எங்கோ உள்ள ஒரு வளைகுடா நாட்டின் பொருளுதவியுடன் பாகிஸ்தானில் பயிற்சி பெற்று இந்தியாவின் மும்பை நகருக்குள் வரும் தீவிரவாதி ஒருவன், ரயிலைத் தவறவிட்டு விடுதியில் அறை எடுத்துத் தங்கும் வசதியில்லாததால், ரயில்நிலைய நடைமேடையில் மடியில் குழந்தையோடு காத்திருக்கும் ஒரு கிராமவாசி, எதற்காகவென்று தெரிந்து கொள்ளும் அவகாசமின்றி ஒரு இயந்திரத்துப்பாக்கிச் சத்தம் ஓய்வதற்குள் ரத்தச் சிதறல்களாகிப் போகவேண்டியதன் தர்க்கம்
எளிதாக விளங்கக் கூடியதல்ல.
செப்டபர்
11ல் உலக வர்த்தக இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்டதனால், உலகமுழுமையுமான உள்நாட்டு
போராளிக் குழுக்கள் பற்றிய வல்லரசுகளின் பார்வை மாற்றமடைந்ததும்,
இலங்கையின் பூகோள ரீதியான இருப்பும்,
அதன் அண்டை நாடுகளான இந்தியா, சீனா
ஆகியவற்றின் வர்த்தக, அரசியல் திட்டங்களும் சேர்ந்து 25ஆண்டுகளுக்கும்
மேலாக நடந்துவந்த இலங்கைத் தமிழரின் விடுதலைப்போராட்டத்தை கேட்பாரில்லாமல் துடைத்தெரிந்தது. நாம் ஏன் உலகமக்களால் கொடூரமாகக் கைவிடப்பட்டோம் என்று முள்ளிவாய்க்காலில் கதறிய அப்பாவி ஈழத்தமிழர்களில்
பலர் அதற்கான காரணத்தைப் விளங்கிக்கொள்ளும்
வரைக்கும் உயிரோடு இருப்பதற்கு
அனுமதிக்கப்படவில்லை.
ஒரு தனிமனிதனாக இருந்தாலும் ஒரு சமூகக் கூட்டமாக இருந்தாலும் அதன் இருப்பு எதைச் சார்ந்தது, எந்த வலைப்பின்னலில் எந்த கண்ணியில்
அதன் வாழ்வும், தாழ்வும், வளர்ச்சியும் தொக்கி நிற்கிறதென்பதை மேலோட்டமாக யூகித்தறிய முடியாது என்பதையே ஒரு ‘உலகமயச் சூழல்’ என்கிறோம். பின் நவீனத்துவச்
சூழல் என்றும் கூறலாம். கறுப்பு வெள்ளையாக எதையும் எளிமையாக விளங்கிக் கொண்டிருந்த அப்பாவித்தனத்திற்கு இன்று இடமில்லை. எல்லாவிதமான தனிமனித சமூகப் பிரச்சனைகளும் பன்னாட்டு சமூக அரசியல் பொருளாதாரப் பிரச்சனைகளோடு பின்னிப் பிணைந்தவையாக மாறியுள்ளன. இந்தச் சிக்கலான காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் சினிமா அதீதச் சிக்கலான, வலைப்பின்னலான கதைகளுக்கும், கூறல் முறைக்கும் காரணமாகியுள்ளன.
1980களுக்குப் பிந்தைய தகவல் தொழில்நுட்பப் புரட்சி, விமானப்போக்குவரத்தின்
விரிவாக்கம், எல்லாத்துறைகளுக்குள்ளும் புகுந்த கணனி தொழில்நுட்பத்தின் ஆதிக்கம், எல்லமுமாகச் சேர்ந்து உலகை ஒரு பெரும் கிராமமாகச் சுருக்கிவிட்டன.
உலகத்தையே ஒரு மாபெரும் அங்காடியாகக் கருதத்தக்கவிதத்தில்
திறந்தசந்தை புதிய வர்த்தக, பொருளாதாரச் சூழலை உருவாக்கியுள்ளது. இதற்கிடையேயான
வளைகுடா யுத்தம், ஆப்கன் போர், உலகுதழுவிய மத, இன அடிப்படைவாதம், மூன்றாம் உலக நாடுகளின் உள்நாட்டுக் குழப்பங்கள் எல்லாம்
இணைந்து உலக நாடுகளைத்
தவிர்க்க இயலாத கண்ணிகளால் இணைத்து விட்டன.
இத்தகைய பின்புலத்தில் 21ஆம்நூற்றாண்டுச் சினிமாவின் முக்கிய அம்சமாக இந்த புதியவிதமான கதை-திரைக்கதைகளின் வருகையைக் கூறலாம். ஒருகுறிப்பிட்ட நாயகன் நாயகியை மையமாகக் கொண்டு கதைகளை அமைப்பது, நூல் பிடித்தார்போன்று அக்கதையை நகர்த்திச் சென்று ஒரு தீர்வை
அல்லது முடிவை வழங்கி பார்வையாளர்களை சந்தோஷமாய் வழிஅனுப்பி வைப்பதான சினிமாக்கள் இன்று காலாவதியாகிவிட்டன. சிக்கலும் குழப்பமுமான வாழ்க்கைச் சூழல் நம் கலைகளையும், கலைகளில் ஒன்றான சினிமாவிற்குள்ளும்
வினைபுரியத் தவறவில்லை. அந்த வகையில் அமெரிக்காவிலும் ஏனைய
ஐரோப்பிய நாடுகளிலும் 1990களிலேயே ஒரு புதுவிதமான சினிவிற்கான சூழல் உருவாகியது.
2005ல் Happy Endings என்ற
திரைப்படத்தை
Film Comment எனும் சினிமா
இதழுக்காக விமர்சிக்கும்போது அலீசா
குஆர்ட்
(Alissa Quart) எனும் விமர்சகர் ஒரு புது பதப் பிரயோகத்தைப் பயன் படுத்தினார். ’ஹைப்பர் லிங்க் சினிமா’ (hyperlink cinema) என்ற அந்த புதிய
வகை சினிமாவின் கூறுகளாக கீழ்க்கண்டவற்றை முன்மொழிந்தார்.
§ பல திசைகளில்(multi
tasking) கதை பயணிப்பது_
§ தொடர்பற்ற பல்வேறு பாத்திரங்கள் கதையில் ஏதாவதொரு புள்ளியில் இணைவது_
§ பின்னோக்கு(flash
back) முன்னோக்கு உத்திகளின்
(flash
forward) மூலம் தொடக்கத்திற்கும் முடிவுக்குமிடையே முன்னும் பின்னுமாக நகர்ந்தபடி கதை கூறுதல்
§ படங்களில் அடிக்குறிப்புகளைப் (foot
notes) பயன்படுத்துவது_
§ திரையை இரண்டாகவோ நான்காகவோ பிரித்துப்
(split screen) பயன்படுத்துவது_
உலகத் திரைப்பட வரலாற்றில் ‘இத்தாலிய நியோ ரியலிசம்’(Italian
Neo Realism) ‘ப்ர௺ச் புதியஅலை’(French New Wave) ஆகிய திரைப்பட
இயக்கங்கள் ஹாலிவுட் வணிகத் திரைப்படங்களுக்குப் மாற்றாக ஒரு புதிய போக்கை உருவாக்கியது போல், 1990களுக்குப் பிந்தைய உலக சினிமாவின் போக்கில்
’ஹைப்பர்
லிங்க் சினிமா’ பெரும் தாக்கத்தை விளைவிக்கத் தொடங்கியிருப்பதைக் காணமுடிகிறது.
பிரிட்டனின் விளம்பர நிறுவனத்தின் ஓவியராக வேலையிலிருந்த சத்யஜித்ராய் 1950களில் லண்டனுக்கு அலுவலகப் பணியாக அனுப்பப் பட்டார். அங்கு தங்கியிருந்த ஆறுமாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களைப் பார்த்ததாகவும், அங்கு இத்தாலிய நியோ ரியலிசப் படங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் ‘சைக்கிள் திருடன்’ எனும் படம் விளைவித்த பாதிப்பிலேயே தன்னுடைய பதேர்பாஞ்சாலியை
1956ல் இயக்கி வெளியிட்டு அதன் மூலம் இந்திய சினிமாவை உலகறியச் செய்தார். ஆனாலும் ரேயின் ‘பதேர்பாஞ்சாலி’
இந்திய சினிமாவின்
போக்கைப் பெரிதாக அசைத்துவிடவில்லை.
கர்நாடகத்தில் பி.வி.காரந்த், கிரிஷ் கர்னாட், கிரிஷ் காசரவள்ளி, கேரளத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், வட இந்தியாவில் மணிகவுல், குமார்சகானி ஆகியவர்களை
ரேயின் தொடர்ச்சியாக்க் குறிப்பிடலாம். இவர்கள் அனைவருமே கலைப் பட இயக்குநர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள். இவர்களால் இவர்கள் சார்ந்த மாநில மொழிப்படங்களின் வெகுஜன சினிமாவிற்குள் இதன் தாக்கத்தை கொண்டு சேர்க்க முடிந்ததில்லை. தமிழகத்தில் இந்த ரியலிச கலைப்பட மரபைப் பரிசோதித்தவர்களாக ஜெயகாந்தனையும், ஜான் ஆபிரஹாமையும் ஆய்வாளர்கள் குறிப்பிடுவதுண்டு. ஆனால் ரேயின் தாக்கத்தால் உருவான ஒரு இயக்குநராக மேகேந்திரனையும் அவரின் உதிரிப்பூக்கள் படத்தையும் நினைத்துப் பார்க்கலாம். ஆனாலும் மேற்கண்ட இயக்குநர்களின் முயற்சிகள் வெகுசன சினிமாவை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வதற்குக் காரணம், பொதுவாக 1990களுக்கு முந்தைய மாற்றுசினிமா மற்றும் கலைப் பட முயற்சிகள் சிறுபாண்மை ரசிகர்களுக்கான சினிமாவாக குறுகிப் போய்விட்டது. ஆனால் 90களுக்குப் பிந்தைய பின்நவீனத்துவ சினிமா அல்லது விளிம்பு நிலை சினிமா அல்லது
நான் லீனியர் சினிமா அல்லது ஹைப்பர் லிங்க் சினிமா
(இவற்றைத் தனித்தனியாகவும் வகைப்படுத்த முடியும் அதே நேரத்தில்
எல்லாவற்றையும் இணைக்கும்
பொதுக்கூறுகளும் உண்டு) இப்படி பல்வேறு கூறுகளை தனித்தனியாகவும், ஒட்டு மொத்தமாகவும் கொண்டிருக்கும் சினிமாக்கள் இன்று வெகுசன சினிமாக்களுக்குள்ளும் தன் தாக்கத்தை விளைவிக்கத் தொடங்கியுள்ளன. 1950களில் வெளியான பதேர்பாஞ்சாலி
1970களின் இறுதியில்தான் ‘உன்னைப்போல் ஒருவனாகவும்’,
‘அக்ராகரத்தில் கழுதையாகவும்’,
‘உதிரிப்பூக்களாகவும்’
பூத்தது. ஆனால் இன்றைய உலகமயச்சூழலில் அத்தகைய் இடைவெளிகள் வெகுவாகக் குறைந்துவிட்டதோடு,
கலைப்படம் என்ற ஒன்று தனியாக இருக்க முடியாது என்ற புரிதலும் ஏற்பட்டுள்ளது. கலைப்படம்
வணிகப்படம் என்ற எல்லைகள் வெகுவாக
குழம்பியுள்ளன
அந்தவகையில்,
அமெரிக்க இயக்குநர்கள் மார்ட்டின் ஸ்கார்சிஸ்(Martin Scorsese), குவாண்டின் டொராண்டினோ(Quentin Tarantino), ஸ்டீவன் சோடர்பர்க்(Steven Soderbergh) மெக்ஸிக்க இயக்குநர் அலக்சாந்த்ரோ கொன்சாலஸ்(Alejandra Gonzalez),
ஜெர்மனியின் டாம் டைக்வர்(Tom Tykwer),
பிரேசிலின் ஃபெர்னான்டோ மெய்ரெல்ஸ் (Fernando Meirelles), தென்கொரிய இயக்குநர் கிம் கி டக்(Kim Ki-Duk) போன்றவர்கள் வர்த்தகம்- கலை என்ற இருமை எதிர்வுகளைத் தகர்த்துள்ளனர். ஆகவே 21ம் நூற்றாண்டின் சினிமாவைப் படைக்க விரும்புகிற எவரும் மேற்கண்ட இயக்குநர்களின் படைப்புகளைப் பார்த்தறியாமல் தங்கள் திரைக்கதையை எழுத முடியாது.
2011
ஆம் ஆண்டில் தமிழில் 125க்கும் மேற்பட்ட
படங்கள் வெளியானதாகத் தெரிகிறது. இதில் வணிக ரீதியாக வெற்றிபெற்ற படங்களைப் பற்றிய
தயாரிப்பாளர்களின் கவலை ஒரு பக்கமிருக்க, ஒரு சினிமாவாக பார்வையாளர்களை, விமர்சகர்களைக் கவர்ந்த
படங்களின் எண்ணிக்கையும் பெரிதாக இல்லை என்பதுதான் கவலையளிக்கக் கூடிய விசயம்.
ஆனால் தமிழ்சினிமாவில்தான் ஆகச்சிறந்த தொழில்நுட்பக்கலைஞர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அப்படியானால் என்னதான் பிரச்சனை?
உலகில்
சினிமா இருக்கும்வரை நட்சத்திர நாயகர்கள் பஞ்ச் டயலாக்
பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால்
ஸ்டார் சினிமாக்களுக்கு இணையாக
காலத்திற்குத் தேவையான, பொருத்தமான
புதிய முயற்சிகளும் நிகழ்ந்து
கொண்டு இருத்தல் வேண்டும். அந்த வகையில் உலகசினிமாக்களோடு நம்சினிமாவை ஒப்பிட்டு
நோக்கும்போது நம் இயக்குநர்கள்
தடுமாறும் இடம் கதைதான் என்பது புலப்படும். திரைப்படத்திற்குள் கதை
என்பதை ‘கதை – திரைக்கதை’ என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். இலக்கியம், ஓவியம், நாடகம் என்று எந்தக்கலை வடிவமானாலும் அந்தந்தக்
காலத்திற்குப் பொருத்தமான வடிவத்தை கையில்
எடுக்கவேண்டியுள்ளது. அந்தவகையில் தமிழ்சினிமாவில் இந்த நூற்றாண்டின்
வாழ்வியலிலிருந்து கதைகளையும்
திரைக்கதைகளையும் உருவாக்குவதில்
பெரும்பாண்மை இயக்குநர்கள்
பின்னடைந்து விட்டார்களோவென்று தோன்றுகிறது.
தமிழ்சினிமாவில் 2000த்தின் தொடக்கத்திலிருந்து ஒரு புதிய சினிமாவிற்கான அறிகுறிகள் தென்படத்தொடங்கின. 1993ல் வெளிவந்த பாலாவின் பிதாமகன்
விளிம்புநிலை மனிதர்களை அவர்களின் உலகத்தை, அழகியலைப் பதிவுசெய்யும் முயற்சியைத்
தொடங்கிவைத்தது. 2004ல் விருமான்டியில் கமல்ஹாசன் கிராமிய மண்சார்ந்த
அடையாளங்களை அழுத்தமாகவே பதிவுசெய்தார்.
ஆனாலும் ‘கதாநாயகனை’ மையமாகக் கொண்ட சினிமாவாக அதைக் கொண்டுசென்றதன் பலவீனங்களால் அது
முழுவீச்சில் வெளிப்படவில்லை. அதே ஆண்டில் மூன்றுகதைகள் ஒரு விபத்தில்
ஒன்றினையும் ஆயுத எழுத்தை
உருவாக்கினார் மணிரத்னம். ஆனால் வழக்கமான அவருடைய
உயர் நடுத்தரவர்க்க வாழ்வியலிலிருந்தும், அழகியலிலிருந்தும் அவரால் வெளிவரமுடியாததால், அப்படம் வெறும் கதைகூறும் உத்தியாக
முடிந்துபோனது. அதே ஆண்டில் செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனியில் பெரு
நகரப்பண்பாட்டில் கீழ்நடுத்தர இளையோர்
வாழ்வியலைப் பதிவுசெய்வதில் புதிய அணுகுமுறைகளைக் கொணர்ந்தார்.
2006ல் வசந்தபாலனின் வெயில்,
எல்லாவற்றிலும் தோற்றவனை நாயகனாக்கி, தமிழகத்தின் சிறுநகர வாழ்வியலை
சினிமாவாக்கியதில் உலக சினிமாவின்
நேர்த்திக்கு அருகாமையில் தமிழ்சினிமாவை நகர்த்தியது.
மேற்கண்ட சினிமாக்களெல்லாம் பின் நவீனத்துவ அல்லது ஹைப்பர்லிங்க் சினிமாவின் சிற்சிலகூறுகளைக்
கொண்டிருந்தாலும் 21ம்நூற்றாண்டின் புதிய
சினிமாவாக எதுவும் பரிணமிக்கவில்லை.
2007ல் அமீர் தன் பருத்திவீரன் மூலமாக ஒரு
பெரும் பாய்ச்சலை நிகழ்த்தினார். ஒழுக்க மதிப்பீடுகளை முற்றிலும் துறந்த கடைநிலை மனிதன், தகிக்கும் நிலப்பரப்பு,
காட்சிமொழி என்று மிகப்புதிதான சினிமாவைச் சாத்தியமாக்கினார். அதே ஆண்டில்
ராம் இயக்கிய கற்றதுதமிழ் உலகமயச்சூழலில் விரிவடையும் முரண்கள் உருவாக்கும் மனச்சிக்கலை பேசியது. சுப்பிரமணியபுரம்
நகரங்களில் அப்பாவி இளைஞர்கள் பொறுக்கிகளாய் உறுமாற்றம்
பெறுவதை மிகநேர்த்தியான சினிமாவாக்கி
சசிகுமார் மேல் மிகப்பெரும்
எதிர்பார்ப்புகளை உருவாக்கியது.
உலகப்படங்களால் உந்துதல் பெற்றேன் என்ற வெளிப்படையான
அறிவிப்புடன் வெற்றிமாறன் இயக்கிய
ஆடுகளம் கடந்த பத்தாண்டுகளின் மைல்கல்லாகக் கருதத்தக்கது. குமாரராஜாவின்
ஆரண்யகாண்டம் வன்முறையின் குரூர அழகியலை
மிக்க் கச்சிதமான திரைமொழியில் பதிவுசெய்தது. தொடர்பற்ற மனிதர்கள் ஒரு விபத்தின் மூலம் இணைவதை குறுக்கு மறுக்காக கதையாக்கிய ‘எங்கேயும் எப்போதும்’ ஜனரஜ்சக அம்சங்களை முன்னிருத்தினாலும்
திரைக்கதையளவில் குறிப்பிடத்தக்கது.
நகரத்தின் உதிரி மனிதர்களை நடுத்தரவர்க்கமும் சமூகநிறுவனங்களும் கையாளும்
விதத்தை அசலாகச் சொல்ல முயற்சித்த பாலாஜி
சக்திவேலின் வழக்கு எண் 18/9ன் வெற்றி நம்பிக்கையளிக்கக் கூடியது.
இந்தப்பட்டியலில் வாகைசூட வா, மைனா ஆகிய
படங்களையும் சேர்த்துக் கொள்ளமுடியும்.
எப்படிக் கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் கடந்த பத்துஆண்டுகளில்
தமிழ்சினிமாவில் தடம் பதித்த படங்களாக பருத்திவீரன், காதல், வெயில், ஆடுகளம்,
சுப்பிரமணியபுரம், ஆரண்யகாண்டம் ஆகிய படங்களையே சொல்லமுடிகிறது. இதற்கிடையே கோலிவுட்டுக்கு வெளியே கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறுநகரங்களைச் சார்ந்த இளைஞ்ர்பலர் சினிமா தயாரிப்பில் ஆவேசமாக
ஈடுபட்டுவருகிறார்கள். புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை கையாளத்தொடங்கியுள்ளனர்.
ஐம்பது லட்சத்திலிருந்து ஒரு கோடிக்குள்
தயாரிக்கப்படும் இத்தகைய படங்களில்
சில லாபகரமாக ஓடியதாகவும் பேசப்படுகிறது. பிராந்திய விசயங்களை, அடையாளங்களை, கவலைகளை, பண்பாட்டுக்கூறுகளைக் கொண்ட இப்படங்கள், சென்னையை மையமாக் கொண்டு வெளிவரும்
படங்களைவிட வேறுபட்ட படைப்புலகை முன்வைக்க முயற்சிப்பவை. இவர்களில் சிலருடைய
கதைக்களங்களும் கதைமையமும் புதிதாக
இருந்தாலும் பலவீனமான ‘திரைக்கதை’ இவர்களைப் புறப்பட்ட இடத்திற்கே கொண்டுவந்து சேர்த்து விடுகிறது.
இந்த திரைக்கதை அமைப்புகள் வெறும்
உத்தியாக்க் புரிந்துகொள்ளக் கூடியவைகளல்ல. மாறாக இன்றைய
உலகமயச் சூழலில் எளிய
மனிதர்கள் பகடைக்காய்களாக உருட்டப்படுவதற்குப்பின்னால் முதல உலகநாடுகளும், பன்னாட்டு
நிறுவன்ங்களும் செயல்படுவதை புரிந்துகொள்ளும்போதோ 21ஆம் நூற்றாண்டிற்கான புதிய திரைக்கதைகளைக் கையாளமுடியும். தொழில்நுட்பம்
மலிவாகிவிட்ட்தால் நல்லசினிமா
சாத்தியமாகிவிடுமென எதிர்பார்ப்பது, காய்கறிகள் மலிவாக்க் கிடைப்பதால் ருசியான
உணவு கிடைக்குமென்று கருதுவதற்கு
ஒப்ப்பானது. தமிழ்சினிமாவின்
அவசரத்தேவை ஒரு புதிய திரைகதைதான்.
தமிழ்ச் சினிமாவின் கதவுகளை திறப்பதற்கு விதவிதமான சாவிகளோடு நாள்தோறும் நூற்றுக்கணக்கில் இளைஞ்ர்கள்
வந்தவண்ணம் இருக்கின்றனர். பணம்,
சிபாரிசு, விடாமுயற்சி என்ற விதவிதமான சாவிகளால் திறந்துபார்த்து சோர்ந்து
போனவர்களும், திறந்தபின்னும் உட்கார இடமின்றி தவிப்போரும் ஏராளம். எப்படியாவது சினிமாவில் சாதித்தே
தீருவேன்னென்று சபதமிட்டு நடனம் பயில்வதும், நடிப்புப்பயிற்சிக்குச் செல்வதும்,
குறும்படங்கள் எடுப்பதுமாய்
குழம்பித்திரியும் பதின்வயதினர் ஊருக்குப்
பத்துமுப்பதாகப் பெருகிக்கொண்டிருக்கின்றனர்.
வெறும் 50ரூபாய்க்குக்
கிடைக்கும் உலகின் தலைசிறந்த திரைக்கதைகளைக்கொண்ட சினிமாக்களை
பார்ப்பதன்/ படிப்பதன் மூலம் காரியாபட்டியிலிருந்தோ, களியக்காவிலையிலிருந்தோ உங்கள் வாழ்வனுபவங்களிலிருந்து தமிழ் சினிமாவைத் தலைகீழாக்கும் ஒரு
திரைக்கதையை நூறு பக்கங்களில்
எழுத முடியும். அது
தமிழ்ச்சினிமாவின் எல்லாக்கதவுகளையும்
திறக்கும் தங்கச் சாவியாகவும் இருக்கக்
கூடும்.