புதன், 22 ஆகஸ்ட், 2012

ஷட்டர் ஐலான்ட் ( Shutter Island): அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்


இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் 1945 ஏப்ரல் 29ல் ஜெர்மனியில் நாஜி வதைமுகாம்  ஒன்றை அமெரிக்கப்படை கைப்பற்றியபோது, நாற்பது மேற்புறம் திறந்த  ரயில்பெட்டிகளில்  அழுகிய நிலையில் மனித  உடல்கள் குவிந்துகிடந்தன. முகாமுக்குள்ளும் நிர்வாணமாக்கப்பட்ட எண்ணற்ற  உடல்கள் தரையிலிருந்து மேற்கூரைவரைக்கும்  கிடத்தப்பட்டிருந்தன.  அங்கே நுழைந்த  அமெரிக்க ராணுவமும் சரணடைந்த நாஜிகளைக் கணக்கில்லாமல் கொன்றுகுவித்தது.  இது Dachau என்ற  இடத்தில் நடந்ததால்  Dachau massacre  என்று அழைக்கப்படுகிறது.

 1880களின்  இறுதியில்  நரம்பியல் மருத்துவத்தில் சிலகுறிப்பிட்ட மனநோய்களுக்காக பரிசோதிக்கப்பட்ட  மூளை அறுவைச்சிகிச்சை முறை லொபாட்டமி(lobotamy) என்று அழைக்கப்பட்டது. மண்டையோட்டில் துளையிட்டு மூளைத்திசுக்களை  அழித்து மாற்றும் கொடூரமானமுறை அது. மனநோயாளிகளுக்கான சிகிச்சையாக  ஆரம்பிக்கப்பட்டு, சில நாடுகளில் மனதைக் கட்டுப்படுத்தும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும், ஒருவனை அவனுடைய நினைவுகளிலிருந்து முற்றிலும்  அப்புறப்படுத்தி, புதிய நினைவுகளைப் பதியமிடும் நோக்கங்களுக்கான ஆராய்ச்சியாக மாற்றம் பெற்றது. இத்தகைய ரகசிய  ஆராய்ச்சிகள்  மனிதநாகரீகத்திற்கு  அப்பாற்பட்டவையாகக் கருதப்பட்டு 1940களில் சோவியத்  உட்பட பலநாடுகள் இதைத் தடைசெய்தன.

 
மேற்கண்ட  இரண்டுவிசயங்களையும்  புனைவால்  இணைக்கும்மொரு  கதைதான் ஷட்டர்  ஐலான்ட். 2010ல் வெளியான ‘ஷட்டர்  ஐலாண்ட் பார்த்தே ஆகவேண்டிய படங்களின் வரிசையில்  எளிதாக  இடம்பிடிக்கக் கூடியது. உண்மைச் சம்பவங்களையும் புனைவையும் கலந்து திரைக்கதையாக்கும்  சாமர்த்தியசாலியான மார்ட்டின் ஸ்கார்சிஸ்ஸின்  இன்னொரு திரைக்காவியம்.
அமெரிக்காவின் பாஸ்டன்  துறைமுகத்திற்கு  அருகாமையில் உள்ள ஷட்டர்  ஐலான்டில் குற்றச்செயல்கள் புரிந்த மனநோயாளிகளுக்கான மனநோய்மருத்துவமனை இயங்கிவருகிறது. அங்கு காணாமல் போகும்    
ரு  பெண் நோயாளியைப் பற்றிய விசாரணைக்காக மார்ஷல்  எட்வர்டு டெடி டேனியலும் (நடிகர் டி காப்ரியோ) சக் அலெ (Chuck Aule) என்பவரும் ஷட்டர் ஐலான்டிற்கு வருகிறார்கள். ராணுவக்கட்டுப்பாட்டுடன்  இயங்கும்  அம்மருத்துவமனையில்  அவர்கள் தொடங்கும் விசாரணை  அவர்களை எங்கெல்லாமோ  இழுத்துக்கொண்டு போகிறது.