வியாழன், 17 அக்டோபர், 2013

எ டேஜ்சரஸ் மெத்தட் (A Dangerous Method): மனமெனும் புதிர்வெளி...




1993இல் ஜான் கெர் (John Kerr) எனும் எழுத்தாளர் யுங், ஃப்ராய்ட் மற்றும் யுங்கிடம் சிகிச்சைக்கு வந்தவரான சபீனா (Sabina Spielrein) எனும் இளம்பெண் ஆகியோரைப் பற்றிய வரலாற்றுச் சம்பவங்களை கொண்ட நூல் ஒன்றை எழுதினார். அந்நூலை அடியொற்றி 2002 இல் மேடையேற்றப்பட்ட The Talking Cureஎனும் நாடகத்தைத் தழுவி உருவாக்கப்பட்ட திரைக்கதையே இப்படம். நாடகத்தையும் திரைக்கதையையும் எழுதியவர் கிறிஸ்டோபர் ஹாம்ப்டன் (Christopher Hampton).

2011இல் வெளியான ஜெர்மன் கனடா கூட்டுத்தயாரிப்பான இப்படம் சைக்கோ அனாலிஸிசின் (Psychoanalysis) தோற்றுநரான சிக்மன்ட் ஃப்ராய்ட், அனலிடிகல் சைக்காலஜியை( Analytical Pschycology) உருவாக்கிய கார்ல் யுங் அவரின் நோயாளித் தோழியான சபீனா ஆகிய மூவருக்குமிடையேயான சம்பவங்களைக் கொண்ட கதையாகும். ஆனால் யுங் – சபீனா இடையேயான காட்சிகளே பிரதானமானவை.


ஹிஸ்டீரியா எனும் மனநோயினால் பாதிக்கப்பட்ட சபீனா இளம் மனநல மருத்துவரான யுங்கிடம் சிகிச்சைக்காக அழைத்துவரப்படுகிறார். வார்த்தைகளுக்கிடையிலான தொடர்புகளைக் சொல்லச் செய்வதன் மூலமாகவும் கனவுகளை விளக்கப்படுத்துவதன் மூலமாகவும் சபீனாவின் நோயின் மூலத்தைக் கண்டறிய முற்படுகிறார் யுங்.

நிஜத்திலோ கற்பனையிலோ ஒரு  குழந்தைக்கு ஏற்படும் பாலியல் அனுபவங்களே எல்லா மன நோய்களுக்குமாக மூலகாரணம் எனும் ப்ராய்டின் அணுகுமுறையின் படி தொடர் சிகிச்சையின் மூலம் சபீனாவின் குழந்தைப்பருவத்தை அலசுகிறார் யுங். கண்டிப்பான சபீனாவின் தந்தை சபீனாவின் சிறுவயதில் அவளை தண்டிக்க முற்படும் போதெல்லாம் அவளை நிர்வாணமாக நிறுத்துகிறார். சபீனாவின் தாயோ தன் கணவனுக்கு உண்மையில்லாதவளாக இருக்கிறாள் என்பதையெல்லாம் சபீனாவிடமிருந்து அறிந்துகொள்ளும் யுங் அவளின் சராசரிக்குக் கூடுதலான புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்படுகிறார். நோயாளியுடன் உடல்தொடர்பு கூடாது எனும் பழைய அறத்தை மீறுகிறார். நாளடைவில் அந்த மருத்துவமனையில் யுங்கிற்கும் இன்னொரு  ,மருத்துவருக்கும் உதவியாளர் போலாகிறார் சபீனா. உளவியல் மருத்துவம் பயிலத்தொடங்கும் சபீனாவின் ஆய்வுக்கட்டுரைக்கு (thesis) உதவுகிறார். சுயமான மகத்தான படைப்பாக்கங்கள் பெரும் முரண்களிலிருந்தே மகிழ்க்கின்றன என்ற அவரின் கருதுகோள்கள்  எதிர்பாலின ஈர்ப்பு, மரபான நம்பிக்கைகளைத் தகர்ப்பதான உள்ளுணர்வின்பாற்பட்டது என்பதாக நீள்கிறது.













உளவியலின் சிடுக்கான கோட்பாடுகளைப் பரிச்சயம் உடையவர்களுக்கு இப்படம் பெரும் விருந்தாய் அமையக்கூடும். மற்றபடி நேர்த்தியான தொழில்நுட்பங்களோடு அற்புதமான நடிகர்களின் பங்களிப்பால் குறிப்பாக சபீனாவாக நடித்திருக்கும் கெய்ரா கிறிஸ்டினா நைட்லியால் ( Keira Christina Knightley)  இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே ப்ரைட் அன்ட் பிரிஜுடிஸ் (Pride & Prejudice) பைரேட்ஸ் ஆஃப் கரிபியன்  (Pirates of the Caribbean) மூன்று பாகங்களிலும் நடித்திருக்கும் கெய்ரா, ஹிஸ்டீரியாவின் உச்சத்தில் வெளிப்படுத்தும் நடிப்பு ஒரு மைல்கல். யுங்காக நடித்திருக்கும் மிக்கேல் ஃபாஸ்பென்டரும் (Michael FassBender) ஃப்ராய்டாக நடித்திருக்கும் விக்கோ மார்ட்டென்சனும் (Viggo Mortenswn) ஏற்கனவே பிரபலமான நடிகர்கள். பின்னனி இசையும் சிறப்பானது.







1 கருத்து:

  1. வணக்கம்
    பதிவு பற்றிய விளக்கம் அருமை மேலும் பல படைப்புக்கள் மலர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.