செவ்வாய், 9 ஜூலை, 2019

When They See Us...



நெட்ஃபிளிக்ஸ்க் வெளியிட்டுள்ள 4 பாகங்களுடைய குறுந்தொடர்தான் ‘When they see us’. மினி வெப் சீரிஸ். 5 மணி நேரத்திற்கும் மேல் நீள்கிறது. நியூயார்க்கில் 1989இல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட தொடர். நியூயார் நகரின் நட்ட நடுவில் இருக்கும் சென்ட்ரல் பார்க் 800 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட ஒரு பொதுப்பூங்கா. ஒரு நாள் இரவு 28 வயது இளம் பெண்ணொருத்தி ஜாகிங் சென்றவள் பலாத்காரம் செய்யப்பட்டு குற்றுயிராக மீட்கப்படுகிறாள். அந்த நேரத்தில் பூங்காவில் தென்பட்டதாக 5 கறுப்பின இளைஞர்கள், இளைஞர்கள் என்று சொல்ல முடியாத 13 லிருந்து 16 வயதுக்குள்ளான சிறுவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பரபரப்பான விசாரனைகளுக்குப்பின் சிறுவர்களிடமிருந்து குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வாக்குமூலங்கள் பெறப்படுகின்றன. நேரடி சாட்சியங்கள், டி.என்.. பொருத்தம் எதுவும் ஒத்துப் போகவில்லை என்பதைவிட அவர்கள் செய்திருப்பார்கள் என்பதற்கு அவர்களின் நிறத்தைவிட வேறென்ன சாட்சியம் வேண்டிக்கிடக்கிறது. 5 முதல் 13 ஆண்டுகள் தண்டணை வழங்கப்படுகிறது.


சிறைக் கொடுமைகள், சக கைதிகளின் வெறுப்பு, குடும்பத்தாரின் அலைகழிவுகள் எல்லாவற்றையும் தாண்டி ஒருவரைத்தவிர மற்ற நால்வரும் விடுதலை பெற்று வெளியே வந்துவிடுகின்றனர். இப்போது சென்றல் பார்க்கில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவன் நான் தான் என்று 2012இல் வெள்ளையன் ஒருவன் சரணடைகிறான். டி.என். . பொருத்தங்களுக்குப்பின் குற்றவாளி அவன்தான் என்பது ஊர்ஜிதமாகிறது. வழக்கு நடக்கும் காலத்தில் பொது சமூகத்தில் கருப்பினத்தவருக்கு எதிரான வெறுப்பு எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. இப்போதைய அதிபர் ட்றம்ப் அப்போது செய்தித்தாள்களில் சொந்தச் செலவில் 'மரணதண்டனையைத் திரும்பக் கொண்டுவரவேண்டும்' என்று விளம்பரம் செய்த விசயங்களும் படத்தில் வருகின்றன.



இப்படியொரு உணர்ச்சிகரமான திரைப்படத்தைப் பார்த்து நாளாகிறது. இதை இயக்கிய Ava DuVernay ஒரு கறுப்பின பெண்மணி. வெள்ளையினத்தவரின் மனசாட்சியை உலுக்கிய இந்தக் குறுந்தொடர் 190 நாடுகளில் வெளியிடப்பட்டு முதல்வாரத்திலேயே பெரும் கவனத்தைப் பெற்றிருக்கிறது. இப்படத்தின் செயல் தயாரிப்பாளர் ஓப்ரா வின்ஃபிரே, படத்தின் இயக்குநர், நடிகர்கள், தண்டனை பெற்ற வெவ்வேறு நகரங்களில் வசித்த அந்த ஐவர் ஆகியோரை உள்ளடக்கி நடத்திய ஒரு கலந்துரையாடலும் நெட்பிளிக்சில் வெளியாகியுள்ளது. தொடரைப் பார்த்த கையோடு அதையும் பார்த்துவிடுவது அவசியம்

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.