ஆரோக்கியம் தேடி அல்லலுற்ற கதை
(2023 ஜனவரி முதல் 'திசையாற்றுப்படை' எனும் தலைப்பில் 'அந்திமழை' மாத இதழில் வெளிவரத் தொடங்கியுள்ள தொடரின் முதல் கட்டுரை)
என்னுடைய நாற்பதாவது வயதில் ஒரு மருத்துவ பரிசோதனையில் சர்க்கரை நோய் கூப்பிடு
தூரத்தில் இருப்பதாக மருத்துவர் எச்சரித்த கணத்தில் உடல் நலம் பற்றிய என்
அறியாமையை நான் உணர்ந்தேன். பெற்றோர்கள் மூலமாகவோ, கற்ற உயர் கல்வியின்
மூலமாகவோகூட நமக்கு உடலோம்புதல் குறித்தவிழிப்புணர்வு இல்லை என்பதால்
சொந்தமாக அதுபற்றிய தேடலில் இறங்க ஆரம்பித்தபோதான அனுபவங்களே இவை.
ஆரோக்கியம், உடல்நலம் குறித்து நம் ஊரில் 100 பேரிடம் கருத்துக்கேட்டால்120
ஆலோசனைகள் கிடைக்குமுமல்லவா! குழப்பத்துடன் மருத்துவரைச் சந்தித்தபோது,
ஒண்ணும் பயப்படத் தேவையில்லை. அதிகாலை உடற்பயிற்சி, நடை, மெதுஓட்டம் இதற்கு
ஈடு இணை வேறெதுவுமில்லை என்று எளிமையாய் சொல்லி விடைகொடுத்துவிட்டார்.
உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் உடற்பயிற்சிகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பது
தெரிந்ததுதான். ஆனால் அதிலுள்ள சிக்கலே அதற்கு அதிகாலை எழுந்தாக வேண்டும்.
அதிகாலை எழுந்தாகவேண்டுமென்றால் இரவு சீக்கிரம் தூங்கியாக வேண்டும். இரவு
சீக்கிரம் தூங்க இரவு உணவை 7 மணிக்குள் முடித்தாக வேண்டும். நமக்கோ ஒரு நாளின்
நல்ல நேரம், குடும்பம் அடங்கியபிறகானஇரவு 10 மணிக்குத்தான் ஆரம்பிக்கிறது. இதில்
சூரியன் மறைந்த பிறகு தண்ணீர் தவிர எதையும் தொடக்கூடாது எனும் தீவிரவாதிகளும்
உண்டு. சரி நாளையிலிருந்து நடக்க ஆரம்பிப்போம் என்று பல முறை வீர சபதமெடுத்து ஒரு
நாள் நடக்கத் தொடங்கியேவிட்டேன்.
ஒரு 15 நாட்கள் கழிந்த போது உடல் கொஞ்சம் இலகுவாக, துடிப்பாக இருப்பதாக
உணர்ந்தது உண்மையா பிரமையா என்று தெரியவில்லை. வழக்கமான ஒரு காலை
நடைப்பயிற்சியில் மின்னல் போல் ஒருவர் கடந்துபோய்க்கொண்டிருந்தார். அவர் பக்கத்துத்
தெருக்காரர். காவல்துறையைச் சார்ந்தவர். முதல் சுற்று ஓட்டத்தை முடித்து இரண்டாம்
சுற்றில் திரும்பிவந்தவர் சும்மா போகாமல் ஒரு ஏளனப் பார்வையை வீசி..
‘என்னசார் அன்னநடை நடக்குறீங்க… இதுல என்ன பிரயோசனம்.. கொஞ்சம் ஓட முயற்சி
செய்யுங்க’ என்று ஒரு இலவச ஆலோசனையை வழங்கிவிட்டுப் போனார். சரி ஓடித்தான்
பார்ப்போமே என்று ஒரு வாரம் ஓடியபின், எதிர்ப்பட்ட நண்பர்கள்
‘என்ன முனி கினி அடிச்சிருச்சா? மரணப்படுக்கையிலிருந்து வந்தது போலிருக்கிறீர்களே!’
என்கிற ரீதியிலுமான அனுதாப விசாரிப்புகளைக் கேட்டுப் பதறிப்போய் மருத்துவரைச்
சந்தித்தேன்.
ஏங்க உங்கள நடக்கத்தான சொன்னேன். யாரு ஓடச் சொன்னா? இப்ப ஓடுற அந்த
போலீஸ்காரர் 60 வயசுல என்ன செய்வார். அதுநால நீண்ட நாட்களுக்கு நம்மால எதைச்
செய்ய முடியுமோ அதைத்தான் செய்யணும். மருத்துவர் சொன்னதை அருள்வாக்குப் போல
பின்பற்றி சிலமாதங்கள் சீரும் சிறப்புமாய் நடந்து கொண்டிருந்தேன் அந்த நண்பரைச்
சந்திக்கும் வரை.
என்ன மந்தமா இருக்கீங்களே? என்றார்.
வயசாகுதுல்ல.. என்றேன் பொத்தாம் பொதுவாக.
இங்கபாருங்க, நடக்குறதெல்லாம் சரிதான். ஆனா அதுக்கு முன்னாடி நம்முடைய அன்றாட
பழக்கவழக்கங்கள் சிலத மாத்தியாகனும்..
அப்படீன்னா?
இப்ப காலைல எழுந்த உடனே பல்லு வெளக்காம காபியோ டீயோ குடிப்பீங்க.. இல்லியா?
ஆமா… காபி
அத மொதல்ல நிறுத்துங்க…
நிறுத்திட்டு?
என்னைப் பாருங்க… காலைல எழுந்திரிச்சவுடனே 2 லிட்டர் தண்ணீர்…வெறும் வயித்துல..
எதுக்கு அவ்வளவு தண்ணீர்? என்றேன்.
ஏங்க வாட்டர் தெரபி கேள்விப்பட்டதில்ல. வெறும் வயித்துல தண்ணீர் குடிச்சா தண்ணீர்,
உள்ளுறுப்புகளை கழுவி கசடுகள வெளியேத்திடும். கசடுதான எல்லாத்துக்கும் காரணம்.
புரிந்தமாதிரியும் புரியாத மாதிரியும் இருந்தது. இனிமேல் எது செய்தாலும் டாக்டரிடம் ஒரு
வார்த்தை கேட்டுவிட்டுத்தான் செய்யவேண்டும் என்று மருத்துவரிடம் போனேன்.
ஏன் டாக்டர். வாட்டர் தெரபின்னு ஒண்ணு இருக்காமே?
இருக்கட்டும்.
நோய் நொடியே அண்டாது. ஹாஸ்பிட்டல் பக்கமே போகத்தேவையில்லைன்னு
சொல்றாங்களே!
ஓகோ… அப்ப கை கால் ஒடிஞ்சாலும் வரமாட்டாங்களாமா?
அது.. வந்து..
சரி.. என்ன வாட்டர் தெரபியாம்? கொஞ்சம் உற்சாகம் வந்து,
டாக்டர் காலைல 2 லிட்டர் தண்ணீர் குடிக்கணுமாம்.
குடிச்சா?
நான்.. தண்ணீர் உள் உறுப்புகளைக் கழுவி சுத்தமாக்கிருமாமே! மருத்துவர் முகத்தில்
லேசான ஏளனப் புன்னகை.
ஏன்ன டாக்டர் சிரிக்கிறீங்க?
வயிற என்ன ஒரு பக்கெட் மாதிரியும் கிடல் குந்தாணியெல்லாம் அதுக்குள்ள கெடக்கிறது
மாதிரியும் நெனைச்சுக்கிட்டீங்க பொல. ஏன் கொஞ்சம் ‘சோப்’ பவுடரையும்
சேர்த்துட்டீங்கன்னா… பளிச்சின்னு சுத்தமாயிருமே?
அப்ப ஒரு பிரயோஜனமுமில்லங்குறீங்களா?
ஏன்.. வழக்கத்தவிட கூடுதலா ஒரு லிட்டர் மூத்திரம் போகுமே என்றார் ஈவிரக்கமில்லாமல்.
விளைவுகளைப் பற்றிக்கவலைப்படாமல் ஒரு பெரிய தம்ளரில் தண்ணீர் குடிக்க
தொடங்கினேன். டாக்டர் சொன்னதுபோல் கூடுதலாகக் கொஞ்சம் போகத்தான் செய்தது.
இப்படியே சில மாதங்கள் உருண்டோட சில வருடங்களுக்குமுன் சந்தித்த நண்பர்
ஒருவரை எதிர்கொண்டேன். ஆப்பிள் வடிவில் இருந்தவர் வெள்ளரிக்காய் போல இருந்தார்.
என்ன நண்பரே! எப்படி இது சாத்தியம்.
இயற்கை உணவுக்கு மாறிட்டீங்களா?
எந்தக் காலத்துல இருக்கீங்க. அதெல்லாம் பழசுங்க. நான் பேலியோவுக்கு மாறிட்டேன்
என்றார்.
பேலியோவா?
நீங்க கண்ட கருமத்தையும் திண்ணுறீங்க. உடம்பு அதுக்கு தேவையான கார்போஹைட்
ரேட்டை எடுத்துக்கிட்டு மிச்சத்தை விட்டுறுது. அது கூடுதல் கொழுப்பா மாறிருது. வெயிட்
போடுது. இப்ப நான் வெறும் கொழுப்ப மட்டும் எடுத்துக்கிறேன். உடம்புல கார்போ
இல்லாததால உடம்பு கொழுப்ப எடுத்து செலவழிக்குது. மிச்சம் மீதி எதுவும் இல்ல. கிளீன்.
சர்க்கரை, கொழுப்பு, அழுத்தம் எதுவும் இல்ல.
ஆஹா… நாம நற்றினை நடத்திக்கிட்டுஇருந்த இடைவெளியில உலகம் எங்கேயோ போயிருச்சே!
ஆனால் கடந்த சில வருடங்களில் அவசரப்பட்டு எதையும் ஆரம்பித்துவிடக் கூடாது
என்ற பட்டறிவு உண்டாகிவிட்டது. ஒரு பழைய நண்பனைச் சந்திக்கநேர்ந்தது.
என்ன உண்டாயிருக்கீங்க போல… என்றார் வயிற்றைப் பார்த்துக்கொண்டு.
உற்றுப்பார்த்தபோதுதான் உரைத்தது ஒரு இரண்டு மாசப் பக்குவத்தில் வயிறு இருந்தது
உண்மைதான். நண்பர் அவர் கடமை முடிந்ததுபோல் விடைபெற்றார். எனக்கு சட்டை
மாட்டும் போதெல்லாம் நண்பரின் வார்த்தைகள் தவறாமல் நினைவுக்கு வந்தபடி இருந்தது.
20 ஆண்டுகளாய் ஒட்டிய வயிறோடு இருக்கும் தூரத்து நண்பர் நினைவுக்குவர பிடித்தேன்
தொலைபேசியில்.
அதுவா… விசயம் ரெம்ப சிம்பிள். அதுசரி.. உங்களுக்கு மலச்சிக்கல் இருக்கா?
ஏங்க பணச்சிக்கல் இல்லாதவன் கூட இருக்கான்… மலச்சிக்கல் இல்லாதவன் யார்
இருக்கா..
அப்ப இருக்குன்னு சொல்றீங்க…உங்களுக்கு ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்..
ஒரு கோடி லாட்டரியில் நம்பரைப் பார்த்தவனைப்போல் அடுத்த வார்த்தைகளுக்காய்
காத்திருந்தேன்
நான் 15வருஷமா ‘குடல் கழுவுதல்’ பிராக்டிஸ் பண்றேன் அதுதான் காரணம்.
என்ன இது.. ஏதோ பாத்திரம் கழுவுற மாதிரி… அப்டீன்னா?
ஏங்க .. செல்ப் இனிமாங்க…
குழப்பமான என் முகத்தைப் பார்த்து அவரே தொடர்ந்தார்…
என்னங்க நீங்க. அதுக்குன்னு ஒரு பிளாஸ்டிக் கப்பு நம்ம காதிகிராப்ட்ல விக்கிது. அதுல
தண்ணிய நிரப்பி அப்படியே பின்பக்கமா…
பின்பக்கமான்னா… வீட்டு பின்பக்கமா?
யோவ்…. வீட்டு பின்பக்கமில்லையா…உம்ம பின்பக்கமா..
பின்பக்கமா டியூப் வழியா தண்ணீரை செலுத்திட்டு ஒரு 15 நிமிசம் மட்டமல்லாக்க
படுத்துட்டு பாத்ரூம் போனீங்கன்னா… ஆஹா.. அத அனுபவிச்சுப்பாருங்க அப்புறம்
தெரியும்…. மொத்தத்துல மலச்சிக்கலும் இல்ல… தொந்தியும் கரைஞ்சு காணாமப் போகும்..
நிறைய வியாதிகளும் அண்டாது… என்று ‘நீர் வழி உடல் மேலாண்மை’ பற்றிய
சொற்பொழிவொன்றிற்கு நண்பர் தயாராவதை உணர்ந்து…. இடைமறித்து
ஏங்க ஏதாவது புத்தகம் ஏதாவது இருக்கா இதுபத்தி.. எனக்கேட்கவும்
ம்.. நம்பிக்க வரல இல்ல.. ஏங்க கி.ரா. தெரியமா?
யாரு கரிசல் எழுத்தாளர் கிராவா?
ஆமாங்க.. நாப்பது அம்பது வருசமா இத பிராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருக்காருங்க…100
வயச நெருங்கிக்கிட்டு இருக்காரு… தெரியுமில்ல..
ஆஹா.. இப்படி ஒரு வாழும் உதாரணமா? இருந்தாலும் டாக்டரிடம் ஒரு வார்த்தை
கேட்டுவிடலாம்..
டார்டர் இந்த செல்ஃப் இனிமா பத்தி என்ன நினைக்கிறீங்க?
வினோதமாய் பார்த்தார்… என்ன விசயம்?
இல்ல டாக்டர். செல்ஃப் இனிமா உடலுக்கு ரொம்ப நல்லதாமே…
அது இந்த யோகிகள் சாமியார்கள் சிலர் பண்ணுவாங்கன்னு கேள்விப் பட்டுருக்கேன்….
திருமணத்துக்குப்பின் எல்லோரும் யோகிகள்தான டாக்டர் என்றேன்… என் நகைச்சுவையை
ரசித்த மாதிரி தெரியவில்லை…
என்ன உங்க பிரச்சனை என்றார் நேரடியாக
இல்ல டாக்டர்.. மலச்சிக்கலுக்குக் கண்கண்ட தீர்வாம்… அதோட தொப்பையக்
கரைச்சிருமாம்…
மாற்று மருத்துவ முறைகளை தாட்சன்யமின்றி நக்கலடிக்கும் டாக்டர் முகத்தில் முதன்
முறையாக குழப்ப ரேகைகள் ஊர்வது தெரிந்தது….
ஆர்வத்தோடு அப்படியா சொல்றீங்க? எனவும், உற்சாகத்தோடு கி.ரா. கதையைச் சொல்லி
வலுசேர்த்தேன்…காந்தி கூட உப்புகலந்த தண்ணீரால் குடல் கழுவிவந்த வரலாற்றுத்
தகவலையும் எடுத்துரைத்தேன். டாக்டருடைய முகக்குறிப்புகளைப் பார்த்தால்
அநேகமாய் அன்று மாலையே காதிகிராஃப்டுக்கு கப் வாங்கச் சென்றிருப்பார் என்று
தோன்றியது. அவரும் மனிதர்தானே… புரோட்டா சாப்பிடாமல் மதுரையில் ஒரு மனிதன்
வாழ்ந்துவிட முடியுமா என்ன?
இப்படியாக தெளிவற்ற பாதையில் நொறுங்குண்டதும் நறுங்குண்டதுமான
இருதயத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும்போதுதான் என்னுடைய யோகா குருவை என்
வகுப்பறையிலேயே சந்தித்தேன். என்னோடு எப்போதும் நட்போடு இருக்கும் மாணவரான
அவர் ..முதுகலை படித்துக்கொண்டிருந்தார்.
‘ஒரு நாள் ஐயா என்ன சோர்வா இருக்கீங்களே? என்றார்
ஆமாய்யா… வாரமலரே படிக்காதவங்களுக்கு சுந்தரராமசாமியையும், ஜி. நாகராஜனையும்
அறிமுகப்படுத்தனும்னா… சோர்வு வராம என்ன செய்யும்?
ஐயா… நீங்க ஏன் யோகா செய்யக் கூடாது..
என்னது அந்த நண்டு மாதிரி காலை திருகுறது… ‘நான் கடவுள்’ ஆர்யா மாதிரி பாறையில
ஒரு கால்ல நிக்கிறது… இதெல்லாம் நமக்குச் சாத்தியமா…
உங்களுக்கு யோகா பத்தி ஒண்ணும் தெரியாது அதுநால பேசுறீங்க… யோகா உங்க
வாழ்க்கையவே மாத்திரும் பாத்துக்குங்க.. நாளையில இருந்து நான் உங்களுக்கு
சொல்லித்தாரேன்… நான் முறையா யோகா கற்றிருக்கிறேன் என்று நம்பிக்கையூட்டினார்.
தேக அரோக்கியத்தையும் தேச ஆரோக்கியத்தையும் முன்வைத்து சில வருடங்களாக
யோகாவுக்கான பிரச்சாரம் வலுப்பெற்று வருவதையும் நம் பிரதமரே பாறாங்கல்லை
முதுகால் உருட்டி விளையாடும் காணொளிகளையும் கண்டபிறகு, யோகாவின் மேல் ஒரு
ஆர்வம் எழுந்ததைத் தவிர்க்கமுடியவில்லை. ஒரு சுபமுகூர்த்த நாளில் வீட்டு மொட்டை
மாடியில் யோகா ஆரம்பமானது. யோகா குரு… ஆம் என் மாணவர்தான் அவர். அவருக்கு
நான் ஆசிரியர். ஆனால் அவர் எனக்கு குருவாம். ஏனென்றால் அவர் யோகா
கற்றுக்கொடுக்கிறாராம். அவர் செய்து காட்டிக் கொண்டே எனக்கு குறிப்புகள்
கொடுத்துக்கொண்டே இருப்பார்.
நன்றாகக் கண்களைமூடி… மூச்சை உள்ளுக்குள் இழுப்போம். ஐந்து வினாடிகள் அப்படியே
வைத்திருப்போம். இப்போது மிக மெதுவாக மூச்சை வெளியே விடுவோம். மூச்சை
உள்ளிளுக்கும் போதும் வெளிவிடும்போதும் சுவாசத்தை உற்றுக் கவனிப்போம் என்பார்.
பேச்சைக் கவனிப்பதே பெரும்பாடாக இருக்கும்போது மூச்சைக் கவனிப்பது எளிதானதா
என்ன? ஓராண்டுக்கு மேல் தொடர்ந்த யோகாவின் பலன்களை வெளிப்படையாக அளவிட
முடிவில்லையென்றாலும் உடம்பு லகுவாக இருப்பதாகத் தோன்றியது அடுத்த நண்பரைச்
சந்திக்கும் வரை.
எப்டி இருக்கீங்க? ஏதாவது புதிய முயற்சிகள்.. புத்தகங்கள்..? என்று வழக்கமான
பேச்சை ஆரம்பித்தார். நான் சும்மா இருந்திருக்கலாம். புதுசா கொஞ்ச நாளா யோகா
பண்றேன் என்றேன். குனிந்து நண்பரால் அவருடைய காலையே பார்க்கமுடியாத அளவுக்கு
ஒரு நான்கு மாத கர்ப்பிணிக்குண்டான தொந்தியை உடையவர். அவர் செய்ய முடியாததைச்
செய்து கொண்டிருப்பதான மமதையில் சொல்லிவிட்டேன்.
என்ன திடீர்னு?
வயசாகுதில்லையா... உடல் ஆரோக்கியத்தை பாக்கவேண்டியிருக்கே. அதான்.
யோகா என்ன செய்யுமாம்? கேள்வியில் ஒரு இளக்காரம் தொணித்தது.
நோய் நொடியில்லாம நீண்ட நாட்கள் வாழத்தான் என்றேன்.
யோகா செய்றவங்களெல்லாம் நீண்ட நாட்கள் வாழ்றாங்களாமா?
ஆமா... யோகா குருக்களெல்லாம் தொண்ணூறிலிருந்து நூறு வயது வரை வாழ்றாங்களே!
நண்பர் அத்தோடு அந்த உரையாடலை முடித்துக்கொள்வார் என்று நினைத்தேன். சிறிய
இடைவெளிவிட்டு… தினமும் ரெண்டு அவுன்ஸ் ஸ்காட்ச் விஸ்கியும் ஏராளமான
நகைச்சுவை உணர்வோடயும் இருந்த குஷ்வந்த்சிங் கூட நூறு வயசு இருந்தாரே! என்று
நான் எதிர்பார்க்காத திசையில் ஒரு பதிலைப் எறிந்துவிட்டு ஏறக்கட்டினார் நண்பர்.
நிதானமாகக் கூட்டிக் கழித்துப் பார்த்தபோது சிங் வழியே சிறந்த வழியோ என்ற
மனக்கிலேசம் ஏற்படத்தான் செய்தது.
இதற்கிடையே இயற்கை உபாசகரான நண்பர் ஒருவர் எதிர்ப்பட்டார். ‘இயற்கை வழி
வாழ்வு’ மூன்று நாள் முகாம் ஒன்று மலை அடிவாரத்தில் நடப்பதாகவும், இந்த வார
இறுதியில் தான் கலந்து கொள்ளப் போவதாகவும் கூறி… ஏங்க நீங்களும் வாங்க… மூனு
நாள் கழிச்சு உங்க உடம்பு பொடச்சு எடுத்தமாதிரி ஆயிறும்…’ என்றார்.
மூனு நாள் அப்படி என்னதான நடக்கும்?
வெள்ளிக்கிழமை காலையில போய் எறங்கிய உடனே, பின் வாசல் வழியா உப்புக் கரைசல
உள்ள செலுத்தி குடல் கழுவுதல். அப்புறம் முன்வாசல் அதாவது வாய் வழியா எட்டுவித
மூலிகைகள் கலந்த எலுமிசைச் சாறு. அப்புறம் வாழை இலைக் குளியல். அரைமூடித்
தேங்காயும் ஊறவச்ச அவலும் காலை உணவு. பிற்பகல் யோகப்பயிற்சி. அப்புறம்
மண்குளியல், நீராவிக்குளியல், யோகா இப்படி மூன்று நாளும் கவனமாகத் திட்டமிடப்பட்ட
முகாம். மூன்று நாட்கள் கழித்து நீங்க நீங்களா இருக்கமாட்டீங்க… அது மட்டும் உறுதி
என்றார்.
அது சரி.. மூனு நாள் கழிச்சு அதே அரைமூடித் தேங்கா, அவல் பொறியா? இல்ல
வெண்பொங்கலும் உளுந்த வடையுமா?
உங்கள மாதிரி அகராதி புடிச்ச ஆட்களால எதயுமே பாசிட்டிவா பாக்க முடியாது, நான்
வர்றேன்… என்று நடையைக் கட்டிவிட்டார்.
இந்தத் தேடுதலில்பூரண உடல் நலத்திற்கு ‘மூன்று வெள்ளைகளை’ தூக்கியெறியுங்கள்
என்று இன்னொருவரையும் சந்திக்க நேர்ந்தது.
சர்க்கரை, உப்பு ரெண்டையும் தவிர்க்கணும்ங்கிறது சரி. பால் ஏன்?
நீங்க என்ன வண்டியிழுக்கிறீங்களா? மாட்டுப்பால் குடிக்க...அம்மாகிட்ட குடிச்ச பாலோட
நிறுத்துங்க சார்... என்றார். எந்த மிருகமாவது தாய்ப்பால் தவிர வேற பாலை குடிக்குதா?
எந்த மிருகமாவது இன்கம் டாக்ஸ் கட்டுதா? எந்த மிருகமாவது மன உளைச்சலுக்கு ஆளாகி
தூக்கம் வராமா புரண்டுக்கிட்டு இருக்குதா? என்று கேட்கலாம்தான்... அவரவர்
நம்பிக்கைகளுக்கு எதிரான கேள்விகள் யாருக்குப் பிடிக்கிறது?
இப்போது என்னுடைய பிரச்சனை… நடப்பதா? ஓடுவதா? தண்ணீர் குடிப்பதா? தேங்காய்
துருவுவதா? டுயூப்பை செருகுவதா? குஷ்வந்த் சிங் வழியா? என்பதுதான். உங்களிடம் என்
வேண்டுகோளெல்லாம் ஒன்றுதான். உங்கள் பங்கிற்கு புதிய இலவச ஆலோசனை எதையும்
கூறவேண்டாம் என்பதுதான். வாழ்க வளமுடன்!