வேகமும் நிரம்பிய படைப்புக்காலங்கள் அவை. அவருடைய மிகச்சிறந்த படைப்பான கிழக்குச் சீமையிலேயையும்
அதைத் தொடர்ந்த கருத்தம்மாவையும் கொடுத்த பாரதிராஜாவின் அடுத்த பரிணாமத்தை எதிர்பார்த்து
இலை விரித்துக் காத்திருந்த அவரின் இனிய தமிழ்மக்களுக்கு தொடர்ந்து களிமண் உருண்டைகளை
பரிமாறத் தொடங்கினார். இங்கு நாம் அவர்படங்களின் வெற்றி தோல்விகளைப் பற்றிப் பேச முற்படவில்லை.
ஒரு இயக்குநரின் படங்கள் வெற்றிப் படங்களாக அமைவதைப் பற்றிக் கவலைப் படவேண்டியவர் தயாரிப்பாளர்தானேயன்றி
பார்வையாளன் அல்ல. உலகமுழுவதும் அனுபவம் ஏற ஏற படைப்புகள் மெறுகேறுவதைப் பார்க்கிறோம்.
உலக அளவில் நடுத்தரவயதைக் கடந்த இயக்குநர்களின் படங்கள் திரைப்படக்கலையின் புதிய சாத்தியங்களை
தொட்டிருக்கின்றன. ஆனால் ஆரம்ப காலத்தில் வீரியமாக
வெளிப்பட்ட பாரதிராஜா, தமிழ் ஊடகங்களால் இன்றளவும் கொண்டாடப்படுகிற மண்ணின் மைந்தர்
இப்படி சாரமற்றுப்போக வேண்டிய அவசியமென்ன என்ற கேள்வி எழுகிறது.
1990களுக்குப்பின்
உள்ளடக்க அளவிலும் வடிவ ரீதியிலும் உலகசினிமாவோடு தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும்
எந்த முயற்சியிலும் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை என்பதை அவருடைய படங்கள் தெளிவாக உணர்த்துகின்றன.
90களுக்குப் பிந்தைய உலகமயமாதல், தீவரவாதம், பிராந்திய வாதம் எதைப் பற்றியும் கவலைப்படாமல்
கருத்தியல் ரீதியான பக்கவாதத்தில் முடங்கிப் போனார். 90களின் இறுதியில்தான் புதிய வகையான
‘ஹைப்பர் லிங்க்’ சினிமாக்கள் பின்நவீனகால வாழ்வியலை உலகெங்கிலும் பேச முயன்றுகொண்டிருந்தபோது
பசும்பொன், தாஜ்மஹால், கண்களால் கைதுசெய் என்று இலக்கற்ற பயணங்களைச் செய்துகொண்டிருந்தார்.
அன்னக்கொடியின் டீசரில் அவர் நடித்துக் காட்டிக்கொண்டிருந்த காட்சி கல்லுக்குள் ஈரத்தை
இன்னும் காயாமல் அவர் பத்திரப் படுத்தியிருப்பதை நினைவுபடுத்தியது. அவருடைய முதல் படத்தில்
மயில் தண்டவாளத்தில் காத்திருப்பதாகத் தொடங்கி
அதே இடத்தில் முடிவதைப் போல் நம் இனிய இயக்குநர் பாரதிராஜாவும் தொடங்கிய இடத்திலே
வந்து நின்று விட்டாரா?
இந்த
வட்டவடிவப் பயணத்திற்கான காரணம் 90களுக்குப் பிந்தைய சமூக அரசியல் நிகழ்வுகளை ஒரு படைப்பாளியாக
அவரால் எதிர்கொள்ள இயலவில்லை என்று கொள்ளலாம். இடைப்பட்ட காலத்தில் தன்னை முழுவதுமாக
அரசியல் நீக்கம் செய்துகொள்ளும் சாமர்த்திய சாலியாகவும் மாறியிருந்தார். அரசியல் கலக்காத சமூகப் பிரச்சனைகள் உண்டா என்ன?
முதிர்ந்த படைப்பாளியாகிய அவர் உரத்துப் பேச வேண்டிய விசயங்கள் எவ்வளவோ இருக்கும்போது
ரவிக்கை இல்லாத காலத்திற்குள் திரும்பப் பயணப்படத்தான் வேண்டுமா? அலைகள் ஓய்வதில்லை,
கடலோரக்கவிதைகள் போன்ற புனைவியல் சார்ந்த காதல்களை மீண்டும் பிரதியெடுப்பதன் பொருந்தாமையை
அவரால் புரிந்துகொள்ள இயலவில்லை.
பாரதிராஜாவின்
வயதேயான மார்ட்டின் ஸ்கார்ஸிசின் ‘ஹீகோ’ (HEGO) என்றொரு திரைப்படத்தின் முதல் 10 நிமிடங்களின்
தொழில்நுட்ப நேர்த்தியைப் பார்த்து திகைத்துப் போனேன். இந்த வயதில் இத்தகைய தொழில்நுட்ப,
கூடுதல் உழைப்புத் தேவைப்படும் ஒரு படத்தை எப்படி இவரால் இயக்கமுடிந்தது என்ற வியப்பிலிருந்து விடுபடமுடியவில்லை.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால பிரான்ஸில் நடைபெறும் அப்படத்தைப் பார்த்து முடிக்கும்போதுதான்
இவ்வளவு அனுபவம் மிக்கவரால்தான் இத்தகைய ஒரு படைப்பைச் செய்யமுடியும் என்று புரிந்துகொள்ள
முடிந்தது.
அன்னக்கொடி
போன்றதொரு ஜமீன்தார் காலத்துக் காவியக்காதலைப்
பேசும் ‘லூத்தாரா’ என்றொரு இந்திப் படத்தையும் இதோடு இணைத்துப் பார்க்கலாம். (இப்போது
அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது) புத்திசாலித்தனமான திரைக்கதையமைப்பும் அற்புதமான
நடிகர்களும் இசையும் ஒளிப்பதிவும் தயாரிப்பு நேர்த்தியுமாய் படம் காவியமாகவே மாறியிருக்கிறது.
பழக்கப்பட்ட
கதைக்களமும் திரைமொழியும் இன்னபிற அம்சங்களும் அதன் பலவீனமாக மாறியதாலேயே அன்னக்கொடி
மிகப்பெரிய புறக்கணிப்பிற்குள்ளாகியிருக்கிறது.
உத்வேகமும்
உற்சாகமும் சற்றும் குன்றாத நம் பிரியத்துக்குரிய இயக்குநர் தன் அனுபவச் செழுமையும்
நேர்த்தியும் மிளிரும் சமகால கதைகளோடு நம்மை மீண்டும் சந்திப்பார் என்று நம்புவோம்.
நமது பல படைப்பாளிகளுக்கு நேர்ந்ததுதான், நம்ம பாரதிராஜாவுக்கும் நேர்ந்திருக்கிறது. வெளி நாட்டு படைப்பாளர்களுக்கு 60 வயதுக்கு மேல்தான் பீக் ஆரம்பிக்க, நம் ஆட்களுக்கு 60 வயதில் எல்லாம் அடங்கிவிடுகிறது.
பதிலளிநீக்குநகைச்சுவை சற்று தூக்கலாகவே இருந்ததற்கு நன்றி ப்ரபா