தமிழ்சினிமாவின் வணிக வெற்றிகளால் தடுமாற்றத்திற்குள்ளாகியிருந்த மளையாள சினிமா மீண்டும் விழித்துக்கொண்டது என்பது ஆறுதலான விசயம். புதிய தலைமுறை திரைக்கதை ஆசிரியர்களும், இயக்குநர்களும், இசையமைப்பாளர்களும் புதிய சினிமாக்களைப் முயற்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். அந்த வகையில் சமீபத்தில் நான் பார்க்க நேர்ந்த திரைப்படம் 22 Female
Kottayam.
டெஸா கோட்டயத்தைச் சேர்ந்த 22வயது இளம் பெண். செவிலியர் படிப்பை முடித்துவிட்டு பெங்களூரில் ஒரு பெரிய மருத்துவமனையில் வேலைபார்த்துக்கொண்டே, கனடாவிற்குச் சென்றுவிட சமயம் பார்த்துக் கொண்டிருப்பவள். தோழிகளுடன் வீடெடுத்துத் தங்கியிருக்கும் உற்சாகமான யுவதி. கனடா செல்வது தொடர்பாக பயண முகவரான சிரில் என்பவனை அடிக்கடி சந்திக்கவும் பேசவும் நேர்ந்து காதல் போன்ற ஒன்றுக்கு நகர்கிறாள். இன்னும் சிலமாதங்களில் கனடா செல்வதற்கான வாய்ப்பு வந்துவிட்டதைச் சொல்லும் சிரில் கூடவே, போவதுவரை என் அறையில் வந்து தங்கிக் கொள்ளேன் என்று அழைக்கிறான். மறுபேச்சில்லாமல் ஒத்துக் கொள்கிறாள் டெஸா. இருவரும் பிக்னிக் போகிறார்கள். நெருக்கமான முதல்
சந்திப்பிலேயே ‘நான் ஒரு
கன்னியல்ல’ என்கிறாள் டெஸா. படிக்கும்போது ஒரு
மருந்துக்கடைக்காரனுடன் பழகியதாகவும், அவன் ஏற்கனவே
திருமணமானவன் என்பது தெரிந்து பிரிந்ததாகவும் கூறுகிறாள். சிரில்
அதை ஒன்றும் பொருட்படுத்துவதில்லை.
கணவன் மனைவியைப் போன்று வாழ்கிறார்கள். ஓருநாள் இருவரும் ‘பப்’ ஒன்றுக்குச்
செல்கிறார்கள். அங்கு வம்புசெய்யும் ஒருவனுடன் சிரில் அடிதடியில்
இறங்கியதில் வம்புசெய்தவன் காயமடைகிறான். அவன் மந்திரி
ஒருவரின் மகனாக இருந்து தொலைக்கிறான். தற்காலிகமாக
பிரச்சனைகளைச் சமாளிக்க சிரில் டெஸாவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவனுடைய
முதலாளியின் பண்ணைவீட்டில் ஒளிய வேண்டியதாகிறது.
சிரிலின் முதலாளி (பிரதாப் போத்தன்) விசயத்தைச்
சொல்வதற்காக டெஸா வீட்டிற்கு வருகிறார். இரண்டு நாட்களில்
பிரச்சனையைச் சரி செய்துவிடலாம். நீ கவலைப்படாதே. அதுவரை அவன் தலைமறைவாக இருப்பதே
நல்லது என்று கூறி விடைபெற்றவர், வாசல்வரை சென்று திரும்பி
வருகிறார் எதையோ சொல்லமறந்தவர் போல். டெஸா நான் உன்னோடு
உடலுறவு கொள்ளலாமா? (Can I have sex with you?) என்கிறார் ஆங்கிலத்தில். அதிர்ச்சியில் குழம்பியவளிடம்
மீண்டும் ஒரு முறை தெளிவாகக் கேட்கிறார். தொடர்ந்து டெஸா
மறுப்பதைப் பொருட்படுத்தாது அவளை அடித்து இழுத்துத் தள்ளி
வல்லுறவுக்குள்ளாக்குகிறான். அவளை ரத்த காயங்களோடு
போட்டுவிட்டு போய்விடுகிறான்.
மருத்துவமனையில் சேர்க்கப்படும் டெஸா இப்பிரச்சனையை
வளர்க்கவேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறாள். சிரில் கோபத்தின் உச்சத்தில்
முதலாளியைக் கொன்று விடப்போவதாகக் குமுறுகிறான். வீட்டுக்கு
அழைத்துவந்து அவளைப் பராமரிக்கிறான். சிறிது சிறிதாக
குணமடைந்து தேறுகிறாள். அவனுடைய கரிசனையில் மனம் கசிந்த டெஸா
அவனை ஆரத்தழுவிக்கொள்கிறாள். கட்டித் தழுவிய நிலையில்
அவள் முதுகுக்குப் பின்னால் கைபேசியில் ‘she is
ready’ என்று யாருக்கோ sms அனுப்புகிறான். சற்று நேரத்தின் சிரில் வெளியே போய்விட,
முதலாளி கையில் மலர்க்கொத்துடன் உள்ளே நுழைகிறான். பயத்தில் அலறும் டெஸாவிடம்…’ நீ ஒன்றும் பயப்பட வேண்டாம். நான் உன்னை நலம் விசாரிக்கத்தான் வந்தேன். நான்
போகிறேன்’ என்று கூறி மலர் கொத்தை வைத்துவிட்டு வாசல் வரை போனவன்
திரும்பிவந்து மீண்டும் ‘நான் இன்னொருமுறை உன்னோடு உடலுறவு
கொள்ளலாமா?’ என்று மீண்டும் பாய்கிறான். மீண்டும் சிரில் கோபப்படுவதுபோல் நடிக்கிறான். டெஸாவிற்கு
உண்மை புரிந்த பாடில்லை. முதலாளி சிரிலிடம் அவளைக்
கொன்றுவிடும்படி கூறுகிறான். சிரில் அவள் கைப்பையில் போதைப்
மருந்தைப் போட்டு போலீசுக்குத் தகவல் சொல்கிறான். டெஸா சிறையில்
தள்ளப்படுகிறாள்.
சிறை அனுபவங்கள் அவளுக்கு புதிய படிப்பினைகளை
வழங்குகின்றன. சிரிலும் அவன் முதலாளியும் ஒரு கிரிமினல் கும்பல் என்பதை
உணர்கிறாள். அவர்களைப் பழிவாங்க முடிவுசெய்கிறாள். அறையில் அவளுடன் தங்கியிருந்த தோழி
ஒருவளின் ஜாபகம் வருகிறது. அவள் கைச்செலவுகளுக்காக
செல்வாக்குமிக்க தொழிலதிபருடன் நட்பாக இருந்தது நினைவுக்குவர, அந்தத் தொழிலதிபரின் உதவியை நாடிச்செல்கிறாள். ‘டெஸா
உலகத்தில் எதுவும் சும்மா கிடைக்காது’ என்ற அறிவுரையுடன் அவளுக்கு உதவ முன்வருகிறார் அந்த
தொழிலதிபர். அவர் ஏற்பாடுசெய்யும் அடியாட்களுடன் பிரதாப்போத்தனை
வரவழைத்து அவனை அடித்துக் கொல்கிறாள்.
சிரில் இப்போது ஒரு மாடல்
ஒருங்கிணைப்பாளராகியிருக்கிறான். வேறுபெயரில் அவனை அணுகுகிறாள். அவனும் அவளை தெரியாதவன் போல் நடிக்கிறான். இறுதியில்
அவன் காதலுக்கு ஏங்குபவளாக நடித்து நம்பவைத்து அவனோடு கலவிகொள்கிறாள். காலையில் படுக்கையில் விழித்துப் பார்க்கும் சிரில் கண்களைத் திறக்கச்
சிரமப் படுகிறான். பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருக்கும்
டெஸா, சிரமமாகத்தான் இருக்கும். உனக்குக்
கொடுத்த மயக்கமருந்தோட வீரியம் இன்னும் சிலமணிநேரங்களுக்கு இருக்கத்தான் செய்யும்
என்கிறாள். குழப்பமாக எழ முயலும் சிரில் தன் கைகளும்
கால்களும் கட்டிலோடு கட்டப்பட்டிருப்பதைக் கண்டு திமிருகிறான். நோ..நோ.. அப்படி எல்லாம்
அசையக்கூடாது. உனக்கு நடந்திருக்கும் அறுவைச்
சிகிச்சைக்கு அசையக்கூடாது என்கிறாள்.
தன்னுடைய ஆணுறுப்பு அகற்றப்பட்டிருப்பதைத் தாமதமாக உணரும் சிரில்
கத்திக் குமுறுகிறான். ‘Fuck you’ என்கிறான். ‘not
any more’ என்கிறாள் சாதாரணமாக. உன்னுடைய
காயம் சுகமாகும் வரை நான் உன்னை பக்கத்தில் இருந்து கவனிக்கப் போகிறேன் என்று
கூறியபடியே கவனித்து சுகப்படுத்திவிட்டு, கனடாவிற்குப்
பறந்து போகிறாள்.
இந்தத் திரைக்கதையை இரண்டு பேர் (அப்ஹிலாஸ் குமார், ஸ்யாம் புஸ்கரன்) எழுதியிருக்கிறார்கள். ஆசிக் அபு இயக்கியிருக்கிறார்.
தொழில்நுட்ப ரீதியாகவும் திரைமொழி என்ற அடிப்படையிலும் சமீபத்தில்
நான் பார்த்த சிறந்த படம் என்று சொல்வேன். மளையாளத்
திரையிசையும் புதிய எல்லைகளை தேடுவதான அறிகுறிகள் தென்படுகின்றன. ஒருவகையில் இது ஒரு சாதாரண பழிவாங்கும் வழக்கமான திரைப்படம். ஒரு பெண்ணால் நடைமுறையில் செய்யமுடியாதவற்றை செய்துகாட்டச்செய்யும்
மிகைத்தன்மை கொண்ட படம். கில் பில், ஆன்ட்டி
கிரைஸ்ட், ஹாஸ்டல் ஆகிய படங்களின் காட்சிகளாலும், கேரளாவிலிருந்து ஹைதராபாத், பெங்களூர் என்று
செவிலியராகப் பணிநிமித்தம் இடம்பெயர்ந்த பெண்கள் சிலரின் உண்மைக்கதைகளாலும்
கோர்க்கப்பட்ட திரைக்கதை. என்றாலும் எல்லாவற்றையும் மீறி அது
ஒரு மளையாளப்படமாகத் தன்னைக் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
ஆனால் இவை
எல்லாவற்றையும் விட என்னை மிகவும் கவர்ந்த அம்சம் இந்தப்படம் எடுத்துக்கொண்ட
விசயத்தைக் கையாண்டவிதம்தான். முதலில் கேரள நகர்ப்புற
சமுதாயம் தன்னுடைய பாரம்பரிய வாழ்க்கை முறையிலிருந்து வெகுதூரம் நகர்ந்து விட்டதை
ஒத்துக்கொண்டு அதைப்பதிவுசெய்கிற நேர்மை கேரளப்படைப்பாளிகளுக்கு இருப்பது
மிகமுக்கியமானது. பெண்மை, கற்பு,
ஒழுக்கம், லட்சியம் போன்ற மதிப்பீடுகள்
முற்றிலும் வேறு அர்த்தங்களைப் பெற்றுள்ளமையை இப்படம் அற்புதமாகப் பதிவு
செய்துள்ளது.
ஒரு உணவகத்தில் அமர்ந்திருக்கும் தோழிகளில் ஒருத்தி, இன்னொருத்தியிடம் ‘அவனுடைய பின்பாகம் பிரமாதம்’
(nice ass) என்கிறாள். கதாநாயகி நாயகனிடம்
முதல் சந்திப்பிலேயே ‘I am not a virgin’ என்கிறாள். எந்த சம்பிரதாயங்களும் இல்லாமல் நாயகனும் நாயகியும் ஒரே வீட்டில்
வசிக்கிறார்கள். அவள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டபின்,
அவள் ‘என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டாயே’
என்றோ ‘ இனி நான் ஏன் வாழனும்’ என்றோ ‘இனி எப்படி இன்னொருத்தனுக்கு நான மனைவியா
இருக்கமுடியும்?’ என்றோ எந்த இடத்திலும் சொல்வதில்லை.
அவள் அல்லது இயக்குநர் ‘அந்த வல்லுறவை’
ஒரு ‘உடல்ரீதியான வன்முறையாக’ மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள். இரண்டுமுறை
வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, பொய்குற்றச்சாட்டில் சிறைக்குச்
சென்று, ஒரு நடுத்தர வர்க்கப் பெண் கற்பனை செய்ய இயலாத சூழ்நிலைகளை
எதிர்கொண்டபின்னும் அவள் லட்சியமான கனடாவுக்கு செவிலியாகச் செல்வது என்ற
லட்சியத்தை விட்டுக்கொடுக்கவில்லை.
அதாவது கற்பு போன்ற மதிப்பீடு தொடர்பான விசயங்களைப்
பேசும் படங்கள் அதை எப்படிக் கையாள்கின்றன என்பது முக்கியமாகப்படுகிறது. ‘பாருங்கள் எப்படி இருந்த சமூகம் இப்படிச் சீரழிந்து விட்டதே’ என்று ஓலமிடுவது ஒருவகை என்றால் சீரழிவை மூடிமறைத்து ‘இல்லை இல்லை இன்னும் எங்கள் சமூகம் புனிதமாகத்தான் இருக்கிறது’ என்று பாரம்பரிய மதிப்பீடுகளைத் தூக்கிப்பிடிப்பது இன்னொரு வகை.
நம்மைப் போன்ற பாரம்பரிய நிலவுடமை மதிப்பீடுகளிலிருந்து விடுபடாத
சமூகங்கள் மாறிவரும் நுகர்வோர் கலாச்சாரத்திற்குள் சிக்கிக் கொண்டு தவிக்கின்றன. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா எதிர்கொள்ளப்போகும் சிக்கல்களில்
பிரதானமாய் இருக்கப்போகும் பண்பாட்டுச் சிக்கல் இதுதான். பன்னாட்டு
நிறுவன வேலைவாய்ப்புகள், டாலரில் சம்பளம், கார்ப்பரேட் வேலைச்சூழல். இதற்குள் சாதி, கற்பு, குடும்பப்
கௌரவம் இன்னபிற அம்சங்களை போற்றிப் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தம். இன்றைய நடுத்தர வர்க்க பெற்றோர்களும் இளையோர்களும் மாறிவரும் சூழலைக்
கையாள இயலாதவர்களாய்த் தவிப்பது கண்கூடு. 2011ல் தமிழகத்தில்
நடந்த வன்கொலைகள் 1811. இதில் 15.8 சதவீதம்
அதாவது 297பேர் காதல் விவகாரங்களில் கொல்லப்பட்டவர்கள்.
இதில் 220பேர் 20வயதுக்குட்பட்டவர்கள். உலகிலேயே காதல் விவகாரத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் கொலைகளும்
தற்கொலைகளும் நடப்பது இந்தியாவில்தான். ஆகவே வெகுசன
ஊடகங்களில் பபடைப்பாளிகளின் பார்வை மிக முக்கியமானதாகிறது. பல
நேரங்களில் சாமான்யர்களுக்காக அவர்கள் சிந்திக்கிறார்கள்/ பேசுகிறார்கள்/
வாதாடுகிறார்கள்/ பரிந்துரைக்கிறார்கள்.
அதனாலேயே வெகுசனசினிமாவைப் பொருட்படுத்தி விவாதிக்க வேண்டியுள்ளது.
ஆக, ‘22 கோட்டயம்’
வன்புணர்ச்சியை, பாலியல் ரீதியான வன்முறைகளை உடல் ரீதியான
வன்முறையாகமட்டும் எடுத்துக்கொள்ள வேண்டியதான ஒரு அணுகுமுறையை ஆர்ப்பாட்டமில்லாமல்
பரிந்துரைக்கிறது. அத்தகைய ஒரு கசப்பான அனுபவம் ஒரு பெண்ணின்
எதிர்காலத்தை முடக்கிவிடத் தேவையில்லை. அதை எளிதாகக் கடந்து
செல்லவேண்டியதே முக்கியமானது என்கிறது.
இந்த இடத்தில் சமீபத்தில் பார்த்த சுந்தரபாண்டியபுரம்
நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.
காதல் – நட்பு
– துரோகம் என்ற எளிமையான வட்டத்திற்குள் சுற்றும் கதை. இந்தக்கதை தமிழகத்தின் எந்த பகுதியிலும் எந்த சமூகத்தவர் மத்தியிலும் நிகழக்கூடியது.
ஆனால் இப்படத்தின் இயக்குநர் கதையை உசிலம்பட்டியில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தவரிடம் மட்டுமே நிகழத்தக்கது என்பதான பிரம்மையை உண்டாக்க
முனைகிறார். இந்த சாதி அடையாளத்தைத் துலக்கமாகப் பதிவு செய்யாவிட்டாலும்
இப்படத்தின் சுவாரஸ்யம் குறைந்துவிடப் போவதில்லை. இந்தியாவில்
சாதி அடையாளத்தை யாரும் அவ்வளவு எளிதில் கழற்றிவைத்துவிட முடியாதுதான் என்றாலும்,
ஒருவரை ஒருவர் பரஸ்பரம் மதிப்பதும், சுயசாதிப்
பெருமை பேசுவதன் மூலம் சாதிய உணர்வைத் தட்டி எழுப்பாமலிருப்பதும்தான் இக்காலத்தில்
கலைகள் செய்யவேண்டுவதாக இருக்கமுடியும்.
22 கோட்டயம் படத்தில்
ஒரு காட்சி. நாயனும் நாயகியும் உணவருந்தச் செல்கிறார்கள்.
நாயகன் மது ஆர்டர் செய்கிறான். உனக்கு வேண்டுமா
என்கிறான். ஆம் என்கிறாள். இருவரும் மாறி
மாறி குடித்தவண்ணம் இருக்கிறார்கள். ஒருகட்டத்தில் நாயகன் நீ
பெரிய குடிகாரியாக இருப்பாய் போலிருக்கிறதே என்கிறான். அதற்கு
அவள் ‘ நான் ஒரு கோட்டயம் சிரியன் கிறித்தவ பெண்ணாக்கும்.
சாப்பாட்டு மேசையில் குடிக்கிற குடும்பமாக்கும்’ என்கிற ரீதியில் பதில் சொல்கிறாள். கடைசியில் போதையில்
தள்ளாடும் நாயகனை நிதானமாக அவன் வீட்டில் சேர்ப்பித்துவிட்டுப் போகிறாள். இந்தப்படம் வெளியானபோது கோட்டயம் சிரியன் கிறித்தவர்கள் இயக்குநருக்கு எதிராக
வழக்குத் தொடர்ந்தார்களா? ஒரு போராட்டமாவது நடத்தினார்களா என்றுதெரியவில்லை.
22 கோட்டயம் என்ற
மளையாளத் திரைப்படத்தையும் சுந்தரபாண்டியன் என்ற படத்தையும் சமகாலப்படங்கள் என்ற அளவில்
ஒப்பிட்டுப்பார்க்கும்போது, இரண்டு படங்களும் வணிக சினிமாவிற்கான எல்லா அம்சங்களும் கொண்டவையாகவே இருக்கின்றன.
ஆனால் கதைக்கட்டமைப்பு, கதை மையமாக விவாதிக்கும்
விசயம், பாத்திர உருவாக்கம், திரைமொழி என
எல்லா அம்சங்களிலும் சமகாலத் தன்மையுடையதாய் ‘கோட்டயம்’
இருப்பதாகப் படுகிறது. எல்லா நற்குணங்களும் ஒருங்கே
அமையப்பெற்ற நாயகன் இருக்கும்போது அவரைச்சுற்றி இருப்பவர்கலெல்லாரும் குணக்கேடர்களாகத்தானே
இருக்கவேண்டும். தமிழ்ச் சினிமா கதாநாயகனை இரும்பு ஸ்பானரால்
பின்மண்டையில் அடித்தவுடன் விழுந்து செத்துவிடுவாரா என்ன? இதே
போன்றதொரு காட்சி மளையாளப்படத்திலும் உண்டுதான். டெஸா எனும் அந்த
இளம்பெண் ஒரு ஆணின் ஆணுறுப்பை ஒற்றை ஆளாய் அறுவைச்சிகிச்சை செய்து, அவனுடனே தங்கியிருந்து சுகப்படுத்துவது சாத்தியமான ஒன்றல்லதான். இரண்டு படங்களிலும் ஆங்காங்கு காணப்படும் யதார்த்த மீறல் ஒன்றானதல்ல.
சுந்தரபாண்டியனில் காணப்படும் யதார்த்த மீறல் காவிய நாயகனை உயிர்ப்பிப்பதற்கானது.
கோட்டயத்தில் காணப்படுவது விழிப்புணர்வுக்கானது. சுந்தரபாண்டியனின் வெற்றி ஒரு வகையில் தமிழ்சினிமாவின் வீழ்ச்சிதான்.
’22 கோட்டயம்’ நாயகன், நாயகி
இலக்கணங்களை முற்றிலும் தகர்த்துவிட்டிருக்கிறது.
சுய விமர்சனமும் சுய எள்ளலுமற்ற
சமூகம் ‘சுந்தரபாண்டியர்களையே’
உருவாக்கும். அது சென்று சேரும் இடம் ‘தருமபுரியாகவே’ இருக்கும்.