வெள்ளி, 11 மே, 2012

இங்லோரியஸ் பாஸ்டர்ட்ஸ (Inglourious Basterds): மேதமையின் உச்சம்

மனதை நெகிழச் செய்கிற உணர்ச்சிகரமான படங்கள் உண்டு. புத்திபூர்வமாக பார்வையாளனைத் திகைக்கச் செய்கிற படங்கள் உண்டு. ஆனால் பேச்சு மூச்சற்று நம்மை உலுக்கிவிடுகிற  படங்கள் சிலவே உண்டு. அந்த வகையான படங்களில் ஒன்றுதான் இங்லேரியஸ் பாஸ்டர்ட்ஸ். நான் ஏற்கனவே குவாண்டின் டொராண்டினோவின் ரசிகன் என்பதையும் இங்கு சொல்லியாகவேண்டும். 1994ல் பல்ப் ஃபிக்‌ஷன் என்ற படத்தின் மூலமாக நேர்கோட்டுத் தன்மையற்ற(non-linier) ஒரு கதைகூறுமுறையை சினிமாவில் பரிசோதித்தவர் குவாண்டின். அவரின் புதிய பாணி  கடந்த பதினைந்து ஆண்டுகளில் பல இயக்குநர்களால் உலகெங்கும் பரிசோதிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப் பட்டமை வரலாறு.

குவாண்டின் கருத்தியல் ரீதியில் பலரையும் ஈர்த்தவர் அல்ல. சினிமா என்ற ஊடகத்தை/ கலையை பின்நவீன காலகட்டத்திற்கு நகர்த்தியவர். ஒரு வகையில் ஹிட்ச்காக் போன்றுதான். ஹிட்ச்காக்கின் படங்கள் திரில்லர் வகையைச் சார்ந்தவை. மனித மனதிற்குள் ஆமிழ்ந்து கிடக்கும் அச்சம், திகில்  ஆகிய உணர்வுகளை உசுப்பி வேடிக்கை பார்த்தவை அவர் படங்கள். மனிதர்களின் எளிய ஆதாரமான உணர்ச்சிகளைக் திரைக்கலையின் உச்சத்திற்குக் கொண்டுசென்றார். ஆனால் கருத்து ரீதியாக அவர் மேன்மையான விசயங்களைப் பேசினார் என்று சொல்வதற்கில்லை என்பதால் அவரை சினிமா வரலாற்றில் ஓரமாக நிறுத்திவிடமுடியாது. ஏனென்றால் நவீன சினிமாமொழியைக் கலாபூர்வமாகக் கட்டமைத்தவர்களில் ஒருவர் அவர் என்பதால். குவாண்டினும் அப்படித்தான். நவீன கால சினிமா மொழியின் இலக்கணங்கள் இறுகி செல்லரித்து, சலிப்பூட்டத்தொடங்கிய நேரத்தில் அவர் ஒரு குறுக்குச்சந்தில் பயணிக்கத் தொடங்கினார். முன்னோடிகள் போடும் கோடு ரோடாக மாறும்தானே! 

 
முதன் முறையாக பல்ப் ஃபிக்‌ஷனைப் பார்த்த விமர்சகர்களுக்கு இந்தப் படத்தை எப்படி மதிப்பிடுவது என்று தெரியவில்லை. ஆனால் விமர்சகர்களுக்காக அவரும் அவர் சினிமாக்களும் காத்திருக்கவில்லை. அடுத்த தலைமுறை படைப்பாளிகளுக்கு புதிய வாசல்களைத் திறந்துவிட்டது  அந்தப்படம்.
 
 
குவாண்டினோவுக்கு 7வது அல்லது 8வது படமாகவோ இங்லேரியஸ் பாஸ்டர்ட்ஸ் இருக்கும். முன்பின் நகர்ந்து கதை சொல்வது என்றுமட்டும் இல்லாமல் கதையமைப்பிலேயே ரெம்பவும் வித்தியாசமான முயற்சி இது. வரலாற்று நிகழ்வுகளைக் கதையாக்குவதற்கென்று சில முறைகள் உண்டு. வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு அப்படியே கதைபின்னுவது. அல்லது தங்களுக்கு உகந்த வகையில் வரலாற்றை வாசிக்க முயற்சிப்பது. அல்லது வரலாற்றில் விடுபட்ட இடங்களைத் தம் புனைவால் இட்டு நிரப்புவது. இப்படி பலவகையான படங்கள் உள்ளன. இந்தப்படத்தில் உலகமே அறிந்த ஒரு வரலாற்று நாயகனுக்கு வேறொரு முடிவை எழுதிப் பார்க்கிறார். அவரின் அபாரமான திரைக்கதையமைப்பில், குவாண்டினின் புனைவு, உண்மையைப் போல் உருக்கொண்டு நிற்கிறது. ஹிட்லர் விசமருந்தி, தன்னைத்தானே சுட்டுக் கொண்டு  இறந்து எரிக்கப்பட்டதாகவும், தப்பிச் சென்றதாகவுமான இரண்டு  பதிவுகள் உண்டே தவிர, வேறு புதிர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் ஒரு திரைக்கதையை எழுதிப்பார்த்திருக்கிறார்.

நாஜிகளின் ஆக்ரமிப்பில் இருந்த ப்ரான்சின், கிராமப்புறமொன்றில், காணாமல் போன யூத குடும்பங்களைக் கணக்கெடுக்கிறார்கள் நாஜிகள். ஒளிந்து வாழ்ந்த குடும்பத்திலிருந்து தப்பிப்பிழைக்கும் 14வயது சிறுமி, நான்கு ஆண்டுகள் கழித்து பாரிசில், ஒரு திரையரங்க உரிமையாளராகிறாள். இதற்கிடையில் நாஜிகளை ஒழித்துக்கட்டும் யூத அமெரிக்க இளைஞர் படையின் தலைவராக பிராட் பிட். நூறு நாஜிகளின் தலைத்தோலையாவது உரித்தாக வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர். தப்பிப்பிழைத்த அந்தச் சிறுமி, நாஜிகளின் பிரச்சார சினிமா ஒன்றைத் தன் திரையரங்கில் சிறப்புக்காட்சியாகத் திரையிடச் செய்து, அங்கு  வர இருக்கும் ஹிட்லர் உள்ளிட்ட முக்கிய நாஜி ராணுவத் அதிகாரிகளைக் கொல்லத் திட்டமிடுகிறாள் என்பதை கதைச் சுருக்கமாகக் கொள்ளலாம்.

படத்தை 5 பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறார். இதுவும் அவரின் வழக்கமான பாணிதான். ஏறத்தாழ 5காட்சிகள் என்று சொல்லும் அளவுக்கு நீண்டு விரியும் காட்சிகள்.
முதல்காட்சியிலேயே தன் மேதமையை நிருபித்திருப்பார்  இயக்குநர். விசாரணைக்கு வரும் நாஜி அதிகாரி, அந்த வீட்டின் உரிமையாளன், அங்கு நடக்கும் விசாரணை,  கேள்விகள்- பதில்கள் – ஷாட்கள்- நடிகர்கள். மிக நீண்ட காட்சிகளைத் தயக்கமின்றி அமைக்கும் டொராண்டினோ, இப்படத்திலும் முதல் காட்சியையே 20நிமிடங்களுக்குமேல் நீட்டித்திருப்பார். குறிப்பாக விசாரணை அதிகாரியாகவரும்  Christoph Waltz, இந்தப்படத்தின் நடிப்பிற்காக ஆஸ்கார் விருதுபெற்றவர். அந்த வீட்டின் உட்புறம். இருள் மேலோங்கிய ஒளியமைப்பு. தைல வண்ண ஓவியம் போன்ற படச் சட்டங்கள். இலக்கியத் தரமான உரையாடல்கள்.

 

தன் படங்களில் மிகமுக்கியமான படமாக இதைக் கருதினார் டொராண்டினோ. 10 ஆண்டுகளாக இதன் திரைக்கதையை அசைபோட்டபடி இருந்தார். இடையிலேயே ‘Kill bill’ இரண்டுபாகங்களையும் எடுத்துமுடித்தார். சிறந்த படம், படத்தொப்பு, ஒளிப்பதிவு, திரைக்கதை, இயக்கம் ஆகிய பிரிவுகளுக்கு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

       என்னியோ மொரிக்கோனின் (Ennio Morricone) பின்னனி இசை படத்தை வேறுதளத்திற்கு நகர்த்துகிறது. குறிப்பாக நாஜிகளின் தலைத்தோலை உரித்து, சிதறிக்கிடக்கும் மனித உடல்களுக்கிடையே பிராட்பிட்டும் நண்பர்களும் நிற்கும்போது ஒலிக்கும் இசை. விசில் ஒலியிலேயே அமைக்கப்பட்டுள்ளது. வன்முறைக்காட்சிகளை நம் இசையமைப்பாளர்கள் எப்படி கொடூரமாக கையாள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். 400படங்களுக்குமேல் பின்னனி இசைக்கோர்வைகளைச் செய்துள்ளவர் என்னியோ மொரிக்கோன்.


 


       இரண்டாம் உலகப்போர்/ நாஜிகள் பற்றிய படங்களில் இங்லோரியஸ் பாஸ்ட்டட்ஸ் ஒரு மைல் கல். எதிர்கால திரைப்படக் கலைஞர்களுக்கு இப்படம் ஒரு பாடப்புத்தம்.

1 கருத்து:

  1. I have seen this picture already but after reading your review ,I could watch this like a fresh film.
    This review is teaching me how to see a film

    பதிலளிநீக்கு

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.