புதன், 30 ஏப்ரல், 2014

வெஜைனா மோனோலாகிஸ் (THE VAGINA MONOLOGUES): பேசும் பெண்குறிகள்







எப்போதும் சென்னை வந்து இறங்கியவுடன் இரண்டு ஆங்கிலச் செய்தித்தாள்களையாவது வாங்கிவிடுவது வழக்கம். செய்திகளுக்காக அல்ல. நகரில் ஏதாவது நல்லது கெட்டது நடக்கிறதா என்று பார்க்கத்தான். கண்காட்சிகள், இசைநிகழ்ச்சிகள் கண்ணில் தட்டுப்படும். வாய்ப்பிருந்தால் ஒருநடை பார்த்துவிட முயற்சிப்பதுண்டு. இந்த முறை ஒரு நாடகத்தைப் பற்றிய சின்ன செய்தி தென்பட்டது. தலைப்பு வேறு ஆர்வத்தைத் தூண்டியது. முதல் நாள் முழுவதும் வேலை மும்முரத்தில் நினைவில் கொள்ளமுடியவில்லை. மறுநாள் தற்செயலாக (மாஜி) நாடகக்காரரான நண்பர் சுபகுணராஜனைச்  சந்திக்க நேர்ந்தபோது நாடகம் பற்றிய நினைவு வந்தது. பிற்பகல் 3 மாலை 5, இரவு 7 என மூன்றுகாட்சிகள் என்பதால் 7 மணிக்குப் போகலாம் என முடிவு செய்தோம். 

தமிழ்நாட்டில் நவீன, பின்நவீன இத்யாதி நாடகம் என்றால்  பதட்டப்படாமல் போகலாம். ஏனென்றால்  இந்தமாதிரி நாடகங்களைப் பார்ப்பவர்கள் மொத்தமே 300 பேர்தான் தேறுவார்கள். அதிலும் 250பேர் நடிகர்கள், இயக்குநர்கள். மீதமுள்ள 50பேர் நடிகர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள். அந்த நினைப்பில் 6:30க்கு அல்லயன்ஸ் பிரான்சே அரங்குக்குப் போய்ச் சேர்ந்தோம்.  'நீங்கள் ஏற்கனவே புக் செய்திருக்கிறீர்களா?' என்றபோதுதான் ஆகா இது வேறு சமாச்சாரம் என்று புரிந்தது. கொஞ்சம் ஆறுதலாக நீங்கள் வெயிட் பண்ணுங்கள் புக் செய்து வராமல் போனால் உங்களுக்குக் கிடைக்கும் என்றார் வரவேற்பில் இருந்தவர். அப்போதுதான் ஆன் லைனில் புக்செய்யவேண்டும் என்பதும் கட்டணம் 300 ரூபாய் என்பதும் தெரியவந்தது. மூன்றுநாட்கள் தினசரி 3காட்சிகள் என்பதும் இது கடைசிகாட்சி என்பதும் கூடுதல் தகவல்களாகத் தெரிய வந்தன. சில வராமல்போன நல்லவர்களின் புண்ணியத்தில் அரங்குக்குள் சென்று அமர்ந்தபோது அரங்கம் நிறைந்திருந்தது. 

பார்வையாளர்களுக்குள்ளிருந்து பேசிக்கொண்டே எட்டுப் பெண்கள், இருபதிலிருந்து நாற்பதுகளுக்குள். குறிப்பாக எதையும் உணர்த்தாத அவரவர்க்குப் பிடித்த அல்லது சௌகர்யமான உடைகளில்... ஏதோ ஷாப்பிங் போனவர்கள் அரங்கத்திற்குள் நுழைந்தமாதிரி... இந்த மாதிரி எவ்வளோவோ பாத்தாச்சும்மா...என்று மனக்குரலில் பேசி முடிப்பதற்குள் அதிர்ச்சி வைத்தியத்தை ஆரம்பித்தார்கள். எந்தவிதமான சோடனைகளுமற்ற அரங்கங்த்தில் ஆங்காங்கே அமர்ந்தபின் பெண்குறிகளின் தனிமொழிகளாக...குறியே மனமாகவும் உடலாகவும் மாறும் விந்தை நிகழத்தொடங்கியது.



 தன்னைவிட்டு பிற பெண்களைப் புணரும் கணவனைப் பற்றிப் பேசும் நடுத்தரவயதுப் பெண்...தன் காதலனுடனான முதல் அனுபவத்தை விவரிக்கும் ஒரு எழுபதுவயது மூதாட்டி.. அறியாவயதில் தந்தையின் நண்பரால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதைச் சொல்லும் பெண்... பக்கத்துவீட்டு நடுத்தரவயதுப் பெண்ணால் ஒருபால் உறவுக்குள்ளாக்கப்பட்டவள்... தன் குறியின் அழகில் மயங்கிக் கிடந்த கணவனைப் பற்றிப் பேசும் பெண்...பாலியல் வல்லுறவுக்குள்ளான கிராமத்துப் பெண்......கடைசியாக தான்  ஒரு குழந்தையைப் பிரவித்ததை விவரிக்கும் பெண்...என்பதாக வடிவமைக்கப்பட்ட நாடகம்.

ஒவ்வொரு கதைக்குமிடையில் பார்வையாளர்களிடம் நேரடியான உரையாடலாக ஒருவர் கட்டியங்காரன் பாணியில் உரையாடி நாடகத்திற்கான ஒரு அரசியல் சங்கிலியை இணைத்துச் செல்கிறார். தொடக்கத்தில் பெண்குறியைப் பற்றிய விதவிதமான படிமங்களைப் பேசிச் செல்கிறார் ஒருவர். அடுத்ததாக பெண்குறி பற்றி உலகின் பல மொழி வார்த்தைகள், பலபகுதிகளில் கேலியாக, வக்கிரமாக, சங்கேதமாக எப்படியெல்லாம் உச்சரிக்கப்படுகின்றன என்பதை இன்னொருவர் சொல்லிச் செல்கிறார். உலகம் முழுவதும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையைப் பட்டியலிடுகிறார் இன்னொருவர். போஸ்னியாவிலும் இன்னும்பல பகுதிகளிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் உடல் ரீதியான வன்முறைகள் விரிவாகப் பேசப் படுகின்றன. இன்னொருவர் புணர்தலின் போது பெண்களின் முனகல் எப்படியிருக்கும் என்பதை விவரிக்கும்போது... ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கப்பெண், ஒரு பெங்காலிப் பெண், ஒரு கிறித்தவப் பெண், ஒரு மளையாளிப்பெண் என்பதாக நடித்துக்காட்டிய போது அரங்கம் அதிர்ந்து அடங்கியது.       . 

கடைசியாக ஒரு பிரசவத்தை விவரித்தலின் மூலமாக பெண்மையின் தாய்மையின் வலியை உணர்வையும் பேசிவிடுகிறது. அதற்காக முந்தைய காட்சிகளையெல்லாம் இதை நோக்கியதாக நகர்த்தி வந்ததாகவும் சொல்லமுடியாது. தாய்மையின் மகத்துவத்தைப் பேசுவதாகவும் எளிமைப் படுத்தமுடியாது. பெண்ணுறுப்பின் இன்பத்தை, வலியை, அவமதிப்பை, கொண்டாட்டத்தை பெண்களின் பார்வையில் சமரசமற்ற தொனியில் பேச முற்படுவதிலேயே இந்நாடகம் தனித்து நிற்கிறது.

 

மூலப்பிரதியைப் போதுமான அளவிற்கு இந்தியப் படுத்தியிருப்பது பார்வையாளர்களோடு கூடுதலான தொடர்பை உண்டாக்குகிறது. ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்ட இந்நாடகத்தை இந்திய மொழிகள் எதிலும் குறிப்பாக தமிழில் மொழிபெயர்ப்பதற்கோ நிகழ்த்துவதர்க்கோ சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்நாடத்தின் பிரதியை அரங்கத்தில் நிகழ்த்துவாதென்பது இந்தியச் சூழலில் எளிதான கற்பனையல்ல. அந்த வகையில் பெங்களூர் ‘குரைக்கும் நாய்கள்’ குழுவினர் அசாத்தியமான அரசியல் தெளிவுடனேயே இந்நாடகத்தை நிகழ்த்திவருகிறார்கள் என்பதை அவர்களின் ஈடுபாடும் நிகழ்த்துமுறையும் உணர்த்தியது. முழுக்க தனிமொழியாகவே (monologue) நிகழ்த்தப்படும் இந்நாடகத்தில் நடிகர்களாக மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்தார்கள். பேசத் தயங்குகிற, பேச இயலாத எந்த ஒரு விசயத்தையும் ஒரு கலைவடிவத்தால் கையாள முடியும் என்பதற்கு இந்நாடகம் ஒரு உதாரணம்.


இந்நாடகத்தின் மூல ஆசிரியர் பற்றி இணையத்தில் தேடியபோது... ஈவா என்ஸ்லர் (Eva Enslar) எனும் அமெரிக்க பெண்ணிய நாடகாசிரியர், செயல்பாட்டாளர் 1996இல் எழுதிய இந்நாடகம் 48 மொழிகளில் பெயர்க்கப்பட்டு 140 நாடுகளில் நிகழ்த்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஓப்ரா வின்ஃபிரே, உஃபி கோல்ட்பர்க் உள்ளிட்ட பிரபலங்கள் இந்நாடகத்தில் நடித்திருப்பதாகத் தெரிகிறது. நியூயார்க்கில் பிறந்த ஈவா சிறுவயதில் தன்னுடைய 5 லிருந்து 10வயதுகாலகட்டத்தில் தந்தையால் வன்முறைக்கும் வல்லுறவுக்கும் உள்ளாக்கப்பட்டமையை தன்நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார். இவரின் ‘வி-டே’ (V-Day) எனும் அமைப்பு, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான வன்முறைகளைக் களைய செயல்படுமொரு அமைப்பாகும். வி- எனும் எழுத்து Victory, Valentine மற்றும் Vagina வைக் குறித்து நிற்கிறது. 2002இல் விஜினல் மோனோலாகிஸ் திரைப்படமாகவும் வந்ததாகவும் தெரிகிறது. படம் பார்க்கக் கிடைக்கவில்லை.


பெங்களூரைச் சார்ந்த 'குரைக்கும் நாய்கள்' (Barking Dods ) குழுவினர் பற்றி அறிய முற்பட்டபோது, அவர்கள் 2011லிருந்து பெங்களூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் குழு என்று தெரிகிறது. சினிமா, ஃபாஷன், புகைப்படம், விளம்பரம் என பலதுறைகளைச் சார்ந்தவர்களும் சேர்ந்து இயங்கும் இக்குழுவினர் 70திற்கும் மேற்பட்ட நிகழ்த்துதல்களைச் செய்திருக்கிறார்கள். தொடர்ந்த அவர்களின் செயல்பாடுகளும் எதிர்கால திட்டங்களும் நம்பிக்கையளிக்கக்கூடியவை.



தமிழ்நாட்டில் 80களில் ஒரு பாய்ச்சலாகத் தொடங்கிய நவீன நாடக அலை 90களைத் தாண்டுவதற்குள்ளாகவே ஓய்ந்து குளம் போல் தேங்கிவிட்டது. துர்கிர அவலம், ஸ்பார்டக்கஸ், ஊர்வலம், சூரியனின் முதல் கிரணத்திலிருந்து முதல் கிரணம் வரை, பல்லக்குத் தூக்கிகள் என்று தமிழில் பார்த்த நல்ல நாடகங்கள் நினைவில் வந்து போகின்றன. மதுரை, சென்னை, திருச்சி என்று நடந்த நாடகவிழாக்கள் தூரத்து நினைவுகளாக மாறிவிட்டன.  என்ன செய்ய.. கலைவறட்சிமிக்க ஒரு மாநிலத்தில் வாழநேர்கிற அவலத்தை நினைத்து நொந்துகொள்வதைத் தவிர?

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

பாம்பே டாக்கீஸ் 1 (Bombay Talkies) : 'அப்பா...நான் அலி அல்ல... நான் ஒரு ஹோமோசெக்ஸுவல்…'


இந்திய சினிமாவின் நூறாண்டு நிறைவை நினைவுறுத்தும் விதமாக 2013 இல் வெளிவந்திருக்கும் நான்கு குறும்படங்களை உள்ளடக்கிய பாம்பே டாக்கீஸ், இந்தி சினிமா உலகிற்கு ஒரு நாகரீகமான சமர்ப்பணம்.
தலைப்பில்லாத இந்த நான்கு படங்களை கரன் ஜோஹர், தீபங்கர் பானர்ஜி, ஜோயா அக்தர், அனுராக் காஸ்யப் ஆகியோர் இயக்கி இருக்கிறார்கள்.

மும்பையின் நடுத்தர வர்க்க குடியிருப்பு. வேகமாக வீட்டுக்குள் நுழையும் இளைஞன் அவினாஷ் படுக்கையிலிருக்கும் தந்தையின் சட்டையைப் பிடித்து எழுப்பி சுவரோரமாய்ச் சார்த்தி ‘ நான் அலி அல்ல.. நான் ஒரு ஹோமோசெக்ஸுவல்… நான் அலி அல்ல…’ என்று அழுகையும் ஆக்ரோஷமுமாய் கத்திவிட்டு பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியேறுகிறான். அம்மா செய்வதறியாது திகைத்துப் பார்த்துக் கொண்டிக்கிறாள்.


ஒரு மேல்நடுத்தரக் குடியிருப்பு. தொலைக்காட்சி சேனலில் பணிபுரியும் தேவும் ஒரு பத்திரிக்கையில் பணிபுரியும் காயத்ரியும் கணவன் மனைவி. முதுகு முழுவதும் தெரியும் படியான கவர்ச்சியான உடையணிந்து அலுவலகத்திற்குப் புறப்பட தயாராகிக் கொண்டிருக்கும் மனைவியாகிய காயத்ரியை சட்டைசெய்யாமல் சம்பிரதாயமாக விடைபெற்று வெளியேறுகிறான் தேவ். இல்லறவாழ்வின் சலிப்பும் பரஸ்பர ஆர்வமின்மையும் அப்பட்டமாய் தெரிகிறது.

காயத்ரியின் அலுவலகத்தில் மூன்றுமாதத்திற்கு வேலைசெய்ய வந்திருக்கும் அவினாஷ், காயத்ரியிடம் எடுத்த எடுப்பில்… ‘பை த வே .. நான் ஒரு gay.. ‘ என்கிறான். அவளும் சற்றும் சளைக்காமல் ‘நீ ஒன்னும் டெர்ரிஸ்ட் இல்லையே…’ என்றவாறு சகஜமாகிறாள். இருவரும் நண்பர்களாக பழகத்தொடங்குகிறார்கள்.



சங்கோஜமில்லாமல் எல்லாவற்றையும் பேசிக்கொள்கிறார்கள். ஒருவனை ‘ gay’ என்று எப்படி அடையாளம் காண்பது? என்கிறாள். நீ மாதுரி ரசிகனா? ஶ்ரீதேவி ரசிகனா? என்று கேட்டால் தெரிந்துவிடும் என்கிறான். ஒருவன் ஶ்ரீ தேவி ரசிகன் என்றால் அவன் ஒரு ‘gay’ ஆகத்தான் இருப்பான் என்கிறான்.  கொஞ்ச நேரத்தில் காயத்ரி அந்த அலுவலகத்தில் திடகாத்திரமான ஒருவனை அழைத்துவந்து, அவினாஷ் இவர் ஶ்ரீ தேவி ரசிகராம்.. என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறாள்.

ஒரு நாள் அலுவலகத்தின் நடுவில் வைத்து ‘ காயத்ரி.. எத்தனை தடவை நீங்க செக்ஸ் வைச்சுக்கிறீங்க.. என்கிறான்…. யோவ் நடு அலுவலகத்தில் என் செக்ஸ் வாழ்க்கையைப் பத்திச் சொல்லணுமா… என்று தணிந்த குரலில் கோபிக்கிறாள்.. அவினாஷ் தொடர்ந்து நச்சரிக்கிறான்… இரண்டு தடவை என்கிறாள்… வாரத்துக்கு ரென்டு தடவை… மோசமில்லை என்கிறான்.. இல்ல .. மாதத்திற்கு ரென்டு தடவை… என்கிறாள்..


அவினாஷின் பிறந்த நாளன்று அவனை தன் வீட்டுக்கு டின்னருக்குக் கூப்பிடுகிறாள். என்னவோ அவினாசின் பேச்சும் நடவடிக்கைகளும் தேவுக்குப் பிடிப்பதில்லை. ஆனால் இருவருக்கும் ஒரு விசயத்தில் ஒத்த ரசனை இருப்பது தெரியவருகிறது. இருவரும் பழைய இந்திப்படப்பாடல் ரசிகர்கள் என்பதுதான் அது. ஆனால் அவினாஷுக்கு தேவை பிடித்துப் போகிறது. இப்போது காயத்ரி – தேவ்  எனும் தம்பதிகளுக்கிடையே தன்னை வெளிப்படையாக ‘gay‘ என்று அறிவித்துக் கொள்ளும் அவினாஷின் வருகை என்ன செய்யக் காத்திருக்கிறது என்பதுதான் கதை. (முழுவதும் கதையைச் சொல்லி படம் உண்டாக்கும் சுவாரஸ்யத்தை குறைக்கக் கூடாதென்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்)


ஒரு சிறுகதைக்குண்டான தன்மையில், இடையில் ஆரம்பித்து இடையிலேயே முடிவற்று விடும் இந்தக் கதை மாறிவரும் இந்தியாவின் மாற்றுப் பாலினத்தவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறு முயற்சியாக இருக்கிறது. தன்னை மாற்றுப் பாலினத்தவராக உணர்ந்தும் வெளிப்படுத்த முடியாமல், வெளிப்படுத்தி குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு தற்கொலையைத் தீர்வாக்கும் இந்தியச் சூழலில் இத்தகைய படங்கள் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. மாற்றுப் பாலினத்தவரின் பிரச்சனைகளைப் பேசுகிற படம் இதுவல்ல என்றாலும் அவர்களை முக்கியப் பாத்திரங்களாக உலவவிடும்போது பொதுப்புத்தியில் அவர்களை சகஜமாக ஏற்றுக்கொள்கிற மனநிலை உருவாகும் என்று நம்பலாம்.

மனிதர்களில் எதிர்பால் (straight sex) அதாவது ஆண் x பெண் உறவு உள்ளவர்கள் 90% பேர். சுயபால் ஈர்ப்பு உள்ளவர்கள் (Homosexuals) 5% பேர் மட்டுமே. இருபால் ஈர்ப்புள்ளவர்கள் (By Sexual) 80% பேர் என்கின்றன ஆய்வுகள். ஒரு சுயபால் ஈர்ப்பு உள்ளவன் தன்னை வெளிப்படையாக வெளிப்படுத்திக் கொள்வதைச் சொல்லும் படமாக இருக்கும் அதே வேளையில் தான் இருபால் ஈர்ப்பு உள்ளவன் என்பதை ஒருவன் சந்தர்ப்பவசத்தால் கண்டுகொள்கிற படமாகவும் இதைக் கொள்ள முடியும். மொத்தத்தில் இந்திய சினிமா கையாளத் தயங்குகிற விசயத்தை எடுத்துக் கொண்டதற்காக இப்படத்தை ஆதரிக்க வேண்டும்.

மிக சுவாரஸ்யமான உரையாடல்களும் அழகான ஒளிப்பதிவும் மிகப் பொருத்தமான நடிகர்களும்  சிறப்பான இசையும் அற்புதமான திரைப்பட அனுபவத்தைச் சாத்தியமாக்குகின்றன. இந்தியாவில் சிறந்த பின்னனி இசையை வழங்கக் கூடியவராக அமித் திரிவேதியைக் குறிப்பிடலாம் என்று தோன்றுகிறது. இந்தியப் படங்களின் சாபக்கேடு பின்னனி இசைதான். இந்திப் படங்களில் இந்நிலை மாறிவருகிறது. இப்படத்தின் நான்கு படங்களிலும் இசை மிகச் சிறப்பான பங்கு வகிக்கிறது. கரன் ஜோஹரின் நேர்த்தியான இயக்கத்தில் வெளிவந்துள்ள நல்ல குறும்படம் இது.


என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.