தமிழகத்தின் நவீன நாடகங்களில் பெரும்பாலானவை பார்வையாளர்களைப் பலவகைகளிலும் சோதிப்பவை. கடந்த 35 வருடங்களாக நிலமை இதுதான். காரணத்தை யோசித்துப் பார்த்தால் நவீன நாடகங்களில் செயல்படுவோர் பெரும்பாலும் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அறிவு ஜீவிகள். இவர்களுடைய பிரச்சனையே உலக நாடகக் கோட்பாடுகளைக் கரைத்துக் குடித்திருப்பதுதான் என்று தோன்றும். கோட்பாடுகளுக்குள்ளும் கலை பற்றிய தெள்ளத்தெளிவான புரிதலுக்குள்ளும் சிக்கிக் கொண்டு பார்வையாளனைப் பரிதவிக்க விட்டு விடுவார்கள். டூ லெட் சினிமாவில் நேர்ந்திருப்பதும் அதுதான்.
உலக சினிமாக்களில் மிகுந்த பரிச்சயம் கொண்டசெழியனும் பார்வையாளர்களைப் பொருட்படுத்தாத சினிமாவைக் கொடுத்திருக்கிறார். 70களின் கலைப்படங்கள் என தரப்படுத்தப்பட்ட சினிமாக்களின் அச்சு அசலாக டூ லெட இருக்கிறது. அசையாத கேமரா கோணங்கள். அளந்து பேசும் பாத்திரங்கள். சுவாரஸ்யம் வந்துவிடக் கூடாது என்ற பிடிவாதம். குறைந்த வெளிச்சம். நாயகி படுத்துக்கொண்டு தன் மகனைப் பற்றிப் பேசுகிறார். அசையாத ஷாட். நான் அரங்கில் பார்வையாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஒரு சுற்றுப்பார்த்துவிட்டு திரைக்கு வந்தபோதும் நாயகி அசையாத ப்ரேமுக்குள் பேசிக்கொண்டிருந்தார். சினிமான்னாலே வீடு தர்றதிலை எனும் போது இன்னொருவர் ’50 வருஷமா சினிமாக்காரன் கையில நாட்டையே குடுத்துருக்காய்ங்க…’ என்று நிறுத்திவிடுகிறார். ‘வீடு குடுக்கமாட்டாங்களாமா?' என்று தொடரக்கூடாது என்ற பிடிவாதம் தெரிகிறது. தந்தையும் மகனும் தொலைக்காட்சியில் படம் பார்க்கிறார்கள். என்ன படம் என்று தெரிவதில்லை. பின்னனி ஒலியிலிருந்து அது’ரெட் பலூன்’ குறும்படம் என்று ஊகிக்கிறோம். அந்தப்படம் 1958 என்று நினைவு. அறிந்தவைகளினின்று விடுபட முடியாத சிக்கலுக்குள் படைப்பாளன் சிக்கிக் கொள்வது பெரும் சோகம்.
கோட்பாடுகளின் பரிச்சயமும் ஒரு துறை பற்றிய ஆழமான அறிவும் பேராசிரியர்களுக்கும் விமர்சகர்களுக்கும் பலமாக அமையலாம். படைப்பாளிகளுக்கு அது சுமை என்றே தோன்றுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் வேறு வகையான சினிமா மொழிக்குப் பழக்கப்பட்டுவிட்டவர்களை எப்படி முன்னோக்கித் தள்ள முடியும். மேலும் தமிழ் சினிமாவில் எளிமையும், அழகியலும், புத்திசாலித்தனமும் கொண்ட ‘காக்கா முட்டை, மேற்குத் தொடர்ச்சி மலை’ போன்ற சினிமாக்கள் சாத்தியமான பின் ‘டூ லெட்’ என்னவிதமான சினிமா அனுபவத்தைத் தர முயல்கிறது என்பது விளங்கவில்லை.
இந்தச் சினிமாவுக்கான கூடுதலான புகழுரைகள் செழியன் போன்ற தேடலும் தீவிரமும் கொண்ட படைப்பாளியைத் திசை திருப்பிவிடக்கூடும் என்பதாலேயே இதை எழுத வேண்டியிருக்கிறது.