செவ்வாய், 30 ஏப்ரல், 2019

வகுப்பறைக்கு வெளியே -1

  ̀மாடசாமி என்றொரு மாணவர். காலை 8 மணி வகுப்பிலேயே அரைத்தூக்கத்தில் இருப்பார். சில சயங்களில் கோபமாகவும் சில சமயங்களில் கிண்டலாகவும் வினையாற்றி ஓய்ந்து விட்டேன். மிக அமைதியானவர். ஒருநாள் காலை 4 மணி. புலராத காலை. வெளியூர் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து செல்கையில் ஒரு திருப்பத்தில் ஒரு சைக்கிளில் மோதுவதிலிருந்து மயிரிழையில் தப்பி, நிதானித்துபாத்து வரக்கூடாதா? என்று குரலை உயர்த்த யோசிக்கையில்அட.. நம்ம மாணவர் மாடசாமி. தர்மசங்கடமாக விழித்தார். அவருடைய சைக்கிளின் காரியரில் பெரிய பால் கேன். விசாரித்தபோது சொன்னார். மூன்று ஆண்டுகளாக காலை 4 மணிக்கு எழுந்து பக்கத்து ஊரிலிருந்து பால்கேனை ஏற்றிக்கொண்டு 5 மணியிலிருந்து 7 மணிவரை வீடுகளுக்கு விநியோகித்துவிட்டு 7மணிக்கு வீட்டுக்குப் போய் அவசரமாகக் கிளம்பி 8மணிக்கு கல்லூரிக்கு வருவாரம். மாடசாமியின் வகுப்பறைத்தூக்கத்தின் நியாயம் தெரிந்தபோது சங்கடமாக இருந்தது. படிப்பில் வெகுசுமாராக இருந்தவர், மாலை நேரங்களில் மைதானத்தில் வெறும்காலில்  ஓடிக்கொண்டிருப்பார். மூன்றாம் வருடம் வெறுங்காலிலேயே மாரத்தானில் முதலாவதாகவும் வந்தார். ஒரு நாள் ராணுவத்துக்கு தேர்வான நல்ல செய்தியோடு வந்தார். ஆனால் சேருவதில் பெரும் சிக்கலொன்று இருந்தது. காட்டுநாயக்கர் சமூகத்தைச் சார்ந்த அவருக்கு சாதிச் சான்றிதழ் வாங்குவது பெரும்பாடாக இருந்தது. எந்த பின்புலமும் இல்லாத அவர் பெரும்போராட்டத்துக்குப்பின் சான்றிதழ் பெற்று ராணுவவீரராக எல்லையோரங்களில் வாழ்ந்தார். காஷ்மீர், மேற்கு வங்கம் எங்கிருந்தாவது அகால நேரங்களில் எப்போதாவது பேசுவார். இதல்லாம் நடந்து 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. நேற்று என்முன் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படிக்கும் அவர் மகளும், +2 முடித்த அவர் மகனும் அதே அப்பாவி முகபாவத்தோடு நம் மாடசாமியும். அடுத்து என்ன படிக்கலாம்? என்பதற்கான அலோசனைக்காக. வானத்தில் பறப்பது அல்லது கடலில் மிதப்பது என்ற தீர்மானத்தில் பையன். 10 - 25 லட்சம்வரை கட்டணத்திற்குத் தூண்டில் போடும் படிப்புகள்எதற்கும் தயாராகவே இருந்தார் தந்தை. பையனிடம் பேசியதில ஒருவழியாக பி.எஸ்.சி., இயற்பியல் படிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். சொல்வதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பவராகத் தெரிந்தார். வெறும் காலில் ஓடிய மாடசாமியின் புதல்வர் பி.எஸ்.சி. முடித்துவிட்டு ஏரோநாட்டிக் படிக்கும் உத்தேசத்தில் இருக்கிறார். அதை விட பெரிதான கனவுகளையும் அவரால் காணமுடியும். மனதுக்கு நிறைவாக இருந்தது. இந்திய சமூகத்தில் கல்வி மட்டுமே இத்தகைய மந்திரத்தை நிகழ்த்த முடியும்.


20ஆண்டுகளுக்கு முன், வகுப்பறைகளில் மாடசாமியின் சமூக பொருளாதார நிலையில் இருந்த மாணவர்கள் ஓரிருவர் மட்டுமே. மாடசாமியின் வகுப்பறையில்தான்  இயக்குநர் ராம் இருந்தார். சிங்கப்பூரில் ஆசிரியர்களாக இருந்து பட்டம் படிக்க வந்திருந்து பின்னாளில் சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தில் பெரும் பொறுப்புகளில் இருந்த தாஸும் செழியனும் இருந்தார்கள். இன்று அமெரிக்கன் கல்லூரியிலேயே பேராசிரியராய் பணியிலிருக்கும் மீனாட்சிசுந்தரம் இருந்தார்படிப்புக்குச் சம்மந்தம் இல்லாத பல்வேறு வேலைகளில் இருந்தாலும்படிக்கும்போது கிடைச்ச அனுபவங்கள், தொடர்புகள் என் வாழ்க்கைக்கு உதவுதுஎன்று பலரும் சொல்லக் கேட்டிருட்டிருக்கிறேன். கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பொதுச்சமூகம் கவனித்ததாகத் தெரியவில்லை. ஆண்டுதோறும் +2 தேர்ச்சி சதவீதம் உயர்ந்து கொண்டே வருகிறது. அல்லது அரசுக்கு அப்படியொரு நிர்பந்தம் இருக்கிறது. இந்த ஆண்டு 91 %. உழைக்கும் வர்க்கத்தினர் கல்லூரிகளுக்குக் குழந்தைகளை அனுப்புவது கணிசமாக அதிகரித்திருக்கிறதுகலை அறிவியல் கல்லூரிகள் நிரம்பி வழிகின்றன. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் அதன் பொற்காலத்தில் இருக்கின்றன. வசூலில்தான். அரசு கல்லூரிகளில் 500 ரூபாய் கட்டணம் என்றால் தனியார் கல்லூரிகளில் 2500, 3000, 4000, 10000 என தங்கள் விருப்பம் போல் வசூலிக்கத் தொடங்கிவிட்டன. அது பெரிய விசயமல்ல. இன்று வகுப்பறைகளில் 90 % மாணவர்கள் முதல் தலைமுறை படிப்பாளிகள். வகுப்பறைகளில் 60 முதல் 80 மாணவர்கள். அதிக மாணவர்களுக்கு கல்வி கொடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட shift system கல்லூரி கலாச்சாரத்தையே குழி தோண்டிப் புதைத்துவிட்டது. வகுப்பறையில் கிடைக்கவேண்டியதும் கிடைக்காமல் வளாகத்தில் கிடைக்கவேண்டியதும் கிடைக்காமல் வெறும் பட்டத்தோடு லட்சக்கணக்கில் முதல்தலைமுறை அப்பாவிகள் வெளியேறியவண்ணமிருக்கின்றனர். அரசுக்கு மாதிரியே கல்லூரிகளுக்கும் தேர்ச்சி சதவீதத்தைக்  அதிகரித்தாகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. நடுத்தரவர்க்க மாணவர்கள், குடும்பத்தினரின் கவனிப்பு ஆலோசனைகளில் அவர்களுக்கான வழிகளைக் கண்டடைந்து விடுகிறார்கள். மாட்டிக்கொண்டவர்கள் அடித்தட்டு மாணவர்கள். கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை, கட்டணம், அவர்களுக்கான வசதிகள், போதிக்கப்படும் கல்வி, அவர்கள் பெற்ற திறன்கள் பற்றி கேள்வி கேட்க (தரவரிசைப் பட்டியல் மட்டும் வெளிவரும்) முறைப்படுத்த எந்த வழி முறைகளும் இல்லை. மிகவும் அபாயகரமான நிலையில் இந்திய உயர்கல்வி இருப்பதைப் பற்றிய தீவிரமான உரையாடல்கள் இல்லை. இன்னும் 10ஆண்டுகளில் இந்தியா எதிர்கொள்ளப்போகும் அதிதீவிரப் பிரச்சனை படித்தவர்களின் வேலையின்மை. 70களின் நிலையைவிட பன்மடங்கு கூடுதலாக இருக்கப்போகிறது. பெருமளவிலான சீர்திருத்தம் தேவைப்படுகிறது. (நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரும் சீட் கேட்டு வருகிறார்கள்என்ன படிப்பது? எங்கு படிப்பது? என புரியாமல் சீட்டுகளுக்காக கல்லூரிகளின் வாசல்களில் மக்களா அலைமோதுகிறார்கள். பரிதாப உணர்ச்சியும் குற்ற உணர்ச்சியும் கலந்தவனாக இதை எழுதுகிறேன்

வியாழன், 4 ஏப்ரல், 2019

சூப்பர் டீலக்ஸ் - விமர்சனம்

Image may contain: 6 people, text













                   ஹைப்பர் லிங்க் சினிமாக்கள் எப்போதுமே எனக்கு விருப்பமானவை.
வன்முறை, குற்றம், பாலியல் ஒழுங்கு மீறல்கள், பெருநகரப்பண்பாட்டில் அடித்தள மக்களின் வாழ்வியல் இவற்றினூடாக இருத்தலின் அர்த்தமின்மையையும் உலகம் வலியுறுத்திவரும் அறம் பற்றிய அடிப்படையான கேள்விகளையும் எழுப்ப கூடியவை இந்த ஹைப்பர் லிங்க் படங்கள் என்பேன். பகடியும் கேளிக்கையுமாக நகரும் இப்படங்கள் இன்னொரு அடுக்கில் ஆழமான கேள்விகளை எழுப்பக்கூடியவை. எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு பார்வையாளனைச் சஞ்சலப் படுத்துபவை. Plup Fiction, Magnolia, Traffic, 21 Grams, Amores Perros, City of God, Babel ஆகியவை இந்த வகைமையில் உச்சத்தைத் தொட்டவை. 21 grams, Amores Perros, Babel ஆகிய மூன்று படங்களையும் இயக்கிய அலக்சாந்த்ரோ கொன்சாலஸ் இந்த வகையான படங்களை இயக்குவதில் ஒரு மேதை.
                 குமாரராஜா அப்படி ஒரு ஹைப்பர் லிங்க் சினிமாவை முயற்சித்திருக்கிறார். ஆரண்யகாண்டம் இப்போது வரைக்கும் எனக்குப் பிடித்தமான படமாகவே இருக்கிறது. 8 வருடங்கள் கழித்து கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்ததாலோ என்னவோ படம் கூடி வந்தமாதிரி தெரியவில்லை.
                 ஆரண்யகாண்டத்தில் ' எது தேவையோ அதுவே அறம்' என்பது போன்ற வாசகத்தோடு படத்தைத் தொடங்கியவர் குமாரராஜா. ' தேசத்தின் மேல் இருந்தால் அது பக்தி, மொழியின் மேல் இருந்தால் அது பற்று, ஆனால் சாதியின் மேல் இருந்தால் மட்டும் அது வெறியா?' என்று சூப்பர் டீலக்ஸில் ஒரு உரையாடல் வருகிறது. இன்னொரு இடத்தில் நீலப்படத்தில் தோன்றியிருந்த அம்மாவை பார்த்து ' சினிமால சான்ஸ் தாரேன்னு யாரும் ஒன்ன அப்டி நடிக்க வைச்சுட்டாங்களாம்மா' என்று கேட்கும் பையனிடம் அம்மா ' நான் தெரிஞ்சுதான் நடிச்சேன். அந்த மாதிரி படத்த லச்சம் பேரு பாக்குறாங்கன்னா அதுல நடிக்க நாலுபேர் இருக்கத்தான் செய்வாங்க. அவங்கள சொல்லாம என்ன மட்டும் எப்படி சொல்லலாம்' என்கிறாள். இந்தமாதிரி உரையாடல்களைவைப்பதற்கு கலகத் தன்மையும், புத்திசாலித்தனமும் கொஞ்சம் அரைவேக்காட்டுத்தனமும் தேவைப்படுகிறது. 
                  பாடல்கள் இல்லாமல் இருப்பது ஆசுவாசமாக இருக்கிறது. இசையும் அளந்துதான். பழைய பாடல்களை சில இடங்களில் அட்டகாசமாய் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் கொஞ்சம் அதிகம். 
                  விஜய் சேதுபதி ஒப்பனையைத் தவிர பிரத்தியேக்மாக ஒன்றும் நடித்துவிடவில்லை. அரவாணிகளுக்கான நளினம், அங்க அசைவுகளிலோ குரலிலோ கூடத் துலக்கமாக வெளிப்பட்ட மாதிரி தெரியவில்லை. விஜய் சேதுபதி என்ன செய்தாலும் அதைக் கொண்டாடுகிற மனநிலையில் ரசிகர்களும் ஊடகங்களும் இருக்கிறார்கள். எனக்கென்னவோ சேதுபதி ஒரே மாதிரியாகவே நடித்து வருகிறார். அதாவது அவருடைய சுயமான உடல் மொழி, பேச்சு மொழி மற்றும் பாணி. . அவருடைய தனிப்பட்ட நல்லியல்புகளை நடிப்பின்மேல் ஏற்றிவிடுகிறார்கள் போலத் தெரிகிறது.
                  மிஷ்கின் பாத்திரம் தமிழ் சினிமாவில் புதுசு. ஆனால் மாபெரும் சொதப்பல். தமிழ் கிறித்தவ விசுவாசிகளுக்கென்றே ஒரு தனித்த மொழிநடை, மாடுலேசன் இருக்கிறது. அதை கவனமாகப் பயன்படுத்தியிருந்தால் பிரமாதப்படுத்தியிருக்கலாம். சபீபகாலமாக தமிழ்க்கிறித்தவர்களிடையே பெருகிவரும் மூட பக்தியை பகடி செய்தமைக்கு என் தனிப்பட்ட நன்றி. ஆனால் அதைச் சரிவரச் செய்யாமல் விட்டதை ஒரு கிறித்தவனாகக் கண்டிக்கவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
                   தாய்மொழி பேசி நடிப்பதன் அவசியத்தை பகத்பாசில் உணர்த்திக்கொண்டே இருக்கிறார். சில நல்ல தருணங்கள் அவரின் தமிழால் மதிப்பிழந்துவிடுகின்றன. பகத்பாசிலேதான் இந்தப் பாத்திரத்தில் நடித்திருக்க வேண்டுமா? சில சுவாரஸ்யமான தருணங்களும் பல ஆயாசங்களும் கலந்து படம் முடிந்து வெளியே வரும்போது, படம் பிடித்திருக்கிறதா? இல்லையா? என்று தீர்மானிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
                  நின்று நிதானித்துப் பார்த்தால் தமிழின் புதிய புதுவகை (hybrid ) சினிமாக்களில் சூப்பர் டீலக்ஸுக்கு இடம் கொடுத்தே ஆகவேண்டும்.

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

டூ லெட் -விமர்சனம்



தமிழகத்தின் நவீன நாடகங்களில் பெரும்பாலானவை பார்வையாளர்களைப் பலவகைகளிலும் சோதிப்பவை. கடந்த 35 வருடங்களாக நிலமை இதுதான். காரணத்தை யோசித்துப் பார்த்தால் நவீன நாடகங்களில் செயல்படுவோர் பெரும்பாலும் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அறிவு ஜீவிகள். இவர்களுடைய பிரச்சனையே உலக நாடகக் கோட்பாடுகளைக் கரைத்துக் குடித்திருப்பதுதான் என்று தோன்றும். கோட்பாடுகளுக்குள்ளும் கலை பற்றிய தெள்ளத்தெளிவான புரிதலுக்குள்ளும் சிக்கிக் கொண்டு பார்வையாளனைப் பரிதவிக்க விட்டு விடுவார்கள். டூ லெட் சினிமாவில் நேர்ந்திருப்பதும் அதுதான்

உலக சினிமாக்களில் மிகுந்த பரிச்சயம்  கொண்டசெழியனும் பார்வையாளர்களைப் பொருட்படுத்தாத சினிமாவைக் கொடுத்திருக்கிறார். 70களின் கலைப்படங்கள் என தரப்படுத்தப்பட்ட சினிமாக்களின் அச்சு அசலாக டூ லெட இருக்கிறது. அசையாத  கேமரா கோணங்கள். அளந்து பேசும் பாத்திரங்கள். சுவாரஸ்யம் வந்துவிடக் கூடாது என்ற பிடிவாதம். குறைந்த வெளிச்சம். நாயகி படுத்துக்கொண்டு தன் மகனைப் பற்றிப் பேசுகிறார். அசையாத ஷாட். நான் அரங்கில் பார்வையாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஒரு சுற்றுப்பார்த்துவிட்டு திரைக்கு வந்தபோதும் நாயகி அசையாத ப்ரேமுக்குள் பேசிக்கொண்டிருந்தார். சினிமான்னாலே வீடு தர்றதிலை எனும் போது இன்னொருவர் ’50 வருஷமா சினிமாக்காரன் கையில நாட்டையே குடுத்துருக்காய்ங்க…’ என்று நிறுத்திவிடுகிறார். ‘வீடு குடுக்கமாட்டாங்களாமா?' என்று தொடரக்கூடாது என்ற பிடிவாதம் தெரிகிறது. தந்தையும் மகனும் தொலைக்காட்சியில் படம் பார்க்கிறார்கள். என்ன படம் என்று தெரிவதில்லை. பின்னனி ஒலியிலிருந்து அதுரெட் பலூன்குறும்படம் என்று ஊகிக்கிறோம். அந்தப்படம் 1958 என்று நினைவு. அறிந்தவைகளினின்று விடுபட முடியாத சிக்கலுக்குள் படைப்பாளன் சிக்கிக் கொள்வது பெரும் சோகம்

கோட்பாடுகளின் பரிச்சயமும் ஒரு துறை பற்றிய ஆழமான அறிவும் பேராசிரியர்களுக்கும் விமர்சகர்களுக்கும் பலமாக அமையலாம். படைப்பாளிகளுக்கு அது சுமை என்றே தோன்றுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் வேறு வகையான சினிமா மொழிக்குப் பழக்கப்பட்டுவிட்டவர்களை எப்படி முன்னோக்கித்  தள்ள முடியும். மேலும் தமிழ் சினிமாவில் எளிமையும், அழகியலும், புத்திசாலித்தனமும் கொண்டகாக்கா முட்டை, மேற்குத் தொடர்ச்சி மலைபோன்ற சினிமாக்கள் சாத்தியமான பின்டூ லெட்என்னவிதமான சினிமா அனுபவத்தைத் தர முயல்கிறது என்பது விளங்கவில்லை.


இந்தச் சினிமாவுக்கான கூடுதலான புகழுரைகள் செழியன் போன்ற தேடலும் தீவிரமும் கொண்ட படைப்பாளியைத் திசை திருப்பிவிடக்கூடும் என்பதாலேயே இதை எழுத வேண்டியிருக்கிறது.  

திங்கள், 2 அக்டோபர், 2017

சிவாஜி எனும் கலைஞனை நினைவு கூர்வதென்பது...



தமிழ்சினிமாவின் இரண்டு நடிகர்கள் ஒரு ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தார்களாம். (அப்போது பிரபலமாக இருந்த நடிகர்களை அவர் குறிப்பிட்டார். இப்போதும் உங்களுக்குப் பிடித்த/ பிடிக்காத இரண்டு நடிகர்களை நீங்கள் ஆட்டோவில் அமர்த்திக் கொள்ளலாம்.) அவர்கள் பயணித்த ஆட்டோவுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் பின்புறத்தில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்ததாம். இருவரில் இளையவரான ஒரு நடிகர் மூத்தவரிடம் கேட்டாராம்… அண்ணே அந்த ஆட்டோவுல..’ தோலின் பளபளப்பும் சுரணையற்ற தன்மையும் தொழுநோயின் அறிகுறிகள்னு’ போட்டுருக்கே, நம்ம தோலும் பளபளப்பாத்தான் இருக்கு இயக்குநர்கள் நடிக்கச் சொல்லும்போது எந்த உணர்ச்சிகளும் வர்ற மாதிரி தெரியல… அப்ப நமக்கும் தொழு நோயான்னே…’ என்றாராம் அப்பாவியாக…நம் சினிமா நாயகர்கள் பலரின நடிப்பாற்றலைப் பார்க்கும் போது என்னுடைய நண்பர் முத்துராமலிங்கத்தின் புகழ்பெற்ற இந்த நகைச்சுவை துணுக்கு நினைவுக்கு வந்துவிடும்.

இது ஒரு நகைச்சுவை மட்டுமல்ல என்பது நம்நாயகர்களின் ஒரேவிதமான நடிப்பை பார்த்து வருபவர்களுக்குத் தெரியும். இத்தகைய யோசனைகளின்போது சிவாஜி எனும் கலைஞனை நினைத்தாக வேண்டியிருக்கிறது.

சிவாஜி மணிமண்டபத்தையொட்டி சிவாஜி பற்றிய பதிவுகள் ஊடகங்களில் புழங்குவதைப் பார்த்தபோது சிவாஜியோடு எங்கள் பேராசிரியர் வசந்தன் அவர்கள் சிவாஜியைப் பற்றிப் பேசியவைகளும் சேர்ந்து நினைவுகளை நனைக்கின்றன. பேராசிரியரிடம் உரையாடுவதற்கு முன்னால் எனக்கு சிவாஜி பற்றிய நல்ல சித்திரங்கள் எதுவுமில்லை. காரணம் நான் சிறுவயதில் அதிகம் சினிமாக்கள் பார்ப்பதை ஊக்குவிக்காத கிறித்தவ குடும்பச் சூழலில் வளர்ந்தவன். மேலும் நான் வாழ்ந்த ஊரிலிருந்த திரையரங்கம் வெகுசீக்கிரமே ‘தீப்பட்டி ஆபீசாக’ மாற்றமடைந்திருந்தது.

நாங்கள் கல்லூரிக்குள் நுழைந்தகாலத்தில் சிவாஜியின் சகிக்கமுடியாத படங்கள் வெளிவந்து கொண்டிருந்த காலம். மதுரை சினிப்பிரியா தியேட்டரில் நெஞ்சத்தைக்கிள்ளாதேயில் ‘பருவமே புதிய பாடல் பாடு’ என நாங்கள் சொக்கிக்கிடந்தபோது மினிப்பிரியாவில் திரிசூலம், பட்டாக்கத்தி பைரவன் வகையறா படங்களில் சிவாஜி மிரட்டிக்கொண்டிருந்தார். ஆக எனக்கு சிவாஜியின் பழைய படங்களோடு பெரிய பரிச்சயம் இருக்கவில்லை. நடிப்பின் இமயம் சிவாஜி என்பது ஒரு தேய்வழக்குபோல் எல்லோராலும் சொல்லப்பட்டு வந்ததேதவிர ஏன் அவர் நடிப்பின் இமயம்? என்பதை யாரும் விலாவாரியாகப் பேசியதில்லை. முதன்முறையாக வசந்தன் ஒரு அமர்வில் சிவாஜியின் பாடல் காட்சிகளில் ஒன்றான ‘உள்ளம் என்பது ஆமை’ யில் சிவாஜி கைகளைப் பயன்படுத்துவதைப் பற்றி சிலாகித்துக்கொண்டிருந்தார். மேற்கத்திய கிளாசிக் சினிமாக்களைக் கரைத்துக் குடித்த அவர் கிளார்க் கேபிள், மார்லன் பிராண்டோ வரைக்குமான வரிசையில் சிவாஜியைப் பொருத்தி பேசத்தொடங்கியதைத் தொடர்ந்து சிவாஜியைக் கவனிக்கத் தொடங்கினேன்.

அவருடைய பழைய பாடல்களில் குறிப்பாக கறுப்பு வெள்ளைப் படங்களில் சிவாஜியின் அசைவுகள், நகர்வுகள்(movements), நிற்றல் நிலைகள்(postures) மிகுந்த கவித்துவத்தோடு வெளிப்படுவதைக் காணமுடிந்தது. குறிப்பாக கை மற்றும் விரலசைவுகளில் அவர் ஒரு அபாரமான நடிகர் என்பதை வெளிப்படுத்தியபடியே இருப்பார். ஒரு நடிகனுக்கு முகம் தவிர்த்து கைகளே பிரதானமான நடிப்புக் கருவியாக அமைகிறது என்பதைத் தெரிந்திருந்தார். தமிழ் சினிமாவில் நடிகர்கள் மிக அபத்தமாகப் பயன்படுத்துவது கைகளைத்தான். உள்ளம் என்பது ஆமை எனும் அந்தப்பாடலில் அவர் விரல்கள் நடன அசைவுகளை ஒத்ததான நளினத்துடன் இயங்குவதை பார்த்துக்கொண்டே இருக்கமுடியும். சிவாஜி எனும் கலைஞனைப் புரிந்த இயக்குநர்கள் இருந்ததால்தான் அவர் பாடல்களில் குளோஸ்-அப் மற்றும் மீடியம் ஷாட்களே மிகுந்திருக்கும். இப்போதும் கூட நம் இயக்குநர்கள் நம் நாயகர்களைப் புரிந்து வைத்திருப்பதால்தான் பாடல் காட்சிகளைப் படமாக்கச் செல்லும்போது ஒரு திருவிழாக்கூட்டத்தையே லாரிகளில் அள்ளிச் செல்கிறார்கள் போலும். ஒரு ஒப்புமைக்காக சிவாஜியின் ‘உள்ளம் என்பது ஆமையையும்’ எம்.ஜி.ஆரின்.’புதிய வானம் புதிய பூமி’ இரண்டுபாடல்களையும் அவதானித்தால் இருவருக்குமான பாரதூர இடைவெளிகளைப் புரிந்து கொள்ள முடியும். புதிய வானம் பாடலில் புரட்சித்தலைவர் ஒரு வெற்று சூட்கேசையும் ஒரு சிறு கோலையும் ( அது மந்திரக்கோல் போலவும் வாக்கிங் செல்லும் போது குறுக்கிடும் பைரவர்களை விரட்டுவதற்கானது போலவும் தோற்றமளிக்கிறது) வைத்துக்கொண்டு கைகளை நெஞ்சுக்கும் வானத்துக்குமாக விசிறிக்கொண்டிருப்பார். அதிகமும் லாங் ஷாட்களில் ஓடிக்கொண்டே இருப்பார், கேமராவை அருகில் கொண்டுவந்துவிடாதீர்கள் என்பது போல்.

https://www.youtube.com/watch?v=boyVeLaj14Y

https://www.youtube.com/watch?v=fa6LPvNAbJ0


இப்படி சிவாஜியின் நடிப்பின் பல்வேறு அம்சங்கள் பற்றி விரிவாகப் பேசமுடியும். பேச வேண்டும். அப்படிப் பேசுவதாலேயே எதிர்காலத் தலைமுறைக்கு சிவாஜி எனும் கலைஞனைக் கடத்தமுடியும். ஆனால் எனக்குத் தெரிந்து சிவாஜி பற்றிய ஆய்வு நோக்கிலான சில கட்டுரைகள் தவிர்த்து பெரும் பதிவுகள் இல்லை. ஏனெனில் இன்னும் 25 ஆண்டுகளுக்குப்பின் சிவாஜியின் படங்கள் புழக்கத்தில் இருக்கப்போவதில்லை. சினிமா எப்போதும் பெரும்பாண்மை மக்களோடு புழங்குவதுதான். ஆக சிவாஜியின் படங்களைத் தேடிப்பார்க்கவேண்டுமென்ற தேவை இருந்தாலொழிய யாரும் தேடப் போவதில்லை. எதிர்கால நடிகர்கள், ஆய்வாளர்கள், கலை விமர்சகர்களின் தேடுதலுக்கு உரியவராக சிவாஜி இருந்தால் மட்டுமே சிவாஜி எனும் கலைஞன் காலம் கடந்தும் வாழ்வார். அப்படித்தான் மைக்கேல் ஆஞ்சலோ, மொசார்ட், லாரன்ஸ் ஒலிவியர், சேக்ஸ்பியர், கம்பர் போன்ற மகா கலைஞர்கள் இன்றும் அழியாமல் வாழ்கிறார்கள். எந்தக்கலை வடிவத்தையும் சுவைஞர்களும் விமர்சகர்களுமே தங்கள் பதிவுகளால் கடத்துகிறார்கள். அதைவிடுத்து புகைப்படங்களையும் சிலைகளையும் உள்ளடக்கிய மணிமண்டபங்களால் எந்தக் கலைஞனையும் இருத்திவிட முடியாது. அல்லது மணிமண்டபங்களையாவது அர்த்தப்பூர்வமாக வடிவமைக்க வேண்டும். விமர்சகர் ஞாநி ஒரு முறை பரிந்துரைத்ததைப் போல ( ஒரு நிரந்தர நாடக அரங்கம், நூலகம், சிவாஜியின் படங்களை எப்போதும் பார்க்கும் வசதி) செய்வதற்கு அரசோ, நடிகர் சங்கமோ, சிவாஜியின் குடும்பத்தினரோ கூட எந்தப் பிரயத்தனமும் செய்யப்போவதில்லை.

நண்பர் ஒருவர். இலங்கையில் பேராசிரியராக இருந்து புலம் பெயர்ந்து தற்போது லண்டனில் வசிப்பவர். அவருடைய இளம் பிராயத்தில் சிவாஜி படங்கள் தமிழகத்தில் ரிலீஸ் ஆன அன்றே பார்த்துவிடும் துடிப்பில் கள்ளத்தோணியில் தமிழகம் வந்து படம்பார்த்துச் செல்லும் சிவாஜியின் பரம ரசிகர். வெறுமனே ரசிகராக மட்டுமல்லாமல் அவரை உலக நடிகர்களோடும் நடிப்புக்கோட்பாடுகளோடும் இணைத்துப் பேசக்கூடியவர். அவர் சிவாஜிவை மையமாகக் கொண்டு ஒரு கருத்தரங்கை நடத்தி அதில் வரும் கட்டுரைகளை நூலாக்க வேண்டும் என்று ஏறத்தாழ 4ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார். இந்தியா வரும்போதெல்லாம் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் என செய்த முயற்சிகள் எதுவும் ஈடேறவில்லை. சிலமாதங்களுக்கொருமுறை ‘அந்த சிவாஜி செமினார்…’ என்பதான தொலைபேசி உரையாடல்களாக மட்டுமே இருந்துவருகிறது.

ஆகவே காலத்தால் அழிக்க முடியாத கலைஞன் என்ற வாய்ப்பேச்சுகளால் ஆகப் போவதொன்றுமில்லை. உருப்படியாகச் செய்ய வேண்டுவன பற்றி யோசிக்க வேண்டும். முன்னெடுக்கப் போவது யார்? ரசிகர்களா? நடிகர் சங்கமா? அரசா? பல்கலைக் கழகங்களா? அவரின் குடும்பத்தாரா? யாரறிவார்?







வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

தரமணி : புராதன மனங்களும் சைபர் உலகமும்



                  உலகமயம் கலைத்துப்போட்டிருக்கிற நம் பண்பாட்டு வாழ்வின் மீதான கவலை, அச்சம், விமர்சனங்களோடு சமகால இந்திய 'ஒருமையாக்கல்' அரசியல் ஏற்படுத்திவரும் பதட்டங்களையும் சுமந்து திரியும் ஒரு இடதுசாரியாகவும் தமிழ்தேசியாவாதியாகவும் பெண்ணிய விரும்பியாகவும் தலித்திய ஆதரவாளராகவும் அல்லல்படும் ஒரு படைப்புமனம் தமிழ் சினிமாவுக்குள் மாட்டிக்கொண்டால் என்ன நடக்கும்? கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி ஆகிய படங்களாக வெளிப்படும்.
                 தரமணி, மரங்களை இழந்த புறாக்களின் கதை. பிழைப்புக்காய் புலம்பெயர்ந்து அநாதையாய் செத்துப்போகும் ஒரு வடமாநில தொளிலாளியின் கதை. சென்னையின் மின்சார ரயிலில் பணத்தைப் பறிகொடுக்கும் முன்னரே பிண்மாக பயணமாகும் ஒரு நாகூர் பெரியப்பாக்களின் கதை. வீட்டில் அடைந்துகிடக்கும் மனைவிகளைப் பொருட்படுத்தாத அதிகாரிகளின் கதை. பெருநகரங்களின் அடைபட்ட வீடுகளுக்குள் வாழ்க்கையின் சலிப்பைத் துரத்த முடியாமல் அலைபேசிகளின் மாய வலைக்குள் சிக்கிக்கொள்ளும் இல்லத்தரசிகளின் கதை. அரைவேக்காட்டு கல்வி பெற்று, எதிர்ப்படும் பெண்களையெல்லாம் காதலிக்கத் தயாராகும், காதலுக்காக பொய்யை, திருட்டை, தியாகங்களைச் செய்யச் துடிக்கும், காதலித்தபின் அவளைப் உடமையாக பாவித்து உடைத்து நொறுக்கத் தயங்காத புராதன மனமும் சைபர் உலக தந்திரோபாயங்களும் பின்னிப்பிணைந்த இந்திய ஆண்மகன்களில் ஒருவனான ஒரு இளைஞனின் கதை. இத்தனை கதைகளினூடாக, ஒரு பால் ஈர்ப்புடையவனான தன் கணவனைப் புரிந்து கொள்பவளும் தொடர்ந்து எதிர்ப்படும் பலதரப்பட்ட ஆண்மகன்களை வெவ்வேறாய் எதிர்கொள்பவளும், வாழ்க்கையின் அழகை, கோரத்தை, தற்செயலை அற்புதமாய் கையாள்பவளுமான ஒரு இளம்தாயின் கதையுமாகும்.
                   இந்த நூற்றாண்டில் யார் ஒருவருடைய கதையும் அந்த ஒருவருடைய கதை மட்டுமல்ல என்ற புரிதல் இருந்தால் மட்டுமே ராமுடைய தரமணியின் முழுமை சிதைக்கப்பட்ட, தொடக்கமும் முடிவுமற்ற இந்தப்படத்தை ரசிக்க முடியும்.
                   ராமுடைய குரல் இடையீடுகள் பார்வையாளர்களுக்குக் கிளர்ச்சியையும் எரிச்சலையும் ஒருங்கே ஏற்படுத்துவதைக் கண்டு ரசித்தேன். நாடகத்தில் ப்ரக்டுடைய காவிய அரங்கு (epic theatre) என்று உண்டு. பார்வையாளர்களை உணர்வு ரீதியாக நாடகத்துடன் ஒன்றிணையாமல் தடுத்து, இது நாடகம்தான் என்று உணர்த்திக்கொண்டே இருப்பது. இப்படி செய்வதற்குக் காரணம் பார்வையாளர்களுக்கு 'ஒரு அரசியல் விழிப்புணர்ச்சியைக்' கொடுப்பதே கலையின் நோக்கமாக இருக்கவேண்டுமேயல்லாமல் அவனை உணர்ச்சிக்கடலுக்குள் மூழ்க்கடிப்பதல்ல என்கிறது அந்தக் கோட்பாடு.
                   ராமின் குரல் இடையீடுகள் செய்வதும் இதைத்தான். இது இன்னொரு செல்வராகவன் படமாக மாறாமல் இருப்பதும் இந்த இடையீடுகளால்தான். ராமுக்கு சொல்வதற்குக் கதைகளோடு அரசியலும் இருப்பதால்தான் இந்த விவரிப்புமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன். எந்தக் கதையோடும் பலகதைகளும் அந்தக் கதைகளை உருவாக்கும் சமூக அரசியல் சூழல்களும் சொல்லப்பட வேண்டியவை என்ற ராமின் பன்முகப் புரிதலே அவரைத் தனித்து நிறுத்துகிறது.
                  ' அடிச்சா ஒன்றரை டன் பாக்கிறியா? பாக்கிறியா?' என்று சிங்கங்கள் பேச வேண்டிய வசனங்களை 75 கிலோ தேராத நம் கதாநாயகர்கள் பேசிக்கொண்டிருக்கிற தமிழ் சினிமாவில் ராமிற்குச் சொல்வதற்குக் கதைகளும் பேசுவதற்கு அரசியலும் இருப்பது எனக்கு முக்கியமாக படுகிறது.

                    பாத்திரங்களின் செயல்பாட்டில் தர்க்க ரீதியான தெளிவையும் குழப்பமற்ற கதைப்போக்கையும் 'நல்ல சினிமாவாகக்' கொண்டாடிப் பழகியவர்களுக்கு தரமணி ஒரு படமேயல்லதான். இத்தகைய நுணுக்கங்களுக்குள் நுழைய விரும்பாத பொதுப் பார்வையாளர்களுக்கும் கூட தரமணி சுவாரஸ்யமான படமாக இல்லாமல் போகலாம். பெருகிவரும் பெருநகர வாழ்வியலில், இணைய வலைப்பின்னல் சூழலில் உருவாகும் உறவுச்சிடுக்குகளும் அதன் கன பரிமாணங்களுமே எதிர்காலத்தில் இந்திய்ச் சமூகம் கையாள இயலாத விசயங்களாக இருக்கப் போகிறது. அவற்றை பேசுவதென்பது குழப்பமான, அதிரடியான, சிதறிய வடிவமாகத்தான் இருக்கும். அது ஒரு ‘நல்ல’ திரைப்படம் கொடுக்கும் சுகானுபவத்தை தராது என்பதோடு மேலும் கேள்விகளையும் குழப்பங்களையுமே உருவாக்கும். தீர்வுகளைத் தேடி ஜக்கிவாசுதேவிடம் போகும் மன நிலையோடு திரைப்படங்களை அணுகுபவர்களுக்கு இது ஒரு எரிச்சலூட்டும் படம்தான்.
                    ராமுடைய நாயகர்கள் தொடர்ந்து அவரைப்போலவோ அல்லது அவராகவோ (தோற்றத்தில்) இருக்கிறார்கள். இந்த மாதிரியான சுயமோகம் ஒரு இயக்குநருக்கு நல்லதாக இருக்குமென்று தோன்றவில்லை. ஆண்ரியா அற்புதமாக பொருந்திப் போகிறார். அவர் நடிக்கவேண்டிய அவசியமே இருக்கவில்லை. விபத்தில் அடிபட்டு செத்துக்கிடப்பவன் ஒரு வடமாநில தொழிலாளி என்பதைச் சொன்னால்தான் புரிந்து கொள்ள முடியும் என்பது சரிதான். ஆனால் புறாக்களின் கதையைச் சொல்லத்தான் வேண்டுமா? அது பறந்து கடந்து போகும் பாதையில் கண்ணாடிச் சுவர் இருப்பதை அறியாது மோதிச் செத்துவிழுவதே அழகான குறியீடாக அமைந்துவிடும்போது அதற்கு பொழிப்புரை சொல்லி அதன் கவித்துவத்தைக் காலி செய்துவிடுகிறது இயக்குரன் குரல்.
                   ஒரு தமிழ்ப் படத்தில் இவ்வளவு அழகான மழையைப் பார்த்ததில்லை. (படத்திலாவது தமிழர்கள் மழையை பார்க்கட்டுமே என்று நினைத்திருக்கலாம்) தேனி ஈஸ்வரின் அபூர்வமான கோணங்களும் ஒளியமைப்பும் அபாரம்.
                   இந்தப்படத்தின் ஆகப்பெரும் குறைபாடு இசைதான். இந்தப்படத்தின் ஒட்டுமொத்த வடிவத்துக்குச் சற்றும் பொருந்தாத இசை. இளையராஜா படைப்பூக்கமிக்க 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் உலக இசை நடப்புகளை பார்க்க மறந்தார். யுவன் இப்போதே அந்த இடத்துக்கு வந்துவிட்டாற்போல தெரிகிறது. தரமணி வேண்டுவது உணர்ச்சிகரமான வழக்கமான இசை அல்ல. இந்தமாதிரியான நான் -லீனியர் படங்களுக்கு வேறுவிதமாக யோசித்திருக்கவேண்டும். இந்தி சினிமாவிலும் மளையாளத்திலும் திரையிசை அற்புதமான இடங்களுக்கு நகர்ந்துவிட்டது. தமிழிலும்கூட அரிதாக சில நல்ல முயற்சிகளைப் புதியவர்கள் செய்யத்தொடங்கியிருக்கிறார்கள். மேலும் குறிப்பாக யுவன், தனுஷ், விஜய் இவர்களெல்லாம் ஏன் பாடுகிறார்கள் என்றே தெரியவில்லை. தமிழ்சினிமாவில் எப்போதையும்விட சிறந்த பாடகர்கள் மலிந்திருக்கும் காலம் இது. சுமாரன மெட்டுக்களை யுவன் குரல் மேலும் சுமாராக்கிவிடுகிறது.

                     இது ஆகச்சிறந்த படம். ஒரு பெண்ணியத் திரைக்காவியம் என்றெல்லாம் கூறமாட்டேன். ஆனால் இன்றைய சமகால வாழ்வின் சிக்கலான அடுக்குகளுக்குள் மனிதர்களின் இருத்தலை வெவ்வேறு கோணங்களில் பார்க்கமுயல்கிற, புரிந்துகொள்ள விழைகிற ராமின் எத்தனிப்பு எனக்கு உவப்பானதாக இருக்கிறது. இந்தப் பயணத்தில் ராம் அவரின் ஆகச்சிறந்த திரைப்படத்தை எடுக்கப் போகிறார் அல்லது எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றே நம்புகிறேன்.

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

ஜோக்கர்: கொல்லைக்குப் போகமுடியாத வல்லரசு

ஜோக்கர் ஒரு சுதந்திரதின பரிசு. உரத்த குரலில் பேசும் எளிமையான படம். குறைகளைப் பொருட்படுத்தாமல் கொண்டாடுவதே சரி எனப்படுகிறது. 

வெள்ளி, 29 ஜூலை, 2016

கபாலி: திசை மாறும் விமர்சனங்கள்

கபாலி திரைப்படத்தைச் சார்பில்லாமல் விமர்சிக்க முடியுமா என்று தெரியவில்லை. வெளியாவதற்கு முன்பும் பின்புமாக ஊடகங்கள் பாய்ச்சிய வெளிச்சத்தில் கபாலியை ஒரு திரைப்படைப்பாக மட்டும் பேசமுடியாமல் விமர்சகர்கள் விக்கித் தவிக்கிறார்கள். கபாலியின் 'பலம், பலவீனம்' பற்றிய என்னுடைய கருத்தைத் தெரிந்துகொள்ள மேலே காணும் 'காணொளியைச்' சொடுக்குங்கள்.

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.