புதன், 14 மார்ச், 2012

ஆரன்யகாண்டத்திற்கு தேசியவிருது: குமாரராஜாவிற்கு வாழ்த்துக்கள்

 
சிறந்த புதுமுக இயக்குநருக்கான தேசியவிருதையும், சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருதையும் ஆரன்யகாண்டம் திரைப்படம் பெற்றுள்ளது. மிக்க்குறைந்த நாட்களே திரையரங்குகளில் ஓடிய இப்படம் ஒரு முக்கியமான படம் என்று அப்போதே கணிக்க முடிந்தது. ஆனால் படம் வெளிவந்த நேரத்தில் தமிழ் திரையுலகில் இப்படத்தைப் பற்றி ஒரு செயற்கையான மௌனம் நிலவியது என்பதை இங்கு சொல்லியாக வேண்டும். தமிழ்சினிமாவை உலக சினிமாவாக மாற்றியே தீருவோம் என்று சொல்லிக் கொள்ளுகிற இயக்குநர்கள் பலரும் கூட இப்படத்தைப் பற்றிப் பேசவில்லை. உலக அளவில் சினிமாக்களைத் தரப்படுத்தும் IMDB (www.imdb.com)  இணையதளம் ஆரன்யகாண்டத்திற்கு 10க்கு 7.2 புள்ளிகள் கொடுத்திருந்தது.
ஆரன்யகாண்டம் வெளியானபோது ஒரு இதழுக்காக  எழுதப்பட்ட கட்டுரையை கீழே இணைத்துள்ளேன்.


ஆரண்ய காண்டம்: உலக சினிமாவை நோக்கி..
 

ஒரு சினிமாவைப் பற்றிப் பேசுவதென்பது அதன் திரைமொழியை முன்னிறுத்தியதாகத்தான் இருக்கமுடியுமென்று நான் நம்புகிறேன். அதனால் ஒரு கதையையும் கருத்தையும் பிரதானமாகக் கொண்டு ஒரு சினிமாவை அணூகுவது முழுமையானதல்ல. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் திரைப்பட உள்ளடக்கங்களைப் பற்றிப் பேசும்போது அதன் உருவமாகிய திரைமொழியையும் பேசியாகவேண்டும். திரைமொழி கூடிவராத ஒன்றை சினிமாவாக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்பதுதான் நான் சொல்லவருவது. ஏனெனில் சினிமா என்று சொல்வதே அதன் வடிவத்தைத்தான்.   ஆனால் தமிழ்ச்சூழலில் தமிழ்ச் சினிமாக்களின் உள்ளடக்கங்களைப் பற்றிய விவாதங்களே அதிகமும் நடந்து வருகின்றன. அந்தவகையில் ஆரண்ய காண்டம் என்னை மிகவும் கவர்ந்த படமாகிவிட்டது.
 

       சில ஆண்டுகளுக்கு முன்னால், இயக்குநரான என்னுடைய நண்பர்  ரமேஷ் கிருஷ்ணன் வீட்டுக்குப் போயிருந்தேன். பேச்சுவாக்கில் ஒரு படத்தின் டிவிடியைக் கொடுத்து இதைப் பார். மிகமுக்கியமான படம் என்றார். அப்போதுதான் டிவிடிகள் புழக்கத்திற்கு வரத் தொடங்கியிருந்தன. 250 ரூபாய்க்கும் மேல் கொடுத்தால்தான் பைரசி டிவிடி ஒன்றை வாங்கமுடியும். மறுநாள் முற்பகல்நேரத்தில் அந்தப்படத்தை பார்த்த பொழுதை என்னால் இன்னும் ஞாபகத்தில் இருத்தமுடிகிறது. அப்படியே என்னை உலக்கி எறிந்துவிட்டது. அதுவரைக்குமான திரைப்படம் பற்றிய என்னுடைய புரிதலை தலைகீழாக்கிய அந்தப்படம் City of God எனும் பிரேசில் படம். வறுமை வன்முறை கேளிக்கை, இவற்றினூடாக ஒரு தலைநகரின் சேரி இளைஞர்களின் வாழ்க்கையைப் பேசியது. ஆனால் இதுவரை திரைமொழியாகக் கட்டமைக்கப்பட்ட எல்லா இலக்கணங்களையும் தூக்கிக் கடாசியிருந்தது. கேமராவின் கோணங்கள், அசைவுகள், நகர்வுகள் எல்லாவற்றின் எழுதப்பட்ட, பின்பற்றப்பட்ட விதிகள் எல்லாம் காற்றில் போயிருந்தன. படத்தொகுப்பும், தொழில்முறையற்ற நடிகர்களும், உத்திகளும், செயற்கையான காண்ட்ராஸ்ட் அதிகமான ஒளியமைப்பும் ஒரு புதிய திரைப்பட அழகியலை உருவாக்கியிருந்தன. அதற்கப்புறம் Amores Perros(2000), Run Lola Run(1998), Traffic(2000), 21 Grams(2003), Crash(2004), Irreversible(2002), Babel(2006) ஆகிய படங்கள் பார்க்கக் கிடைத்தன.

 

  ஒருவகையில் இந்த வகைப்படங்களுக்கான ஆரம்பம் 1994லேயே Pulp Fiction எனும் படத்தின் மூலம் இதை ஆரம்பித்து வைத்தவர் Quentin Tarantino எனும் மேதைதான். 1994லிருந்து அடுத்த 10ஆண்டுகளுக்குள் உலகசினிமாவிற்குள் நேர்கோட்டுத்தன்மையற்ற, பல அடுக்கிலான கதைகள் ஒன்றினைகின்ற புதிய திரைப்படங்கள்  ஒரு புதுவகையாக மாறிவிட்டிருந்தன.  அதன்பிறகு அந்த வகையிலான ஒரு தமிழ்ப்படத்திற்காக ஏங்கத் தொடங்கினேன். எனக்குக் கிடைத்ததைப் போல் நம் இயக்குநர்களுக்கும் திருட்டு டிவிடிக்கள் கிடைக்கப் பெற்றதன் அறிகுறிகள் தமிழ்ப் படங்களில் தென்படத் தொடங்கின. ஜீரணக் கோளாறுகாரணமாக பல இயக்குநர்கள் மேற்கண்ட உலகப்படங்களை வாந்தியாகவும் பேதியாகவும் கழிந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் அதை ஒரு உத்தியாகவும், மோஸ்தராகவும் புரிந்துகொண்டவர்களாக இருந்தனர். அந்தவகைப்படங்களின் திரைமொழியை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளக் கூடிய ஒரு இயக்குநருக்காக தமிழ்த்திரையுலகம் 2007    வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
 


        City of Godன் குரூர அழகியலை பருத்திவீரன் ஏறத்தாழக் கையகப் படுத்தியிருந்தான். 2003ல் வெளிவந்த விருமாண்டியும் அதே சாயலும் நேர்த்தியும் உள்ள படமாயினும் கமலின் நாயக-வில்லன் கட்டமைப்பிற்குள் அப்படத்திற்கான நியாயத்தை இயக்குநரால்  செய்யமுடியவில்லை. பருத்திவீரனில் (பறவைமுனியம்மாவின் பாடல்தவிர்த்து)  பாடல்கள்களும் இசையும் அப்படத்தைக் கொஞ்சம் ஊனப்படுத்தவே செய்திருந்தன. ஆனாலும் அது தமிழ்சினிமாவின் மைல்கல்லாகவே கருதப்படவேண்டும். பாலாவின் கதைமாந்தர்களும் கதைக்களங்களும் ஒரு புதிய திரைமொழியை வேண்டினாலும், அவர் காமராவையும், படத்தொகுப்பு இன்னபிற அம்சங்களையும் பாரம்பரிய அர்த்தத்திலேயே கையாள்வதால் அவர் அடையவேண்டிய சிகரங்களுக்குக் கீழேயே இன்னும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார் எனப் படுகிறது. தான் எடுத்துக்கொண்ட பிரச்சனையைப் பற்றிய தெளிவற்ற புரிதலால் ராமின் கற்றதுதமிழ் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்றுவிட்டது.   திரும்பவும் வெண்ணெய் திரண்டுவந்தது ஆடுகளத்தில்தான். அதிலும் காதல் ட்ராக்கும் பாடல்களும் இசையும் படத்தை சிலநேரங்களில் பழகிய தடத்திற்கு இழுத்துவந்து விடுகின்றன. இன்னொரு முயற்சியையும் இங்கு சேர்த்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. சீனுராமசாமியின் தென்மேற்குப்பருவக்காற்று. நல்லகதைக்களத்தை காதலுக்குள் சுருக்கிக்கொண்டார். காட்சிகளை உயிரூட்டமாக ஆக்குவதில் ஒரு இயக்குநராக இன்னும் கடக்க அவருக்கு சிலபடிகள் இருக்கவே செய்கிறது. இந்த வரிசையில் ஆரன்ய காண்டத்தை தமிழ்சினிமாவின் மிகமுக்கிய படமாகக் கருதத்தோன்றுகிறது.

        படத்தைப் பார்த்து முடித்தவுடன் ஒரு அச்சு அசலான உலகப்படம் என்று தோன்றியது. உலகப் படம் என்று சொல்லும்போது உலகப்பார்வையாளர்களுக்கானது என்ற அர்த்தத்திலோ, தொழில்நுட்ப நேர்த்தி என்ற அர்த்தத்திலோ அல்ல. மாறாக தொழில்நுட்பத்தையும் கலையையும் அதன் உள்ளார்ந்த அர்த்தபாவத்துடன் வெளிப்படுத்த முயன்றதையே குறிக்கிறேன். இதன் கதையும் திரைக்கதையும் மிகப் புதிதானதல்ல.  ஒரு படத்தின் அனைத்துக்கூறுகளும் மிக நேர்த்தியாக ஒன்றிணையும் ரசாயனம் தமிழ் சினிமாவில் மிக மிக அபூர்வமானது. அந்த ரசாயனம் நேர்த்தியாக நிகழ்ந்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்வேன். அந்த வகையில் அழகர்சாமியின் குதிரையில் இந்த ரசாயனம் ஒரு இடத்தில் கூட நிகழவில்லை. தமிழ் சினிமாவில் இதுவரை தொடப்படாத ஒரு கதைக்களம் என்பதால் தேவைக்கு அதிகமாகக் குதிரை கொண்டாடப் பட்டது. கதை, உரையாடல், பாத்திரத்திற்கான நடிகர்களின் பொருத்தம், ஒளிப்பதிவு எல்லாம் தனித்தனியாக நன்றாக இருப்பதை ஒரு சினிமாவாக    கருதமுடியாது. சரி ஆரன்ய காண்டத்திற்கு வருவோம்.
 

       படத்தில் மரபான அர்த்தத்தில்  நாயகன் நாயகி என  யாரும் இல்லை. கொத்தாக சில மனிதர்கள். நிழல் உலகத்தின் வகை மாதிரிகள். பேராசை வன்முறை துரோகம் என்ற நூலில் கோர்க்கப்பட்ட சம்பவங்கள். காதல்/ பாசம் ஆகியவற்றின் பெயராலான  பழக்கப்பட்ட அசட்டுக் காட்சிகள்  இல்லை. பாடல்கள் இல்லவே இல்லை. கடவுளுக்கு நன்றி. வளப்பமான பெண்கள் இடுப்புச் சதை தெரிய நடமாடுவதோ நடனமாடுவதோ இல்லை. அந்தந்த  நொடியில் வாழ்தலுக்கான போராட்டம்தான் கதை. இந்தக் கதை  Pulp fiction படத்தின் பாதிப்பு என்பதைச் சொல்லாமல் இருக்க முடியாது.

 

 இரண்டாவது காட்சியில் ஜான் ட்ரவோல்ட்டாவும் சாமுவேல் ஜாக்சனும் ஒரு காரில் கிளம்பி சென்று ஒரு கும்பலைத் தீர்த்துக்கட்டி சரக்கை மீட்டு வரச் செல்கிறார்கள். இது 15 நிமிட காட்சித்தொடராக நீள்கிறது. இதில் முதல் 7 நிமிடங்கள் காரில் பயணம் செய்து ஒரு குடியிருப்பை அடைவது. அந்த 7நிமிடங்களும் அதற்குப்பிறகான 8நிமிட காட்சியிலும் ஓயாத பேச்சு.   பேச்சென்றால் ஓலைப்பாயில் நாய் மோண்டமாதிரி என்று சொல்வார்களே அதுமாதிரி. அதுவும் அவர்கள் செய்யப் போகிற கொடூரமான கொலைகளுக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்புமற்ற பேச்சு.  படம் முழுவதும் தொடரும் அவ்விருவருக்கிடையிலான உரையாடல் மிக சுவாரஸ்யமானது. பொதுவாக திரைப்படம் என்பது காட்சி ஊடகம் என்றும், அதில் தேவைக்கதிகமான பேச்சு தவிர்க்கப்படவேண்டும் என்ற எழுதப்படாத கூற்று ஒன்று உண்டு. அது தமிழ் வசனகர்த்தாக்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது என் எண்ணம்.

 

       ஆரன்ய காண்டத்திலும்  அதேமாதிரியான  சூழலில், காரில் ஒரு கடத்தல் சரக்கை எடுத்துவர காரில் செல்கிறார்கள்.  ஒருவன் சள சளவென்று பேசிக்கொண்டே வருகிறான். இப்படத்தின் உரையாடல் (வசனம் அல்ல) ஏறத்தாழ   pulp fiction   ல் வரும் உரையாடலை ஒத்ததாக இருக்கிறது.  நம் வழக்கமான சினிமா வசனகர்த்தாக்களின் பாணி வேறு. நீ வேல வேலன்னு இங்க அலையுற. உங்கப்பன் செத்து போயிட்டான்னு ஒருநாளைக்கு ஓலை வரும். அப்ப வண்டி சார்ஜுக்குக் கூட காசு இல்லாம நிப்படா.. அப்பதெரியும்டா இந்த பட்டணத்து பவுசு (படம்: நிழல்கள்) என் காதலி உங்களுக்கு மனைவியாகலாம். ஆனா உங்க மனைவி எனக்கு காதலி ஆகமுடியாது..(படம்: அந்த 7நாட்கள்) கல்யாண வீடாயிருந்தா நாந்தான் மாப்பிள்ளையா இருக்கணும். எளவுவீடா இருந்தா நாந்தான் பொணமா இருக்கணும்(படம்: எஜமான்) இந்த வகையான பஞ்ச் டைலாக்காக இல்லாமல் இந்தப் படத்தின் தன்மைக்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது. ’கடைசியில் சப்பையும் ஒரு ஆம்பளதான். எல்லா ஆம்பளங்களும் சப்பைதான்என்று கூறியவாறு சாலையைக்கடந்து செல்வதிலிருந்து மொத்த படத்திலும் உரையாடல் ஒரு பக்குவப்பட்ட தளத்தில் இயங்குகிறது. நல்லதிரைப்படங்களில் உரையாடல் இலக்கியத்திற்கு அருகாமையில் சென்றுவிடுவதுண்டு. சுவாரஸ்யம் என்பதையும்தாண்டி அதுசெய்யவேண்டிய செயலை இப்படத்தில் செய்துவிடுகிறது.

 

       இரண்டாவதாக என்னை மிகவும் கவர்ந்த அம்சம் படத்தின் இசை. ஒரு நிழல் உலக கதை,   ஆக்ஷன் படங்கள் என்றால் தமிழ்ப்படங்கள் முடிந்து வெளிவந்தால் காதுகிழிந்து ரத்தம் சொட்டுவது நிச்சயம். சவுண்டு எபக்ட்ஸ் ஒருபுறமும் இசை ஒரு புறமும் இதில் நம் நாயகர்கள் சிலருக்கு சவால் விட்டுக்கொண்டே சண்டை போட்டால்தான் முடியும். மொத்தத்தில் மிகநல்ல படங்கள்கூட இரைச்சலில் காணாமல் போனசந்தர்ப்பங்கள் அநேகம். இந்தப்படத்தில் இயக்குநர் இரண்டுவிசயங்களில் தெளிவாக இருந்திருக்கிறார். ஒன்று இசை எங்கு தேவைப்படுகிறது என்பது. இரண்டாவது பழக்கப்பட்ட ஸ்டீரியோ டைப் இசையாக இல்லாமல் பார்த்துக் கொண்டிருப்பது. கொஞ்சம் அந்நிய வாசனை இருந்தாலும் சில இடங்கள் மிகப் பிரமாதமாக கூடிவந்திருக்கிறது. இதை யுவன்சங்கர் சொந்தமாகச் செய்திருப்பார் என்று நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அவருடைய வழக்கமான பாணி அல்ல இது. இசையைப்பற்றிய இயக்குநரின் புரிதலையே இது காட்டுகிறது.

       Casting பற்றிய ஒரு விழிப்புணர்வு சமீபத்தில் இயக்குநர்களுக்கு உருவாகியுள்ளது. காதல், விருமாண்டி, மைனா, சுப்ரமண்யபுரம் என்று தொடர்கிறது புது மரபு. பார்த்திராத புதிய முகங்கள் பாத்திரங்ளுக்குக் கூடுதல் மெருகூட்டுகிறார்கள். குறிப்பாக ஜமீனாகத் தன்னை அழைத்துக்கொள்ளும் நடிகர் இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நடிகர். மகனோடு உரையாடும் சில இடங்களில் அபூர்வமான தருணங்களை உருவாக்குகிறார். இந்தமாதிரி தருணங்களை நடிகர்கள் தாங்களாகவே  உருவாக்கிவிட முடியாது. அதற்கான ஒட்டுமொத்த சூழலையும் ஒரு இயக்குநரே உருவாக்கித் தந்தாக வேண்டும். அந்த வகையில் இயக்குநர்   மிகப் பக்குவப்பட்டவராக வெளிப்பட்டுள்ளார். அடுத்து இவரிடம் எதிர்பார்ப்பதற்கு நிறைய இருக்கிறது.

 

   
       இயக்குநர் குமாரராஜாவிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம் என்றூ சொல்லும்போதே, கவலையும் சேர்ந்து கொள்கிறது. பாரதிராஜா, மணிரத்னம், பாலும்கேந்திரா போன்ற இயக்குநர்கள் முதல் படத்திலிருந்து படிப்படியாக ஒருகட்டம் வரைக்கும் வளர்வதைப் பார்க்கமுடியும். முதல் படத்தில் பெரிதாக வெளிப்படுகிற சிலர் இரண்டாவது படத்தில் ஏமாற்றமளிக்கும் சம்பவங்கள் தொடரவே செய்கிறது. அதற்காக குமாரராஜாவை அவரின் இரண்டாவது படம் வரைக்கும் பாராட்டாமல் இருக்க முடியாது. 



2 கருத்துகள்:

  1. //ஒரு சினிமாவைப் பற்றிப் பேசுவதென்பது அதன் திரைமொழியை முன்னிறுத்தியதாகத்தான் இருக்கமுடியுமென்று நான் நம்புகிறேன்.//

    திரைமொழியைப் பற்றி சிறிது விளக்கமாக எழுதினால் நலம்.

    எதிர்பார்ப்புடன் ...

    பதிலளிநீக்கு
  2. திரைமொழி என்று ‘உருவத்தைத்தான்’ சொல்கிறேன். அதாவது ஒரு திரைப்படம் என்ன விசயத்தைப் பேசுகிறது என்பதை, அதற்குப் பொருத்தமான திரைமொழியில்( ஷாட்ஸ், கேமரா அசைவுகள், கோணங்கள், படத்தொகுப்பு,ஒளியமைப்பு.. இன்னபிற சமாச்சாரங்கள்) வெளிப்படுத்த முடிந்தால்மட்டுமே அது கலையாகிறது. சமூகத்துக்குத் தேவையான கருத்தைப் பேசுகிறது/ வித்தியாசமான கதை/ யாரும் பேச முற்படாதது என்பதால் மட்டும் அது சிறந்த சினிமாவாகிவிடாது என்பதே நான் கூறவிரும்புவது.

    பதிலளிநீக்கு

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.