̀மாடசாமி என்றொரு மாணவர். காலை 8 மணி வகுப்பிலேயே அரைத்தூக்கத்தில் இருப்பார். சில சயங்களில் கோபமாகவும் சில சமயங்களில் கிண்டலாகவும் வினையாற்றி ஓய்ந்து விட்டேன். மிக அமைதியானவர். ஒருநாள் காலை 4 மணி. புலராத காலை. வெளியூர் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து செல்கையில் ஒரு திருப்பத்தில் ஒரு சைக்கிளில் மோதுவதிலிருந்து மயிரிழையில் தப்பி, நிதானித்து… பாத்து வரக்கூடாதா? என்று குரலை உயர்த்த யோசிக்கையில்… அட.. நம்ம மாணவர் மாடசாமி. தர்மசங்கடமாக விழித்தார். அவருடைய சைக்கிளின் காரியரில் பெரிய பால் கேன். விசாரித்தபோது சொன்னார். மூன்று ஆண்டுகளாக காலை 4 மணிக்கு எழுந்து பக்கத்து ஊரிலிருந்து பால்கேனை ஏற்றிக்கொண்டு 5 மணியிலிருந்து 7 மணிவரை வீடுகளுக்கு விநியோகித்துவிட்டு 7மணிக்கு வீட்டுக்குப் போய் அவசரமாகக் கிளம்பி 8மணிக்கு கல்லூரிக்கு வருவாரம். மாடசாமியின் வகுப்பறைத்தூக்கத்தின் நியாயம் தெரிந்தபோது சங்கடமாக இருந்தது. படிப்பில் வெகுசுமாராக இருந்தவர், மாலை நேரங்களில் மைதானத்தில் வெறும்காலில் ஓடிக்கொண்டிருப்பார். மூன்றாம் வருடம் வெறுங்காலிலேயே மாரத்தானில் முதலாவதாகவும் வந்தார். ஒரு நாள் ராணுவத்துக்கு தேர்வான நல்ல செய்தியோடு வந்தார். ஆனால் சேருவதில் பெரும் சிக்கலொன்று இருந்தது. காட்டுநாயக்கர் சமூகத்தைச் சார்ந்த அவருக்கு சாதிச் சான்றிதழ் வாங்குவது பெரும்பாடாக இருந்தது. எந்த பின்புலமும் இல்லாத அவர் பெரும்போராட்டத்துக்குப்பின் சான்றிதழ் பெற்று ராணுவவீரராக எல்லையோரங்களில் வாழ்ந்தார். காஷ்மீர், மேற்கு வங்கம் எங்கிருந்தாவது அகால நேரங்களில் எப்போதாவது பேசுவார். இதல்லாம் நடந்து 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. நேற்று என்முன் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படிக்கும் அவர் மகளும், +2 முடித்த அவர் மகனும் அதே அப்பாவி முகபாவத்தோடு நம் மாடசாமியும். அடுத்து என்ன படிக்கலாம்? என்பதற்கான அலோசனைக்காக. வானத்தில் பறப்பது அல்லது கடலில் மிதப்பது என்ற தீர்மானத்தில் பையன். 10 - 25 லட்சம்வரை கட்டணத்திற்குத் தூண்டில் போடும் படிப்புகள். எதற்கும் தயாராகவே இருந்தார் தந்தை. பையனிடம் பேசியதில ஒருவழியாக பி.எஸ்.சி., இயற்பியல் படிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். சொல்வதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பவராகத் தெரிந்தார். வெறும் காலில் ஓடிய மாடசாமியின் புதல்வர் பி.எஸ்.சி. முடித்துவிட்டு ஏரோநாட்டிக் படிக்கும் உத்தேசத்தில் இருக்கிறார். அதை விட பெரிதான கனவுகளையும் அவரால் காணமுடியும். மனதுக்கு நிறைவாக இருந்தது. இந்திய சமூகத்தில் கல்வி மட்டுமே இத்தகைய மந்திரத்தை நிகழ்த்த முடியும்.
20ஆண்டுகளுக்கு முன், வகுப்பறைகளில் மாடசாமியின் சமூக பொருளாதார நிலையில் இருந்த மாணவர்கள் ஓரிருவர் மட்டுமே. மாடசாமியின் வகுப்பறையில்தான் இயக்குநர் ராம் இருந்தார். சிங்கப்பூரில் ஆசிரியர்களாக இருந்து பட்டம் படிக்க வந்திருந்து பின்னாளில் சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தில் பெரும் பொறுப்புகளில் இருந்த தாஸும் செழியனும் இருந்தார்கள். இன்று அமெரிக்கன் கல்லூரியிலேயே பேராசிரியராய் பணியிலிருக்கும் மீனாட்சிசுந்தரம் இருந்தார். படிப்புக்குச் சம்மந்தம் இல்லாத பல்வேறு வேலைகளில் இருந்தாலும் ‘ படிக்கும்போது கிடைச்ச அனுபவங்கள், தொடர்புகள் என் வாழ்க்கைக்கு உதவுது’ என்று பலரும் சொல்லக் கேட்டிருட்டிருக்கிறேன். கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பொதுச்சமூகம் கவனித்ததாகத் தெரியவில்லை. ஆண்டுதோறும் +2 தேர்ச்சி சதவீதம் உயர்ந்து கொண்டே வருகிறது. அல்லது அரசுக்கு அப்படியொரு நிர்பந்தம் இருக்கிறது. இந்த ஆண்டு 91 %. உழைக்கும் வர்க்கத்தினர் கல்லூரிகளுக்குக் குழந்தைகளை அனுப்புவது கணிசமாக அதிகரித்திருக்கிறது. கலை அறிவியல் கல்லூரிகள் நிரம்பி வழிகின்றன. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் அதன் பொற்காலத்தில் இருக்கின்றன. வசூலில்தான். அரசு கல்லூரிகளில் 500 ரூபாய் கட்டணம் என்றால் தனியார் கல்லூரிகளில் 2500, 3000, 4000, 10000 என தங்கள் விருப்பம் போல் வசூலிக்கத் தொடங்கிவிட்டன. அது பெரிய விசயமல்ல. இன்று வகுப்பறைகளில் 90 % மாணவர்கள் முதல் தலைமுறை படிப்பாளிகள். வகுப்பறைகளில் 60 முதல் 80 மாணவர்கள். அதிக மாணவர்களுக்கு கல்வி கொடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட shift system கல்லூரி கலாச்சாரத்தையே குழி தோண்டிப் புதைத்துவிட்டது. வகுப்பறையில் கிடைக்கவேண்டியதும் கிடைக்காமல் வளாகத்தில் கிடைக்கவேண்டியதும் கிடைக்காமல் வெறும் பட்டத்தோடு லட்சக்கணக்கில் முதல்தலைமுறை அப்பாவிகள் வெளியேறியவண்ணமிருக்கின்றனர். அரசுக்கு மாதிரியே கல்லூரிகளுக்கும் தேர்ச்சி சதவீதத்தைக் அதிகரித்தாகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. நடுத்தரவர்க்க மாணவர்கள், குடும்பத்தினரின் கவனிப்பு ஆலோசனைகளில் அவர்களுக்கான வழிகளைக் கண்டடைந்து விடுகிறார்கள். மாட்டிக்கொண்டவர்கள் அடித்தட்டு மாணவர்கள். கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை, கட்டணம், அவர்களுக்கான வசதிகள், போதிக்கப்படும் கல்வி, அவர்கள் பெற்ற திறன்கள் பற்றி கேள்வி கேட்க (தரவரிசைப் பட்டியல் மட்டும் வெளிவரும்) முறைப்படுத்த எந்த வழி முறைகளும் இல்லை. மிகவும் அபாயகரமான நிலையில் இந்திய உயர்கல்வி இருப்பதைப் பற்றிய தீவிரமான உரையாடல்கள் இல்லை. இன்னும் 10ஆண்டுகளில் இந்தியா எதிர்கொள்ளப்போகும் அதிதீவிரப் பிரச்சனை படித்தவர்களின் வேலையின்மை. 70களின் நிலையைவிட பன்மடங்கு கூடுதலாக இருக்கப்போகிறது. பெருமளவிலான சீர்திருத்தம் தேவைப்படுகிறது. (நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரும் சீட் கேட்டு வருகிறார்கள். என்ன படிப்பது? எங்கு படிப்பது? என புரியாமல் சீட்டுகளுக்காக கல்லூரிகளின் வாசல்களில் மக்களா அலைமோதுகிறார்கள். பரிதாப உணர்ச்சியும் குற்ற உணர்ச்சியும் கலந்தவனாக இதை எழுதுகிறேன்)