சமீபத்தில் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தின் முதல் பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. இளையராஜாவுடன் வெற்றிமாறன் இணையும் முதல்படம் என்ற முத்திரையுடன் காணொளி வெளியானவுடன் முகநூல் நண்பர்கள் அந்தப்பாடலை சிலாகிக்கத் தொடங்கினார்கள். நீண்ட நாட்களுக்குப் பின் இப்படியொரு மனதைத் தொடும்.. போன்ற இன்னபிற உணர்ச்சி ததும்பல்களைக் காணமுடிந்தது. ஐம்பது வயதைக் கடந்து தமிழ்நாட்டில் வாழும் ஒருவர் இளையராஜாவின் ரசிகராக இல்லாமல் இருக்க முடியுமா என்ன? ஆர்வத்துடன் அந்தப்பாடலைக் கேட்கலானேன். ராஜாவின் 70,80கள் பாடல்களோடு ஒப்பிடும்போது எந்த உணர்வெழுச்சியும் இல்லாத வாய்ப்பாடு போன்ற மெட்டு. இதில் சிலாகிக்க என்ன இருக்கிறது? என்று யோசித்தபோது, நட்சத்திரவிடுதியில் அமர்ந்துகொண்டு அம்மா சுட்டுக்கொடுத்த
குழிப்பணியார நினைவுகளில் திளைப்பதைப் போல, ராஜாவின் ரசிகர்கள் எப்போதும் கடந்த காலங்களிலேயே வாழ்பவர்கள் தானே. உன்னோட நடந்தா… என்ற அந்தப்பாடலின் மெட்டு, இடையிசை எதுவும் ஈர்க்கக்கூடியதாக இல்லை. இது ‘நம்ம, அந்த ராஜா’ இல்லை என முழுப்பாடலையும் கேட்காமலேயே விலகினேன். பாடலைவிட வெற்றிமாறனின் ‘புரமோ காணொளியின்’ வரைகலை சுவாரஸ்யமாக இருந்தது.
கொஞ்சம் யோசித்தபோது இந்தப்பாடலில் தூக்கலாக என்னை தொந்தரவு செய்தது தனுஷ் பாடியதுதான் என்று உணர்ந்து கொண்டேன். சுமாரான இந்தப் பாடலை ( சுமார் என்று நான் சொல்வது ராஜாவின் பாடல்களோடு ஒப்பிட்டுத்தான்) மேலும் சுமாராக மாற்றிய பெருமை தனுஷுக்குத்தான். தனுஷின் குரலில் பிரச்சனையொன்றும் இல்லை. பாடுவதற்கு முதல் தகுதி குரலல்ல. எல்லாக் குரல்களும் பாடுவதற்குரியனவே. பாடுவதற்கு இரண்டு விசயங்கள் அடிப்படையானவை. ஒன்று தாளம் தப்பாமல் பாடுவது. இரண்டாவது ஸ்ருதி விலகாமல் நின்று கொள்வது. ஸ்ருதியில் அப்படி இப்படி அலைபாய்ந்தாலும் தாளத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பாடிவிடக்கூடியவர்கள் இருக்கிறார்கள். மூன்றாவதான அம்சம்தான் ஒரு பாடலை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவது. அது உணர்ச்சியை பாடலுக்குள் ஏற்றுவது. ‘Soulful singing’ என்ற 'ஆன்மாவை இசையில் கரைத்தல்’ என்பது. எல்லாக் கலைகளிலும் பயிற்சியால் பெறக்கூடியவை சில உண்டு. சிலவற்றை பயிற்சியால் பெற இயலாது. அவை இயல்பாக அமைந்தாக வேண்டும். இசையில் உணர்ச்சியோடு (பாவம்) பாடுவதென்பது அத்தகைய வரம்தான். பிபிஶ்ரீனிவாஸ் நமக்குத் தருவது அவரது ஆன்மாவில் தோய்த்தெடுத்த பாடல்களைத்தான். ‘மயக்கமா… கலக்கமா..’வில் நம்மை மயக்குவது ஶ்ரீனிவாசின் பாவம்தான். சந்திரபாபுவின் ‘பிறக்கும்போதும் சிரிக்கின்றான்’ இப்படி எத்தனையோ பாடல்கள். டி.எம்.எஸ்.சின் பாடல்களில் வெளிப்படுவது ஒரு தருவிக்கப்பட்ட உணர்ச்சியோ என்று தோன்றும். அது அவர் காலத்திய சிவாஜிபோன்ற மிகையுணர்ச்சி நாயகர்களை அவர் குரலால் பின்பற்ற முனைந்தனால் வந்ததோ என்னவோ? பிபி ஶ்ரீனிவாஸ் உள்ளிட்ட சிறந்த பாடகர்கள் வெளிப்படுத்துவது ஒரு ‘உள்முகமான பாடும்முறை’. நடிப்பில் ‘உள்வயநடிப்பு’(inner acting) என்று சொல்கிறார்களல்லவா? அவயவங்களால் நடிக்காமல், மனதின் தேவையை உடலில் வெளிப்படச் செய்வது. அதைப்போன்றது. மலேசியா வாசுதேவனின் ‘பூங்காற்று திரும்புமா?’, எஸ்.பி.பி.யின் ‘ நிலாவே வா…’ ஏசுதாசின் ‘கண்ணே கலைமானே’, சுவர்ணலதாவின் ‘போறாளே பொன்னுத்தாயி’ இத்தகைய பாடல்களில் நாம் சொக்கிக் கிடப்பதற்குக் காரணம் பாடகர்களின் குரல்மட்டுமல்ல.
மேடை நிகழ்ச்சிகளிலும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் சில அபூர்வ தருணங்கள் நிகழ்ந்துவிடுவது உண்டு. சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரிவில் அப்படி மறக்க இயலாத நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது.
10 ஆண்டுகளுக்குமுன் தூத்துக்குடியைச் சார்ந்த கௌதம் என்றொரு
சிறுவன். அவன் இசைப்பாரம்பரியமற்ற குடும்பத்தைச் சார்ந்தவனாகவே இருக்கவேண்டும். கர்ணன் படத்தில் இடம்பெற்ற ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ எனும் பாடலைப் பாடுகிறான். மகரக்கட்டு உடையாத கீச்சுக்குரல். அன்று அந்த அரங்கில் அருணா சாய்ராம், நித்யஶ்ரீ, உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட இசை விற்பனர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அந்தப்பாடலை அவன் பாடி முடித்தபோது அரங்கிலிருந்த அத்தனைபேரும் உணர்ச்சி மேலீட்டால் கண்களைத் துடைத்துக் கொள்ளவேண்டியிருந்தது. ‘இசை என்பது உள்ளத்தால் இன்னொரு உள்ளத்தோடு பேசிக்கொள்வது. அது சாதாரணமா வராது. வாழ்ந்து அனுபவிச்சாத்தான் வரும். இது எப்படி?’என வியந்தார் அருணா சாய்ராம். 13 வயது பள்ளிச்சிறுவன் எதை வாழ்ந்து அனுபவித்திருக்கப் போகிறான். ஆனால் ஒரு கலைஞனாக அந்தப்பாடலின் ஊடுபாவைப் பிடித்திறங்கி அதன் ஆன்மாவை அவனால் தொடமுடிந்தது. ஆண்டுக்கணக்கில் கர்நாடக சங்கீதம் பயின்று பாடகராக முயற்சிக்கும் நூற்றுக்கணக்கானவர்களால் தொடமுடியாத சரடு அது.
நாம் சொல்லவிரும்புவது பாடும் கலை என்பதும் ஒரு நுட்பமான கலைதான். தொழில்நுட்பங்களின் உதவி இருக்கிறதென்பதற்காக திரைப்பட பிரபல்யத்தை வைத்துக்கொண்டு விளையாட்டாக அதை அணுகுவது கோடிக்கணக்கான ரசிகர்களை அவமதிப்பதாகாதா? முன்னதாக விஜய், ரஜினி, பாரதிராஜா போன்ற சிலரும் இத்தகைய அவமதிப்பில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் தனுஷ் தொடர்ந்து பாடிவருகிறார். அவர் தன்னை ஒரு பாடகராகவும்
நம்பத் தொடங்கிவிட்டாரோ? இனி அடிக்கடி பாடுவாரோ? என்ற பதட்டம் உருவாகிறது.
சினிமா எனும் மாபெரும் கலை வடிவத்தில் ஒரு தொழில்முறை நடிகனாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ள ஒரு முன்னனி நட்சத்திரம் நடிகன் சினிமாவிற்குள் இணைந்திருக்கும் மற்ற கலைவடிவங்களையும் தொழில்முறையாக அணுகவேண்டுமா? இல்லையா?.
ஒரு தொழில்முறை நடிகனாகத் தன்னை தனுஷ் உணரும்பட்சத்தில் இத்தகைய அமெச்சூர் முயற்சிகள் தேவையா? என்பதே நம் கேள்வி. குறிப்பாக எப்போதும் இல்லாத அளவுக்கு மிகச் சிறந்த இளைய தலைமுறை பாடகர்கள் உருவாகியுள்ள சூழலில் அவர்களுடைய வாய்ப்புகளை நட்சத்திரங்களாகிய நீங்கள் ஏன் பறிக்கிறீர்கள்? திரைப்படத்துறையில் திறமையானவர்களைத் தேடித்தேடிப் பயன்படுத்துவது அதை மேலும் மேலும் சிறப்புறச் செய்வதற்காகத் தானே!
தனுஷ் இன்று ஒரு சிறந்த நடிகனாகக் கருதப்படுகிறார். அதில் கொஞ்சம் மிகைக் கூற்று இருந்தாலும், இயக்குநர்களின் பாத்திரங்களை ஏற்று நடிக்கக் கூடியவராகத் தன்னைத் தகவமைத்துக்கொண்டதன் காரணமாக பொருட்படுத்தத் தக்க இயக்குநர்களால் விரும்பப்படும் நடிகராக மாறியிருக்கிறார். ஆனாலும் தனுஷ் எனும் மனிதனின் இயல்பான குரல், உடல் மொழி இவை மேலெழாவண்ணம் முற்றிலும் பாத்திரமாக மாறிவிடக்கூடிய நடிகனாக தன்னை செழுமைப்படுத்தியிருக்கிறாரா? தமிழ் சினிமாவில் சிவாஜியும், கமலும் நடிப்பில் நிகழ்த்தியிருக்கும் சாதனைகளுக்கு அருகாமையில் வந்திருக்கிறாரா? கமல் செய்தவற்றையெல்லாம் செய்துபார்க்கும் ஆர்வம் அவரைப் பாடாய் படுத்துகிறதா? ஒரு வேளை நான் இயக்கவும் செய்வேன், பாடவும் செய்வேன் என கமலைப் போலி செய்ய தனுஷ் விரும்பினால் முதலில் அவர் கமல் பாடிய ‘சுந்தரன் நானும் சுந்தரி நீயும்’ பாடலை அவர் கேட்டுப்பார்க்கவேண்டும். தொழில்முறைப் பாடகர்களுக்கு இணையாக கமல் அந்தப்பாடலைக் கையாண்டுள்ளதைக் காணமுடியும். சலங்கை ஒலி, குணா, மைக்கேல் மதன காமராஜன், தேவர்மகன் போன்ற படங்களில் கமல்ஹாசன் தன்னை முற்றிலும் இழந்து பாத்திரங்களுக்குள் கூடுவிட்டு கூடுபாய்ந்தது போன்ற முயற்சிகளை தனுஷ் செய்ததுண்டா? அதை நோக்கிய பயணமாகவல்லவா அவருடைய முயற்சிகளும் பயிற்சிகளும் இருக்கவேண்டும்? அதை விடுத்து சுமாரான ராஜாவின் பாடலை மோசமான பாடலாக மாற்றி நேர விரயம் செய்வதேன்?
இந்த நடிகர்களைப் பாட வைக்கிற முயற்சியை மெனக்கட்டு செய்பவர்கள் இயக்குநர்கள். பாடலின் தரத்தைவிட நடிகர்களின் பிரபல்யத்தை மலினமாகப் பயன் படுத்திக்கொள்ள விரும்பும்போது இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. வெற்றிமாறன் போன்ற ஒரு சிறந்த இயக்குநர் ஏன் இத்தகைய உத்திகளைப் பயன்படுத்தவேண்டும். எல்லா வழிகளிலும் படத்தை நோக்கிப் பார்வையாளர்களின் கவனத்தை திருப்பவேண்டும் என்பதான தந்திரமாக இதைப் புரிந்துகொள்ளலாம். இதில் ராஜாவைப் போன்ற மேதைகளையும் பலிகடாவாக்கிவிடுகிறார்களே என்பதுதான் நம் ஆதங்கம். அந்தப்பாடலில் வரும் பெண் குரலில் இருக்கும் இலகுத்தன்மை தனுஷ் குரலில் இல்லை. சுருதியையும் மெட்டையும் சரியாக கொண்டுசெல்லவேண்டுமே எனும் அவரின் சிரத்தை அவரரியாமல் வெளிப்பட்டுவிடுதைக் காணமுடியும். அவ்வாறு பாடலின் வடிவத்தில் சிரத்தைகொள்ளும்போது பாடலின் ஆன்மாவைத் தொடமுடியாது.
பொதுவாக இசையமைப்பாளர்களில் பெரும்பாலோர் உணர்ச்சியோடு பாடக்கூடியவர்கள். எம்.எஸ்.வி., ராஜா, சந்திரபோஸ், தேவா, ரஹ்மான் வரை இது பொருந்தும். இதில் யுவன்சங்கர் ராஜா ஒரு விதிவிலக்கு. அவருடைய பாடலை அவரே சித்திரவதை செய்யக்கூடிய நல்லவர். நூறு படங்களுக்குமேல் இசையமைத்துள்ள அவரிடம் நீங்கள் ஒரு பாடகர் இல்லை என்று யார் சொல்லமுடியும்?
இப்போது தனுஷின், யுவனின் ரசிகர்கள் கேட்கக் கூடும்.
நடிகனாக இருப்பவன் பாடக்கூடாதா? அதைச் சொல்வதற்கு நீ யார்?
ஒருவர் பாடிய பாடல்கள் அதிக ரசிகர்களால் விரும்பப்படுவதால்தனே அவர் பாட அழைக்கப்படுகிறார்? தனுசும் யுவனும் பாடிய பாடல்களை விரும்பும் லட்சக்கணக்கான ரசிகர்கள் முட்டாள்களா? என்று.
வெகுசன ரசனை இருவிதங்களில் செயல் படுகிறது. ஒன்று தொடர்ந்து தரமான இசையை நுகர்ந்துவரும் ரசிகனின் ரசனை மேம்பட்டு சிறந்த இசையை நுகரக்கூடியவனாக மாறுகிறான். மாறாக தொடர்ந்து தரம்குறைந்த பாடல்களைக் கேட்க நிர்பந்திக்கப்படும் ரசிகன் தரமற்றவைகளையே சிறந்தவைகளாகக் கருதத் தொடங்கி தன் ரசனையை மட்டுப்படுத்திக் கொள்கிறான். தமிழ்ப் பொதுச்சமூகத்தின் இசைவிருப்பங்களை மேய்ந்தாலே நம்மால் சில விசயங்களை ஊகிக்கமுடியும். கடந்த ஒரு நூற்றாண்டில் தமிழர்கள் அதிகம் கண்ட / கேட்ட பாடல் யுவன் சங்கர் ராஜாவின் ‘ரவுடிபேபி’ 14கோடிக்கும் மேல். இரண்டாவது இடத்தில் அனிருத்தின் ‘அரபிக் குத்து’. இணையவெளியில் ரசிகர்கள் அதிகம் கேட்ட 25 பாடல்களில் இளயராஜா இல்லை. ஆக, அதிகம் பேர் விரும்புவதும்/ ரசிப்பதும் சிறந்ததாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பது ஒரு எளிய உண்மை.
நூற்றாண்டைக் கடந்த இந்திய சினிமாவில் இசையைப் பொறுத்தமட்டில் தொடர்ந்து மேதைகள் இருந்திருக்கிறார்கள். ராஜா, ரஹ்மானுக்குப் பிறகு ஒரு தற்காலிக வெற்றிடம் உருவாகியிருக்கிறது. ராஜாவின் அருகாமையில் ரஹ்மானை அமர வைப்பதில் 40களைக் கடந்தவர்களுக்கு ஒவ்வாமை உண்டு. ஆனால் திரையிசையில் ரஹ்மானும் ஒரு மேதையே! கடந்த 20 ஆண்டுகள் தமிழ்த்திரையிசையின் வறண்ட காலம் என்பேன். இந்தித் திரையிசையின் போக்கு சிறப்பாகவே இருக்கிறது. அழுது வடியும் செமி கிளாசிக்கல் மெட்டுகளிலிருந்து விடுபட்டு மளையாள திரையிசை வெகுதூரம் வந்துவிட்டது. தொடந்து மேதைகளால் நிரம்பி வழிந்த தமிழ்த் திரையிசைக்கு இது போதாதகாலம் போலும்.