ஸாஜன்
மனைவியை இழந்து பணி ஓய்வு பெறும் வயதிலிருக்கும் ஒரு அக்கவுன்ட்டன்ட். ஒரு ஹோட்டலில்
இருந்து மதிய உணவு பெறுபவர். அதிகம் பேசாத தனிமை விரும்பி. இலா முப்பதுகளில் இருக்கும்
இளம் மனைவி. கணவனின் உதாசீனமான போக்கால் அவன் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் இருக்கும்
ஹவுஸ் ஓஃப். ஆன்ட்டி, இலா அடிக்கடி விளிக்கும் பெண்மணி படுக்கையில் காலத்தைக் கழிக்கும்
தன் கணவனைப் பராமரித்தவாறு மேல்மாடியில் வசிப்பவர். இலாவோடு பேசிக்கொள்ளும் துணை. படத்தில்
அவர் குரல் மட்டுமே.
ஒருநாள்
ஆன்ட்டியிடம் கேட்டு கணவனுக்காக மெனக்கட்டு மதிய உணவு தயார் செய்து அனுப்புகிறாள்.
ஹோட்டலில் இருந்து சாஜனுக்குக் கெல்லவேண்டிய உணவும் இலாவின் கணவனுடைய உணவு டப்பாக்களும்
மாறிவிடுகின்றன. வழக்கத்திற்கு மாறாக காலியான டிபன் பாக்ஸைப் பார்க்கும் இலாவுக்கு
திருப்தி. ஆனால் மாலை வீடு வந்த கணவனிடம் எந்த வேறுபாடும் இல்லை. அவனாகச் சொல்வானென்று
எதிர்பார்க்கிறாள். உணவு எப்படி இருந்தது என்று கேட்கிறாள். காலிஃப்ளவர் நன்றாக இருந்தது
என்கிறான். அப்படியென்றால் உணவை அவன் சாப்பிடவில்லை என்று தெரிந்து கொள்கிறாள். அடுத்தநாள்
டிபன் பாக்ஸில் சிறு துண்டுச்சீட்டில் உப்பு கொஞ்சம் அதிகம் என்ற குறிப்பு இருக்கிறது.
இலாவும் எழுத ஆரம்பிக்கிறாள். எல்லாம் சிறிய எளிமையான விசயங்களடங்கிய கடிதங்கள். தன்
கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பதை அறிந்து கொள்கிறாள். அதையும் எழுதுகிறாள்.
அவர்களுடைய
நட்பு நெருக்கமாகிறது. சேர்ந்து வாழ்வது பற்றிய யோசனைகளும் சேர்ந்து கொள்கிறது. தனக்குக்
கணவனைப் பிரிந்துவிடும் உத்தேசம் இருப்பதையும், இந்தியாவைவிட பூட்டானில் குறைந்த பணத்தில்
வாழ்ந்துவிட முடியும் என்பதால் அங்கெ போய்விடும் திட்டமிருப்பதையும் சாஜனையும் அவளோடு
வந்துவிடுமாறும் அழக்கிறாள். நேரில் சந்தித்துப் பேசுவது என்ற யோசனையின் பேரில் நகரின்
பிரபலமான உணவகத்தில் பிற்பகல் சந்திப்பதாக முடிவு செய்கிறார்கள். இலா வெகுநேரம் காத்திருக்கிறாள்.
சாஜன் வராமல் போகவே மனவருத்தத்தோடு வீட்டுக்குப் போகிறாள். மறுநாள் சாஜன் ஆவலோடு லன்ச்
பாக்ஸைத் திறக்கிறான். உள்ளே எதுவும் இருப்பதில்லை. ‘நேற்று நானும் ஹோட்டலுக்கு வந்திருந்தேன்.
தூரத்தில் அமர்ந்து உன்னைப் பார்த்தேன். இவ்வளவு இளமையும் அழகும் கொண்ட உன்னோடு இந்த
வயதில் எப்படி? என்பதாக கடிதம் இருக்கிறது.
இலா இதை இத்தோடு நிறுத்திக் கொள்வது என்று முடிவெடுக்கிறாள். டப்பாவாலவிடம்
‘என் கணவனுக்கு அனுப்பும் பாக்ஸ் மாறிவிட்டது’ என்று புகார் செய்கிறாள். டப்பாவாலா
தீர்மானமான மறுக்கிறான். ‘மேடம் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. ஹார்வர்டு யுனிவர்சிட்டிலருந்தே
எங்கள ஆய்வு செஞ்சிருக்காங்க..’ என்கிறாள்.
இதற்கிடையே
புற்றுநோயில் படுத்துக்கிடந்த இலாவின் தந்தை
மரணமடைகிறார். அவரைப் பராமரிப்பதில் பெரும்காலத்தைக் கழித்த இலாவின் தாய், தந்தையின்
உடலருகே அவர் மேலான அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்.
பெரும் விடுதலையான பாவனையுடன் பிணத்தின் அருகிலிருந்து கொண்டே ‘இலா எனக்குப் பசிக்கிறது’
என்கிறார். சடங்குகளை முடித்து சிலநாள் இடைவெளியில் டப்பா வாலாவின் துணையுடன் இலா சாஜனின்
அலுவலகத்தைக் கண்டுபிடிக்கிறாள். பணிஓய்வு பெற்று சாஜன் நாசிக் சென்றுவிட்டதாகத் தெரியவருகிறது.
ஏமாற்றத்தோடு திரும்புகிறாள்.
நாசிக்
சென்ற சாஜன் என்ன காரணத்தாலோ மும்பை திரும்புகிறார். டப்பாவாலாக்களின் உதவியோடு இலாவைத்
தேட ஆரம்பிப்பதோடு படம் முடிகிறது.
சாஜனிடம்
பயிற்சிக்காக வரும் இளைஞன் பாத்திரம் ஒரு இடைச்செறுகல் என்றாலும் ரசிக்கத்தக்க பாத்திரம்.
சாஜனிடம் பயிற்சிக்கு வந்ததாகத் தெரிவித்த கனத்திலிருந்து சாஜனின் உதாசீனத்தை தொடர்ந்து
சந்தித்தும் மனந்தளராதவன். கொஞ்சம் முட்டாள்தனம் கொஞ்சம் எளிமை, கொஞ்சம் முன்னேறத்
துடிக்கும் நடைமுறை சாமர்த்தியம் கொண்டவன். தன்னை அநாதை என்று கூறிக்கொண்டு படிப்படியாக
சாஜனின் நட்பை பெறுபவன். ‘சில நேரங்களில் தவறான ரயில் நம்மை சரியான இடத்துக்குக் கொண்டுபோய்
சேர்க்கக் கூடும்’ என்று எங்க அம்மா சொல்வாங்கசார் என்பான். நீ அம்மா இல்லன்னு சொன்னியே...
அம்மா சொன்னதா சொன்னா அதுக்கு ஒரு முக்கியத்துவம் கிடைக்குமில்லியா சார்’ என்பான்.
ஒரு வகையில் அவன் சொல்லும் வாசகம்தான் படத்தின் ஊடிழை என்பதாகத் தோன்றும்.
இந்தப்படத்தில் சாஜன், இலா அவள் கணவன் அவர்களின்
குழந்தையான சிறுமி, இலாவின் தாயார் படுக்கையில் அப்பா. இலாவின் மேல்வீட்டு ஆன்ட்டி
அவள் கணவன், சாஜனிடம் பயிற்சி பெறவரும் இளைஞன் அவன் மனைவி. இதில் மேல்வீட்டு ஆன்டியின்
குரல் மட்டுமே நாம் கேட்பது. இலாவின் கணவன் இரண்டு மூன்று காட்சிகளில் பேசும் ஒற்றைவரி
வசனங்கள். இலாவின் அப்பா காட்சியில் இல்லை. அம்மாவும் இரண்டுகாட்சிகளில் இரண்டொரு வசனங்கள்.
ஆனால் எல்லாப்பாத்திரங்களும் உயிரோடு நம்மோடு உலாவும் விதமான கவனமான திரைக்கதை உரையாடல்கள்.
கொந்தளிப்பில்லாத அடங்கிய நடிப்பு. இப்ஃரான்கானும் (Irrfan Khan) இலாவாகத்தோன்றும்
நிர்மத் கவுரும் (Nimrat Kaur) உள்ளார்ந்த
நடிப்பால் திரைவெளியை இல்லாமல் ஆக்குகிறார்கள்.
சமகால
உலகசினிமா பாணிகளின் பாதிப்பற்ற 80களின் யதார்த்த சினிமா வகையினதாக இந்தப்படம் இருக்கிறது.
ஒரு வகையில் இந்தியாவின் இரண்டுதலைமுறைப் பெண்களும் குடும்ப வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டவர்களாக,
காலம் கடத்தும், எல்லாம் புரிந்தும் மகிழ்ச்சியாகவோ மனத்துயருடனோ அவற்றோடு வாழப்பழகிக்,கொண்டவர்களாக
இருப்பது படத்தின் உபரிப் பிரதியாக விரிகிறது.
இப்படத்தின்
வணிக ரீதியான வெற்றியும், இதுபோன்ற ஒரு படத்தை முழுக்க முழுக்க வணிகரீதியிலான தயாரிப்பாகச்
செய்துவிடுவதற்கான சாத்தியங்களும் இருப்பதே என்னைப் பொறுத்தவரையில் முக்கியமானதாகத்
தோன்றுகிறது. அதுவே இப்படத்தைப் பற்றி எழுதுவதற்கான இரண்டாவது தூண்டுதலாக அமைந்தது.
70,80களில்
இதுபோன்ற அல்லது இதைவிட அருமையான படங்களும் கூட திரைப்படச் சங்கங்களில் திரையிடப்பட்டு
வருத்தப்பட்டு பாரம் சுமக்கிற தாடிக்காரர்களின் குடிவிருந்தில் பாடுபொருளாக முடிந்துபோகிற
காலம் மலையேறிவிட்டதற்கு யாருக்கு நன்றி சொல்வதென்று தெரியவில்லை. கூட்டிக்கழித்துப்
பார்த்தால் உலகமயமாதலுக்குத்தான் சொல்லியாக வேண்டும்.
ரித்தேஷ்
பாத்ரா (Ritesh Batra) ஒரு குறும்பட இயக்குநர். ஒரு
ஆவணப்படம் எடுக்கும் உத்தேசத்தோடு 2007இல்
டப்பா வாலக்களோடு கழித்த ஒருவாரத்தில்
டப்பாவாலக்களின் செயல்பாடுகளில் ஒரு திரைப்படத்திற்கான கச்சாப் பொருள் இருப்பதை
யூகிக்கிறார். அவர் டப்பாவாலாக்களின் வாழ்க்கையை விடுத்து அவர்கள் விநியோகிக்கச் சுமந்து செல்லும்
டப்பாக்களுக்குள் ஒளிந்திருக்கச் சாத்தியமுள்ள கதைகளை யோசித்துப் பார்க்கிறார்.
__________________________________________________________________________________
1890இன் பிரிட்டிஷ் இந்தியாவில் வெள்ளைக்கார
அதிகாரிகள் வீட்டுச்சாப்பாடு சாப்பிட செய்யப்பட்ட ஏற்பாடு சுதந்திர இந்தியாவில் ‘டப்பா
வாலாக்கள்’ எனப்படும் மிகப்பெரிய தொழிலாக மாறியது. 1956இல் டிரஸ்டாகப் பதிவுசெய்யப்பட்டு
6000 ஊழியர்கள் 2 லட்சம் மதிய உணவு டப்பாக்களை விநியோகிக்கிறார்கள். 16மில்லியனுக்கு
ஒரு தவறு என்ற அளவில் தலைசிறந்த நெட்வொர்க்கிங் முறைக்காக ஹார்வர்ட் பல்கலைக்கழம்,
பெர்க்கிலி, மற்றும் பிரபல இந்திய மேலான்மைக் கல்லூரிகளின் கல்விப்புலத்திற்குள் இணைக்கப்பட்டுள்ளார்கள்.
இங்கிலாந்து இளவரசர் டப்பாவாலாக்களைப் சந்திக்க விரும்பியதாகவும், விநியோகமில்லாத நேரத்தில்தான்
சந்திக்கமுடியும் என்று இளவரசருக்கு இவர்கள் நேரம் குறித்துத் தந்ததாகவும் சொல்கிறார்கள்.
இவர்களைப்பற்றி பிபிசி உள்ளிட்ட பலரும் ஆவணப்படங்கள் எடுத்துள்ளனர்.
__________________________________________________________________________________
2011 இல் ‘லஞ்ச் பாக்ஸ்’ எனும் திரைக்கதைப் பிரதியுடன் ராட்டர்டாம் உலகத் திரைப்பட விழாவை (Rotterdam International Film Festival) ஒட்டி ஏற்பாடு செய்யப்படும் ‘சினிமார்ட்டுக்குச்’ (Cinemart) செல்கிறார். நெதர்லாந்தின் இரண்டாவது பெரிய நகரமான ராட்டர்டாமில் திரைப்படவிழாவோடு இணைந்து நடக்கும் ‘சினிமார்ட்’ என்பது, புதிய திரைக்கதைகளைப் படமாக்குவது.. சந்தைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளைப் பெறுவதற்கான இடம். ஒருவழியாக ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் NFDC ஆகியவை இணைந்து 16மில்லியன் செலவில் (ஒரு கோடியே அறுபது லட்சம்) தயாரிக்கத் திட்டமிடப்படுகிறது..
ஆறுமாதங்கள்
நடிகர்களுக்கான ஒத்திகை முடிந்து 2012இல் 100 கோடியில் படத்தை எடுத்து
முடித்துவிட்டதாகத் தெரிகிறது. 2013 மே 19 இல் கேன்ஸ் திரைப்படவிழாவில் அமோகமான
வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து சோனி
கிளாசிக் நிறுவனம் தென் அமெரிக்க விநியோக உரிமையைப் பெற்றது. இந்தியாவில் 400 திரையரங்குகளில்
வெளியிடப்பட்டு அந்த வார இறுதியில் 71 இலட்சத்தையும் முதல்வாரத்தில் போட்ட
முதலுக்கும் மேலாக 110 இலட்சங்களையும் வசூல் செய்ததாம். அப்புறமென்ன ஏறுமுகம்தான்
இதுவரை உலக அளவில் 84 கோடிக்கும் மேலாக வாரிக்கொட்டியிருப்பதாக தெரிகிறது. ஒரு
கோடிதயாரிப்புச் செலவு என்பது தமிழ்ச்சினிமாவிலேயே குறைந்த பட்ஜெட் படம்தான்.
அத்தகைய ஒரு படம் அமெரிக்காவில் 2014 இல் அதிகம் வசூலித்த வெளிநாட்டுப் படமாக
மாறியிருக்கிறது. வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கான நகாசு வேலைகளும் முஸ்தீபுகளும்
கூட இந்தப்படத்தில் இல்லை என்றே சொல்லவேண்டும். இதைவிடவும் சிறந்த படங்கள்
இருக்கவே செய்கின்றன. ஆனாலும் விசயம் இதுதான். ஒரு சிறந்த திரைக்கதை எவ்வித
சமரசங்களும் இல்லாமல் கூட வெற்றியடையமுடியும். நீங்கள் அதைச்
சந்தைப்படுத்துவதற்கான சூட்சுமங்கள் தெரிந்தவராக இருந்தால்...