சனி, 20 டிசம்பர், 2014

The Fault in Our Stars: மீண்டும் ஒரு காதல்கதைஇப்படி ஒரு காதல்கதையைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. நாற்பதிலிருந்து அறுபதுகளைக்  கடந்த நம் தமிழ்சினிமா நாயகர்களின் கும்மாங்குத்து காதல்களை பார்த்து சலித்துப் போன கண்களுக்கு பதின் வயதிலிருக்கும் ஹேசலும் அகஸ்டஸு ம் கண்களையும் மனதையும் நிறைக்கிறார்கள்.

16 வயதான ஹேசல் கிரேஸ் தைராய்டு கேன்சரால் பாதிக்கப்பட்டு நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவள். நுரையீரல் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் சிலிண்டரை உருட்டிக்கொண்டே நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பவள். தற்செயலாக அவள் சந்திக்கும் 17வயதான அகஸ்டஸும் கேன்சரால் பாதிக்கப்பட்டு ஒரு காலை இழந்தவன். இருவருக்கும் ஏற்படும் நட்பு சிலமாதங்கள் நீடித்து  காதலாக மலர்கிறது. ஒளிந்திருந்த கேன்சர் அகஸ்டஸ் உடல் முழுவதும் பரவுகிறது. 13 வயதிலிருந்து சிகிச்சையிலேயே காலத்தைக் கடத்திவந்த ஹேசலுக்கு அகஸ்டஸின் காதல் வெறுமையான அவள் வாழ்வில் கசிந்த ஒரு வெளிச்சக்கீற்றாக ஊடுருவுகிறது. ஆனால் அவளுக்கு முன்னதாகவே அகஸ்டஸ் உலகிலிருந்து விடைபெறுகிறான். ஹேசலுக்கு மீதமிருக்கும் சொற்பமான வாழ்நாளில் ஒரு மின்மினியாய் தோன்றி மறைகிறான் அகஸ்டஸ்.

 
 இளமையிலேயே உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட பதின்வயதினர் - அவர்களைப் பராமரிக்கும் பெற்றோர் – மருத்துவர்கள் – சிகிச்சைகள் என்று புதிய ஒரு உலகத்தைத் திறந்து வைக்கிறார் இயக்குநர்.

 இளமை ததும்பும் ஹேசலும் அகஸ்டஸும் மிகப்பொருத்தமான தேர்வுகளாக இருக்கிறார்கள். அதிலும் ஹேசலாக நடித்திருப்பவரின் வலியும் வெறுமையும் கலந்த முக பாவங்கள் அற்புதம்.


 2012இல் வெளிவந்த ஜான் கிரீன் எனும் நாவலாசிரியரின் நாவலைத் திரைக்கதை வடிவம்தான் இந்த உயிரோட்டமான சினிமா. நாவலாசிரியருக்கு நெருங்கிய ஒருவரின் வாழ்க்கையிலிருந்து உந்தப்பட்ட நாவலான இது ஹாலிவுட்டின் நேர்த்தியான தயாரிப்பாக வெளிவந்திருக்கிறது. படம் முடியும்போது நம் கண்களும் மனதும் ஈரமாவது நிச்சயம்.

1 கருத்து:

  1. .http://www.thanimaram.org/2012/02/blog-post_22.html//உங்கள் விவரணை பார்க்கத்தூண்டுகிறது. எங்கே கிடைக்கும் இந்தப்படம்?மேலே பதிவில் லிங்கு இருக்கு அண்ணாச்சி. பின்னூட்டத்தை பார்த்த பின் நீக்கிவிடவும் நட்புடன் தனிமரம்.

    பதிலளிநீக்கு

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.