பொதுவாக
இந்தியாவில் வரவேற்பறை அல்லது நடுக்கூடும் என்பது எப்போதும் ஆண்களுக்கான இடமாகவே வரையறுக்கப்
பட்டுள்ளது. அங்கு பெண்கள் கைகால்களை நீட்டி அக்கடாவென்று உட்கார்ந்துவிட முடியாது.
அவர்களின் வெளி என்பது சமயலறை. அம்பை சொன்னதுமாதிரி ‘வீட்டின் மூலையில் ஒரு சமயலறை’.
சத்யஜித்ரேயின் ஒருபடத்தில் ஒரு ஜமீந்தார் குடும்பத்தில் ஆண்கள் மட்டுமே புழங்கும்
வெளிக்குள் அந்தக்குடும்பத்துப் பெண் நுழைகிறாள். அந்தக்காட்சியை ஸ்லோ மோஷனில் படமாக்கியிருப்பார்.
வீட்டின் உள்ளிருந்து நடுக்கூடத்துக்கு வருவதை நீண்ட நேரம் நடந்து வருவதாகப் படமாக்கியிருப்பார்.
அக்காட்சியை ‘ ஒரு இந்தியப் பெண் தன் சொந்தவீட்டின் நடுக்கூடத்துக்கு வந்துசேர இத்தனை
நூற்றாண்டுகள் ஆகிவிட்டன என்பதையே அந்த மெதுநகர்வுக்காட்சி குறிப்பிடுகிறது என்றார்கள்
விமர்சகர்கள். 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியப் பெண்கள் நடக்கூடத்தைத் தாண்டி
வெகுதூரம் வந்துவிட்டார்கள் (மெதுநடையாகத்தான் (ஸ்லோ மோஷனில்)). என்பதைக் காட்டும்
சமகால சினிமாக்களில் முக்கியமானது இப்படம்.
தில்லியில்
வசிக்கும் ராணி 20களில் திருமணக்கனவோடு
உலாவரும் பாரம்பரிய பஞ்சாபிக் குடும்பத்தைச் சார்ந்த சராசரிப்பெண். ரோட்டோரக்கடையில்
தோழியுடன் நின்று கொண்டிருக்கும்போது விஜய்
அவள் மேல் காதல் கொள்கிறான்.
வழக்கமான பாணியில் அவளை கவர பல்வேறு
அமெச்சூர் முயற்சிகளில் இறங்குகிறான். தொடர்ந்து தன் மேல் பைத்தியமாக
இருப்பவனை நிராகரிக்கக் காரணமின்றி காதலை ஏற்றுக்கொள்கிறாள். படிப்பு
முடிந்து பெரியவேலையில்
சேர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் நடந்து
திருமணம் நடக்க இரண்டுநாட்களே இருக்கிறது.
இந்தியச் சராசரி பெண்களின் பிறவிப்
பயனான திருமணம்... அதுவும் தன்னைத் துரத்திக்
காதலித்தவனுடன்... உறவினர்களும் தோழிகளும் சூழ இனிப்பும் பாட்டும்
மகிழ்ச்சியும் உபரியாய் வழிந்தோட, கனவுகளில் மிதந்தபடி இருக்கிறாள் ராணி. இன்னும் இரண்டு
நாள். இரண்டே நாள். பக்கத்தில்
இருக்கும் காபி ஷாப்பிற்கு அழைக்கும்
விஜய்யைப் பார்க்க விரைகிறாள் ராணி.
தன்னுடைய தகுதி மற்றும் வாழ்க்கை
முறைக்கு பொருத்தமானவளாய் ராணி இல்லை என்பதால்
இந்தத் திருமணத்தை நிறுத்திவிடப் போவதாய் அவன் ராணியிடம்
சொல்கிறான். ராணிக்குக் காரணம் புரியாமல் அவனுக்காக
என்னவிதமாகவும் தன்னை மாற்றிக்கொள்ளத் தான்
தயாராக இருப்பதாகக் கெஞ்சுகிறாள். நிர்த்தாட்சன்யமாய் மறுத்துவிடுகிறான். காபி ஷாப்பில் இருப்பவர்களைக்
கூடப் பொருட்படுத்தாமல் அழத்தொடங்குகிறாள். வீட்டுக்குள்
நுழைந்து கதவை அடைத்துக் கொள்கிறாள். பெற்றோரும் உற்றோரும் பதறுகிறார்கள்.
அவளுக்கு
ஒரு மாறுதல் வேண்டியிருப்பதுபோல் தோன்றுகிறது. திருமணம் முடிந்து தேனிலவுக்காக பாரீஸ்
மற்றும் ஆம்ஸ்டர்டாம் செல்வதற்காக பதிவுசெய்த பயண ஏற்பாடுகள் நினைவுக்குவர, பாரீஸ்
செல்ல முடிவுசெய்கிறாள். பெற்றோரிடம் நான ஹனிமூன் செல்கிறேன் என்கிறாள் அப்பாவியாக.
சூழலின் கனத்தைக் குறைக்க அரைமனதுடன் சம்மதிக்கின்றனர். தனியாக ஹனிமூன் செல்கிறாள்
ராணி. முன்பின் அறிமுகமற்ற பாரிசில், அடிபட்ட இதயத்துடன், முற்றிலும் புதிய கலாச்சாரச்
சூழலில் சிலநாட்கள் சுற்றித்திரியும் ராணி திருமணத்திற்கு அப்பாலான ஒருவாழ்வின் சாத்தியங்களையும்,
அர்த்தப்பூர்வமான உறவுகள் எப்போதும் நம்மைச் சுற்றிலும் கண்டுகொள்ளப்படாமல் சிதறிக்
கிடப்பதையும் கண்டுகொள்கிறாள். இந்தியச் சமூகம் கற்பித்துவைத்திருக்கும் மரபான ஒழுக்கம்பற்றிய
சிலந்திவலைகளைப் பிய்த்து எறிந்து தன் சுயத்தைக் கண்டுகொண்டவளாய் மீள்கிறாள்.
சினிமாத்தனமில்லாத
திரைக்கதையும் பாத்திரங்களும் மிகவும் இயல்பான உணர்ச்சிகரமான அனுபவத்தைச் சாத்தியமாக்குகின்றன.
ராணி
பாரீசில் இறங்கியவுடன் ஒரு ஹோட்டலில் தங்குகிறாள். அங்கு பக்கத்து அறையில் ஏடாகூடமான
சப்தங்கள் கேட்கின்றன. ஒரு கவர்ச்சியான இளம்பெண் உள்ளாடைகளுடன் பால்கனிக்கு, பொதுவாக
ஆடவர்களை வைதபடியே வருகிறாள். ராணியைப் பார்த்து... என்ன இலவச ஷோ.. எப்படி? என்கிறாள்.
ராணி முதல் கலாச்சார அதிர்ச்சியான விஜயலட்சுமியைச் சந்திக்கிறாள். பாரிசில் எப்படி
விஜயலட்சுமி? என் அம்மா ஸ்பானிய பிரஞ்சுக்காரி. கோவாவுக்கு வந்த இடத்தில் இந்தியரான
என் தந்தையைத் தற்சமயமாகச் சந்தித்தாராம். அங்கு இருவருக்கும் பூம் பூம் ஆகிவிட்டது. அதுதான் நான் என்று சிரிக்கிறாள்.
அவளுக்கு ஒரு மகன் இருப்பதும் கணவன் என்று யாரும் இல்லாததும் எப்போதும் பைக்குள் ஆணுறைகளை
வைத்திருப்பதும், வேலை – ஒயின் – கொண்டாட்டம் – மகன் என்று அப்பழுக்கற்ற சந்தோசமான
ஒரு வாழ்க்கை வாழ்வதையும் பார்க்கிறாள். விஜயலட்சுமியுடன் பாரீசை வலம் வருகிறாள்.
அங்கிருந்து
ஆம்ஸ்டர்டாம் செல்கிறாள். ஒரு ஹோட்டலில் இவளுக்கென்று கொடுக்கப்பட்ட அறையின் கதவைத்
திறந்தவேகத்தில் அலறியவாறு வரவேற்பறைக்கு வருகிறாள். அறையின் உள்ளே இரண்டு ஆண்கள் கட்டிப்பிடித்து
விளையாடிக்கொண்டிருப்பதைக் பார்த்த அதிர்ச்சியில் நிற்கிறாள். ‘இது ஹோட்டல் அல்ல. ஹாஸ்டல்.
இங்கே அறையைப் பகிர்ந்துகொள்ளத்தான் வேண்டும். தனி அறைக்கு வாய்ப்பில்லை என்கிறான்
வரவேற்பாளன். இரவென்பதால் வேறுவழியில்லாமல் அறைக்குச் செல்கிறாள். அங்கே ஒரு ஜப்பானியனும்
ரஷ்யனும் ஒரு கறுப்பின இளைஞனுமாக மூவருடன் தங்கவேண்டியதாகிறது. அறையைவிட்டு வெளியே
வந்து படுக்கிறாள் முதல்நாள். அவர்கள் இந்தியாவில் தனியாக மாட்டிக்கொள்ளும் பெண்ணைக்
கையாள முயலும் இந்திய ஆண்கள் மாதிரியானவர்கள் இல்லை என்பது புரியத் தொடங்குகிறது. அவர்கள்
அவளைப் பெண் என்பதாகவே பொருட்படுத்தாமலிருப்பதும் ஓரிருநாட்களிலேயே அவர்களைக் கல்மிசமில்லாமல்
தொட்டு விளையாட முடிவதும் இயல்பாக நிகழ்வதை உணர்கிறாள். மூவரும் சேர்ந்து நகரைச் சுற்றுகிறார்கள்.
ஒரு செக்ஸ் ஷாப்பிற்குள் நுழைந்து வேடிக்கை பார்க்கிறார்கள். அது என்ன மாதிரியான பொருட்கள்விற்கும்
கடை என்பதைக் கூட புரிந்துகொள்ள முடியாதவளாய்... ஒரு வைப்ரேட்டரை கையில் வைத்துக் கொண்டு,
என் அப்பாவுக்கு முதுகுவலி இந்த மசாஜ் சாதனத்தை அவருக்காக வாங்கப் போகிறேன் என்கிறாள்.
மூவரும் அவளுக்குத் தெரியாமல் விழுந்துவிழுந்து சிரிக்கிறார்கள். கருப்பன் கிதார் வாசிக்கிறான்.
ரஷ்யன் எப்போதும் படம் வரைகிறான். நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்கிறாள். ‘உன்னை
யார் தடுத்தது?’ என்ற ரஷ்ய இளைஞனின் கேள்விக்கு அவளிடம் பதிலில்லை.
ஒரு
நாள் பசியுடன் உணவுவிடுதி தேடி அலைகிறாள்.
இவள் தடுமாற்றத்தைப் பார்த்து ஒருவன் ‘அழகிய பெண்ணே! (ப்ரட்டி லேடி) என்ன தேடுகிறாய்
என்று கேட்கிறான். சாப்பிட வேண்டும் என்கிறாள். எதிரிலிருக்கும் உணவகத்தைக் காட்டி..
நான் அங்குதான் சாப்பிடுவேன். பிரமாதமாக இருக்கும் என்கிறான். ராணி உணவு மேசையில் உட்கார்ந்ததும்
அதே இளைஞன் அவளிடம் ‘அழகிய பெண்ணே என்ன சாப்பிடுகிறாய்? என்று சிரித்துக் கொண்டே, இது
என்னுடைய உணவகம்தான் என்கிறான். அவள் கேட்ட உணவு வந்ததும் ருசித்துப் பார்த்து ‘எனக்குக்
கொஞ்சம் மிளகு, உப்பு, பூண்டு, இஞ்சி கிடைக்குமா? என்கிறாள். அவனுக்கு ஒன்றும் புரிவதில்லை.
ஏற்கனவே நான் சமைத்திருக்கும் உணவில் இதெல்லாம் கலக்கப் போகிறாயா? அப்படியானால் என்
சமையல் உனக்குப் பிடிக்கவில்லையா? ஏன் இந்தியர்கள் இப்படி எல்லாவற்றிலும் கண்டதைச்
சேர்க்கிறீர்கள்? என்று கோபத்தில் கத்தத் தொடங்க அவள் பணத்தை வைத்துவிட்டு ஓடுகிறாள்.
உன் பணம் எனக்கு வேண்டாம் என்று கத்திக் கொண்டே அவளைத் துரத்துகிறான் அவள் ஓடிவிடுகிறாள்.
அறை
நண்பர்களுடன் தெருவில் நின்று கொண்டிருக்கும்போது அந்த உணவுவிடுதிக்காரன் அவளிடம் வந்து
‘ப்ரட்டி லேடி.. உன் பணத்தை நீ வாங்கிக் கொள்ளவேண்டும்... நீ சாப்பிடாமல் உன் பணம்
எனக்குத் தேவையில்லை என்று அவளிடம் கொடுக்கிறான். அதுசரி ‘ என் உணவில் அவ்வளவு திருத்தங்கள்
சொன்ன உனக்கு சமையல் தெரியும் என்று நினைக்கிறேன். வரும் வாரம் ஒரு உணவுத் திருவிழா
நடக்கிறது. நீ ஏன் உன்நாட்டு உணவொன்றைச் சமைக்கக்கூடாது. என்னுடைய சமையலறையை நீ பயன்
படுத்திக் கொள்ளலாம் என்கிறான். ஏன் செய்துபார்க்கக் கூடாது என்று தோன்றவே.. அவள் என்ன
சமைக்கலாம் என்று மண்டையை உடைத்து கடைசியில் ‘பானிபூரி’ செய்து வாடிக்கையாளர்களுக்காய்
காத்திருக்கிறாள். ஒருவர் வந்து ஒன்றை வாயில் போட்டுப் பார்த்து ‘என்ன இவ்வளவு காரம்..
என்னைக் கொல்லப் பார்க்கிறாயா?’ என்று கேட்டுச் செல்கிறார்.. மிகுந்த மனச் சோர்வுக்கு
ஆளாகும்போது... கோபமாகச் சென்றவரே மீண்டும் வந்து.. முதலில் காரமாகத் தோன்றியது...
சில நிமிடங்களில்... அற்புதமான சுவையாகத் தோன்றுகிறது.. இன்னொன்று கொடு.. என்கிறார்....
தொடர்ந்து வரிசை நீள்கிறது. முழுவதும் விற்றுத்தீர்க்க.. உணவக உரிமையாளனான இளைஞன்...
இந்தா உன்னுடைய சம்பாத்யம் என்று பணத்தைக் கொடுக்கிறான். நன்றி என்கிறாள். அப்படியானால்
எனக்கொரு முத்தம் தா.. என்கிறான்... இப்போது ராணிக்கு எந்தப் பதட்டமும் இருப்பதில்லை.
லிப் டு லிப்பா.. என்று கேட்கிறாள். அப்புறம் ‘நீ டு நீயா’( முட்டங்காலும் முட்டங்காலுமா?)
என்கிறான். தயக்கமில்லாமல் அவன் இதழ்களில் இதழ் பதிக்கிறாள்.
இதற்கிடையே
விஜய் ராணியைத் தேட ஆரம்பிக்கிறான். தொலை பேசியில் தொடர்பு கொள்ள முயல்கிறான். அவள்
பேசுவதைத் தவிர்க்கிறாள். அவளைத் தேடி ஆம்ஸ்டர்டாமுக்கும் வருகிறான். தெருவில் மூன்று
நண்பர்களுடன் சந்திக்கிறான். அவள் நடை உடை பாவனைகள் மாறியிருப்பதைக் கவனித்து அதிர்ச்சி
அடைகிறான். இவர்களெல்லாம் உன் நண்பர்களா? இவர்களுடனா நீ தங்கியிருக்கிறாய்?... வா..
வந்துவிடு.. நான் உன்னைக் காதலிக்கிறேன்.. என்று அழைக்கிறான். நான் தில்லியில் வந்து
உன்னைச் சந்திக்கிறேன் என்று கூறிச் சென்றுவிடுகிறாள்.
தில்லிவிமான
நிலையத்தில் வந்திறங்கி பெற்றோரை அனுப்பிவிட்டு விஜய் வீட்டுக்குப் போகிறாள். விஜய்யின்
அம்மா அவளை ஆச்சரியத்துடன் வரவேற்று திருமணத்தைப் பற்றிப் பேசுகிறாள். கவலைப்படாதே
ஆண்களெல்லாம் வேலைக்குப் போனபின் நிறைய கேளிக்கைகள் நமக்கு இருக்கிறது... ராணியும்
குடும்பத்தலைவியாய் தன்னுடன் இருக்கப் போகிறவள் என்பதாய் அவள் பேச்சுதொடர்கிறது. விஜய்
மாடியிலிருந்து வருகிறான். ஆசையுடன் ராணியை நெருங்குகிறான். ராணி பண்பட்டமுறையில் அவனை
கட்டிக் கொண்டு விலகி விஜய்யின் கைகளைத் திறந்து ஏதோ ஒன்றை வைக்கிறாள். விஜய் கைகளைத்
திறந்து பார்க்கிறான். அவன் ராணிக்கு அணிவித்திருந்த நிச்சயதார்த்த மோதிரம். நிமிர்ந்து
பார்க்கும்போது ராணி வாசலைத்தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறாள். தேநீர் கோப்பைகளுடன்
வந்த விஜய்யின் அம்மா திகைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் பார்வையாளர்களுடன் சேர்ந்து.
இப்போது ராணியின் கலக்கமற்ற மகிழ்ச்சி பரவ அவளையறியாமலே நடையில் ஒரு துள்ளலும் இணைந்து
கொள்கிறது.
இப்படத்தின்
சிறப்பு, இது ஒரு சராசரிப் பெண்ணின் அகவிடுதலையைப் பற்றியது என்பதுதான். படம் மொத்தமும்
விசயங்களை உரத்த குரலில் பேச முயல்வதில்லை. இடப்பெயர்வும் பயணங்களும் ஒரு மனுஷியின்
இருண்ட/ கலங்கிய மனதில் இப்படி ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்ச முடியும் என்பதைப் பற்றியதாகவும்
இருக்கிறது. மிக முக்கியமாக மேற்கத்திய கலாச்சாரத்தின்/ நவீன யுகத்தின் அடிப்படையான
தனிமனித சுதந்திரமும், ஆண் பெண் பால்பேதமற்ற புழங்குவெளிகளும், மனத்தடைகளைத் தகர்த்து
அவரவர் வாழ்வுக்கான அர்த்தங்களை அவரவர் உருவாக்கிக் கொள்வதன் சாத்தியங்களைப் பேசாமல்
பேசுகிறது என்றும் தோன்றுகிறது. மாற்றுப்படங்கள் என்ற முஸ்தீபுகளுடன் எடுக்கப்படும்
படங்களின் தொனியைத் தவிர்த்து முழுக்க முழுக்க பொதுப்பார்வையாளர்கள் சுவாரஸ்யமாக பார்க்கும்
விதமாகவும் அதே நேரத்தில் நுணுக்கமான விவரணைகள் உள்ளதாகவும் உருப்பெற்றுள்ளது.
கலைச்சினிமா
– வணிகசினிமா – மாற்றுசினிமா என்கிற எல்லைகள் தகர்ந்துவிட்டநிலையில் வணிகஎல்லைக்குள்
செயல்படும் இத்தகைய முயற்சிகளே வெகுமக்கள் ரசனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி மேம்பட்ட
சினிமாக்களுக்கான தேவையை உருவாக்கக் கூடியவை.
இப்படத்தின்
இயக்குநர் விகாஸ் பாஹி(Vikas Bahl)
ஊடகத்துறையில் இருந்தவர். ரேடியோ மிர்ச்சியின் மார்க்கெட்டிங் தலைவராக இருந்து அதை
முதல்வரிசைக்கு நகர்த்தியவர். 25 பேர் கொண்ட படப்பிடிப்புக்குழுவோடு சென்று 40நாட்களில்
105 (locations) வெவ்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தியதை ஒரு சாதனையாகவே குறிப்பிடுகிறார்கள்.
மொத்தம் 45 நாட்களே மொத்தப் படப்பிடிப்பு நிகழ்ந்ததாம். படத்தின் மிகப்பெரிய பலமான
கங்கனா ரனாவத் சொந்த வசனங்களை இணைத்துக் கொள்ளுமளவுக்கு படத்தோடு ஒன்றியிருந்தாராம்.
வணிக ரீதியாகவும்பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.