ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

ஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி

ஹென்றி ஷாரியரின் ‘பாப்பிலான்(தமிழில் ‘பட்டாம்பூச்சி’), அலெக்ஸ் ஹேலியின் ரூட்ஸ்(தமிழில் ஏழுதலைமுறைகள்) போன்ற நாவல்கள் (Bio - Fiction) தமிழில் இல்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு. கடந்த நூறு ஆண்டுகளில் காலனிய ஆதிக்கத்தின் பின்னான சமூகமாறுதல்கள், அதன் சாதக பாதக விளைவுகள், மாற்றத்தினூடாக வீழ்ச்சி அடையும் மதிப்பீடுகள், உறவுச்சிக்கல்கள் என்பவைதான் நம் புனைகதை உலகத்தின் உள்ளடக்கங்களாக இருந்துவந்திருக்கின்றன. இன்னொரு பக்கம் வரலாறுகளை புராணங்களை மறுவாசிப்பு செய்வது, சமகாலப் பார்வையில் புனைவுக்குள்ளாக்குவதான முயற்சிகள். இவற்றிலிருந்து விலகியவைகளாக புயலிலே ஒரு தோணி போன்ற விரல்விட்டு எண்ணத்தக்க விலகல்கள். காரணம் தமிழ் எழுத்தாளர்களின் வாழ்க்கை அனுபவங்களின் தன்மை அப்படி. தமிழின் ஆகச்சிறந்த புனைகதைகளாகப் பட்டியலிடப்படுகிற பெரும்பாலானவற்றை எழுதிய திருநெல்வேலி,  கும்பகோணம், மயிலாப்பூர் இலக்கியவாதிகள் பெற்ற வாழ்க்கை அனுபவங்கள் தானே எழுத்தில் கைகூடியிருக்கும் கடந்த 200 ஆண்டுகாலத்தில் புலம்பெயர்ந்தவர்கள், உலகப்போர்களுக்குப் போய்வந்தவர்கள், ரங்கூன் பர்மாவிலிருந்து நடந்தே ஊர்வந்து சேர்ந்தவர்கள் இப்படியானவர்கலெல்லாம் எழுத வரவில்லை. அல்லது எழுத வந்தவர்களுக்கெல்லாம் இத்தகைய அனுபவங்கள் வாய்க்கவில்லை என்றுதான் சமாதானப்பட்டுக் கொள்ளவேண்டும்.

அடிமை முறையும், உலகப்போர்களும், நாஜி வதை முகாம்களும் உலகுக்களித்த கொடை மனித இனம் உள்ளவரை உயிர்த்திருக்கும் இலக்கியங்கள்தாம். பிறந்த மண்ணை, வாழ்ந்த வீட்டை, உறவுகளை, சுயமரியாதையை எல்லாவற்றையும் இழந்து சாவின் விளிம்பைத்தொட்டு மீண்டவர்களின் எழுத்துக்கள், இலக்கிய நேர்த்திகள், உத்திகளையெல்லாம் புறம் தள்ளிவிட்டு நிமிர்ந்து நிற்கக் கூடியவை. இலங்கைச் சகோதரன் சயந்தனின் ஆறாவடுதமிழின் வேறுபட்ட நாவல் வகையை முன்னெடுக்க முயல்கிறது.

1987 முதல் 2003 வரையிலான காலப்பகுதியில் நடந்த இரண்டு அமைதிப் பேச்சுவார்த்தைகளின் காலத்தில் ஈழத்தமிழர்களிடையே துளிர்விட்டுத் தூர்ந்து போன நம்பிக்கைகள், நிகழ்வுகளினூடாகப் பயணிக்கும் கதை, இலங்கையிலிருந்து போலிக் கடவுச்சீட்டுகளோடு சுயஸ் கால்வாய்வழியாக அய்ரோப்பிய நாடுகளில் ஒன்றில் த சமடைய கடல்மார்க்கமாகச் செல்லும் கொடும் பயணத்தோடு முடிகிறது.தற்போது சுவிஸர்லாந்தில் வாழ்ந்துவரும் நாவலாசிரியரான சயந்தன் தன் இளமைப் பருவம் தொட்டு அருகாமையில் அவதானித்த நிகழ்வுகளே இந்நாவல். ஆனால் சம்பவங்களைத்தாண்டி விவரணையில் வெளிப்படும் இயல்பான பகடியும், சார்பற்ற நிலைப்பாடுகளும் அக்காலகட்டச் இலங்கைச் சூழல் பற்றிய சரியான சித்திரத்தை வரைகின்றன. இந்திய ராணுவம், இலங்கை அரசு பற்றிய அவரின் புரிதல்போலவே  புலிகளின் சாதனைகளையும் தவறான அணுகு முறைகளையும் தயக்கமின்றி பதிவுசெய்கிறார் என்பதைவிட கூடுதல் கசப்பை உமிழ்ந்துவிடாமல் இருப்பது முக்கியமாகிறது.

அருமையான வாசிப்பனுபவமாகவும், வரலாற்று ஆவனமாகவும் திகழும் ஆறாவடு 2011ல் வெளிவந்திருந்தும் ஏன் பேசப்படவில்லை என்ற ஆராய்ச்சிக்குள் நான் இறங்க விரும்பவில்லை. தமிழினி வெளியீடாக 2011 டிசம்பரில் வெளிவந்திருக்கும் இந்நாவல் தமிழின் மிக முக்கியமான நாவல் என்று சொல்லலாம். கிடைத்தற்கரிய அனுபவங்களும், அந்த அனுபவங்களை இலக்கியமாக உருமாற்றுகிற நுட்பங்களும் சயந்தனுக்குக் கூடி வந்திருக்கின்றன. சயந்தனிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம்.1 கருத்து:

 1. வணக்கம், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி..
  ஆயினும்
  //தற்போது சுவிஸர்லாந்தில் வாழ்ந்துவரும் நாவலாசிரியரான சயந்தன், இந்திய அமைதிப்படையில் புலிகளுக்கு எதிராக வலுக்கட்டாயமாக வேலைசெய்து, பின் புலிகளோடு பணிசெய்து, போரில் ஒரு காலை இழந்து அங்கிருந்து வெளியேறும் நிகழ்வுகளே இந்நாவல்.//
  என்பது மட்டும் தவறான பதிவு.
  இந்திய இராணுவம் என் மண்ணிற்கு வந்தபோது எனக்கு வயது 7 (1987)

  பதிலளிநீக்கு

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.