திங்கள், 10 நவம்பர், 2014

இடது வலது இடது(LEFT RIGHT LEFT): இடதுகாலால கோல் அடிக்கணும்னா வலதுகாலையும் சேத்து விளையாடணும்..





சமகால கேரளத்தின் சமூக அரசியலைக் குறுக்குவெட்டாகப் பேசும் படம் ‘லெஃப்ட் ரைட் லெஃப்ட்’. கடந்த பத்து ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த படங்களுள் ஒன்று என்று விமர்சகர்கள் புகழ்வது பொருத்தமானதுதான். கேரளத்தில் கம்யூனிசத்தின் எழுச்சி, பிளவு, 80களுக்குப் பின் கம்யூனிசம் வளர்ச்சியின் எதிரியாக பார்க்கப்படுவதும், கம்யூனிசத்தின் தடுமாற்றங்களும் என மிக முக்கியமான பல விசயங்களைச் விவாதிக்கிற படமாக இது இருக்கிறது.

1960,70,80களில் கேரளாவின் பல்வேறுபகுதிகளில் வளர்ந்த சிறுவர்களின் கதையாக ஆரம்பிக்கிறது படம்.

1969இல் சிறுவனாய் இருந்த சகதேவன். சகதேவனின் அப்பா..  கைதேரி சாத்து. அவர் தமையன் அம்பு எதிரிகளால் கொல்லப்படுகிறான்., பிணமாய்க் கிடக்கும் சித்தப்பனைப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காக சிறுவனான சகதேவனின் கண்களைப் பொத்துகிறான் ஒருவன்... தந்தையான சாத்து அவன் கைகளை விலக்கி,  ‘அவன் பார்க்கணும்... நல்லா பாக்கணும்.. பாத்துக் கத்துக்கணும்... என்று சகதேவனின் கண்களைத் திறந்து வைக்கிறான்... கட்சி அலுவலகத்தில் தம்பியின் பிணத்தைக் கிடத்திவிட்டு... இதற்கு ஒரு பதில் தெரியாம வரமாட்டேன்.. என்று கிளம்பியவன் திரும்பிவரவேயில்லை... என்ற முன்னுரையோடு படத்தின் பிற்பகுதியில் முதலமைச்சராக இருக்கும் மூத்த தலைவராக கைதேரி சகாதேவனைச் சந்திக்கிறோம். காலத்தின் போக்குக்கேற்ற சமரசங்களோடு கட்சியையும் அதிகாரத்தையும் காப்பாற்றி வைத்திருக்கவேண்டும் எனும் புது மார்க்சிய சிந்தனையுள்ள கைதேரி சகதேவன் கம்யூனிசத்தின் இன்றைய யதார்த்தம்.


1976இல் மத்திய கேரளாவில் லட்சிய கம்யூனிஸ்டான தந்தைக்குப் பிறந்தவனான சேகுவேரா ராய்.. தந்தையிடம் கேட்கிறான்.

அப்பா ஏன் மார்க்சிஸ்டுகளை கொல்கிறார்கள்?...
மார்க்சிஸ்டுகள் உண்மையைச் சொல்பவர்கள்.. நேர்மையாய் நடப்பவர்கள்.. அதனால்தான்..
மார்க்சிஸ்டுகள் யாரையும் கொல்லாதோ? அப்பாவை யாரும் கொல்லுமோ?
என்ன யாரும் கொன்னாலும் மகன் ராய் இருக்க தானே?.. சரிதான? தந்தையின் கேள்விக்கோர் பதிலாக,                                                 அதே லட்சியத்துடன், தத்துவத்தையும் நடைமுறையையும் ஒன்றாகக் கருதும் இளம் கம்யூனிஸ்ட்டான சேகுவேரா ராய்கண்முன்னால் தந்தையைக்  வீச்சரிவாள்களுத் தின்னக் கொடுக்கிறான். கல்லூரி நாட்களில் அனல் பறக்கும் பேச்சாளனாய்.. செயல்வீரனாய் உலாவருகிறான்... கல்லூரிகளில் அரசியல் கட்சிகள் வேறூன்றி இடதுசாரி வலதுசாரி இயக்க மாணவர் சங்கங்கள் கோலோச்சிய காலத்தில் கல்லூரி வளாக வன்முறையில் வெட்டுப்பட்டு ஒருபக்க கைகால் இயக்கமற்று நிரந்தர அங்கஹீனனாகிறான். எல்லாவற்றையும் இழந்தாலும் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் காப்பாற்றியாக வேண்டுமென்கிற லட்சியக் கம்யூனிஸ்ட் செகுவேரா ராய்.


1986இல் தெற்கு கேரளாவில் பிறந்த பி.கே.ஜெயன். அரசாங்க மருத்துவ மனையில் உயிருக்குப் போராடும் தன் சகோதரிக்குப் பொருத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் சிலின்டரை கண்முன் அகற்றுகிறார்கள். தந்தையில்லாமல் கொடும் வறுமையில் சகோதரியைப் பறிகொடுத்து, பணத்திற்குமேல் உலகில் எதுவுமில்லை என்ற அறத்தைப் இறுகப்பற்றிக்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டராகிறான்  ஜெயன். என் வீட்டுச்சுவத்துல என் அப்பன் படத்தைத் தவிர எவன் படமும் இல்லை என்று கட்சிக்காரர்களைப் பார்த்துச் சொல்லும் ஜெயன், பணத்தைச் சம்பாதிப்பதற்கிடையே எந்த அறக்கேள்விகளுக்கும் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் இடமளிக்காத புதிய தலைமுறையைச் சார்ந்தவன். மனிதன் என்பவன் பகுதி டி.என்.ஏ.வினாலும் பகுதி என்னவென்று சொல்ல முடியாத காரணிகளாலும் பகுதி இளமையில் பார்த்த விசயங்களினாலும் தீர்மானிக்கப்படுகிறான்..என்பதை மெய்பிக்கப் பிறந்தவன்.


 ஜே.என்.யூ வில் படிக்கும் போது ஜெயனின் பேச்சைக்கேட்டு அவனோடேயே கேரளாவிற்கு வந்து அவனுடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்ட அனிதா... - கட்சியின் போக்கில் மனம் ஒப்பாது கட்சியைவிட்டு வெளியில் வந்து தனிச்சுற்று பத்திரிக்கை நடத்தி அதில் முதலமைச்சரின் ஊழல்களை அம்பலப்படுத்தி அதனால் தெருவில் வெட்டுப்பட்டுச் சாகும் சேகுவேரா ராயின் இளமைத்தோழர்கள் ...அனியும் அலியாரும்...- உட்கட்சிக்குழப்பங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் இரண்டாம்கட்ட தலைவர்... ஆகிய பாத்திரங்களினூடாக கேரள சமூகத்தின் வளர்சிதை மாற்றங்களை ஒரு உணர்ச்சிகரமான திரைக்கதையாக்கியிருக்கிறார் கோபி.

மீதமிருக்கும் தன் கடைசி தோழனின் உயிரைக்காக்க முதலமைச்சரான சகாதேவனைப் பார்க்க முயற்சி செய்கிறான் ராய். முடியாமல் போகவே சகாதேவன் செல்லும்வழியில் நடுக்காட்டில் வண்டியை மறிக்கிறான். இறங்கி வரும் சகாதேவனுக்கும் சேகுவேரா ராய்க்குமான உரையாடல் நடக்கும் நீண்ட காட்சி அற்புதமான ஒரு காட்சி. காட்சிக்களமும் படமாக்கப்பட்ட விதமும் குறிப்பாக உரையாடல்களும் குறிப்பிடத்தகுந்தவை.


 உன்னோட ஆளுங்க எழுதின கமிஷன் மூனேமுக்கால் கோடி வேணுமுன்னு வாதிச்சதும்  வாங்கினதும் நானாக்கும்.. ஆனா அதுல ஒரு பைசா சகதேவன் எடுத்து உண்ணவும் இல்ல.. உடுக்கவும் இல்ல.. அத வச்சு உண்ண வச்சிருக்கேன்.. உடுக்க வச்சுருக்கேன்..

 சகா.. உங்க பையன் லண்டன் பர்மிங்ஹாம் யுனிவர்சிட்டில படிக்கிற படிப்பு முடிஞ்சதா? பர்மிங்ஹாம் யுனிவர்சிட்டிலருந்து உங்க பையன் படிப்பு பத்தி ஒரு கடிதம்... உங்க பையன் மேஜர் சப்ஜெக்ட் எதுவும் சரியா படிக்கலன்னு ...உங்களுக்கு ரிப்போர்ட் வருது 2009இல். நீங்க லண்டன் போறீங்க... பிக் பேன் பாத்தீங்க... மார்க்ஸோட கல்லறைக்குப் போனீங்க... பேக்கர் தெருவுக்குப் போயி சேக்‌ஸபியர் வீட்ட பாத்தீங்க.. கரைபடாத கைகளுக்குச்  சொந்தக்காரரானஉங்களுக்கு இதுக்கெல்லாம் எங்கருந்து பணம் வந்தது சகா?

நல்லா கேட்டுக்கோ... கைதேரி சகாதேவனுக்கு அப்பனும் அவனுக்குச் சகோதரனுமான அம்புவும் இருந்தது உனக்குத் தெரியும்.. ஒனக்குத் தெரியாதது நெறைய இருக்கு...சாத்துவுக்கு ராமன்னு ஒரு அப்பன் இருந்தான்..... அவன் நாயர்களோட நிலத்தில வெய்யில்லயும் மழையிலயும் பாடுபட்டவன். அவன் வேளைக்குப் போகும்போது அவனோட சாத்துவும் அம்புவும் போவாங்க.. மத்தியானம் கிடைக்கும் கஞ்சியில பங்குபோட.. அன்னைக்கு வேலையில சிறு தப்பு நடந்தாலும் புளிய விளாருல அடிவிழும். அன்னைக்கு கஞ்சியும் கிடைக்காது. மண்ணுல ஒரு குழி வெட்டி அதுல ஒரு எலையப் போட்டுட்டு இருபதடி தூரம் எட்ட நிக்கணும். மண்ணுல கெடக்குற எலையில கஞ்சிய ஊத்துவா முதலாளியம்மா... 

 ராமன் அம்மை வந்து செத்தப்ப சாத்துவும் அம்புவும் ஒரு சொட்டுக் கண்ணீர் விடல.. ஏன் தெரியுமா? அவங்களுக்குப் புடிச்சு நிக்கிறதுக்கு ஒரு செங்கொடி இருந்தது.. அந்தச்செங்கொடியோட பலத்துல சாத்து ரோட்ல தலை நிமுந்து நடந்தான். அந்தச் சாத்துவோட அம்புவோட ரத்தத்தப் பாத்து வளர்ந்தவன்டா இந்த சகதேவன்...சகதேவனோட காலத்துல செங்கொடி இன்னும் உயரமா வளர்ந்தது.... ராமன் குழி வெட்டினான்.. சாத்துவும் அம்பும் கொடி நாட்டினாங்க... சகதேவன் அத  மேலும் மேலும் உயரத்துல பறக்க வைச்சான்...சகதேவனோட மக்கள் இங்கிலேன்டில் படிப்பாங்க... வளர்வாங்க..சமுதாயத்துல மேல்தட்ட ஒழிக்கிறதுக்கு நாமளும் மேல்தட்டா மாறனும்... மேல்தட்டின் உச்சத்துல போய் உக்காரணும்.. இப்படித்தான் அத ஒழிக்கணும் ... இதுதான் என்னோட தத்துவசாஸ்திரம்...இத அனுசரிச்சுத்தான் என்னோட செயல்பாடுகள் இருக்கும்... இதுக்கு மாறா என்னோட வழியில் வற்ரவங்கள தூக்கி எறிவேன்... 

சகதேவன் பணக்காரன்... பணக்காரர்களோட கம்யூனிஸ்ட்ன்னு எந்த நாய்கள் பேசினாலும் எனக்கு கவலையில்ல... கட்சியோட நிக்கிறவங்களை மட்டும்தான் நான் ஏழைகளா ஏத்துக்குவேன். அந்த ஏழைகளுக்காத்தான் ராமனோட மகனோட மகன் நிப்பான்.

எனக்கு புட்பால் ரொம்பப் பிடிக்கும்... இடதுகாலில் கோல் அடிக்கணும்னா வலதுகால்யும் சேத்து விளையாடணும்..ஆட்டம் முடிஞ்சு வீட்டுக்குப் போக ரெண்டுகாலும் தேவைப்படும்.. லெஃப்ட்- லெஃப்ட் (இடது இடது)ன்னு போகமுடியாது.. லெஃப்ட்டு- ரைட்டு- லெப்ட்டு ன்னுதான் போயாகணும்.... 


 மிகநீண்ட இந்தக் காட்சி ஒருவிதமான நாடகப் பாணியில் உணர்ச்சிமிக்க உரையாடல்களாக அமைந்திருந்தாலும் இருவரின் நடிப்பும் குறிப்பாக கைதேரி சகதேவனாக வரும் ‘ஹரிஸின்’ தோற்றப் பொருத்தமும் நடிப்பும் அபாரம். உரையாடல் முடிந்து ராய் காலை இழுத்துக்கொண்டே காரின் அருகில் போய்... சகதேவனிடம்..

சகா... கட்சி துப்பாகிய எடுக்கலாம். ஆனா துப்பாக்கி கட்சிய எடுத்துறக்கூடாது.. இத நான் சொல்லல... மாவோ சொன்னது...ஒரு காலத்துல அமைதிய விரும்புனவங்கதான் புரட்சிக்குத் தலைமை தாங்கினாங்க..விசயங்களைக் கண்டும் காணாததும் போல இருந்தா பைத்தியக்காரர்கள் புரட்சியைக் கையிலெடுப்பார்கள்.. என்கிறான்...

ஏளனச் சிரிப்போடு சரி... வண்டில ஏறு வழில இறக்கிவிடுறேன்... எனும் சகதேவனிடம்..

இல்ல சகா என்னோட இடதுகால் பழுதா இருந்தாலும் அதோடயே நான் போகவேண்டிய இடத்துக்குப் போவேன்..
லட்சியவாதிகளுக்கும் நடைமுறைவாதிகளுக்குமான உரையாடலைச் சாரம்குறையாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்.


ராயின் நண்பர்கள் சகதேவன் கமிஷன் வாங்கியதை அம்பலப்படுத்த வேண்டுமெனத் துடிப்பார்கள்..அப்போது நடக்கும் உரையாட்ல்..
கட்சி மட்டும் கம்யூனிசம் அல்ல... கட்சி மட்டும் மார்க்சிசம் அல்ல...
ஆனா... மார்க்சிஸ்ட் பார்ட்டி என்பது மார்க்சிஸம் மட்டுமானதல்ல...கொஞ்சம் லெனினிசமும் இருக்கும்... கொஞ்சம் கோர்ப்பசேவிசமும் கொஞ்சம் ஸ்டாலினிஸ்டுகளும் கூட இருக்கத்தான் செய்வார்கள்...
இதுல சகா நீங்க யாரு?
ராய் தன் உணர்வற்றுத் தொங்கும் இடது கையை இன்னொரு கையால் தூக்கி இறுகிய முகத்துடன் மேசையில் வைப்பான்...
இப்போதிருக்கும் கம்யூனிசம் நிறைய பேருக்கு கனிகளும் நிழலும் தருகிற ஒரு பெரிய மாமரம்... களைகள் இல்லாமலில்லை... கூடுதலான களைகள் உண்டுதான்... அதுக்காக மரத்தையே வெட்டமுடியாது அலியார்..
போலீஸ் ஜெயன்.. சகாவே கம்யூனிஸ்ட் பார்ட்டி ரெண்டா உடைஞ்சதா எங்க அப்பா சின்ன வயசுல சொன்னது ஞாபகம் இருக்கு. இடது வலதுன்னு... இப்ப இடது கம்யூனிஸ்ட் பார்ட்டி இரண்டா உடைஞ்சதே... அதுல எது வலது?... எது இடது?...

படம் முழுக்க கூர்மையான இரண்டு மூன்று தளங்களில் செயல்படும் வசனங்கள் படத்தை அறிவார்ந்த தளத்திற்கு நகர்த்துகின்றன.
கமிஷன் விசயம் வெளிவந்து தொலைக்காட்சி சேனல்கள் அலறுகின்றன.. சகதேவன் தொலைபேசியில் ராயிடம்...
இந்த நியூஸ்ங்கிறது வரும் போகும். ஆனா அந்த நீயூஸ குடுத்தவன் இனி வரப்போறதில்லை... தெரிஞ்சதா? 11: 30லருந்து 1: 30 வரை  கைதேரி சகாதேவனை டிவி சேனல்கள் பேசிமுடிச்சாச்சு. இப்போ ஏதோ ஒரு போலீசுகாரன் ஒருத்தன பஸ்ஸுல வச்சு கொன்னத காமிக்க ஆரம்பிச்சுட்டானுக.. ஒரு விசயத்தோடமுக்கியத்துவம் அவ்வளவுதான்...ஒரு எறும்பு செத்த நியூஸூங்கிறது அடுத்து ஒரு தவளை சாகிறவரைக்கும்தான்...தவளை செத்த நியூஸு பாம்பு சாகும் வரை...பாம்பு செத்த நியூஸ் பருந்து சாகிறவரை... அவ்வளவுதான்..
கமிஷன் விசயத்தை அம்பலப்படுத்திய ராயின் தோழன் குடும்பத்தோடு ஒளிந்திருக்கும் தருணத்தில்..
நான் எத்தனைதடவை சொன்னேன்... இது வேண்டாம்னு... கம்யூனிஸ்டாம் கம்யூனிஸ்ட்...பொழப்புக்கு இருந்த கடையும் போயி.. இப்ப... வாயத்தொறந்தா பயம்.. தும்மினா பயம்....
சரி.. இப்ப ஒனக்கு என்ன வேணும்...
கொஞ்சம் பால் பவுடரும்.. பிரட்டும்..


ராயை மருத்துவமனையில் சேர்த்து அனிதா டாக்டருடன் உரையாடுகையில்..
நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்... ஸ்டெரஸ் கூடவே கூடாதுன்னு...
டாக்டர்... ஹி இஸ் கம்யூனிஸ்ட் ... சோ ஹி வில் ஹாவ் ஸ்ட்ரெஸ்...
எப்ப என்ன ஆயிப்போச்சு...இங்க பாரு... உங்களுக்கு முன்னும் உலகம் இப்படித்தான் இருந்தது... இப்பவும் உலகம் இப்படித்தான் இருக்கு.. உங்களுக்குப் பின்னாலும் உலகம் இப்படித்தான் இருக்கப் போகுது... எதுக்கு ஸ்ட்ரெஸ்... ரிலாக்ஸ்.. அன் கூல்...
டாக்டர் உங்களுக்கு ஒரு பெரிய வில்லா இருக்கு... நாலு ஃளாட்... நாலு மெட்ரோவில... நாலு கார்கள்... இரண்டரை லட்சம் சம்பளம்... அது போக மத்தது... நீங்க ரிலாக்ஸ் பண்ணலாம்...
.. நான் மறந்துட்டேன்.. பழைய ஜே.என்.யூ. தீப்பொறிகிட்ட பேசிக்கிட்டு இருக்கிறதை...

‘உங்களுக்கு வளர்ச்சியும் வேணும் கமிஷனும் குடுக்கமாட்டீங்க.. நீ என்ன சொன்னாலும் நாங்க கைதேரி சகாதேவன் பக்கம்தான்...’


உரையாடல்கள் மிகப்பெரும் பலமாக அமைந்திருந்தாலும் இயக்கம் இசை எல்லாம் கச்சிதமாக அகைந்த ஒரு படம்தான். நமக்கு எழும் கேள்வி.. நமக்குக் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் ஒரு நிலப்பரப்பில் சாத்தியமாகும் எளிமையான விசயங்கள் கூட ஏன் நமக்குச் சாத்தியமாகாமல் போகிறது என்பதுதான். கேரளத்துக்கு இணையான அல்லது கூடுதலாகக் கூட கொந்தளிப்பான அரசியல் சமூக வரலாற்றைக் கொண்டுள்ள தமிழகத்தில் ஏன் அரசியல் சினிமா அல்லது அரசியல் சமூக இயக்கங்களின் கொள்கைகளை செயல்பாடுகளை திரும்பிப்பார்க்கும் எந்த முயற்சியும் எழுவதில்லை. அங்கு கம்யூனிசத்தை முன்வைதத்து எழுப்பப்படும் கேள்விகளை இங்கு திராவிடக் கட்சிகளை முன்வைத்து எழுப்பமுடியும்தானே? முடியும்.. ஆனால் முடியாது...

ஜெயலலிதாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட அன்று ஒரு தொலைக்காட்சிச் சானலில் உணர்ச்சி மேலிட்ட தொண்டர்களுக்கு நடுவே, கவுன்சிலர் பெண்மணி ஒருவர், சேனல்காரர்  நீட்டிய மைக்கைப் பிடித்துக்கொண்டு ' தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்பதற்கேற்ப எங்கள் அம்மா இன்று விடுதலையாகிவருகிறார்' என்றார். பொன்மொழியின் பிற்பகுதி அவருக்குத் தெரிந்திருக்கவில்லையா? பதட்டத்தில் அப்படிப் பாதியை முழுங்கினாரா? இல்லை உண்மையை அவரறியாமல் சொன்னாரா தெரியவில்லை. கட்சிக்காரர்களின் இப்படியான செயற்கையான எதிர்வினைகள் தமிழகத்தில் புரிந்து கொள்ளத்தக்கதுதான். ஆனால் தமிழகத் திரைத்துறையினரின் போராட்டமும் கோஷங்களும் அபத்தத்தின் உச்சமாக இருந்ததை என்னவென்பது?. 'இறைவனுக்கு தீர்ப்பளிக்க மனிதன் யார்? எனும் பொருள் கொண்ட பதாகைகளும் அதையொட்டி திரைஉலக படைப்பாளிகள் அளித்த பேட்டிகளும் நாம் என்ன மாதிரியான கலைச்செம்மல்களோடு வாழ்கிறோம் என்பதைப் புரிய வைத்தது. சமூக அரசியல் நிகழ்வுகளைக் காத்திரமான விவாதங்களுக்கு உட்படுத்த வேண்டிய படைப்பாளிகள், குறைந்தபட்சம் பொதுப்புத்தியில் மேலோட்டமாகத் தங்கியிருக்கும் 'அறம்' பற்றிய ப்ரக்ஞை கூட அற்றவர்களாய் உளறிக் கொட்டுவதை என்னவென்பது. வேடிக்கை என்னவென்றால் தமிழக ஆட்சியாளர்கள் தொடர்ந்து திருட்டு டிவிடி புழக்கத்தை வளர்த்து வருபவர்கள். கடுமையான, சார்பான தணிக்கைமுறையை அமுல்படுத்தி வருபவர்கள். இருந்தாலும் ஒரு மாதச்சம்பள நடுத்தரவர்க்கக் குமாஸ்தாக்களின் ஜாக்கிரதை உணர்வோடு சிந்திக்கும் ஸ்டார்கள், மெகாஸ்டார்கள், படைப்பாளிகளைக் கொண்டிருக்கும் தமிழ்த்திரையுலகை மளையாளத்திரையுலகோடு  ஒப்பிட்டுப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.

அடுத்ததாக தற்போது இந்திய சினமா முழுக்கவும் வாரிசு நடிகர்கள் கலைஞர்கள் ஆதிக்கம்தான். மளையாளத் திரையுலகிலும் வாரிசுநடிகர்கள் இருந்தாலும் அவர்களின் பங்களிப்பு மற்றபகுதிகளில் போன்று தட்டையாக இல்லை. நம்முடைய வாரிசுகள் நடிகர்கள் எப்போதும் கோடிகளை நோக்கி ஓடுபவர்களாகவே இருக்கின்றனர். அடுத்ததலைமுறை எப்போதுமே ‘முந்தைய தலைமுறையின் தோளிலிருந்து பார்க்கும் வாய்ப்புப் பெற்றது’ என்று ஐன்ஸ்டைன் சொன்னதைப் போல வாரிசுகளுக்கு இருக்கும் வாய்ப்புகளால் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தா விட்டாலும் பின்னோக்கி நகராமலாவதுஇருக்கலாமல்லவா? 


 இங்கே 42வயது நடிகர் பாடகர் திரைக்கதையாசிரியர்  முரளி கோபி... மறைந்த நடிகர் பரத் கோபியின் புதல்வர் கேரள சமூகத்தின் அரசியல் போக்கை குறுக்குவெட்டாய் பிளந்துபார்க்கும் ஞானமும் அறமும் கொண்டவராய் நிற்கிறார். கேரளத்தின் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் வாழும் மனிதர்களை வகைமாதிரியாகக் கொண்ட பாத்திரங்களை உலவ விட்டு அவரவர்களின் தர்க்க நியாயங்களினூடாக ஒரு ஆரோக்கியமான விவாதத்தை முயற்சித்துப் பார்த்திருக்கிறார். திரைப்படக்கலைபற்றிய புரிதலும், விசய ஞானமும், சமூகத்தை விமர்ச்னக்கண்ணோடு பார்க்கும் பக்குவமும் கொண்ட ஒரு திரைக்கதையாசிரியராக மிளிரும் முரளிகோபியிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம்.

செவ்வாய், 7 அக்டோபர், 2014

லஞ்ச் பாக்ஸ் ( LUNCH BOX ) : சரியான இடத்திற்குக் கொண்டு சேர்த்த தவறான ரயில்....



ஸாஜன் மனைவியை இழந்து பணி ஓய்வு பெறும் வயதிலிருக்கும் ஒரு அக்கவுன்ட்டன்ட். ஒரு ஹோட்டலில் இருந்து மதிய உணவு பெறுபவர். அதிகம் பேசாத தனிமை விரும்பி. இலா முப்பதுகளில் இருக்கும் இளம் மனைவி. கணவனின் உதாசீனமான போக்கால் அவன் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் இருக்கும் ஹவுஸ் ஓஃப். ஆன்ட்டி, இலா அடிக்கடி விளிக்கும் பெண்மணி படுக்கையில் காலத்தைக் கழிக்கும் தன் கணவனைப் பராமரித்தவாறு மேல்மாடியில் வசிப்பவர். இலாவோடு பேசிக்கொள்ளும் துணை. படத்தில் அவர் குரல் மட்டுமே.

ஒருநாள் ஆன்ட்டியிடம் கேட்டு கணவனுக்காக மெனக்கட்டு மதிய உணவு தயார் செய்து அனுப்புகிறாள். ஹோட்டலில் இருந்து சாஜனுக்குக் கெல்லவேண்டிய உணவும் இலாவின் கணவனுடைய உணவு டப்பாக்களும் மாறிவிடுகின்றன. வழக்கத்திற்கு மாறாக காலியான டிபன் பாக்ஸைப் பார்க்கும் இலாவுக்கு திருப்தி. ஆனால் மாலை வீடு வந்த கணவனிடம் எந்த வேறுபாடும் இல்லை. அவனாகச் சொல்வானென்று எதிர்பார்க்கிறாள். உணவு எப்படி இருந்தது என்று கேட்கிறாள். காலிஃப்ளவர் நன்றாக இருந்தது என்கிறான். அப்படியென்றால் உணவை அவன் சாப்பிடவில்லை என்று தெரிந்து கொள்கிறாள். அடுத்தநாள் டிபன் பாக்ஸில் சிறு துண்டுச்சீட்டில் உப்பு கொஞ்சம் அதிகம் என்ற குறிப்பு இருக்கிறது. இலாவும் எழுத ஆரம்பிக்கிறாள். எல்லாம் சிறிய எளிமையான விசயங்களடங்கிய கடிதங்கள். தன் கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பதை அறிந்து கொள்கிறாள். அதையும் எழுதுகிறாள்.

அவர்களுடைய நட்பு நெருக்கமாகிறது. சேர்ந்து வாழ்வது பற்றிய யோசனைகளும் சேர்ந்து கொள்கிறது. தனக்குக் கணவனைப் பிரிந்துவிடும் உத்தேசம் இருப்பதையும், இந்தியாவைவிட பூட்டானில் குறைந்த பணத்தில் வாழ்ந்துவிட முடியும் என்பதால் அங்கெ போய்விடும் திட்டமிருப்பதையும் சாஜனையும் அவளோடு வந்துவிடுமாறும் அழக்கிறாள். நேரில் சந்தித்துப் பேசுவது என்ற யோசனையின் பேரில் நகரின் பிரபலமான உணவகத்தில் பிற்பகல் சந்திப்பதாக முடிவு செய்கிறார்கள். இலா வெகுநேரம் காத்திருக்கிறாள். சாஜன் வராமல் போகவே மனவருத்தத்தோடு வீட்டுக்குப் போகிறாள். மறுநாள் சாஜன் ஆவலோடு லன்ச் பாக்ஸைத் திறக்கிறான். உள்ளே எதுவும் இருப்பதில்லை. ‘நேற்று நானும் ஹோட்டலுக்கு வந்திருந்தேன். தூரத்தில் அமர்ந்து உன்னைப் பார்த்தேன். இவ்வளவு இளமையும் அழகும் கொண்ட உன்னோடு இந்த வயதில் எப்படி? என்பதாக கடிதம் இருக்கிறது.  இலா இதை இத்தோடு நிறுத்திக் கொள்வது என்று முடிவெடுக்கிறாள். டப்பாவாலவிடம் ‘என் கணவனுக்கு அனுப்பும் பாக்ஸ் மாறிவிட்டது’ என்று புகார் செய்கிறாள். டப்பாவாலா தீர்மானமான மறுக்கிறான். ‘மேடம் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. ஹார்வர்டு யுனிவர்சிட்டிலருந்தே எங்கள ஆய்வு செஞ்சிருக்காங்க..’ என்கிறாள்.

இதற்கிடையே புற்றுநோயில் படுத்துக்கிடந்த  இலாவின் தந்தை மரணமடைகிறார். அவரைப் பராமரிப்பதில் பெரும்காலத்தைக் கழித்த இலாவின் தாய், தந்தையின் உடலருகே  அவர் மேலான அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். பெரும் விடுதலையான பாவனையுடன் பிணத்தின் அருகிலிருந்து கொண்டே ‘இலா எனக்குப் பசிக்கிறது’ என்கிறார். சடங்குகளை முடித்து சிலநாள் இடைவெளியில் டப்பா வாலாவின் துணையுடன் இலா சாஜனின் அலுவலகத்தைக் கண்டுபிடிக்கிறாள். பணிஓய்வு பெற்று சாஜன் நாசிக் சென்றுவிட்டதாகத் தெரியவருகிறது. ஏமாற்றத்தோடு திரும்புகிறாள்.


நாசிக் சென்ற சாஜன் என்ன காரணத்தாலோ மும்பை திரும்புகிறார். டப்பாவாலாக்களின் உதவியோடு இலாவைத் தேட ஆரம்பிப்பதோடு படம் முடிகிறது.

சாஜனிடம் பயிற்சிக்காக வரும் இளைஞன் பாத்திரம் ஒரு இடைச்செறுகல் என்றாலும் ரசிக்கத்தக்க பாத்திரம். சாஜனிடம் பயிற்சிக்கு வந்ததாகத் தெரிவித்த கனத்திலிருந்து சாஜனின் உதாசீனத்தை தொடர்ந்து சந்தித்தும் மனந்தளராதவன். கொஞ்சம் முட்டாள்தனம் கொஞ்சம் எளிமை, கொஞ்சம் முன்னேறத் துடிக்கும் நடைமுறை சாமர்த்தியம் கொண்டவன். தன்னை அநாதை என்று கூறிக்கொண்டு படிப்படியாக சாஜனின் நட்பை பெறுபவன். ‘சில நேரங்களில் தவறான ரயில் நம்மை சரியான இடத்துக்குக் கொண்டுபோய் சேர்க்கக் கூடும்’ என்று எங்க அம்மா சொல்வாங்கசார் என்பான். நீ அம்மா இல்லன்னு சொன்னியே... அம்மா சொன்னதா சொன்னா அதுக்கு ஒரு முக்கியத்துவம் கிடைக்குமில்லியா சார்’ என்பான். ஒரு வகையில் அவன் சொல்லும் வாசகம்தான் படத்தின் ஊடிழை என்பதாகத் தோன்றும்.



இந்தப்படத்தில் சாஜன், இலா அவள் கணவன் அவர்களின் குழந்தையான சிறுமி, இலாவின் தாயார் படுக்கையில் அப்பா. இலாவின் மேல்வீட்டு ஆன்ட்டி அவள் கணவன், சாஜனிடம் பயிற்சி பெறவரும் இளைஞன் அவன் மனைவி. இதில் மேல்வீட்டு ஆன்டியின் குரல் மட்டுமே நாம் கேட்பது. இலாவின் கணவன் இரண்டு மூன்று காட்சிகளில் பேசும் ஒற்றைவரி வசனங்கள். இலாவின் அப்பா காட்சியில் இல்லை. அம்மாவும் இரண்டுகாட்சிகளில் இரண்டொரு வசனங்கள். ஆனால் எல்லாப்பாத்திரங்களும் உயிரோடு நம்மோடு உலாவும் விதமான கவனமான திரைக்கதை உரையாடல்கள். கொந்தளிப்பில்லாத அடங்கிய நடிப்பு. இப்ஃரான்கானும் (Irrfan Khan) இலாவாகத்தோன்றும் நிர்மத் கவுரும் (Nimrat Kaur) உள்ளார்ந்த நடிப்பால் திரைவெளியை இல்லாமல் ஆக்குகிறார்கள்.

சமகால உலகசினிமா பாணிகளின் பாதிப்பற்ற 80களின் யதார்த்த சினிமா வகையினதாக இந்தப்படம் இருக்கிறது. ஒரு வகையில் இந்தியாவின் இரண்டுதலைமுறைப் பெண்களும் குடும்ப வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டவர்களாக, காலம் கடத்தும், எல்லாம் புரிந்தும் மகிழ்ச்சியாகவோ மனத்துயருடனோ அவற்றோடு வாழப்பழகிக்,கொண்டவர்களாக இருப்பது படத்தின் உபரிப் பிரதியாக விரிகிறது.

இப்படத்தின் வணிக ரீதியான வெற்றியும், இதுபோன்ற ஒரு படத்தை முழுக்க முழுக்க வணிகரீதியிலான தயாரிப்பாகச் செய்துவிடுவதற்கான சாத்தியங்களும் இருப்பதே என்னைப் பொறுத்தவரையில் முக்கியமானதாகத் தோன்றுகிறது. அதுவே இப்படத்தைப் பற்றி எழுதுவதற்கான இரண்டாவது தூண்டுதலாக அமைந்தது.

70,80களில் இதுபோன்ற அல்லது இதைவிட அருமையான படங்களும் கூட திரைப்படச் சங்கங்களில் திரையிடப்பட்டு வருத்தப்பட்டு பாரம் சுமக்கிற தாடிக்காரர்களின் குடிவிருந்தில் பாடுபொருளாக முடிந்துபோகிற காலம் மலையேறிவிட்டதற்கு யாருக்கு நன்றி சொல்வதென்று தெரியவில்லை. கூட்டிக்கழித்துப் பார்த்தால் உலகமயமாதலுக்குத்தான் சொல்லியாக வேண்டும்.
ரித்தேஷ் பாத்ரா (Ritesh Batra) ஒரு குறும்பட இயக்குநர்.  ஒரு ஆவணப்படம் எடுக்கும் உத்தேசத்தோடு 2007இல் டப்பா வாலக்களோடு  கழித்த ஒருவாரத்தில் டப்பாவாலக்களின் செயல்பாடுகளில் ஒரு திரைப்படத்திற்கான கச்சாப் பொருள் இருப்பதை யூகிக்கிறார். அவர் டப்பாவாலாக்களின் வாழ்க்கையை விடுத்து  அவர்கள் விநியோகிக்கச் சுமந்து செல்லும் டப்பாக்களுக்குள் ஒளிந்திருக்கச் சாத்தியமுள்ள கதைகளை யோசித்துப் பார்க்கிறார்.

__________________________________________________________________________________
1890இன் பிரிட்டிஷ் இந்தியாவில் வெள்ளைக்கார அதிகாரிகள் வீட்டுச்சாப்பாடு சாப்பிட செய்யப்பட்ட ஏற்பாடு சுதந்திர இந்தியாவில் ‘டப்பா வாலாக்கள்’ எனப்படும் மிகப்பெரிய தொழிலாக மாறியது. 1956இல் டிரஸ்டாகப் பதிவுசெய்யப்பட்டு 6000 ஊழியர்கள் 2 லட்சம் மதிய உணவு டப்பாக்களை விநியோகிக்கிறார்கள். 16மில்லியனுக்கு ஒரு தவறு என்ற அளவில் தலைசிறந்த நெட்வொர்க்கிங் முறைக்காக ஹார்வர்ட் பல்கலைக்கழம், பெர்க்கிலி, மற்றும் பிரபல இந்திய மேலான்மைக் கல்லூரிகளின் கல்விப்புலத்திற்குள் இணைக்கப்பட்டுள்ளார்கள். இங்கிலாந்து இளவரசர் டப்பாவாலாக்களைப் சந்திக்க விரும்பியதாகவும், விநியோகமில்லாத நேரத்தில்தான் சந்திக்கமுடியும் என்று இளவரசருக்கு இவர்கள் நேரம் குறித்துத் தந்ததாகவும் சொல்கிறார்கள். இவர்களைப்பற்றி பிபிசி உள்ளிட்ட பலரும் ஆவணப்படங்கள் எடுத்துள்ளனர்.
__________________________________________________________________________________

 2011 இல் ‘லஞ்ச் பாக்ஸ்’ எனும் திரைக்கதைப் பிரதியுடன் ராட்டர்டாம் உலகத் திரைப்பட விழாவை (Rotterdam International Film Festival) ஒட்டி ஏற்பாடு செய்யப்படும் ‘சினிமார்ட்டுக்குச்’ (Cinemart) செல்கிறார். நெதர்லாந்தின் இரண்டாவது பெரிய நகரமான ராட்டர்டாமில் திரைப்படவிழாவோடு இணைந்து நடக்கும் ‘சினிமார்ட்’ என்பது, புதிய திரைக்கதைகளைப் படமாக்குவது.. சந்தைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளைப் பெறுவதற்கான இடம். ஒருவழியாக ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் NFDC ஆகியவை இணைந்து 16மில்லியன் செலவில்  (ஒரு கோடியே அறுபது லட்சம்) தயாரிக்கத் திட்டமிடப்படுகிறது..

ஆறுமாதங்கள் நடிகர்களுக்கான ஒத்திகை முடிந்து 2012இல் 100 கோடியில் படத்தை எடுத்து முடித்துவிட்டதாகத் தெரிகிறது. 2013 மே 19 இல் கேன்ஸ் திரைப்படவிழாவில் அமோகமான வரவேற்பை பெற்றதைத்  தொடர்ந்து சோனி கிளாசிக் நிறுவனம் தென் அமெரிக்க விநியோக உரிமையைப் பெற்றது. இந்தியாவில் 400 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு அந்த வார இறுதியில் 71 இலட்சத்தையும் முதல்வாரத்தில் போட்ட முதலுக்கும் மேலாக 110 இலட்சங்களையும் வசூல் செய்ததாம். அப்புறமென்ன ஏறுமுகம்தான் இதுவரை உலக அளவில் 84 கோடிக்கும் மேலாக வாரிக்கொட்டியிருப்பதாக தெரிகிறது. ஒரு கோடிதயாரிப்புச் செலவு என்பது தமிழ்ச்சினிமாவிலேயே குறைந்த பட்ஜெட் படம்தான். அத்தகைய ஒரு படம் அமெரிக்காவில் 2014 இல் அதிகம் வசூலித்த வெளிநாட்டுப் படமாக மாறியிருக்கிறது. வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கான நகாசு வேலைகளும் முஸ்தீபுகளும் கூட இந்தப்படத்தில் இல்லை என்றே சொல்லவேண்டும். இதைவிடவும் சிறந்த படங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனாலும் விசயம் இதுதான். ஒரு சிறந்த திரைக்கதை எவ்வித சமரசங்களும் இல்லாமல் கூட வெற்றியடையமுடியும். நீங்கள் அதைச் சந்தைப்படுத்துவதற்கான சூட்சுமங்கள் தெரிந்தவராக இருந்தால்...



என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.