காதலுக்காக கொலைகளும் தற்கொலைகளும் நடக்கும்
தமிழகத்திலிருந்து காதலை இரண்டு தனி நபர்களின் பிரச்சனையாகப் பார்க்கும் ஒரு படத்தை
வழங்கியிருப்பதற்காக மணிரத்னத்தை வாழ்த்தலாமா அல்லது கண்டிக்கலாமா என்று தெரியவில்லை.
உண்மையான அர்த்தத்தில் காதல் இரண்டு தனிநபர்கள் சம்மந்தப்பட்டதுதான். அப்படி இருந்துவிட்டால்
இந்தியாவில் பெரியார் விரும்பிய சமூகப்புரட்சி நடந்து சாதிகூட ஒழிந்து போயிருக்கும்.
ஆனால் பெற்றோரின் வியர்வையைக் குடித்து வளரும் இந்திய குழந்தைகள் தங்களின் வாழ்க்கையைப்
பற்றிய முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்கக் கூடியவர்களாகவா இருக்கிறார்கள்? அப்படித்
தன்னிச்சையாக முடிவெடுக்கத் திராணியுள்ள ஒரு சிறுபாண்மை இளைஞர்கூட்டம் இருப்பதை ஒத்துக்கொண்டால்
‘ஓ காதல் கண்மணி’ அவர்களைப் பற்றிய படம்.
மணிரத்னத்தின் படங்களில் தொடர்ந்து வரும்
சில விசயங்கள் இந்தப் படத்திலும் உண்டு.. அவரைப் பொறுத்த அளவில் இருவருக்கிடையில் காதல்
வருவதற்கு வேறு முகாந்திரங்கள் எதுவும் தேவையிருப்பதில்லை. கண்டவுடன் காதல்தான். அதிலும்
அவரின் நாயகர்கள் துடுக்கானவர்கள். நேரடியாக முகத்துக்கு நேராக நாயகியிடம் காதலைச்
சொல்லிவிடுபவர்கள். ஓடும் பேருந்துகளில் மெட்ரோ ரயில்களில் நாயகிகளைத் துரத்தித் துரத்திக்
காதலிப்பவர்கள். இப்படியான ஒரு காதலனாக இருக்கத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள்.
மூன்று ஆண்டுகளாக தன்னுடன் பயிலும் நாயகியிடம் காதலைச் சொல்லத் துப்பில்லாமல் தாடிவளர்த்து
ரத்த வாந்தி எடுத்த ராஜேந்தர் படங்களைப் பார்த்து வளர்ந்த தலைமுறைக்கு இத்தகைய காதல்கள்
எரிச்சலூட்டுவதற்கு மணி என்ன செய்வார்?.
இப்போதும் பெண்களோடு சகஜமாக பேசுவதற்கே கூட வாய்ப்பற்ற கிராம, சிறுநகரங்களிலிருந்து வந்த இளைஞர்களைத்
தாழ்வுமனப்பான்மைக்குள் தள்ளுபவர்களாக மணியின் நாயகர்கள் இருக்கிறார்கள். இன்றைக்கும்
தமிழகத்தின் 90% கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர்களும் மாணவிகளும்
பேசிக்கொள்ள முடியாத சூழல்தான். இத்தகைய வக்கிரமான சமூகத்தின் ஒரே ஆறுதல் செல்பேசிகள்தான். இந்திய சமூகத்தில்
‘நல்ல மற்றும் கள்ளக்’ காதல் புரட்சியைச் சாத்தியமாக்கிக் கொண்டிருப்பவை இவை. அதனால்
எப்போதும் மணியின் இந்த உணர்ச்சி மிகு காதலர்கள் எல்லோரையும் ஈர்ப்பவர்களாக இருக்கிறார்கள்.
மணிரத்னத்தின் காதலுக்கு வர்க்கம் தான் பிரச்சனையே
ஒழிய சாதி அல்ல. பொருளாதார ரீதியாக மேலிருப்பவர்களும் கீழிருப்பவர்களும் இணைவதில் இருக்கும்
சிக்கல்கள் மட்டுமே அவர் படங்களில் தலைதூக்கும். ஆனால் அந்த முரண்பாடுகளையும் ஆழமாகத்
தொட அவர் முயற்சி செய்யமாட்டார். ‘காதல் என்பது இரண்டு தனிநபர்களுடைய பிரச்சனை மட்டுமே’
என்பதான மேற்கத்திய பார்வையே அவருடையது. இரு மனங்களுக்கிடையிலான புரிதல், இணைவு என்பதே
காதலில் பிரதானம் என்பது கருத்தளவில் சரிதான் என்றாலும் இந்திய சமூகத்தின் நடைமுறைக்கு
அது பொருந்திப் போவதல்ல. சமூகத்தின் நடைமுறைகளைப்
பொருட்படுத்தாமல் லட்சியப் பாத்திரங்களைப் படைப்பதற்கு எப்போதும் ஒரு படைப்பாளிக்கு
உரிமை உண்டுதான்.
காதலை ஆரம்பிக்கும் போது சில மிகைப்படுத்தல்களைச்
சுவாரஸ்யம் கருதி செய்யலாம்தான். ஒரு திருமணம் நடந்து கொண்டிருக்கும் ஆலயத்திற்குள்
நாயகனும் நாயகியும் செல்போனில் விலாவாரியாகப் பேசிக்கொள்வதான காட்சியின் சாத்தியப்பாடுகளை
அலசி ஆராய வேண்டியதில்லை. ஆனால் ‘திருமணம் இல்லாமல் சேர்ந்துவாழ்தல்’ இந்திய சமூகத்தில்
இவ்வளவு எளிதாக இருக்கிறது என்பதான சித்தரிப்பை எப்படி எடுத்துக் கொள்வது. பைக்கில்
பறப்பது - காபி ஷாப்களில் பேசிக் சிரிப்பது - புணர்ந்து களிப்பது மட்டும்தானா சேர்ந்துவாழ்தல்? இறுதியில் அமெரிக்காவிற்கும்
பாரிசுக்கும் பிரிந்து போகாமல் அவர்களைச் சேர்த்தது காதல் என்று கொண்டால் கொஞ்ச நாட்கள் சேர்ந்துவாழலாம் என்று முடிவெடுக்கச் செய்தது எது?
இல்லை… காதல்தான் அவர்களை இணைத்தது. ‘சேர்ந்து
வாழ்ந்ததால்தான்’ காதலுக்காக சுயவிருப்பங்களைத் துறக்கச் சித்தமாகி அவர்கள் பிரிந்துவிடும்
முடிவைக் கைவிட்டார்கள் என்று கொண்டால்… அதற்காக ஏன் திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா?
அதற்குப்பின் அவர்கள் கனவுகள் என்னவாயின? காதலுக்காக யார் கனவை யார் புதைத்தது? சேர்ந்து
வாழ்ந்ததற்குப் பின்னான திருமணம் என்பது அவர்களை எவ்விதமான தம்பதிகளாய்/ இணைகளாய் மாற்றியது?
பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம், காதல் மணம் இவற்றிலிருந்து இது எவ்வகையில் வேறுபட்டது?
ஆகிய கேள்விகள் எழுவதை ஒரு பார்வையாளனாய் நம்மால் தவிர்க்க முடிவதில்லை?
இப்படிச்சிந்தித்து இப்படியாகத்தான் படமெடுக்க
வேண்டுமென்று ஒரு படைப்பாளிக்கு ஆலோசனை சொல்ல நீங்கள் யார்? கணிப்பொறியின் மௌசை உருட்டத்தெரிந்த
ஒரே காரணத்திற்காக எப்படி வேண்டுமானாலும் விமர்சிப்பதற்கான உரிமையை யார் தந்தது? என்று
சிலர் படைப்பாளிகளின் சார்பாகக் கேட்கக் கூடும். இந்த இடத்தில் படைப்பாளிகளின் பொறுப்புணச்சியைப்
பற்றிப் பேசவேண்டியுள்ளது. அதிலும் தேசிய விருதுகளை வாங்கிக் குவிக்கிற, இந்திய சினிமாவை
உலகிற்குப் பிரதிநிதித்துவப் படுத்துகிறவராக, ஊடகங்களால் கொண்டாடப்படுகிறவராக அறியப்படுகிற
ஒருவரை அளவிட கொஞ்சம் கூடுதலான கடுமைகாட்டுவதற்கான அவசியம் இருக்கவே செய்கிறது. தாலி
கட்டிக்கொண்டு பிரிந்து வாழும் மணியின் அபூர்வ ஆலோசனையை (அலைபாயுதே) இன்றும் ஆங்காங்கே
காதலர்கள் பின்பற்றுவதையும் அதன் முன் பின் விளைவுகளையும் செய்தித்தாள்களில் படித்துக்
கொண்டுதான் இருக்கிறோம்.
‘ என் காதலி உனக்கு மனைவியாகலாம் ஆனா உன்
மனைவி எனக்கு காதலியாக முடியாது ’ என்பது போன்ற வசனங்கள் உலவிய தமிழ் சினிமாவில் ஒரு
பாலியல் தொழிலாளியை நாயகியாக்கி அவளை சகல சம்பத்துக்களும் கொண்ட குடும்பத் தலைவியாக
உலவவிட்டவரும் மணிதான். அதை நாயகனில் போகிற போக்கில் செய்திருந்ததுதான் விசயம். இப்படி
யதார்த்தத்தில் கால் பதித்து எதிர்காலத்திற்கான புனைவுகளைச் செய்தவர்தான் மணிரத்னம்.
மதிப்பீடுகள் எதுவுமற்ற ‘நான் பணக்காரன் ஆகனும்’ என்று சொல்கிற ஒரு தலைமுறைக்கு ஒரு
60வயது கலைஞன் சொல்ல விரும்புவதென்ன? அவர்களுடைய ‘பணக்காரன் ஆகனும்’ என்கிற லட்சியத்தின்
மேல் இயக்குநரின் பார்வை என்ன?
உலகமயமாதலும் கார்பரேட் கலாச்சாரமும் இந்தியாவின்
மிகப்புத்திசாலியான இளைஞர்களை ‘பணக்காரணானால் போதும்’ லட்சியத்தை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கின்றன.
இந்தியப் பொற்றோரும் பிள்ளைகளுடைய விருப்பம் கனவு பற்றிய கவலையின்றி தங்கள் தியாகங்களை
டாலர்களாக செலாவணி பண்ணத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் வெகுமக்களை நோக்கி
யாரும் கேட்க முடியாக அறக் கேள்விகளை சினிமாக்கள் கேட்கமுடியும். சமகால மளையாளப் படங்கள்
பலவற்றிலும் நாம் பார்த்துப் பொறாமைப் படும் ஒரு அம்சம் அவை எழுப்புகிற ‘அறம்/ மதிப்பீடுகள்’
தொடர்பான கேள்விகள் தான். இன்டியன் ருப்பி, உஸ்தாத் ஓட்டல், இம்மானுவல் போன்ற படங்கள்
எல்லாமே வணிகத் தளத்தில் இயங்கினாலும் இறுதியில் இன்றைய செல்போன் தலைமுறைக்குச் சொல்வதற்கு
ஏதாவதொன்றை வைத்திருக்கின்றன.
மணிரத்னம் ‘கண்மணி’ பற்றிச் சொல்லும்போது
‘இது இந்த செல்போன் தலைமுறையைப் பற்றிய படம்’ என்று பொதுமைப்படுத்துகிறார். சமகால இளையோர்
பண்பாட்டைப் பிரதிபலிப்பது ஒரு படைப்பாளியின் உரிமை எனும்போது ஊடகங்களால் புதிய இளையோர்
பண்பாடுகள் உருப்பெறும் என்பதும் கவனம் பெறாத விசயங்கள் அழுத்தம் பெறும் என்பதையும்
நாம் பொருட்படுத்தித்தானே ஆகவேண்டும்.
ஒருவகையில் இந்திய சமூகம் திருமணம் என்ற
பெயரில் நடத்திக் கொண்டிருக்கும் விரயங்களுக்கும், அபத்தங்களுக்கும் மாற்றாகக்கூட
‘சேர்ந்துவாழ்தல்’ அமையக்கூடும். திருமணம் என்ற பந்தம் உருவாக்கும் சட்டரீதியான சிக்கல்களுக்குத்
தீர்வாகவும் உண்மையான மனத்தேவையினால் மட்டுமே நாம் சேர்ந்து வாழ்கிறோமா என்று திருமணத்திற்குள்
நுழைவதற்கு முந்தைய ‘சோதனை ஓட்டமாகவும்தான்’ மேற்கத்திய ‘சேர்ந்துவாழ்தல்’ இருக்கிறது.
60களிலிருந்து மேற்கத்திய நாடுகளில் புழக்கத்திலிருக்கும் ‘சேர்ந்துவாழ்தல்’ பற்றிய
எதிரும் புதிருமான கருத்துக்கள் இருந்தாலும் திருமணத்திற்குமுன் சேர்ந்துவாழ்தல் பெரும்பாண்மையோர்
பரிட்சித்துப் பார்க்கும் முறையாக மாறியுள்ளது. இந்தப்படத்தின் மையமாக மணிரத்னம் எடுத்தாள
முயன்றிருக்கும் ‘சேர்ந்துவாழ்தலை’ அவர் கையாண்டிருக்கும்விதம் மிகவும் மேம்போக்கானதாக
இருப்பதுதான் பிரச்சனை. ஏனெனில் அவர் தன் படத்திற்கான ‘புதுமையான, சுவாரஸ்யமான’ சரக்காக
மட்டுமே இதை எடுத்துக் கொண்டுள்ளார். புனைவுத்தன்மையுள்ள அவரின் காதல் போலவே ‘சேர்ந்துவாழ்தலும்’
ஒரு புனைவுத்தன்மையுள்ள கேளிக்கையாக மிஞ்சுகிறது. குடும்பங்களின் தாங்குதலும் கண்காணிப்பும்
இருந்தபோதும்கூட திருமணமாகி தம்பதிகளுக்குள்ளான அநுசரணை உருவாக சில ஆண்டுகள் தேவைப்படுகிறது.
பல நேரங்களில் இத்தகைய அநுசரணை உருவாகும் முன்பே குழந்தைகள் பிறந்து வாழ்நாள் முழுவதும்
அந்நியர்களாகவே கணவன் மனைவி வாழும் சூழலே அதிகம். அப்படியிருக்கும்போது சேர்ந்துவாழ்தலின்
பிரச்சனைகள் நுணுக்கமாகப் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால மணிரத்னம் தன்னுடைய பிரத்யேகமான
திரைக்கலையின் அழகியல் மேலுள்ள நம்பிக்கையில் பார்வையாளர்களைக் குழந்தைகளாய் பாவித்து
தன்சினிமாவை சீனிமிட்டாயாக மாற்றிக்கொண்டுள்ளார்.
திரைப்பட உருவாக்கத்தின் பெரும்பகுதி ஒரு
‘செய்நேர்த்தியாகவே’ (craft) இருக்கிறது. அதைச் சரியாக புரிந்து கொள்பவர்களால் தான்
சினிமாவைக் கலையாகப் பரிமளிக்கச் செய்ய முடியும். அந்தக் கட்டத்தை நாயகனிலேயே அவர்
எட்டிவிட்டார். பம்பாய், உயிரே, அலை பாயுதே, இராவணன் மற்றுமான படங்களில் செய்நேர்த்தியின்
உச்சத்தை அவர் தொட்டார். தமிழ் சினிமாவில் இப்படியொரு நேர்த்தி (இங்கு நேர்த்தி என்பது
ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டுச் சொல்வதாக அமைகிறது) சாத்தியமாகும் என யாரும் நினைத்துப்
பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த செய்நேர்த்தியையே அவர் சினிமாவாக
கருதத் தொடங்கிவிட்டார் போலும்.
காதல் கண்மணியின் காட்சிப் பின்புலங்களைப்
பார்த்தாலே இது புரியும். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஓடும் மெட்ரோ ரயில்களிலும்,
நகரப் பேருந்துகளிலும், நகரச் சாலைகளில் இருசக்கர வாகனத்திலும், நெரிசல் மிகுந்த தெருக்களிலும்,
கொட்டும் மழையிலும் படமாக்கப்பட்டுள்ளன. மணியால் மட்டுமே இந்த மாதிரியான எளிமையான படத்திற்கு
இத்தகைய காட்சிப் பின்புலங்களைப் படமாக்க முடியும். கலை இயக்கத்தையும் ஒளிப்பதிவையும்
இசையையும் ஒளியமைப்பையும் அற்புதமாகக் கையாண்டிருப்பதை மறுக்க முடியாது. ஆயிரம் இருந்தும்
வசதிகள் இருந்தும்… ஓ மை காட்! என்றுதான் அங்கலாய்க்க வேண்டியிருக்கிறது.
பம்பாய் படத்தில் உயிரே.. என்றொரு பாடல்.
தமிழ் சினிமாவில் எல்லா வகையிலும் அற்புதமாக அமைந்த பாடல்களில் ஒன்று. காதலுக்காக எல்லாவற்றையும்
துறந்து நாயகி வருவாளா என்று மனப்போராட்டத்தில் இருக்கும் நாயகன்… அவன் மனநிலையை காட்சிப்படுத்தும்
விதத்தில் கீழே கொந்தளித்து பாறைகளில் அடித்துப்புரளும் அலைகள், சாதி மத துருப்பிடித்த
சமூகத்தை பிரதிபலிக்கும் இந்தக் காலத்துக்கு உதவாத பாசி படர்ந்த கோட்டை, கோட்டையின்
இரும்பு கதவுக் கிராதியில் சிக்கிக் கொள்ளும் நாயகியின் பர்தா… அதை இழுத்துப்பார்த்து…
அப்படியே பர்தாவை விட்டு விட்டு நாயகி ஓடுகிறாள்… பர்தா கிழிந்து காற்றில் படபடக்கிறது…..
மதம் குடும்பம் உறவுகள் எல்லாவற்றையும் நாயகி துறக்கத் துணிகிறாள்…. இத்தனை குறியீடுகளால்
நிரம்பிய பாடல் ஒன்றைத் தமிழ்ச்சினிமாவில் தேடித்தான் பார்க்கவேண்டும். இந்தக் குறியீடுகளை
வாசிக்காமலே கூட இந்தப்பாடலை ரசிக்க முடியும் என்பதுதான் கூடுதலான சிறப்பு… இப்படிக்
காட்சி மொழியின் அற்புதங்கள் கைவரப்பெற்ற ஒரு இயக்குநர் இப்படி நீர்த்துப்போவதை எப்படிப்
புரிந்துகொள்வது? வயதும் அனுபவமும் காத்திரமான சினிமாக்களைக் கொடுப்பதே உலகம் முழுவதும்
காணக்கிடக்கிறது. தமிழ்சினிமா அதிலும் விதிவிலக்கானதுதான் போலும்? படம் முடியும் போது
நமக்கு எழும் கேள்வி… ‘நான் பணக்காரனாகணும்..’ என்பது படத்தில் நாயகனின் குரலா? இல்லை
மணிரத்னத்தின் குரலா? என்பதுதான்.
பின்குறிப்பு;
அழகிய சிறுகதையாய் மிஞ்சும் கணபதி – பவானி காட்சிகளும் ரஹ்மானின் இசையும் நித்யாமேனனின்
தெவிட்டாத அண்மைக்காட்சிகளும், பி.சி.யின் வெயிலும் நிழலும் மழையும் ஈரமும் முகத்தில்
தெறிக்கும் ஒளிப்பதிவும் நம் ஏமாற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன.